ஜனாதிபதித் தேர்தல்: கதைகள்-கணிப்புகள் - sonakar.com

Post Top Ad

Sunday 22 September 2019

ஜனாதிபதித் தேர்தல்: கதைகள்-கணிப்புகள்


தேர்தல் ஆணைக்குழு முக்கியஸ்தர் மஹிந்த தேசப்பிரிய சொன்னபடி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இது விடயத்தில்  நாம் யாருடைய கட்டளைக்காகவும் காத்திருக்க மாட்டோம் என்று அவர் நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி இது நடந்திருக்கின்றது. மொட்டுக்களின் முக்கியஸ்தர் பசில் சொன்னபடி இந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டதற்காக மஹிந்த தேசப்பிரியாவுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்திருக்கின்றார்.


இப்போது வேட்பு மனுக்கள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நவம்பர் 16 என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சிலர் தேர்தல் தொடர்பான பரப்புரைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கின்றனர். இந்த வரிசையில் மக்கள் சக்தி வேட்பாளரும், மொட்டுக்கள் தரப்பினரும் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டு வருகின்றார்கள். பொது மக்களைச் சந்தித்து வருகின்றார்கள். 

ஆட்சி நடத்துகின்ற ஐக்கிய தேசியக் கட்சி தனது வேட்பாளரை அறிமுகம் செய்வதில் இன்னும் அடிபுடிபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் கதை நாம் ஜனநாயகவாதிகள் இங்கு அப்படித்தான் காரியங்கள் நடக்கும் அதனைப் பொது மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பது அவர்கள் தரப்பு கதைகள். இதற்கிடையில் வருகின்ற புதன் கிழமை வரை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று தலைவர் ரணில் கட்சிக்காரர்களிடத்தில் கேட்டிருக்கின்றார். புதன் கிழமைதான் நல்ல நாள் போலும்.!

அந்தக் கட்சியில் சஜித், கரு இருவரும் இதற்கான எதிர்பார்ப்பில் இருக்கின்றார்கள். ரணில் ஐ.தே.காவால் வெற்றி பெற முடிந்தால் தானே போட்டியிடுவேன் என்று முன்பு சொல்லி இருந்தார். வெற்றி பெறமுடியாவிட்டால் விட்டுக் கொடுப்பேன் என்றும் பகிரங்க மக்கள் சந்திப்பொன்றில் கூறி இருந்தார். எனவே புதன் கிழமை ரணிலின் முடிவு தெரியவரும் என்று நாம் இங்கு பதிய விரும்பவில்லை. அன்று கூட இது நடக்காமல் தள்ளிப்போக இடமிருக்கின்றது. இதுதான் ரணில் விடயத்தில் எமது அனுபவங்களாக இருக்கின்றன. 

தன்னை எதிர்க்கும் செயற்குழுவிலுள்ள பலரை சடுதியாக வெளியேற்றிவிட்டு அவர்களிடத்திற்குப் புதியவர்கள் பலரை நியமனம் செய்து அதன் மூலம் ஜனாதிபதி வேட்பாளரை சஜித்துக்குக் கொடுக்கவிடாமல் தடுக்கின்ற இறுதி முயற்ச்சியில் மிஸ்டர் கிளீன் இறங்கி இருக்கின்றார் என்று தெரியவருகின்றது. எனவே நாளை முதல் வருகின்ற சில தினங்கள் ஐ.தே.காவுக்குத் தீர்க்கமான நாட்களாக இருக்கும்.

சஜித் பிரேமதாச தனது கடும்போக்கு நிலையிலிருந்து தற்போது ஓரளவு விட்டுக் கொடுப்புடன் ரணிலை அனுகி வருகின்றார். இது அவரது சகாக்கள் அவருக்கு கூறி இருக்கின்ற புத்திமதி. என்னையே நிச்சயம் வேட்பாளராக நியமனம் செய்வார்கள் என்று நான் திடமாக நம்புகின்றேன் என்று அவர் ஊடகங்களுக்கு இப்போது சொல்லி வருகின்றார்.

சில தினங்களுக்கு முன்னர் தமிழ் விடுதலைக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர், சஜித் தொடர்பாக சொன்ன சில வார்த்தைகளினால் அவர் சற்று நொந்து போய் இருக்கின்றார். அரசியலில் சஜித் ஒரு குழந்தை என்பது மூத்த தலைவர் சம்பந்தர் நிலைப்பாடு. இவரிடம் எப்படிப்போய் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வை எதிர்பாக்க முடியும் என்பது அவர் ஆதங்கமாக இருக்கக்கூடும்.! 

சரி அவரைத்தான் ரணில் வேட்பாளராக நியமனம் செய்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் ஒரே இரவில் சஜீத் அரசியல் முதிர்ச்சியை அடைந்து விடுவாரா என்று பெரியவரைக் கேட்கத் தோன்றுகின்றது. அல்லது சம்பந்தர் மாற்று வேட்பாளர் ஒருவரை ஆதரித்து தீர்வைத் தமிழருக்குப் பெற்றுக் கொடுக்க இருப்பதால், இப்படிச் சொல்லி இருந்தால் அந்த வேட்பாளர் யார்? அவர் தொடர்ப்பில் தமிழ் மக்களுக்குக் கொடுக்கக் கூடிய உத்தரவாதங்கள் என்ன என்றும் நாம் கேள்வி எழுப்புகின்றோம். ரணிலைத் திருப்த்திப்படுத்த ஐயா போட்ட போடாக இது இருக்கவும் வாய்ப்பிருக்கின்றது. பொதுவாக சிறுபன்மை விவகாரங்களில் தெற்குத் தலைவர்கள் கொடுத்த உத்தரவாதங்கள் பற்றி நாம் நிறையவே கடந்த காலங்களில் பேசி இருக்கின்றோம்.

முன்னாள் வடக்கு மாகாண சபை முதல்வர் சிவஞானம் புதிதாக அரசாங்கம் ஒன்றை ரணில் அமைக்கின்ற போது ஒரு வருட காலத்துக்குள் இனப் பிரச்சினைக்குத் தீர்வு தருவதாக அவர் வாக்குறுதி தந்திருப்பதாக அறிவித்திருக்கின்றார். இதனை நாம் ஊடகங்களில் பார்த்தோம். இதனைக் கூறி தமிழ் இனத்தின் வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கொட்டும்படியா இவர்கள் சொல்ல வருகின்றார்கள். தமிழர்கள் அறிவுமிக்க ஒரு இனம். இந்த ஒரு வருட வாக்குறுதியை நம்பி இவர்களுக்கு வாக்குப்போடுவதை இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று எமக்குத் தெரியாது. 

அதிகாரத்தில் இருக்கின்ற போது எதையையும் கொடுக்காதவர்கள்-அதற்கான முயற்ச்சிகளை உரிய முறையில் முன்னெடுக்காதவர் இப்போது மட்டும் ஒரு வருட வாக்குறுதி பற்றி பேசுகின்றார். இதனை நம்பி வாக்குப்போடுமாறு கூறும் தமிழ் தலைமைகளை நாம் என்னவென்று சொல்வது. அலாவுடீனும் அற்புதவிளக்கும் சிவஞானம் தமிழர்களுக்குக் காட்டப் போகின்றார் போலும். இந்த ஐக்கிய தேசியக் கட்சிதான் வருகின்ற தேர்தல்களில் வெற்றி பெறுமா? அவர்கள்தான் அதிகாரத்துக்கு வருவார்களா? இதற்கு என்ன உத்தரவாதம் என்று நாம் ஞானத்தைக் கேட்க்கின்றோம். அறிவு மிக்க தமிழினம் இதனை விட ஆரோக்கியமான தீர்மானங்களை வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் எடுக்க முடியும். ஞானத்தின் கருத்திலிருந்து அப்படியான ஒரு தீர்மானத்திற்கு வழிகாட்ட தமிழ் அரசியல் தலைமைகள் தயார் இல்லை என்பது இதிலிருந்து தெரிகின்றது. இவர்கள் இலவ மரத்துக்குக் காவல் காப்பதற்கே இன்னும் தமிழர்களை அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

முஸ்லில், மலையகக் கட்சிகள் சஜித்துக்கு விசுவாசம் தெரிவித்து விட்டன.  ஆனால் சஜித் வேட்பாளர் இல்லை என்ற நிலை வந்தாலும் கூட நிச்சயமாக இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டிலிருந்து ஒருபோதும் விடுபட மாட்டார்கள். வெற்றி வாய்ப்பு இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியினரே சொல்லும்  தலைவர் ரணில் வேட்பாளராக வந்தால் கூட அவரைத்தான் இவர்கள் ஆதரிப்பார்கள். இதில் மாற்றங்கள் வராது. இதற்கான அரசியல் நியாதிகளை நாம் முன்பு பலமுறை சொல்லி இருக்கின்றோம். அஷ்ரஃப், சீனியர் தொண்டா போன்று அரசியல் தீர்மானங்களை எடுக்க இந்தத் தலைமைகளுக்கு முதுகெழும்பு கிடையாது. இவர்கள் செய்வது சமூகத்தின் பெயரில்  அரசியல் வியாபாரமாயிற்றே அதனால் தீர்மானங்கள் அப்படித்தான் இருக்கும்.

இந்த முறை தேர்தல்களில் சிறுபான்மையினருக்கு எந்த வாக்குறுதிகளும் கிடையாது என்பது களநிலவரம். எனவே பேரம் பேசல் உரிமைகளை வென்றெடுப்பது என்று தலைவர்கள் பெரிதாக அரங்குகளில் பேசமாட்டார்கள். நீருக்குள் விளக்கை கொண்டு போவது போல் உரிமைகள் பற்றி நாம் இரகசியமாக பேசி இருக்கின்றோம். அதனைப் பகிரங்கமாக சொல்ல முடியாது என்று அவர்கள் எமக்குக் புதுக் கதைகளை விட்டாலும் விடுவார்கள். அதையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்கின்றது. 

இந்தத் தேர்தலில் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்ற மனிதன் நமது ஜனாதிபதி மைத்திரி. அவர் கட்சியினர் தற்போது தமக்கு கௌரவமாக ஆதரிக்கக்கூடிய ஒரு வேட்பாளரைத் தேடி அழைந்து கொண்டிருக்கின்றார்கள். மொட்டு சின்னத்தை விட்டுக்  கொடுப்பதில்லை என்ற மஹிந்த தரப்பு நிலைப்பாட்டால் அவர்களுக்கு இந்த நிலை. இப்போது அவர்களின் வார்த்தைகளிலேயே சில கருத்துக்களைச் சொல்வாதாக இருந்தால். தனித்துப் போட்டியிடுவது. (எங்கள் கருத்துப்படி இது மூக்கை உடைத்துக் கொள்ளும் அரசியல் நியதி.) தனித்துப் போட்டியிடுவதானால் கட்சித் தீர்மனப்படி மைத்திரிதான் வேட்பளர் என்று ஏற்கெனவே முடிவாகி இருக்கின்றது. (எமது வேடபாளர் நீங்கள்தான் அரங்கிற்கு வாருங்கள் என்று பிடித்து இழுத்தாலும் மைத்திரி இதனை ஏற்கத் தயாரா இல்லை என்பதுதான் நிலை. இது உள்ளகத் தகவல்கள் செல்லும் செய்தி)    

பொது வேட்பாளராக சஜித் வந்தால் ஆதரவு கொடுப்பது பற்றி நாம் யோசிக்க முடியும் என சு.கட்சி பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க குறிபிடுகின்றார். ரணில் தற்செயலாக வேட்பாளர் என்று வந்தால் அங்கும் சு.கட்சிக்கு ஆதரவு கொடுக்க முடியாத பின்னணி இருக்கின்றது. சு.க. செயலாளர் தயாசிரி கூற்றுப்படி ஜன சக்தி வேட்பாளர் அணுரகுமாரவுடன் அவர்கள் பேச இருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. இதற்கிடையில் கடந்த வாரம் கரு தொடர்பான ஒரு கருத்துக் கணிப்புப் பற்றி நாம் சொல்லி இருந்தோம் அதே போன்று வடக்கு கிழக்கில் நடாத்தப்பட்ட ஒரு கருத்தக் கணிப்புப்படி ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி நின்றால் அவருக்கே அங்குள்ள மக்கள் அதிகளவில் ஆதரவு தெரிவிக்கின்ற ஒரு நிலை இருக்கின்றது என்று அது சொல்லி இருக்கின்றது. இதுவும் கரு தொடர்பாக எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பு போன்ற நாடகம் என்பது எங்கள் கருத்து.

வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் எவரும் 40 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாது என்று ஜனாதிபதி மைத்திரி சில தினங்களுக்கு முன்னர் ஒரு பகிரங்க மேடையில் பேசி இருந்தார். அவரது இந்தப் புள்ளி விபரங்கள் முற்றிலும் தவறானது. தேர்தல் முடிவுகள் அப்படி அமைய வாய்ப்பே கிடையாது என்பது எமது கருத்து. அது தொடர்பான விஞ்ஞான ரீதிதியிலான அரசியல் கணிப்பீடுகள் எம்மிடம் இருந்தாலும் அவற்றை சொல்வதற்கு இன்னும் நாட்கள் இருப்பதால் இப்போதைக்கு அது பற்றிப் பேசவில்லை. 

கடந்த 2018 உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடந்த போது புகழ் பெற்ற அரசியல் வார ஏடான ராவய இந்தத் தேர்தலில் 235க்கு மேட்பட்ட உள்ளாட்சி சபைகளை ஐக்கிய தேசியக் கட்சியே கைப்பற்றும் என்று தேர்தலுக்கு முன்னய வாரம் சொல்லி இருந்தது. ஆனால் அதே காலப் பகுதியில் இந்த தேர்தலில் மஹிந்த தரப்பினர் 240 வரையிலான சபைகளைக் கைப்பற்றுவார்கள் என்று எமது வார ஏட்டில் நாம் சொல்லி இருந்தோம். இதன் உண்மைத் தன்மையை வாசகர்கள் தேடிப் பார்க்கலாம். இதுவரைக்கும் ஜனாதிபதி தேர்தல் தனிக் குதிரை ஓட்டமாகத்தான் எமது பார்வைக்குத் தெரிகின்றது. இந்த நிலையை மாற்றி அமைக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு காலம் போதுமாக இல்லை. அங்கு யார் களமிறங்கினாலும் கூட இருந்து குழிபறிக்கின்ற நிலை இருக்கும்.

இப்போது மொட்டுக்கள் தரப்பில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போம். என்னதான் பெரும்பான்மை மக்களின் ஆதரவு அவர்களுக்கு இருந்தாலும் சிறுபான்மை மக்களைத் தன் பக்கம் ஈத்துக் கொள்வதற்கு அவர்கள் உருப்படியாக எந்தக் காரியமும் பார்க்கவில்லை என்று தெரிகின்றது. அதற்காக அவர்கள் இதுவரை எடுத்து நடவடிக்கைகள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்பது எமது அவதானம். இதற்கிடையில் முன்னாள் வடக்கு ஆளுநர் ரெஜினோல் குரே மொட்டுக்கள் தரப்பில் இணைந்து அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார். இது மைத்திரிக்கு பலத்த அடியாகும். இது போன்று இன்னும் சில தினங்களில் பல தாவல்கள் சு.கட்சியில் இருக்கின்றது. இந்த ரெஜினோல்டை தேர்தலுக்கு வடக்குக்குப் பொறுப்பாக நியமித்திருப்பது மொட்டுக்கள் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் முன்னேற்றகரமான தீர்மானம் என்று குறிப்பிடலாம்.

இது போன்ற பல இடங்களில் திருப்தியாக செல்பாடுகள் இல்லாததனால் புதிய அமைப்பாளர்கள் பலரை மொட்டுக்கள் தரப்பில் மாற்றிப் புதியவர்களை நியமித்திருக்கின்றார்கள். தமிழ் தெரிந்த பல சிங்கள அரசியல்வாதிகளை பரப்புரைகளுக்காக வடக்கு கிழக்கிற்குப் பொறுப்பாக நியமனம் செய்திருக்கின்றார்கள். மேலும் தமது தலமையகத்திலும் திருப்திகரமான செயல்பாடுகள் தெரியவில்லை என்பதால் அங்கும் பல மாற்றங்களை மொட்டுக்கள் தரப்பினர் கடந்த வாரம் செய்திருக்கின்றார்கள்.

தேர்தல் அறிவிப்பு வந்திருக்கின்ற இந்த நேரத்தில் ஜனாதிபதி முறையை நீக்க ரணில் அமைச்சரவையில் முன்வைத்த கோரிக்கை கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. இதனால் தனது பிரேரனையை ரணில் அங்கு சுருட்டிக் கொண்டு மூக்குடைபட வேண்டி வந்தது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் தமக்குள் மோதிக் கொண்டதால் முதலில் நீங்கள் ஒரு தீர்மானத்துக்கு வாருங்கள் என்று இந்தக் கூட்டத்திலிருந்து ஜனாதிபதி மைத்திரி கோபத்தில் அங்கிருந்து இடைநடுவில் வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நாடு பூராவிலும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் துவங்கி இருக்கின்றன. இது அரசியல் காரணங்களுக்காக முன்னெடுக்கப்படுகின்றவைகளாக இருந்தாலும், இது ஆட்சி மாற்றத்துக்கான ஒரு அறிகுறி என நாம் கருதுகின்றோம்.

-நஜீப் பின் கபூர்

No comments:

Post a Comment