தானாகத் தாழ்ந்து கொள்ளும் சமூகம்! - sonakar.com

Post Top Ad

Friday 6 September 2019

தானாகத் தாழ்ந்து கொள்ளும் சமூகம்!



ஈஸ்டர் தாக்குதலையடுத்து இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சியடைந்தது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து கோடை விடுமுறைக்காக இலங்கைக்குப் பயணிக்கவிருந்த கணிசமான மக்கள் தொகையினர் தமது பயணத்தை இரத்துச் செய்தனர். இங்குள்ள சட்ட விதிகளின் அடிப்படையில் பயங்கரவாத சூழ்நிலை அச்சம் காரணமாக இவ்வாறு பயணத்தை இரத்துச் செய்தோருக்கு அவர்கள் செலுத்திய கட்டணத்தையும் விமான சேவை நிறுவனங்கள் முழுமையாகத் (Full refund) திருப்பிக் கொடுக்க நேர்ந்தது.



இவ்வாறான இக்கட்டான காலகட்டத்தில் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புதல் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு மிகவும் அவசியப்படுகிறது. குறிப்பாக வெளிநாட்டினர் அச்சமின்றி நாட்டுக்குள் வரலாம் என்ற செய்தியை உலகுக்கு சொல்லியாக வேண்டும். இதற்கு ஏதுவாக ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா உட்பட முக்கிய அபிவிருத்தியடைந்த நாடுகள் மற்றும் அயல்நாடான இந்தியாவின் பிரஜைகளுக்கும் கூட கட்டணமின்றி விசா வழங்கும் திட்டத்தையும் அரசு அறிவித்தது.

நினைத்த அளவு இந்திய சுற்றுலாப் பயணிகளைக் கவர முடியாது போயினும் திடமான ஒரு செய்தியை வெளிச் சொல்ல, சரிந்திருக்கும் சுற்றுலாத்துறையைத் தூக்கி நிறுத்த, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்தில் போரா சமூகம் கை கொடுத்துள்ளது. இப்பின்னணியில் இப்போது யார் இந்த போராக்கள்? என்ற அலசல்களும் ஆய்வுகளும் கூட வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் அதனை சற்று மாறுபட்ட கோணத்தில் பார்ப்போம்.

முதலில், இலங்கை முஸ்லிம்கள் என்ற மத ரீதியிலான சனத்தொகைக் கணிப்பீட்டில் போராக்களும் உள்ளடங்குகிறார்கள். இன ரீதியிலான கணிப்பீடு என்று வருகையிலேயே சோனகர்கள், மலேயர்கள், போராக்கள், மேமன்கள் என்ற அடையாளப்படுத்தல்கள் வருகிறது. மற்றும் படி முஸ்லிம்கள் என்ற சமய ரீதியிலான அடையாளப்படுத்தலில் அவர்களும் உள்ளடங்குகிறார்கள். 

தற்சமயம் இலங்கையில் இவ்வினக் குழுமத்தின் சனத்தொகை அன்னளவாக 2500 முதல் 2600க்குட்பட்டது என கணிக்கப்படுகிறது. இத்தனைக்கும், 19ம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே போராக்கள் இத்தீவில் அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தோடு கலந்து வாழ்கிறார்கள். அன்றிலிருந்து இன்றைய காலம் வரை இந்த உறவு திடமானதாகவும் மிகவும் அன்யோன்யமானதாகவுமே காணப்பட்டு வருகிறது.

போரா சமூகத்தின் முக்கிய நிகழ்வுகளுக்கு பெரும்பாலும் சோனக முஸ்லிம் தலைவர்களும் எப்போதும் அழைக்கப்படுவதுண்டு. தவிரவும் தேசிய ரீதியில் சமூகம் சார்ந்த அல்லது சமூகம் ஈடுபடும் நற்காரியங்கள், நிவாரண நடவடிக்கைகள், இனவன்முறைகளின் போதான சட்டரீதியான நடவடிக்கைகளில் பங்கெடுத்தல் என போரா சமூகம் எப்போதுமே முஸ்லிம் சமூகத்தின் அங்கமாகவே வாழ்ந்து வருகிறது. 

கொள்கையளவில் போராக்கள் மீதான விமர்சனம் எம்மவர்கள் மத்தியில் உண்டு. ஆனால், பாடசாலைக் காலத்திலிருந்து இலங்கையர்களாகவே வாழ்ந்து வரும் போரா, மேமன் மற்றும் மலே சமூகத்தினர் சோனகக் குடிகளை விமர்சிப்பதை இதுவரை நான் கேட்டதில்லையென்பதையும் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.

ஆயினும், செப்டம்பர் 1 முதல் 10ம் திகதி வரை, முக்கியமான கால கட்டத்தில் இடம்பெறும் போரா சமூகத்தின் மாநாடு தேசிய ரீதியில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளதால், வழக்கமாக எல்லாவற்றிற்கும் கருத்துக் கூறிக்கொண்டே காலம் கடத்தும் சிலர் அவர்கள் மீதான விமர்சனங்களை முன் வைத்துத் தம்மையும் தாம் சார்ந்த சமூகத்தையும் தரம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றனர். ஆயினும், அரசியல் ரீதியாக இன்று அவர்கள் தேசிய நலனிற்குப் பங்களித்த சமூகமாக உயர்ந்து நிற்கிறார்கள் என்பதே உண்மை.
பில்லியட் லாபிர் (Muhammad Junaid Muhammad Lafir) என்று அறியப்படும் எம்.ஜே.எம். லாபிரை எமது சமூகம் பெரும்பாலும் மறந்து விட்டது. அவரது பெயரில் ஒரு வீதியின் பெயர் இருப்பதைத் தவிர பின்னணி பற்றி இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தெரியாது எனலாம். இலங்கையின் விளையாட்டுத்துறையில் முதன் முதலாக உலக சம்பியன்ஷிப்பை வென்றெடுத்து நாட்டுக்குப் பெருமை சேர்த்திருந்தார் லாபிர். 1973ல் அவர் பெற்ற வெற்றியூடாகக் கிடைத்ததே இலங்கைக்கான முதலாவது உலக சம்பியன்ஷிப். அக்காலத்தில் விளையாட்டுத்துறையில் அவருக்கு பெருமளவு கௌரவமும் மதிப்பும் இருந்தது பற்றி அறிந்தது போக, அரசியல் ரீதியாக இந்நாட்டின் முன்னேற்றத்திற்கு, குறிப்பாக சுதந்திரத்துக்குப் பின் பங்களித்த பல தலைவர்கள் மதிக்கப்படுவதை கண்டும், கேட்டும் வாசித்தும் அறிந்துள்ளேன்.

ஆனால், என் நினைவில் நிற்கும் வகையில், அரசாங்கமே தலை சாய்த்து, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று, விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஒழுங்குகள் செய்து கொடுத்து உட்சமூக கொள்கைப் பிளவுகள் எவ்வாறாயினும் வெள்ளைத் தொப்பியும் பக்திப் பரவசமுமாகக் காணப்படும், அவர்களால் முஸ்லிம்கள் எனவே அறியப்படும் ஒரு சமூகக் கூறை இத்தனை கௌரவப்படுத்திய நிகழ்வொன்றைக் கண்டதில்லையென்பேன்.

தேசிய அரசியலின் முக்கிய கால கட்டங்களில் வளைந்து – நெளிந்து சில வேளை கருப்பு அங்கியை மாட்டிக் கொண்டு நீதிமன்றம் ஏறி இறங்கிய வரலாறு இருப்பினும் கூட ஈற்றில் பதவியும் - பணமும் பெற்றுக்கொள்வதையே சோனக சமூகம் குறியாகக் கொண்டுள்ளது. அந்த வகையில், நாட்டுக்கு அவசியப்படும் ஒரு கால கட்டத்தில் தமது மாநாட்டை இலங்கையில் நடாத்தி, நாற்பதுக்கும் அதிகமான நாடுகளிலிருந்து 21,000க்கும் அதிகமானோரை இலங்கையில் ஒன்று சேர்த்து, சுற்றுலாத்துறைக்குக் கைகொடுத்ததோடு தேசிய அளவில் ஒரு பலமான சமூகக் கூறாகத் தம்மை நிலைநிறுத்தியிருக்கும் போராக்களின் சாமர்த்தியத்தைப் பாராட்டமலும் இருக்க முடியாது.

இதேவேளை, இதுவொன்றே இனவாதிகள் அவர்களைப் பிரித்துப் பார்த்து சீண்டாமலிருக்க உதவும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. ஆயினும் போராக்கள் பெரும்பாலும் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளையே அண்டி வாழ்வதாலும் தலை நகரிலேயே பெரும்பாலான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதாலும் தம்மை நிலை நிறுத்திக் கொள்வதில் சங்கடமற்றும் ஏனைய முஸ்லிம் சமூகக் கூறுகளுடன் நெருங்கிய நட்புடனும் ஒத்துழைப்புடனும் வாழ்வதனால் பிரதான சமூகத்தின் ஒரு அங்கமாகவும் காணப்படுகிறார்கள்.

ஆயினும், இப்போதுதான் உயிர்த்தெழுந்தது போன்று சில கொள்கைவாதிகள் போராக்களை விமர்சிப்பதிலும் அவர்களை பழித்து, பிரதான சமூகத்தின் மீதான காழ்ப்புணர்வை உருவாக்குவதிலும் குறியாக இருப்பதனைக் காணக்கூடியதாக இருக்கிறது. இவர்களின் பின்னணியில் எவ்வகையான நிகழ்ச்சி நிரல் இருக்கக் கூடும் என்பதை அறியாத ஒரு சமூகமாக போராக்கள் இல்லையென்பதை உறுதிபடக் கூறலாம். ஒற்றைத் தலைமைக்குக் கட்டுப்பட்டு வாழும் ஒரு சமூகம் என்ற ரீதியில், அவர்களது இரு நூற்றாண்டு இருப்பை மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறார்கள். இந்நிலையில், இப்போது திடீரென கூக்குரலிடுவதன் ஊடாக எம்மவர்கள் தம்மையும் தாம் சார்ந்த சமூகத்தையுமே தரம் தாழ்த்திக் கொள்கிறார்கள்.

இலங்கையில் முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்ளக் கூடிய நமக்குள்ளே ஏகமானதாக இணக்கம் காணக்கூடிய ஒரு மார்க்க விடயமோ சமூக விடயமோ கூட இல்லை. பிறை, பெருநாள் தொழுகையில் தொடங்கி ஜனாஸா வரை ஒவ்வொரு விடயத்திலும் அபிப்பிராய பேதங்களும் பிரிவினைகளுமே மலிந்திருக்கின்றன. இந்த நிலையில் மற்றவர்கள் முஸ்லிம்களா? என்று ஆராய்ந்து கொண்டு காலம் கடத்துவதும் நம்மவர்கள் தற்காலத்தில் கற்றுக்கொண்டுள்ள புதிய யுக்தி. ஆயினும் அதில் கண்ட பலன் என்ன? என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்கக் கடமைப்படுகிறோம்.

தற்போது நடந்து கொண்டிருக்கும் போரா சமூக மாநாடு ஊடாக சிங்கள சமூகத்துக்கு மேலும் ஒரு தெளிவு ஓரளவு பிறந்துள்ளது. அதுதான், முஸ்லிம்களுக்குள் இப்படியும் ஒரு பிரத்யேக சமூகக் கூறு இருக்கிறதென்பதாகும். நாளை இந்த உதாரணத்தை மேமன் மற்றும் மலே சமூகத்தினரும் பின் பற்றும் போது நாம் மென்மேலும் தனித்து விடப்படுவோம். அவ்வாறு ஒரு நிலை வந்தால் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அக்கால அரசியல் தலைவர்கள் எந்தக் காரணத்துக்காக அனைத்து இனக்கூறுகளையும் இணைத்து, தனித்தனியான இன அடையாளத்தைத் தவிர்த்து 'முஸ்லிம்' என்ற பொது அடையாளத்துக்குள் ஒற்றைச் சமூகமாக அனைவரையும் சேர்க்க விரும்பினார்களோ அதுவும் பிழைத்துப் போகும்.

அப்படியானால், நமது கடமையென்ன? என்பது கேட்கப்படவேண்டிய கேள்வி. ஏனைய சமூகங்களை விட மலேயர்கள் - சோனக மக்களோடு மிகவும் அன்யோன்யமாகக் கலந்துள்ளார்கள். திருமணம், தொழில் குடும்பம் என இக்கலப்பு மிகவும் வலுவானது. ஆயினும் கூட மலே சமூகமும் தமது தனித்துவத்தைப் பேண விரும்புகிறது. சில இடங்களில் இன்று போராக்களுக்கு எதிராக எழுந்துள்ள திடீர் வியாக்கியான விளக்கங்கள் போன்றே மலே சமூகத்தின் மீதான கலாச்சாரத் தாக்குதல் இதற்கு அடிப்படையாக அமைந்ததாக என்னிடம் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இலங்கை முஸ்லிம்களால் 1970களில் உருவாக்கப்பட்ட முக்கிய சமூக அமைப்புகள் இரண்டுள்ளன. அதில் மலே சமூகத்துக்கான அமைப்பும் ஒன்று. இன்று வரையிலும், இவ்வமைப்பில் பின்பற்றப்படும் இறுக்கமான நடைமுறைகளுள் ஒன்றுதான் அவ்வமைப்பின் நிர்வாக பொறுப்புகளுக்கு வரக்கூடியவர்கள் அனைவரும் 100 வீதம் மலே பின்னணியினைக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும். தாய் - தந்தையர்களுள் ஒருவர் அவ்வாறில்லையென்றாலும் கூட உறுப்பினராக இருந்தாலும் நிர்வாகப் பொறுப்பில் குறித்த நபர் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்.

இதேவேளை, Sri Lanka Islamic Association என்ற பெயரில் உருவாக்கப்பட்ட அடுத்த அமைப்பின் தற்போதைய தலைவர் கூட மலே சமூகத்தைச் சேர்ந்தவரே. இந்த அமைப்பைப் பொறுத்தவரை இலங்கை முஸ்லிம் என்ற பின்னணியே தகுதியாக இருக்கிறது. ஆயினும் கூட மலே சமூகம் தமது தனித்துவத்தையும் தாம் சார்ந்த கலாச்சாரத்தைப் பேண நினைப்பதையும் குறை காண்பதற்கில்லையென்பது எனது நிலைப்பாடு.  

எண்ணிக்கையில் அதிகமாகவும், அரசியல் ஆளுமையுடனும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாகவும்; கூறிக் கொள்பவர்களே முன்னுதாரணமாகவும் அரவணைக்கும் நற்குணத்துடனும் செயற்படும் தேவையுள்ளவர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் இரு நூற்றாண்டுகளாக முஸ்லிம்களாக ஒன்றி வாழும் போரா – மேமன் சமூகங்கள் மற்றும் அதை விட அதிக காலம் ஒன்றரக் கலந்து வாழும் மலே சமூகம் தொடர்பிலுமான எண்ணப் போக்கு தீவிரவாதம் கொண்டு அணுகப்படுவது நிறுத்தப்படல் வேண்டும். 

அடிப்படையிலே, நமது நன்னடத்தை ஊடாகவும் செயற்பாடு ஊடாகவும் நாம் பின்பற்றும் வழி தான் மார்க்கத்தின் தூய வழியென அடுத்தவரை நம்பச் செய்ய முடியாதிருப்பின், அங்கே நம்மிலே குறையிருப்பதாகத்தான் அர்த்தம். உலகுக்கே அருட்கொடையாக வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி, அவர் காட்டித்தந்த வழிமுறையிலே நாம் தான் தூய்மையான வாழ்க்கை வாழ்கிறோம்; என்றால் ஏக இறைவனை ஏற்றுக்கொண்ட போதிலும் ஒரு சில கொள்கைப் பிளவுகளாலேயே தனித்து நிற்க விளைகின்ற ஏனைய சமூகங்களை கவர்வதும், ஏற்றுக்கொள்ள வைப்பதும் கூட கடினமான காரியமாக இருக்க முடியாது. ஆயினும், நமது குறை மறைக்க, அடுத்த சமூகத்தை இழிவு படுத்துவதைக் கொண்டும் சமூகத்தின் ஒரு கூறு சந்தோசப்படுகிறது என்பது கவலையுடன் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

குறிப்பாக, ஏகத்துவவாதிகள் எனத் தம்மைக் கூறிக் கொண்ட கடந்த பத்து முதல் பதினைந்து வருட காலப்பகுதிக்குள் ஓயாமல் சமூகச் சர்ச்சைகளை உருவாக்க சத்தமாகப் பேசித் திரிவோர், இன்னும் அடக்கமாகவும், அறிவுபூர்வமாகவும் செயலாற்ற வேண்டும். ஏனைய கொள்கை இயக்கங்கள் கூடத்தான் இலங்கையில் இஜ்திமாக்களை நடாத்தி பெருந்தொகை மக்களை சேர்த்துள்ளனர். ஆனால், அவை அரசியல் முக்கியத்துவத்தையும் கௌரவத்தையும் பெற்றதில்லையென்று கூறுவது மிகையில்லை. தனித்தனி கூறுகளாக பெரும் எண்ணிக்கையில் ஒன்று கூடினாலும் கட்டுக்கோப்பு, ஒழுக்கம் மற்றும் சாமர்த்தியமான பொருளாதார பலத்தைக் கொண்டு அரசியல் ஆளுமையை வளர்த்துக் கொள்ள எமது சமூகம் கடந்த காலங்களிலும், இக்காலத்திலும் கூட தவறிக் கொண்டே இருக்கிறது.

அடிப்படையில் முஸ்லிம் வாதமே இன்று கொள்கை மற்றும் அரசியலின் பிழைப்புக்கான வழியென இச்சமூகத்தின் மீது நிர்ப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. அப்பின்னணியில், பொதுவுடைமைவாத அரசியல் இயக்கமான ஜே.வி.பிக்குக் கூட தொப்பியணிந்து இஸ்லாமிய போர்வை போர்த்துவதற்கான முயற்சி இடம்பெற்றுக்கொண்டிருப்பதைக் காணலாம். ஜே.வி.பியை அந்த இயக்கத்தின் கொள்கைகளுக்காக ஆதரிப்பதும் அவர்களை நமதூர்களுக்கு அழைத்து வந்து இஸ்லாமிய போர்வை போர்த்த முனைவதும் இரு வேறு விடயங்கள். அது தெரிந்தும் உணரப்படாமலேயே இனவாதத்துக்கு எம்மவர்களும் உரம் சேர்க்கிறார்கள்.

இவ்வாறாக எமது சமூகத்தின் இன்றைய நிலைமையை பொதுத் தளத்திலிருந்து எடை போடும் போது நம் மீதான வெறுப்பு உருவாவதற்கும், நம் நிலை தாழ்வதற்கும் பெரும்பாலும் நாமே காரணம் என்பது தெளிவாகும். மார்டின் லூதர் கிங் ஜுனியர் சொன்னது போன்று நல்லவர்களின் மௌனமும் தீயதன் எழுச்சிக்குக் காரணம். ஆதலால், அறிந்தவர்கள், பொதுத் தளத்திலிருந்து சிந்திக்கக் கூடியவர்கள், கற்றுத் தேர்ந்தவர்கள் தம் சமூகப் பங்கையாற்றுவதிலிருந்து விலகி நிற்க வேண்டாம்.

எல்லா வகையிலும் தறிகெட்டுப் போயிருக்கும் இச்சூழல் எதிர்காலத்தில் உருவாக்கக் கூடிய விளைவுகளின் மாதிரி (ளயஅpடந) கடந்த காலத்திலேயே நமக்குக் காட்டப்பட்டு விட்டது. அதை வலிந்து இழுத்து மீண்டும் மீண்டும் பெற்றுக் கொள்வதுதான் நமது தேர்வா? என்பது நாமே சிந்திக்க வேண்டியது. அவசர கால சட்டத்தோடு பெண்களின் முகத்திரை மீதான தடை நீங்கியதா? இல்லையா? என்பது தெளிவாக எடுத்துரைக்கப்படாத நிலையில் தனி நபர்கள் அதற்கு வியாக்கியானம் கூறி முஸ்லிம் உணர்வுகளைத் தூண்டலானார்கள். ஈற்றில், குடும்பங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைதான போது முகப்புத்தகங்களில் வீடியோ போட்டு வீரம் பேசும் அவர்கள் காணாமல் போய் விட்டார்கள். ஆக, உணர்ச்சியூட்டல் தொடர்பிலும் இன்னும் இன்னும் அவதானமும் சமூக விடயங்களில் சாமர்த்தியமான நிதானமும் தேவைப்படுகிறது.

நுணலும் தன் வாயால் கெடும்!

wjR0LbU

Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

2 comments:

Post a Comment