ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம் போராட்டமும் - sonakar.com

Post Top Ad

Saturday 19 October 2019

ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம் போராட்டமும்


நவம்பர் 16ம் திகதி ஜனாதிபதி தேர்தல் என்பது ஒரு தேசிய விவகாரம். ஆனாலும் அதன் மேலதிக போராட்டம் என்னவோ முஸ்லிம் சமூகத்துக்குள் தான்.


இம்முறை களமிறங்கியுள்ள வேட்பாளர்களுள், யார் இதுவரை முஸ்லிம் சமூகத்துக்காகப் பேசியிருக்கிறார்கள்? என்ற கேள்வியிலிருந்து ஆரம்பித்து, ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளையும் பண்டமாற்று செய்யும் தரகர் போராட்டம் வரை இது விரிவடைந்துள்ளது.

வெற்றி பெறும் வேட்பாளரை தீர்மானிக்கும் வேட்பாளர் என்ற புது அத்தியாயம் ஜனாதிபதியைத் தீர்மானிக்கவும் இனவாதத்தை முதலீடு செய்வதற்கான ஆரம்பமாக, துரதிஷ்டவசமாக இலங்கை வரலாற்றில் முஸ்லிம் சமூகத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையிலேயே பொதுத் தேர்தலின் நோக்கமும் திரிபடைந்து இன்று ஊருக்கொரு நாடாளுமன்ற உறுப்பினர் கேட்கும் நிலையில் சமூகம் நிற்கிறது.

தேசிய கட்சிகளுடன் இணைந்து கிடைக்கப் பெறும் தேசியப் பட்டியலை வைத்துக் கொண்டு முஸ்லிம் கட்சிகள் படும் பாடு உலகறிந்தது. அந்த தேசிய பட்டியல் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே ஊர்களும் - தெருக்களும் கொண்டாடுவதைக் கண்டு நாட்டின் தலைவர்களும் முஸ்லிம்களின் ஒரே தேவை பதவியென எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரதேசவாரியாக இடம்பெறும் தேர்தலில் இவ்வாறு பழகிக் கொண்ட எமது சமூகம் இப்போது ஜனாதிபதி தேர்தலிலும் தமது வாக்குகளைப் பிரித்து, தேசிய ரீதியில் பிரிந்து நிற்கும் அத்தியாயத்தை ஆரம்பிக்கவுள்ளது.

முஸ்லிம் சமூகத்திடமிருந்து இரண்டு லட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு அதனூடாக ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கப் போவதாக தெரிவிக்கும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு அதற்கான வாய்ப்பிருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விகளுக்கு அப்பால் 21ம் நூற்றாண்டிலும் இலங்கையின் அரசியலின் தரம் இந்த அளவிலேயே நிற்கிறது என்பது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரலாறாகிறது.

இன ரீதியிலான வாக்குப் பிரிப்பின் ஊற்று எங்கிருந்து ஆரம்பமானது என்பது எல்லோரும் அறிந்த விடயம். பௌத்தவாதம் - பேரினவாதம் என சென்று கொண்டிருக்கும் அந்தப் பக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டுமென்ற கடமைப்பாடும் முஸ்லிம்களால் உணரப்பட்டே உள்ளது. அந்தப் போராட்டத்தில் யாரும் அழைக்காமலே கணிசமான சிங்கள மக்கள், சமூக ஆர்வலர்கள், ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் இணைந்துள்ளார்கள், போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நம் தேசத்தின் தலைவர் தேசியத்தின் அங்கீகாரம் பெற்ற ஒரு மனிதராகவும் அனைத்தின மக்களினால் விரும்பப்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்பதை முஸ்லிம்களும் உணர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அதனை விடுத்து, இனவாத அடிப்படையில் வாக்களிக்கப்பட்ட ஒருவரின் இரண்டாம் தெரிவாகவே நாட்டின் ஜனாதிபதி இருக்க வேண்டும் எனக் கருதக்கூடியவர்கள் அடிப்படையில் தாம் இலங்கையர் என்பதை மறந்தவராகவே இருக்கக் கூடும். இலங்கையில் உரிமைப் போராட்டம் என்பது எல்லா சமூகங்களுக்கும் இருக்கிறது. 2012 முதல் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் போராட்டம் இதற்கு முன்னர் தமிழ் சமூகம் முகங்கொடுத்த போராட்டத்தின் ஒரு பங்கு மாத்திரமே.

இலங்கையில் பௌத்த மேலாதிக்கத்தை நிறுவ வேண்டும் என்று நீண்ட காலமாக போராடி வரும் சக்திகள் கடந்த தசாப்த காலமாக கணிசமாக வெற்றி கண்டுள்ளது. அதனை எதிர்ப்பதென்பது மேலும் இன ரீதியிலான பிரிவா அல்லது தேசிய ரீதியிலான ஒற்றுமையா? என்பது ஒவ்வொரு தனி மனிதராலும் கேட்கப்பட வேண்டிய கேள்வி. எனினும், எம் சமூகத்தில், குறிப்பாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிராமங்கள், ஊர்களில் தேசியம் என்பது பாஸ்போர்ட் எடுக்கும் போதுதான் பலருக்கு நினைவுக்கு வருகிறது. 

கடந்த பத்து வருடகால அடக்குமுறை இருப்பினும் கூட இன்றும் பள்ளிவாசல் நிர்மாண, புணரமைப்புகள் தொடர்வதோடு சவால்களை மீறி முஸ்லிம் சமூகத்தின் வர்த்தக ஆளுமை தேசிய அளவில் கட்டியெழுப்பப் பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கான நன்றியை எல்லாம் வல்ல இறைவனுக்குத் தெரிவிக்கின்ற அதேவேளை, பர்மா  - ரோஹிங்யா போன்று மோசமான சூழ்நிலை இலங்கையில் தவிர்க்கப்பட்டுள்ளமைக்கு ஒரு வகையில் நாட்டின் தற்போதைய அரசியல் யாப்புக்கும் - பொறிமுறைக்கும் கூட பங்கிருக்கிறது.
மனச் சாட்சியைத் தொட்டுப் பேச வேண்டுமாக இருந்தால் 2014 – 2018 வரையான வன்முறைகளின் தொடக்கங்கள் எம்மவரின் செயற்பாடுகளாகவே இருந்துள்ளது. நாட்டில் இனவாதம் தலைவிரித்தாடும் நிலையில் முதலில் நாலு புறமும் கடலால் சூழப்பட்ட இத்தீவில் வாழும் எம் சமூகம் அதன் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் கடமைப்பாடுள்ளது என்பதை நன்குணர்ந்திருந்தால் நமது செயற்பாடுகள் இனவாதிகளுக்கு எவ்வாறு தீனி போடும் என்ற முன்னெச்சரிக்கையும் சூதானமும் இருந்திருக்கும்.

ஆனாலும், சற்றே செறிந்து வாழும் பகுதிகளில் தேசிய சமூகம் என்ற நிலை மறந்து நம்மை நாமே அன்னியப்படுத்திக் கொள்வதோடு நம் மீதான பொதுவான சமூகப் பொறுப்பையும் மறந்தே நமக்கு நாமே உருவாக்கிக்கொண்டுள்ள பல முரண்பாடுகளுடனான 'முஸ்லிம்' சூழலில் வாழ்கிறோம். நமது முஸ்லிம் சூழல் வெளிப்பார்வைக்கு எல்லோரையும் ஒன்றாகக் காட்டினாலும் நமக்குள் எத்தனை பிரிவுகள், பிளவுகள், மோதல்கள், முரண்பாடுகள் என்பது நமது மனச் சாட்சிக்குத் தெரியும்.

இயல்பாகவே இவ்வாறு வாழப் பழகிக்கொண்டுள்ளதால் அவ்வப் போது தாக்குதல் ஒன்று இடம்பெற்றதும் மாத்திரமே நமது தேசிய, அடிப்படை மற்றும் மனித உரிமை பற்றி உரத்துக் கத்திப் பார்ர்க்கிறோம். தவிரவும், நாம் இலங்கை தேசத்தின் பிரஜைகள் என்ற அடிப்படையில் ஒன்றி வாழ்வதில் பெரும்பாலும் அக்கறையற்றவர்களாகவே கடந்த காலங்களில் வாழ்ந்து வந்திருக்கிறோம்.

ஆயினும், ஈஸ்டரின் பின்னான சூழ்நிலை பொதுவான மனப்பாங்கை சற்றே மாற்றியமைத்திருக்கிறது என்றால் மிகையில்லை. எமது சமூகத்திலிருந்து உயிர் கொல்லிகள் புறப்படுவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அச் சம்பவத்தின் பின்னான குற்ற உணர்வு பெரும்பாலும் ஒவ்வொரு முஸ்லிமின் மனதிலும் உண்டு. 2012 – 2018 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளைக் கண்டு எழுந்த ஆவேசமும் உணர்வுகளும் 2019ல் ஈஸ்டரின் பின் குருநாகல் முதல் மினுவங்கொட வரை இடம்பெற்ற சம்பவங்களின் போது குறைந்தே காணப்பட்டது. இது நமக்கு நாமே தந்து கொள்ளும் தண்டனை போன்று பெரும் அச்சம் நிலவியது. பல குடும்பங்கள், இனியும் நம்மால் இங்கு வாழ முடியாது என்று நாட்டை விட்டு வெளியேறிவிடத் துடித்தார்கள். நானறிய, இன்றும் முயற்சி செய்கிறார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில், முஸ்லிம் சமூகம் நாம் தேசியகத்தின் ஒரு பங்கு என்பதை மீள நிறுவி ஏனைய சமூகங்களுடனான நம்பிக்கையைக் கட்டியெழுப்பி வாழ்ந்தாக வேண்டி இருக்கிறது. நமது முன்னோர்களும் இது போன்று பல இன்னல்களைச் சந்தித்தார்கள். ஒல்லாந்தர் காலத்தில் முஸ்லிம்களுக்கு காணி விற்பது தடை செய்யப்பட்டிருந்தது. முஸ்லிம் வர்த்தகங்கள் அரசாங்கத்தாலேயே முடக்கப்பட்டது. அவற்றையெல்லாம் தாண்டியம் இன்றும் ஏறத்தாழ 20 லட்சம் முஸ்லிம்கள் இத்தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அக்காலத்தில் இருந்திருக்கக் கூடிய சகிப்புத் தன்மை மற்றும் பொறுமையுடனான சமூக முன்னெடுப்புகள் பற்றி சந்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான தேசிய போராட்டத்திலும்; கணிசமான முஸ்லிம் பிரமுகர்கள் பங்களித்தார்கள். துரதிஷ்டம் அதற்குப் பின் நாம் தூர விலகிக் கொண்டே செல்வதனால், சிங்கள சமூகத்திடம் அன்றைய தலைவர்களின் பெயர்களே ஞாபகத்தில் நிற்கின்றன. 

அரச இயந்திரத்தின் ஒரு பகுதியான உள்ளுராட்சி மன்ற தேர்தல்களின் போது நமது பிரதேசம் சார்ந்தே முடிவெடுப்பதற்கே சூழ்நிலை இருக்கிறது. ஆதலால், அதன் போது பிரதிநிதித் தேர்வு தொடர்பான சிந்தனையோட்டம் பிரதேசம் சார்ந்திருப்பதில் நியாயம் உண்டு. அதேபோன்று, கொழும்பில் வாக்காளராகப் பதிந்த ஒருவர் கல்முனையில் வாக்களிக்கப் போவதும் இல்லையென்பதாலும் பெரும்பாலும் அந்தந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே போட்டியிடுவதாலும் அது நியாயப்படுத்தப்படுகிறது. மாகாண சபை தேர்தல் என்று வரும் போது மக்களின் தெரிவு இன்னும்  விரிவடைகிறது. மாகாணத்துக்குச் சேவை செய்யப் பொருத்தமானவர் யார்? என்பதை இன-மத வேறுபாடுகளுக்கப்பால் தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு அங்கு காணப்படுகிறது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் என்னிடம் நேரடியாகக் கூறிய விடயமொன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2014 மாகாண சபை தேர்தல் காலத்தில், தென் பகுதிக்கு தமது கட்சிக்காரர்களுடன் விஜயம் செய்திருந்த போது, தொழுகை முடிந்து ஒரு பள்ளிவாசலில் நின்று கொண்டிருந்தார்களாம், அப்போது தொழுகைக்காக வந்த அனைவருமே அவர்களைக் கடந்து சென்றார்களே ஒழிய யாருமே இவர்களை அடையாளம் கண்டுகொள்ளவில்லையாம். ஈற்றில் இமாமை அணுகித் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, இப்பகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக முஸ்லிம்களை சந்திக்க விரும்புகிறோம், சாத்தியமா? என்று வினவ, இங்கே ஒரு பாடசாலைக்கு கூரை போட வேண்டுமென்றாலும், வீதியைத் திருத்த வேண்டுமானாலும், பிள்ளைகளுக்கு பாடசாலை அனுமதி பெற வேண்டுமென்றாலும் எல்லாவற்றையும் சிங்கள அரசியல் தலைவர்களே இதுவரை காலமும் செய்து தருகிறார்கள், அப்படியே இருப்பதுதான் நல்லது என்று அறிவுரை கூறி இவர்களைத் திரும்பிப் போகச் சொன்னாராம் இமாம்.

மேல் மாகாணத்தில் கூட மத்திய கொழும்பில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு இருக்கும் வரவேற்பு என்பது தனியாக மதம் சார்ந்த பார்வையன்று. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆளுமை செறிந்த பகுதிகளில் ஏனைய இனத்தவர்களும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றுள்ளர்கள். அதே போன்று பொதுத் தேர்தல்களில் கடந்த காலங்களில் எம்.எச். முஹமத், ஏ.சி.எஸ் ஹமீத் போன்ற தலைவர்கள் மாத்திரமன்றி தற்காலத்தில் கபீர் ஹாஷிம், ஹலீம் போன்றவர்களும் பெரும்பான்மை சமூக ஆதரவுடனேயே நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே, உள்ளுராட்சி சபைகள் தவிர்ந்த ஏனைய தேசிய தேர்தல்களைப் பொறுத்தவரை நமது சிந்தனையும் தேசிய மட்டத்திலேயே இருக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கணிசமாக வாக்குகள் தேவைப்படுகிறது. இலங்கையின் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் சேர்ந்து ஒரே நபருக்கு வாக்களித்தாலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்ரிபால சிறிசேன பெற்ற வாக்குகளைப் பெற மேலதிகமாக இரு மடங்கு வாக்குகள் அவசியம்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளைப் பிரிப்பதற்கு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவது இது முதற்தடவையும் அல்ல. 2015 ஜனாதிபதி தேர்தலில் மைத்ரிபால சிறிசேன பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உருவ ஒற்றுமை கொண்டிருந்த ரத்நாயக்க ஆராச்சிகே சிறிசேன போட்டியாளராகக் களமிறக்கப்பட்டு, வாக்களிப்பு தினம் மஹிந்த ராஜபக்சவோடு கூடச் சென்று காட்சியளித்து 18,174 வாக்குகளைப் பெற்றிருந்தார். அதே போன்று நாமல் ராஜபக்ச இன்னும் வயதுக்கு வராததனாலேயே சகோதரர்களை வைத்து மஹிந்த ராஜபக்ச அரசியல் நகர்வுகளை மே;ற்கொண்டு வருகிறார் என்று என்னதான் பரவலாக பேசப்பட்டாலும் கூட நாமல் ராஜபக்ச என்ற பெயர் கொண்ட ஒருவர் போட்டியிட்டு அவரும் 15,726 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவர் இம்முறையும் போட்டியிடவுள்ளார்.

இந்த சூழ்ச்சிகள் தேசிய கட்சிகளின் வாக்குக் கணிப்பின் அடிப்படையில், சில வேளைகளில் வெற்றியளிக்காத விளையாட்டாகவே இடம்பெற்று வருகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளர் அலை வெகுவாக மேலெழுந்திருந்த போதிலும் 19 பேர் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்கள். இந்த தேசிய சூழ்ச்சியில் முதற்தடவையாக இம்முறை முஸ்லிம் வாதமும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பதே கவலை கொள்ள வேண்டிய விடயம்.

இதன் எதிர்கால விளைவுகள் ஜனாதிபதி தேர்தலின் முடிவைப் பொறுத்தே இருக்கப் போகிறது. தான் போட்டியிடுவது குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் உணர்வூட்டலுக்கு மேலதிகமாக ஜே.வி.பியினர் போட்டியிலிருந்து விலகினால் தாமும் வாபஸ் பெறத் தயார் என்றும் கூறுகிறார். அவரது கணிப்பின் படி ஜே.வி.பி பெற்றுக்கொள்ளக் கூடிய ஏழு முதல் எட்டு லட்சம் வரையான வாக்குகள் வேட்பாளர் ஒருவரின் நேரடித் தெரிவை பாதிக்கும் என்பதால் தான் பெறக்கூடிய சில லட்சங்கள் ஊடாக அதனை தான் தெரிவு செய்யும் வேட்பாளருக்கு வழங்கி, முஸ்லிம் சமூகமே அவரை ஜனாதிபதியாக்கியதாக வரலாற்றை பதிந்து கொள்ள முடியும் என்கிறார்.

இதனடிப்படையில் ஜே.வி.பி வாக்குகளை சிதைப்பது அல்லது அவர்கள் பெறக்கூடிய வாக்குகளை செல்லாக்காசாக்குவதற்கான ஒரு தேசிய சூழ்ச்சிக்கே முஸ்லிம் சமூகம் பலிக்கடாவாக்கப்படுகிறது என்பது இங்கு தெளிவாகிறது. இன்று முஸ்லிம்கள் மத்தியில் எழுந்திருக்கும் ஜே.வி.பி அலை வாக்குகளாக மாறுமா? என்பது கேள்விக்குறியாக இருப்பினும் கூட முஸ்லிம் வாக்குகள் அங்கு செல்லாமல் தடுப்பதனால் யாருக்கு நன்மையிருக்கிறது என்ற கேள்வி மேலெழ வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் நேரடியாகவே சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதோடு அவர்களோடு வாக்கு வங்கியும் அங்கே திசை திரும்பும் என்பது எதிர்பார்ப்பு. 

2012 – 2014 மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைத் தூண்டல்களின் வடுக்களை மறக்காதவர்கள் கோட்டாபே ராஜபக்சவை ஏற்றுக்கொள்ள இன்னும் தயாரில்லை. அந்தக் கோபத்தை சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவாகவும் மாற்றக் கூடும் என்ற வகையில் தொடர்ந்தும் தம்மை அனைத்து சமூகங்களுக்குமான தேசிய கட்சியாக நிறுவுவதிலேயே ஐக்கிய தேசியக் கட்சி முனைப்பு காட்டி வருவதோடு அதன் வேட்பாளர் சஜித் பிரேமதாச, தனது பேச்சுக்களிலும்; அதனை வலியுறுத்தி வருகிறார். எனவே, ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, ஜே.வி.பிக்கோ இந்தத் தேவையில்லையென்பது தெளிவாகிறது.

அக்கரைப்பற்றில் தமக்கிருக்கும் வாக்குப் பலத்தை வழங்க நேரடியாக கோட்டாபேவுடன் அத்தாவுல்லாஹ் கை கோர்த்திருப்பதிலேயோ, கோட்டாவின் பிரச்சாரத்தை அலி சப்ரி முன்னெடுத்துச் செல்வதிலோ, பேருவளையில் முஸ்லிம் வாக்குகளைப் பெற்றுத்தர ஆதரவாளர்கள் முயற்சிப்பதிலோ குறை காண முடியாது. ஆனாலும், ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் வாதம் தேவையற்றதும், பிழையானதும், அனாவசியமான இனவாதத் தூண்டலும் ஆகும்.

1989 – 2015 வரையான தேர்தல்களில் தனது சொந்த மாவட்டத்தில் இதுவரையில் 25,000 வாக்குகளைப் பெற்றுக்கொள்ளாத நிலையிலேயே லட்சங்கள் நோக்கிய மதவாதம் அவசியமற்றுத் திணிக்கப்படுகிறது!

jTScYcS

-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com


No comments:

Post a Comment