உயர்ந்த கோபுரங்களும் உருக்குலைந்த கனவுகளும்! - sonakar.com

Post Top Ad

Saturday 21 September 2019

உயர்ந்த கோபுரங்களும் உருக்குலைந்த கனவுகளும்!


90 களின் முற்பகுதியில் முதற் தடவையாக சிங்கப்பூர் சென்றிருந்த வேளையில், முதற் பார்வையிலேயே இரண்டு விடயங்கள் என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கின. முதலாவது, விமான நிலையத்திலேயே 'நல் வரவு' என்று தமிழில் தொங்கிய பெரிய பதாதை (banner), அடுத்து பிரபல முஸ்தபா வர்த்தக கட்டிடம் அமைந்திருந்த சையத் அல்வி வீதியின் முனையில் காணப்பட்ட சிறு அரசாங்க அறிவித்தல்.



'இந்த இடத்தில் கூடாதீர்கள், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆகையால் முன்னால் இருக்கும் முற்றவெளியில் கூடுங்கள்' என்பதே அந்த அறிவிப்பு. அதனைக் கண்ணுற்ற போது என்னையறியாத புன்னகையும் பெருமூச்சும் வந்தது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது. இங்கே கூடாதீர்கள் என்று கட்டளையிடுவதற்கும் கூடினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று காரணமும் கூறி, முன்னால் ஒரு முற்றவெளியிருக்கிறதே அங்கு கூடலாமே என அறிவுரை வழங்குவதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது, அந்த ஜனநாயகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்னொரு வகையில், உலகின் ஏனைய நாடுகளுக்கெல்லாம் போக வேண்டும், அங்குள்ள மக்கள், கலாச்சாரம், பண்பாடு மற்றும் வாழ்வியலையெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அங்கிருந்துதான் எனக்குள் வலுப் பெற்றது.

அதேவேளை, அந்நாட்டின் பொருளாதார – சமூகக் கட்டமைப்பையும் செயற்பாட்டையும் உற்று நோக்கிய போது வானுயர எழுந்து நிற்கும் கட்டிடங்களால் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தியடையப் போவதில்லையென்பதையும் தெளிவாக உணரக் கூடியதாக இருந்தது. இன்று கொழும்பு நகரின் முக்கிய இடங்களில் தோன்றியிருக்கும் மற்றும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டிடங்கள் மற்றும் வடிவமைப்புகள் ஒரு வகையில் நீண்ட கால காத்திருப்பிற்கு ஆறுதல் அளிக்கிறது என்பதும் உண்மை. குறிப்பாக கொழும்பு 7ல் உருவாகியிருக்கும் பல உணவகங்கள், வர்த்தக நிலையங்களைப் பார்வையிட்ட போது, பள்ளிக் காலத்தில் நாங்கள் நடந்து திரிந்த இந்த பாதைகளில் இதற்கான இடம் அப்போது இருந்ததா? எங்கிருந்து இந்த இடங்கள் கிடைத்தன? என்று கூட யோசிக்க விளைந்ததோடு நகரம் நவீனப்படுவது கண்டு மகிழ்ந்ததுண்டு.

கடந்த ஒக்டோபரில் யாழ்ப்பாணம் வரை செல்வதற்கான தேவை வந்த போது, யுத்த சூழலில்லை, பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லை, வீதிகளும் நல்ல நிலையில் இருக்கிறதென்று ஒருவர் உற்சாகப்படுத்தினார். அங்கு சென்று என் நண்பர் ஒருவர் வீட்டில் தான் தங்க ஏற்பாடு. எதற்கும் அவருக்கும் ஒரு வார்த்தை சொல்வோம் என்று தொடர்பு கொண்டால், இரவில் செல்லாதீர்கள், லொறி – பஸ் காரர்கள் 'பேய்' போல் ஓட்டுவார்கள் என்று அறிவுரையும் கிடைத்தது. ஆதலால், கொழும்பிலிருந்து இரவு புறப்பட்டு, புததளத்தில் சற்று தங்கியிருந்து மீண்டும் விடியற்காலையில் புறப்பட்டுச் சென்றோம். இடையில் தேவைப்படும் ஊர்களில் எல்லாம் தரித்து, மக்களோடு உரையாடி மீண்டு வந்த போது, சக ஆய்வாளர் ஒருவர் ஒட்டு மொத்த இலங்கையின் சமூக ஏற்றத்தாழ்வு பற்றி என்ன கருதுகிறீர்கள் என என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.

5 கோடி பெறுமதியான சொந்த வீடாக இருந்த போதிலும் மாதாந்தம் 45,000 ரூபா சேவைக் கட்டணம் செலுத்தி சொகுசு அடுக்கு மாடிகளில் வாழ்வோரையும் கண்டேன், மாதம் 5,000 ரூபா வீட்டு வாடகை செலுத்த முடியாத சூழ்நிலையில் கஷ்டப்படுவோரையும் கொழும்பிலேயே கண்டேன். புறத் தோற்றம் எதுவாக இருந்தாலும் சமூக ஏற்றத்தாழ்வு, சமப்படுத்தப்படாத தளம்பல் அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலையில் மக்கள் என்ன தான் செய்வார்கள்? என்று பதில் கேள்விதான் கேட்க முடிந்தது.
வளர்ச்சி கண்டவர்கள் வளர்ந்து கொண்டேயிருக்க வளர்ச்சிக்கான எல்லைக் கோடும் உயர்ந்து கொண்டேயிருப்பதனால் அதன் உச்சம் வரையறையற்றுப் போகிறது. இதனை நிலைப்படுத்தும் அவசியமும் சமூகக் கட்டமைப்பை சீர் செய்யும் பணியும் நாட்டின் நிர்வாகம் சார்ந்ததே. ஒப்பீட்டுக்காக நான் வாழும் ஐக்கிய இராச்சியத்தை எடுத்துக் கொண்டால் ஒரு அபிவிருத்தியடைந்த நாடாக இருந்தும் கூட இங்கும் 20 வீத மக்கள் வறுமைக் கோட்டின் எல்லையிலேயே வாழ்கிறார்கள் என்பது 2016ம் ஆண்டின் வருமான அடிப்படையிலான (median income) கணிப்பு.

1900 ஆரம்பத்தின் போது பல மில்லியன் மக்கள் மிகவும் மோசமான சூழல்களில் அமையப் பெற்ற வீடுகள், மிகக்குறைந்த வருமானம், போதியளவு உணவின்மை, சுகாதாரக் குறைபாடு என ஒப்பீட்டளவில் தர நிலை குறைந்தே வாழ்ந்த போதிலும் முதலாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட வளர்ச்சி மாற்றம், 1950 அளவில் வேறு நிலையை எட்டி நாட்டின் 75 வீத மக்கள் போதிய வருமானத்துடனும், வீடு – உணவு – உடை வசதிகளுடன் வாழ்ந்ததாக வரலாறு சொல்கிறது. இதை தற்காலத்தோடு ஒப்பிடுகையில் 2016ல் சனத்தொகை வெகுவாக உயர்ந்துள்ள அதேவேளை சுமார் 20 வீதத்தினர் வருமானக் குறைபாட்டினாலேயே இவ் வகையறாக்குள் வருகிறார்கள். வருமானக் குறைபாடு என்று கூறும் போது, வளர்ச்சி கண்ட நாடென்ற அடிப்படையில் அதற்குத் தகுந்த கல்வியைப் பெற்று நிரந்தர தொழில் வாய்ப்புகளை பெறாமையும் அரச உதவிகள் (Social benefits) மீதான அதீத நாட்டத்தினால் பொறுப்பற்ற வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தல், இன்னொரு வகையில் ஒற்றைப் பெற்றோர் (single parent) போன்ற நவீன வாழ்க்கை முறைகளும் இதற்குக் காரணமாக அமைகின்றன.

தனி நபர் வாழ்க்கைச் சூழல் எவ்வாறாக அமைந்த போதிலும் சமூகச் சூழல் பெரும்பாலும் ஐக்கிய இராச்சியத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒரே தர நிலையை (standard) அடைந்துள்ளமை இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம். இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் என எங்கு சென்றாலும் சமூக, போக்குவரத்து, பொருளாதார ஒழுங்குகள் ஒரே போன்றே காணப்படும். சட்டமும் அரசியலும் நீதியும் அதே வழியில் தரப்படுத்தப்பட்டிருப்பதனால் வாழ்வியல் இங்கு ஆர்ப்பாட்டமில்லாத சம நிலையை அடைந்துள்ளது. 

துரதிஷ்டவசமாக, காலணித்துவத்திலிருந்து விடுதலை பெற்று 70 வருடங்கள் கடந்தும் நம் தாய்நாட்டின் அரசியல் இன்னும் ஒழுங்குபடுத்தப்படவில்லை. ஆதலால், சமூக – பொருளாதார – அரசியல் என எதிலுமே தர நிலையும் இல்லை, சம நிலையும் இல்லை. ஆதலால் ஒரு பக்கம் வீங்கி இன்னொரு பக்கம் தேய்ந்திருப்பதே கால விளைவாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிங்கப்பூரில் கண்ட சிறு விடயங்கள் இன்னும் பசுமையாக இருக்க, நம் நாட்டில் தோன்றும்; ஒவ்வொரு புதுமையும் வடுக்களாக நிலை கொள்கிறது. அதன் தொடர்ச்சியில் தாமரைக் கோபுரமும் எழுந்து நிற்கிறது.

கொழும்புக்குள் நுழையும் போதே கம்பீரமாகக் காட்சியளிக்கப் போகும் தாமரை கோபுரத்திலும் 200 கோடி ரூபா ஊழல் என்ற நினைவையும் சுமந்து நிற்கும் வகையில் சரித்தரம் உருவாக்கப்பட்டுள்ளதை நினைக்கும் போது வேடிக்கையை விட வேதனையே மிஞ்சுகிறது. 

190.8 மீற்றர் உயரமான கனடாவின் கல்கேரி கோபுரத்தின் (Calgary tower) மொத்த எடையில் 60 வீதமான 6530 தொன், நிலத்தின் கீழேயே அத்திவாரமாக உருவாக்கப்பட்டுள்ளது. 50 வருடங்களைத் தாண்டி இன்னும் கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டிக்கிறது. 1967ம் வருடம் பெப்ரவரி மாதம் 19ம் திகதி ஆரம்பமான நிர்மாணப் பணிகள் ஒரு வருடத்தை அண்மிய காலத்தில் நிறைவடைந்து, 1968 ஜுன் மாதம் 30ம் திகதி மக்கள் பாவனைக்காக திறக்கவும் பட்டது. மொத்த செலவு அன்றைய கால நாணய மதிப்பில் 3.5 மில்லியன் கனேடிய டொலர் எனவும் அப்போதே அறிவிக்கப்பட்டு விட்டது.

2012 ஜனவரி மாதம் 20ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு தாமரைக் கோபுரம் 2014ல் 125 மீற்றர் உயரத்தையும் 2015 ஜுலையில் 255 மீற்றர் உயரத்தையும் அடைந்து, நான்கு வருடங்கள் கழித்து 2019 செப்டம்பரில் 356 மீற்றரைத் தொட்டு,; 104.3 மில்லியன் அமெரிக்க டொலர் சீனக் கடனும் 200 கோடி ரூபா முற்பண ஊழலும் கலந்து செப்டம்பர் 16ம் திகதி அவசர அவசரமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கல்கேரி கோபுரத்தோடு ஒப்பிடுகையில் தாமரைக் கோபுரத்தின் எடையெல்லாம் கடனாகவே இருக்கப் போகிறது. ஒருவேளை இதை உணர்த்தவே தனது பதவிக்காலம் முடிவதற்குள் அதனைத் திறந்து வைத்து அதன் பின்னணியில் உள்ள வலியையும் நாடறியச் செய்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன என்றும் எண்ணத் தோன்றுகிறது.

கட்டி முடித்த வரை திறந்து வைக்கப்பட்டுள்ள போதிலும் கோபுர நிர்மாணப் பணிகள் முழுமையாக நிறைவடைய இன்னும் 300 கோடி ரூபா செலவு செய்யப்பட வேண்டியிருப்பதாக திறப்பு விழாவின் போது தெரிவித்த ஜனாதிபதி, மேலும் இரண்டு விடயங்களை வலியுறுத்திப் பதிவு செய்ய விரும்பியிருந்தார். ஒன்று, இந்த கோபுரம் வேறு எந்த நாட்டிலிருந்தும் கிடைக்கப் பெற்ற பரிசில்லை, அதற்கான செலவீனம் நன்கொடையாகக் கிடைக்கவும் இல்லை. இரண்டாவது, நிர்மாணத்திற்கான செலவை மக்களே சுமந்திருக்கிறார்கள் என்பதால் இது தனி நபர் சொத்தில்லை, பொதுச் சொத்து என்பவையே அவை.

மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது ஆரம்பிக்கப்பட்ட இக்கோபுர நிர்மாணத் திட்டம் ஏழு வருடங்கள் இழுபறிக்குள்ளானதிலும் பெருந்தொகைப் பணச் செலவை உருவாக்கியதன் பின்னணியிலும் இப்படியும் ஒரு சோகம் இருக்கிறதென்பதை சொல்ல விளைந்த ஜனாதிபதி, இது போன்று சொல்லாமல் அல்லது சொல்ல முடியாமல் தவிக்கும் விடயங்கள் பல ஆயிரங்கள் இருக்கிறது. அதில் பல அவரது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அல்லது இடம்பெற்ற விடயங்கள் என்பதும் மறைக்க முடியாதது.

2015ல் உருவான நல்லாட்சிக்கான கனவு, தூய்மையான அரசியல் புரட்சியை நோக்கிய மக்கள் எழுச்சியாகவே இருந்தது. சர்வாதிகாரப் போக்கினால் அதாள பாதாளத்துக்குள் வீழ்ந்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும், கடனுக்கு மேல் கடன் வாங்கி பூசி மெழுகப்படும் அபிவிருத்திகளுக்குப் பின் இருக்கும் ஊழல்கள் களையப்பட வேண்டும், அதிகார துஷ்பிரயோகம் இல்லாதொழிக்கப்பட வேண்டும், ஆக மொத்தத்தில் நாடு முன்னேற வேண்டும், மாற்றம் காண வேண்டும் என மக்கள் வெகுண்டெழுந்த போதிலும் அதனை நிறைவேற்றத் தவறிய குற்ற உணர்வற்ற சூழ்நிலையிலேயே தொடர்ந்தும் பழைய தவறுகள் நியாயப்படுத்தப்படுகிறது. அவை மறைக்கப்படவும் கூடாதவை என்பதால் பகிரங்கப்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளப்டினும் கூட உருக்குலைந்த மக்கள் கனவுகளுக்கு பதில் சொல்வது யார்? என்ற கேள்வி தொக்கு நிற்கிறது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாயினும் கூட ஒட்டு மொத்த அரச இயந்திரத்தையும் கட்டுப்படுத்த நாடாளுமன்ற பலமும் தேவைப்படுகிறது என்பதை உணரத் தொடங்கிய நாள் முதல் தனது பலவீனத்தை ஆதங்கமாகக் கொட்டிக் கொண்டிருக்கிறார் மைத்ரிபால சிறிசேன. 2015 பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது 'எமது ஆட்சியில் தவறிழைத்தவர்களை கண்டிக்கத் தவறியதன் ஊடாக அல்லது தடுக்காமல் விட்டதன் ஊடாக நான் தவறிழைத்து விட்டேன்' என மஹிந்த ராஜபக்ச சொன்னது போன்றன்றி, பதவிக் காலத்திலேயே தான் நல்லது செய்ததாகக் காட்டிக் கொள்ள என்னதான் முனைந்தாலும் அதில் மைத்ரிபால சிறிசேன இன்னும் வெற்றி பெற முடியவில்லை, மாறாகத் தனித்து விடப்பட்டுள்ளார்.
வெறுமனே 19ம் திருத்தச் சட்டம் மாத்திரமே இந்த பலவீனத்தின் அடிப்படையென்பது மிகைப்படுத்தலாக அமைந்து விடும். மாறாக, கள யதார்த்தமும் - அரச இயந்திரத்தின் செயற்பாடும் புரிந்து கொள்ளப்படின் அது எதிர்வரும் தேர்தல்களில் விவேகமான முடிவை எட்டுவதற்கு ஏதுவாக இருக்கும்.

அடுத்தவனை மிதித்தாவது நாம் முன்னேறிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு கோட்டில் எல்லோருமே பயணிக்கும் போது அவ்வப்போது ஒவ்வொருவரும் இன்னொருவரால் மிதிபட்டுக் கொண்டேயிருப்பார்கள். அதில் தனக்கு நடப்பது மாத்திரமே அநீதியென அவலக்குரல் எழுப்பும் நிலை மாற வேண்டுமானால், சிறப்பான சமூகக் கட்டுமானம் மற்றும் சமூக ஒழுங்கைத் தரக் கூடிய நிர்வாகத்தை நாடி அதற்குரிய மாற்றத்தைக் காண்பதும் மக்கள் கடமையாகவே இருக்கிறது. பொதுவாகவே, இவையெதுவும் தமக்கு தேவையற்ற விடயங்கள் என்பதே சராசரி இலங்கைக் குடிமகனின் எண்ணப் பிரதிபலிப்பு. ஆதலால், அரசியல் களம் தமக்குத் தேவையானதை நிர்ணயித்துக் கொள்கிறது.

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தேசிய – பிராந்திய – பிரதேச ரீதியாக தமது ஆளுமையூடாக மாற்றத்தைக் கொண்டு வரக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் எவ்வாறு? எதற்காக? பயன்படுத்துகிறோம் என்ற கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் எழ ஆரம்பிக்கும் காலமே மாற்றத்திற்கான அடிப்படை உணரப்படும். இவ்வாறு அடி மட்ட சமூக ஒழுங்கு மாற்றம் காணாத வரை புறக்காரணிகளின் விளைவுகளே கட்டமைப்பைத் தீர்மானிக்கும்.

ஆக, கட்டடங்கள் உயர்வதை விட மக்களின் வாழ்க்கைத் தரமும் சமூக சூழலின் தரமும் உயர்வதே அவசியமாகிறது. ஐரோப்பிய நாடுகளிலும் சராசரியாக 17 வீதமானோர் வறுமைக் கோட்டையண்டி வாழ்கின்றனர். ஆயினும், அது முன் சொன்னது போன்று median income  (இரு வேறு சமூகக் கூறுகளின் ஒப்பீட்டு) அடிப்படையிலானதாகும். ஆயினும், அங்கு காணப்படும் சமூக – அரசியல் - பொருளாதார மற்றும் சட்ட ஒழுங்குகள் இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கப்பால் நாட்டின் கட்டமைப்பைப் பேணி வரும் வகையில் செயற்பட்டு வருகிறது. அது கொள்கை வகுப்பாளர்களின் (policy makers) நீண்ட மற்றும் குறுகிய கால உழைப்பின், திட்டமிடலின் பயன் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது.

அந்த வகையி;ல், நமது நாட்டின் கொள்கை வகுப்பிலும், செயற்பாட்டிலும் நமது பங்கு என்ன? என்பது ஒவ்வொரு இலங்கைக் குடிமகனும் சிந்திக்க வேண்டிய விடயமாகம். ஆதலால், தாமரைக் கோபுரங்கள், நம் ஊரை, நகரைச் சுற்றி அமைக்கப்படும் மணிக்கூட்டு கோபுரங்கள், பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள், சந்தைகள், பள்ளிவாசல்கள், சமூக நிலையங்கள் என எதுவாக இருந்தாலும் அதில் தெளிவு காண்பதிலும் ஊழலற்ற எதிர்காலத்தை உருவாக்குவதிலும் மக்களின் பங்கு அவசியப்படுகிறது. 

2017/18 வருடத்துக்கான புள்ளிவிபரத்தின் அடிப்படையில் அவ்வருடம் 1.357 பில்லியன் மக்களின் பிரயாணத் தேவையைப் பூர்த்தி செய்த லண்டன் அன்டர்கிரவுன்ட் (London Underground) என அறியப்படும் நிலத்தடி இரயில் சேவை 150 வருடங்களின் பின் வரக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் கருத்திற் கொண்டு 1830ம் ஆண்டே திட்டமிடப்பட்டது. அடுத்த 33 ஆண்டுகளாக வடிவமைக்கப்பட்டு, நிர்மாணிக்கப்பட்டு 1863ம் ஆண்டு உலகிலேயே முதலாவது நிலத்தடி இரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு, இன்று உலகின் மிக முக்கிய நகரின் தலையாய போக்குவரத்து வழியாகத் திகழ்கிறது. 

நூறாண்டுகள் தாண்டியும் நாடு பயனடைகிறது, மக்களும் பயனடைகிறார்கள்!

jTScYcS

Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment