வடக்கின் மக்களாக ஒன்றிணைவோம்: யாழ் கிளிநொச்சி முஸ்லிம் பேரவை அழைப்பு - sonakar.com

Post Top Ad

Thursday 31 October 2019

வடக்கின் மக்களாக ஒன்றிணைவோம்: யாழ் கிளிநொச்சி முஸ்லிம் பேரவை அழைப்பு


வடக்கு முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 29 வருடங்களை கடந்திருக்கின்ற நிலையில் அதன் நினைவு நிகழ்வு நேற்று (30) மாலை 4.00 மணியளவில் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் பேரவையின் ஏற்பாட்டில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் 'வடக்கின் எமது பூர்வீக உரித்தை உறுதிசெய்வோம்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது.



யாழ் கிளிநொச்சி முஸ்லிம் பேரவையின் செயலாளர் ஜனாப் ஏ.சி.எம் மஹானாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம பேச்சாளர்களாக யாழ் பல்கழைக்கழகத்தின் விரிவுரையாளர்களான திரு. மகேந்திரன் திருவரங்கன் அவர்கள் மற்றும் சிரேஸ்ட விரிவுரையாளர் திரு கதிர்காமர் அகிலன் ஆகியோர் கலந்து கொண்டு தமது கருத்துரைகளை முன்வைத்தனர். மிகவும் சிறப்பான முறையில் அக் கருத்துக்கள் அமையப் பெற்றிருந்தது.

முஸ்லிம் சமூகம் சார்பில் விசேட உரைகளை மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஜனாப் ஜமால் மொஹிதீன் அவர்களும், யாழ் மாநகரசபை உறுப்பினர் கௌரவ எம்.எம்.எம். நிபாஹிர் அவர்களும் மற்றும் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் பி.என்.எம். சரபுல் அனாம் ஆகியோர் நிகழ்த்தியிருந்தனர்.

நிகழ்வின் இறுதியில் 29ஆவது வருட நினைவு நிகழ்வின் பிரகடனம் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் பேரவையின் நிர்வாகச் செயலாளர் செல்வன் என்.எம். அப்துல்லாஹ் இனால் முன்மொழியப்பட்டது.

அப் பிரகடனமாவது பின்வருமாறு

'வடக்கின் மக்களாக தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து பலமாக எழுவோம்'

1990 களில் தமிழீழ  விடுதலைப் புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட வடக்கு முஸ்லிம் மக்கள் மீதான பலவந்த வெளியேற்றம், அவர்கள் மீதான இனச்சுத்திகரிப்பு என்றே தேசிய, சர்வதேசிய ரீதியில் அடையாளம் செய்யப்படுகின்றது.  கடந்த 29 வருடங்களாக வடக்கு முஸ்லிம் மக்களின் விவகாரங்கள் போதுமான அளவிற்கு கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவோ அல்லது அவர்களுக்கான போதுமான தீர்வுகள் கிடைத்துவிட்டதாகவோ வடக்கு முஸ்லிம் மக்கள் கருதவில்லை. தமக்கு இழைக்கப்படட அநீதிக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை என்றே அவர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றார்கள். இவ்விடயத்தில் உரிய முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கு இலங்கை முஸ்லிம் மக்கள் சார்பிலும் தமிழ் மக்கள் சார்பிலும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுதல் அவசியமாகும்.

வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் என்பது எத்தனை முஸ்லிம் மக்கள் மீள்குடியேறினார்கள் என்பதிலும், எத்தனை வீடுகளை கட்டிக்கொடுக்கப்பட்டன  என்பதிலும் மதிப்பீடு செய்யப்படுகின்ற விடயமாக இருக்க முடியாது. மாறாக அந்த மக்களின் பூர்வீக உரித்து அங்கீகரிக்கப்படுவதிலும், அவர்களது சுயாதீனமான அரசியல், பொருளாதார, சமூக விவகாரங்கள் உறுதிசெய்யப்படுவதிலும் தங்கியிருக்கின்றது.

2009-2019 வரையான கடந்த பத்தாண்டுகளில் வடக்கு முஸ்லிம் மக்களின் சமூக நிலைமைகள் குறித்து ஆராய்கின்றபோது வடக்கு முஸ்லிம் மக்கள் மத்தியிலும், வடக்கின் தமிழ் மக்கள் மத்தியிலும் அதற்கான ஏதுநிலைகள் மிகவும் முரண்நகையாக இருப்பதையே எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது. இரு சமூகங்களினதும் அரசியல் தலைமைகளும், சிவில் சமூகத்தலைமைகளும் இதுகுறித்துப் போதுமான கவனத்தையோ அல்லது கருத்தாடல்களையோ முன்னெடுக்கவில்லை என்ற பொதுவான குறைபாட்டை நாம் உணர்கின்றோம்.

வடக்கிலே ஒரு பலமான சமூகமாக 'வடக்கு மக்கள்' என்ற அடையாளத்தோடு வடக்கின் தமிழ் முஸ்லிம் மக்கள் ஐக்கியமாக எழுந்து நிற்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு இதுவரைகாலமும் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் பேரவையினால் முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் மீண்டும் ஒருதடவை இன்றய நாளில் பிரகடனமாக இங்கு முன்மொழியப்படுகின்றது.  

1. வடக்கு மாகாணம் - இங்கிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களினதும், அவர்களது சந்ததியினரினதும் பூர்வீக வாழிடமாகும்ளூ அவர்கள் தாம் விரும்பும் காலத்தில் இங்கு மீள்குடியேறுவதற்கான அனைத்து உரித்துக்களையும் உடையவர்கள்.

2. வடக்கு முஸ்லிம் மக்களின் பலவந்த வெளியேற்றமானது விடுதலைப்புலிகள் அமைப்பினால் நிகழ்த்தப்பட்ட ஒன்றாகும். அது அம்மக்களின் அடிப்படை உரிமை மீறல் என்பதோடு மனித உரிமை மீறலுமாகும், அத்தோடு அது சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை என்றே அடையாளம் செய்யப்படுதல் வேண்டும்.

3. வெளியோற்றப்பட்ட மக்கள் நீதிப்பொறிமுறையொன்றைக் கோருவதற்கும், தமக்கான இழப்பீட்டினைக் கோருவதற்கும் முழுமையான உரித்துடையவர்களாவர்.

4. அம்மக்கள் தாம் வாழ்கின்ற ;பிரதேசங்களில் தம்மோடு ஒன்றாக வாழ்கின்ற தமிழ் மக்களோடும், சிங்கள மக்களோடும் எவ்வித பகைமை உணர்வுமின்றி, ஐக்கியமாகவும், நல்லிணக்கத்தோடும், அனைத்துவிதமான சுயாதீனங்களையும் பேணும்வகையில் வாழ்வதற்கு உரித்துடையவர்களாவர்.

மேற்படி அடிப்படைகளை மீண்டுமொருதடவை நினைவூட்டுவதோடு வடக்கு முஸ்லிம் மக்களின் சுபீட்சமான வாழ்வை உறுதிசெய்வதற்கு குறிப்பாக முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும், இலங்கை அரசும், சர்வதேச சமூகமும் முன்வரல்வேண்டும் என அழைக்கின்றோம்.

நிர்வாகச் செயலாளரினால் முன்மொழியப்பட்ட மேற்குறிப்பிட்டுள்ள பிரகடனமானது யாழ் கிளிநொச்சி முஸ்லிம் பேரவையினால் 2019.10.30ஆம் திகதி யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்ட வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட 29 ஆவது வருட நினைவு நிகழ்வின் போது வெளியீடு செய்யப்பட்டு கலந்து கொண்டோரினால் அங்கீகரிக்கப்பட்டது.

யாழ் கிளிநொச்சி முஸ்லிம் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில் யாழ் மாவட்ட பள்ளிவாயில்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள், யாழ் கிளிநொச்சி ஜம்இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள், உலமாக்கள், கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், கதீஜா பெண்கள் கல்லூரி அதிபர், தமிழ் சகோதரர்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரமுகர்கள்,  மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

-என்.எம். அப்துல்லாஹ்

No comments:

Post a Comment