சஜித் பிரேமதாசவை கண்டால் கோட்டாவுக்கு பயம்: இம்ரான் - sonakar.com

Post Top Ad

Wednesday, 6 November 2019

சஜித் பிரேமதாசவை கண்டால் கோட்டாவுக்கு பயம்: இம்ரான்கோட்டாபாய ராஜபக்ச சஜித் பிரேமதாசவை கண்டு பயப்படுவதாக திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளைமணல் பிரதேசத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அன்றொரு காலம் இருந்தது. நாட்டு மக்கள் அனைவரும் கோட்டாவின் பெயரை கேட்டால் பயந்தனர். அவரை ஒரு “மினி ஹிட்லர்” போலவே பார்த்தனர். அதுக்கு காரணமும் இருந்தது. தண்ணீர் கேட்டவர்கள் சுடப்பட்டனர். ஒன்றாக ரகர் விளையாடியவர் திடீரென வாகன விபத்தில் இறந்ததாக செய்திகள் வந்தன. ஊடக நிறுவனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் கட்டளைக்கு அடிபணியாதோர் வீட்டுக்கு வெள்ளைவேன் வந்தது.

அன்று கோட்டாபாயவின் பெயரை கேட்டால் ஊடகவியலாளர்கள் ஓடத்தொடங்கினர்.இன்று ஊடகவியலாளர்களை கண்டால் கோட்டா ஓடுகிறார். ஒரே ஒரு ஊடக சந்திப்புதான் நடாத்தினார்கள். அதுவும் அவரின் அண்ணன் உள்ளிட்ட குழுவினருடன் வந்து. அன்று ஊடகவியலாளர்களை கண்டு ஓடத்தொடங்கிய கோட்டாபாய ராஜபக்சதான் இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறார்.

எமது வேட்பாளர் சஜித் பிரேமதாச தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு பலமுறை அவரை அழைத்துவிட்டார். இன்னும் வரவே இல்லை. தேவையானால் அவரது அண்ணனையும் அழைத்து வரும்படி கூறியுள்ளார். அங்கிருந்து பதிலில்லை. உத்தியோகபூர்வமாக கடிதமும் அனுப்பிவிட்டார். அதற்கும் பதிலில்லை.

நான் கோட்டாபாய ராஜபக்சவிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறேன். உங்களுக்கு சஜித்தை கண்டால் பயம் என்பது தெளிவாக தெரிகிறது. நீங்கள் அவருடன் விவாதத்திற்கு வரவே மாட்டீர்கள் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். முடிந்தால் தேர்தல் முடிவதற்குள் இன்னொரு ஊடகவியலாளர் சந்திப்பையாவது நடாத்துங்கள் உங்களின் கருத்துக்களை அறிய நாட்டு மக்கள் ஆவலாக உள்ளனர் என தெரிவித்தார்.

-Sabry

No comments:

Post a comment