ஜனாதிபதி தேர்தல்: 100 சர்வதேச கண்காணிப்பாளர்கள் வருகை - sonakar.com

Post Top Ad

Monday, 28 October 2019

ஜனாதிபதி தேர்தல்: 100 சர்வதேச கண்காணிப்பாளர்கள் வருகைஜனாதிபதித் தேர்தலுக்காக வெளிநாடுகளைச் சேர்ந்த நூறு சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் இலங்கை வந்துள்ள நிலையில், நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நள்ளிரவுடன்  தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவு செய்யப்படல் வேண்டும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் செயற்பாடுகள் தொடர்பாக, தேர்தல்கள் அலுவலகத்தில்  ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கருத்துத் தெரிவிக்கையிலேயே, தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது, ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தேர்தல் செயலகமும் தபால் துறையும் இணைந்து வாக்காளர்கள் அட்டைகளை விநியோகிக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. 

இக்காலகட்டத்தில் சகல பிரதேசங்களிலும் கணிசமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நடக்கும் சம்பவங்கள் எதுவும் தேர்தலுக்கு அச்சுறுத்தலாக அமைய மாட்டாதென்றே நம்புகின்றேன். 

பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், நாடு பூராகவும் பாதுகாப்பு உசார் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் கடைசி வாரத்தில் மேலும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படும்.

அதே சமயம், தேர்தலைக் கண்காணிக்கும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் சுமார் 100 பேர் இலங்கை  வந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் பொதுநலவாய அமைப்பு, தெற்காசிய தேர்தல் கண்காணிப்புக் குழு ஆகியவற்றின் குழுக்களாகவே இவர்கள் இங்கு வந்துள்ளனர். 

இவர்களுக்கு நாடெங்கும் சென்று கண்காணிப்புக்களை மேற்கொள்ளப் போதுமான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் சுயாதீனமாகவே செயற்படும். அதில் எமக்கு எவ்விதமான தலையீடுகளும் கிடையாது. தேர்தலுக்குப் பின்னர் இவர்கள் தத்தமது நாடுகளுக்குச் சென்ற பின்னரே, அது குறித்த அவர்களது அறிக்கைகளை வெளியிடுவர். 

அதே சமயம், தேரதலுக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் முப்பது பேர் கொண்ட கண்காணிப்புக்குழு தேர்தல் நடக்கும் தினத்தின் அவதானிப்புக்களை நடத்தவுள்ளனர்.

இவர்கள் முக்கியமான பிரதேசங்களுக்குச் சென்று கண்காணிப்புக்களை முன்னெடுக்கப் போதுமான வசதிகள் செய்துகொடுக்கப்படும். இதேசமயம், பிரசார நடவடிக்கைகளின் போது முடியுமானவரை விதிமுறைகளைப் பேணுமாறும் தான்  வேட்பாளர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

முக்கியமான ஒரு விடயம், கடந்த காலத் தேர்தல்களைப் போல் பதாதைகளோ, சுவரொட்டிகளோ பெரிதாகக் காணப்படவில்லை. இது ஒரு ஆரோக்கியமான செயலாகும். தேர்தலை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதில் தேர்தல் ஆணைக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், 13 ஆம் திகதி நள்ளிரவுடன் சகல பிரசார நடவடிக்கைகளும் முற்றுப் பெற வேண்டும்.

இந்தப் பிரசார சூனியகாலத்தில் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் செயற்பாடுகளில் எவராவது ஈடுபட்டால், அவர்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 
அவசியப்படுமானால் கைதுகூடச்  செய்து அவர்களை  நீதிமன்றத்தில் நிறுத்தவும் எம்மால் முடியும். இந்த ஒழுங்கு விதிகளைச் சரியாகக் கடைப்பிடிக்குமாறு, அனைத்துத் தரப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

- ஐ. ஏ. காதிர் கான்

No comments:

Post a comment