பிரத்தியேக வகுப்புகளும் ஏழை மாணவர்கள் மீதான தாக்கமும் - sonakar.com

Post Top Ad

Tuesday 3 September 2019

பிரத்தியேக வகுப்புகளும் ஏழை மாணவர்கள் மீதான தாக்கமும்


புது வருட ஆரம்பத்திலும் கடந்த வருடமே தேய்ந்து போன, பல தடவை துவைத்தெடுத்த வெள்ளை ஆடைகளுடன், புது மழைக்கு முளைக்கும் காளான்கள் போல வீதியோரங்களில் மலிந்து கிடக்கும் தனியார் வகுப்புக்களின் வானை முட்டும், வீதிகளை மூடும் விளம்பரப் பலகைகளை  பார்த்தவனாக எப்போது? எங்கே? உடைந்து விழும் என்று தெரியாத, கட கட சத்தத்துடன் அடுத்த வீதியோரங்களில் நிற்பவரும் இவன்தான் வருகின்றான் என்று அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய வகையிலான ஒரு துவிச்சக்கர வண்டியில், புதிதாக பயிற்சி  கொப்பிகள் வாங்காமல் கடந்த வருட கொப்பிகளில் மீதமான பக்கங்களை பாவித்துக் கொள்ளலாம் என்ற இயலாமை கலந்த யோசனைகளோடு பெருமூச்சு விட்டவனாக  கடந்து சென்றான் அந்த கூலித் தொழிலாளியின் மகன்.


ஜனநாயக இலங்கை ஒரு இலவசக் கல்விக்கு புகழ்பூத்த நாடாக இருந்தும் கூட இன்று அந்த இலவசக் கல்வி கூட பணபலம் படைத்தவனுக்கே இலகுவாக கிடைப்பனவாக இருக்கும் என்ற எழுதப்படாத ஒரு நியதியே, இன்றைய நமது சமூகத்தின் மறுக்கப்பட முடியாத  உண்மையாகும்.

நடுத்தர வர்க்கத்தினராலோ, உயரந்த வர்க்கத்தினராலோ ஒரு ஏழை மாணவனின் உணர்வுகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. எத்தனை phsycology ஆசிரியர்களை கொண்டு பாடசாலைகளில் குவித்தாலும் ஒரு ஏழை மாணவனின் உணர்வுகளை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.

தான் நினைப்பதும் கிடைக்காமல், அடுத்தவர் தருவதையும் உலகுக்கு காட்டி விளம்பரம் தேடாமல் தரமாட்டாரா?.. இதை வாங்கிக் கொண்டால் நம்மை சக மாணவர்கள் இழிவாக பார்த்துவிடுவார்களோ!, நம்மை அடுத்த மாணவர்கள் கவலைக் கண் கொண்டு பார்ப்பார்களோ! என்ற ஏழை மாணவர்களின் கவலைகளினை, நம்மால் ஒரு நாள் கூட யோசிக்கக் கூட முடியாது, ஆனால் அதனையே அவர்கள் ஒவ்வொரு நாளும் கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் திணிக்கப்பட்டுள்ளனர்.

தரம் 1 முதல் தரம் 13 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கான பிரத்தியோக வகுப்புக்களுக்கான நேர அட்டவணைகள் வீதியோரங்களில் மூலை முடுக்கெல்லாம் விநியோகிக்கப்படுகின்றது.  தனது குழந்தைகளின் நாளாந்த உணவுத் தேவையையே பூர்த்தி செய்ய துடிக்கும் ஒரு ஏழைத் தகப்பனால் எப்படி இந்த பண முதலைகளின் வாயை நிரப்பி தன் பிள்ளையின் கல்விப் பசியை போக்க முடியும்?

குழந்தைகளின் குழந்தைத்தனத்தையே மறக்கடிக்கும் முயற்சிகள் எதற்கு?? யாரிடம் பெறுமையடிப்பதற்கு???? என் குழந்தைக்கு வீட்டில் இருப்பதற்கே நேரமில்லை என்று சொல்வது, பெற்றோரின் பிள்ளைகளின் கல்வி மீதான அக்கறை அல்ல இவர்களின் பெருமைக்காக அவர்கள் மீதான தான்றோன்டித்தனமான திணிப்பே அது.

அரச பாடசாலையில் படிக்கின்ற எல்லா மாணவர்களினாலும் தனியார் வகுப்புக்களுக்கு சென்று தங்களை வளப்படுத்திக் கொள்ள முடியாது. நாளாந்த அடிப்படை வசதிகளினையே பூர்த்தி செய்து கொள்ள முடியாதவர்களுக்கு தனியார் வகுப்புக்கள் ஆடம்பர பண்டமே. அரச பாடசாலைகளில் படிப்பிக்கின்ற அதே ஆசிரியர்களே தங்களிடம் படிக்கின்ற மாணவர்களுக்கு தனியார் வகுப்புக்களையும் நடாத்தி சம்பாதிக்கின்றனர்.

பாடசாலையில் படிப்பிக்காது அசமந்த போக்குகளுடன் காலத்தினை கடத்திவிட்டு பாட அலகுகளை மீதமாக வைக்கின்ற ஆசிரியர்கள் நிச்சயமாக அந்த மாணவர்களுக்கு செய்கின்ற அநியாயங்களுக்கு என்றோ ஒரு நாள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

வருடத்திற்கு ஒருமுறை வாங்கப்படுகின்ற பாதனிகளையே வாங்கிக் கொள்ள வசதியற்ற மாணவர்கள் எவ்வாறு ஒவ்வொரு மாதமும் தனியார் வகுப்புக்களுக்கான கட்டணங்களின் சுமையினை தாங்கிக் கொள்ள போகின்றனர்.

திறமையான ஏழை மாணவர்கள் கூட, பரீட்சைகளில் சித்தியடைய  பாடசாலைக் கல்வி மட்டும் போதாது என்ற மணநிலையினை தங்களுக்குள் விதைத்துக் கொண்டு தங்களின் முயற்சிகளினை கைவிடும் அளவிற்கே இன்று புறச்சூழல் தாக்கம் செலுத்துகின்றது. 

பரீட்சைகளில் வெற்றியடைகின்ற அனைத்து மாணவர்களினதும் வெற்றியினை உரிமை கோறுகின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் அதே நிறுவனத்தில் கல்வி கற்று பரீட்சைகளில் தோல்வியடைந்த மாணவர்களின் தோல்விக்கான காரணங்களை மாணவர்கள் மீதே சுமத்திவிட்டு தப்பித்து விடுகின்றனர்.

எண்ணற்ற விளம்பரங்களின் ஊடாகவும், வானை முட்டும் கோபுரங்கள் மூலமாகவும் பண ரீதியிலான வருமானங்களை கருத்தில் கொள்கின்றனரே தவிர அனைத்து  மாணவர்களினதும் நலன்கள் கருத்தில் கொள்ளப் படுவதில்லை.

ஆசிரியர் சேவை என்பது வெறுமனே சம்பளம் பெறுவதற்கான ஒரு வழிமுறையல்ல மாறாக அது பல்வேறு மாணவர்களின் எதிர்காலத்தினை வளப்படுத்தும் ஒரு உன்னதமான ஊக்கி. 

ஒரு பாடசாலையில் குறைந்த பட்சம் ஒரு ஆசிரியரேனும் முழுமையாக மாணவர்களின் நலன் கருதி தமது செயற்பாடுகளை முன்னெடுத்தால், எதிர்காலத்தில்  நிச்சயமாக ஏழை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாரிய வளரச்சியினை அவதானிக்க முடியும்.

பாடசாலை ஆசிரியர்கள்,   மாணவர்கள் மத்தியில் பரீட்சைகளில் சித்தியடைய  பாடசாலைக் கல்வி மட்டுமே போதுமானது என்ற நம்பிக்கையை விதைக்குமளவுக்கு எப்போது நடந்து கொள்கின்றார்களோ அன்றே அவர்களுடைய சம்பளம் ஹலாலாக மாறும்.

By: SM. Saheeth
Assistant Bursar 
South Eastern University of Sri Lanka

No comments:

Post a Comment