தோன்றி மறைந்த மாய மான்! - sonakar.com

Post Top Ad

Saturday 22 June 2019

தோன்றி மறைந்த மாய மான்!


கூட்டு இராஜினாமாவுடன் மலர்ந்த ஒற்றுமை என்னவாகும்...? ரிசாத் பதியுதீனிடம் கேட்டேன், ஹிஸ்புல்லாஹ்விடம் கேட்டேன்.. அசாத் சாலியிடம் கேட்டேன்.. ஹலீமிடம் கேட்டேன்... முஜிபுர் ரஹ்மானிடம் கேட்டேன், ஹக்கீம் வேறு ஊடகங்களில் சொன்னார், ஈற்றில் ஜுன் 3ம் திகதி தோன்றி மறைந்த ஒற்றுமை எனும் மாயமான் மறைந்து விட்டது என்ற செய்தி தாங்கி இன்னொரு வாரம் உங்களோடு இணைந்து கொள்கிறேன்.

முஸ்லிம் அரசியல் ஒற்றுமை எப்போதும் மாய மான் தான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆயினும், அதற்கான நியாயங்களைப் புறக்கணித்து விமர்சனங்களை முன் வைக்க முடியாது. இதற்கான தேடலும் கலந்த பின்னணியில் கடந்த வாரம் பல அரசியல்வாதிகளுடன் நேர்காணல்கள் கலந்துரையாடல்களை செய்திருந்தேன். இச்சந்தர்ப்பங்களில் ஜுன் 3 காட்சிப்படுத்தப்பட்ட முஸ்லிம் அரசியல் ஒற்றுமை பிரதான கேள்வியாக இருந்தது.

இவற்றுள் எனக்கு நேரடியாக பதிலளித்த முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வின் கருத்துக்கள்; உற்று நோக்கப்பட வேண்டியவை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சிக்குத் தேர்தல் கால போட்டியாளர்களாக இயங்கும் இரு வேறு துருவங்கள் என்பதால் அவர்களால் அக்கட்சியுடன் இணைந்து பணியாற்ற முடியுமா என்பது சந்தேகத்துக்குரிய கேள்வி.

அது மாத்திரமன்றி இவ்விரு அரசியல் தலைமைகள் சார்ந்த பிரதேசங்களில் தனிப்பெரும் ஆளுமையைக் கட்டியெழுப்ப முடியாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றும் போராடிக் கொண்டிருக்கிறது எனும் அடிப்படையில் தமது ஆளுமையினை அத்தனை சீக்கிரம் இவர்களால் விட்டுக் கொடுக்க முடியுமா? என்பது ஜுன் 3ம் திகதி எழுச்சி பெற்ற முஸ்லிம் உணர்வுக்கு அப்பால் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதனையடுத்து, முஸ்லிம் அரசியல்வாதிகளாக இருக்கின்ற போதிலும் சிங்கள மக்களின் பிரதிநிதிகளாகவும், அவர்களின் வாக்குகள் ஊடாகவும் தெரிவான அமைச்சர் கபீர் ஹாஷிமின் நிலை தனியாக அலசப்பட வேண்டியது. அதே போன்று தனது கலப்பு வாக்கு வங்கியைத் தக்க வைத்துக்கொள்ளும் தேவையுள்ள அமைச்சர் ஹலீமின் நிலையும் இதனோடு ஒன்றிப் பிணைகிறது.

அடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் கால நடவடிக்கைகளுக்கு கட்சிக்காரர்களின் பதவிகளும் இருப்பும், அடைவும் எதிர்பார்ப்புகளும் என்ற பல சிக்கல்களும் இன்னொரு புறத்தில் குவிந்திருக்கின்றன. இந்நிலையில் நாம் கண்ட மாய மானின் காட்சிக் காலத்துக்கு நீண்ட ஆயுள் இல்லையென்பது தெளிவு.

இருந்தாலும், சமூக உணர்வு அதன்பால் தூண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் கோபம் தற்போது மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை எடுத்துக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கபீர் ஹாஷிம் மற்றும் ஹலீம் மீது கொட்டப்படுகிறது. எனினும், ஏனையோரும் பட்டியலில் காத்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை.

இப்பின்னணியில் அரசியலை எவ்வாறு அரசியலாகப் பார்ப்பது? என்ற தெளிவும் அரசியல் காட்சிகளின் தூர விளைவும் மக்களால் உணரப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இலங்கையில் வேண்டுமானால் நாம் சிறுபான்மையினராக இருக்கலாம், ஆனால் உலகில் நாம் பெரும்பான்மையினர் எனவே அச்சப்படாமல் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என தனது சமூகத்தாரை முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் ஊக்குவித்தார். அந்தப் பேச்சு சிங்கள ஊடகங்களுக்குத் தீனியானது. ஒரு சில முஸ்லிம் அரசியல் தலைமைகளும், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் கூட அது தேவையற்ற பேச்சு எனத் தெரிவித்திருந்தார்கள். 

ஆனால், அது குறித்து அரசியலுக்கு அப்பால் அலட்டிக்கொள்ளும் அவசியமில்லாத நிலையிலேயே பெரும்பான்மை அரசியல்வாதிகள் காணப்படுகிறார்கள். அது மாத்திரமன்றி, அவ்வாறு பேசியிருந்த முன்னாள் ஆளுனர் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் கூட அதனை அவ்வாறே விபரித்தார். இதற்கும் மேலதிகமாக கடந்த செவ்வாய்க்கிழமை (18) சோனகர்.கொம் ஊடாக என்னோடு நேரலையில் இணைந்து கொண்ட போது கருத்துரைத்த முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ், அதையும் விட ஒரு படி மேலே சென்று முஸ்லிம்களுக்காக நாங்கள் பேசாவிட்டால் யார் பேசுவது? எனவும் கேள்வியெழுப்பினார். 

நாம் இவ்வாறு பேசுவது மற்றவர்களுக்கு வலிக்கும் என்பதற்காகப் பேசாமல் இருக்க முடியாது என ஆணித்தரமாக அவர் தெரிவித்த போது, அவரது முகத்தில் தெரிந்த அரசியல் தெளிவு என்னை ஆச்சரியப்படுத்தியது.

தான் பேசியது அரசியல் ரீதியான 'பேச்சே' என்பதில் அவரிடம் அத்தனை தெளிவு இருந்ததைக் கண்ட அந்தக் கணம், அவரது பிராந்திய அரசியலுக்கு அது எத்தனை தேவையென்பது மாத்திரமன்றி அவரது இன மையக் கொள்கையின் அடிப்படையிலான இலங்கை அரசியலில் இதன் அரசியல் மற்றும் சமூக விளைவுகளும் கண் முன் தோன்றி மறைந்தது.

பிரதமரை அழைத்து வந்து அம்பாறை சாய்ந்தமருது மக்களுக்கு பிரதேச சபை கிடைக்கும் என எழுதிக் கொடுத்துப் பேச வைத்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்த கருத்தும் அப் பேச்சு காற்றோடு மறைந்து போனதையும் கூட அத்தருணத்தில் நினைத்துப் பார்த்தேன்.

இதேவேளை, அரசியலுக்கு வெளியில் சமூக உணர்வூட்டல் மற்றும் அதன் தாக்கமும் கூட மனத்திரையில் ஓடியது. இந்நிலையில், இத்தலைவர்களிடம் முஸ்லிம் கூட்டமைப்பு, கூட்டணி அல்லது ஜுன் 3 ஒற்றுமையின் எதிர்காலம் பற்றி வினவிய போது, அனைவரது பொதுவான கருத்து, அது பற்றி இப்போது சிந்திக்கவில்லை, அதன் தேவை பற்றி அந்தந்த காலத்தில் சிந்திப்பது தான் நியாயமானது என்பதாக இருந்தது.

இங்கு குறிப்பிடும் காலம் தேர்தல் காலம் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆக, இதனடிப்படையில் தேர்தல் கால உடன்பாடுகளும் தற்காலிகமானதே எனும் தெளிவு இங்கு கிடைக்க வேண்டும். அவ்வாறாயின், கடந்த ஏழு வருடங்களாக நாடளாவிய ரீதியில் அரசியல் ஒற்றுமையை வேண்டி, ஏங்கித் தவிக்கும் மக்களின் உணர்வு என்னாவது? என்ற கேள்வியும் கேட்கப்பட வேண்டும்.

பிராந்திய – பிரதேச அரசியல் தேவைகளுக்கப்பால் இவ்வாறான கேள்விகள் எத்தனை நாள் நீடிக்கும்? என்பது அதற்கடுத்த கேள்வி. ஆக, மக்களே தம் கண்களைக் கசக்கி மாய மானை மறக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

தேசிய ரீதியில் கொள்கை இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளாகப் பிரிந்திருக்கும் இச்சமூகம் உணர்வு மேலோங்கிய நிலையில் எதிர்பார்க்கும் இம் மாயமான் உணர்வடங்கியதும் அவர்களுக்கும் எத்தனை தேவைப்படுகிறது? என்ற கேள்வி முன் சொன்னதை நியாயப்படுத்தவும் செய்யும் என்றால் மிகையில்லை. அதற்காக, மீண்டும் தேர்தல் காலத்தில் இந்த மாய மான் தோன்றாது என்பதற்கும் எவ்வித உத்தரவாதமும் இல்லை. 

இந்த நிலையில் அடுத்து வரும் நாட்களில் மீண்டும் அமைச்சரவை ஆசனங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அமர்ந்து கொள்வதைக் கண்டு சமூகம் உணர்வு மேலோங்கக் கொந்தளிப்பதிலும் பயனற்ற சூழ்நிலையே காணப்படுகிறது. ஏனெனில் அடுத்து வரும் எதிர்காலம் இதே பிரதிநிதிகளைக் கொண்ட பாரிய சவாலை நம் முன் உருவாக்கப்போகிறது.
ஜுன் 3ம் திகதி நமக்குக் காட்டப்பட்டது மாய மானாக இருந்தாலும் கூட, அன்று இன்னுமொரு முக்கிய செய்தி சமூகத்துக்கு சொல்லப்பட்டது. அதுதான், எது எப்படிப் போனாலும் நாடாளுமன்றில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படவும், காப்பாற்றப்படவும் முடிந்தால் இன்னும் அதிகரிக்கப்படவும் வேண்டுமென்பது.

ஏன்? என்ற கேள்விக்கு கடந்த கால வரலாறும் அண்மைக்கால நிகழ்வுகளும் நமக்கு விடையளிக்கிறது. கடந்த ஏழு வருடங்களாக தீவிரம் பெற்றுள்ள முஸ்லிம் எதிர்ப்புவாதம் மற்றும் பேரினவாதம் முஸ்லிம்களை முழுமையாக இலக்கு வைத்துள்ளமை பரகசியம். முக்கியமாக முஸ்லிம்களை பொருளாதார ரீதியாகவும் சமூகக் கட்டமைப்பு ரீதியாகவும் பலவீனப்படுத்;துவது பேரினவாதத்தின் திட்டம்.

அதற்கேற்ப நாம் சமூக மட்டத்தில், கொள்கை இயக்கங்களை முன் வைத்து ஏலவே பல பிரிவுகளாகப் பிரிந்து நிற்கிறோம். ஆயினும் அரசியல் ரீதியாக இப்பிளவுகளுக்கு அப்பால் நம் மீது சாட்டப்பட்டுள்ள பொறுப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில் இருக்கும் பிரதிநிதித்துவத்தையும் அதிகரித்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

தற்சமயம் தேசியப் பட்டியல் நியமனங்கள் உட்பட 21 பேரை நாடாளுமன்றில் கொண்டிருக்கும் எம் சமூகம், நாடளாவிய ரீதியில் உணர்ந்து செயற்பட்டால்இன்னும் 8 அல்லது 9 உறுப்பினர்களையாவது அதிகரிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும்.

இது நாடாளுமன்ற மொத்த உறுப்பினர் தொகையின் 10 வீதத்தை நெருங்கியதாக அமையும் போது, ஆட்சி மற்றும் அவசிய காலத்தின் போது அதன் தாக்கத்தை உருவாக்க முடியும். 120 வருடங்களுக்கு முன்பாக சட்ட சபையில் ஒரேயொரு பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் நிறையவே போராட வேண்டியிருந்தது.

முஸ்லிம்கள் (சோனகர்கள்) தனித்துவமற்றவர்கள், தனியினமில்லையென ஆங்கிலேயர்களிடம் வாதிட்ட பொன் இராமநாதனை தோற்கடித்து எமது இன ரீதியிலான அங்கீகாரத்தையும் அதனூடாக நமக்கு சட்ட சபையில் ஒரு பிரதிநிதித்துவத்தை; வென்றெடுக்க ஐ.எல்.எம். அப்துல் அசீஸ் போராடினார், சித்திலெப்பை, வாப்பச்சி மரிக்கார் துணை நின்றார்கள், பின் வந்த காலங்களில் நமது சட்ட சபை உறுப்பினரை சமூகப் பெருந்தகைகள், வர்த்தகர்கள், தனவந்தர்கள் பெருமையுடன் தலை நிமிர்ந்து செயற்படச் செய்தார்கள்.

ஆட்சியாளர்களின் தயவுக்காகக் காத்திராது எமது சட்ட சபை உறுப்பினருக்கு குதிரை வண்டி, தங்கியிருக்க வீடு வழங்கி ஆங்கிலேய நிர்வாகத்துக்கு முன் நெஞ்சுயர்த்திச் செயற்பட்டது நம் சமூகம். அந்தப் பாரம்பரியத்தில் வந்த எமக்கு தற்காலத்தில் இருக்கும் சவால்கள், நமக்குள் இருக்கும் பிளவுகள், பிரிவினைகளைக் கடந்து அரசியல் ரீதியிலான ஒற்றுமை அவசியப்படுகிறது.

அது முஸ்லிம் கூட்டமைப்பென்ற ஒற்றை அங்கீகாரத்தை வேண்டி நிற்பது இலங்கையின் அரசியல் சூழ்நிலையில் ஆரோக்கியமானதில்லையெனும் அடிப்படையில் எந்தக் கட்சியூடாக போட்டியிட்டாலும் அந்தக் கட்சியில் சமூகப் பிரதிநிதியை வெல்ல வைப்பதும், அதற்குத் தகுதியானவர் உங்கள் பிரதேசங்களில் ஆளுமையுள்ள கட்சிகள் ஊடாக களமிறக்கப்படுவதையும், ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்டோர் போட்டியிடாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வதும் கூட நமக்கு அவசியப்படுகிறது.

அரசியல் தலைமைகளைப் பொறுத்தவரையில் தேர்தல் காலம் நெருங்கும் போது, பெரும்பாலும் இன்றைய சூழ்நிலைகள் மறக்கப்படக்கூடிய சூழ்நிலையில் அவர்களது தெரிவும் தேவையும் வேறாக இருக்கலாம். ஆனால், அரசியல் தலைமைகளைக் கொண்டாடும் வழக்கம் கொண்ட சமூகமாக 2015ல் நாட்டுக்காகக் கண்ட பேரெழுச்சியைப் போன்று சிந்தனை ரீதியாக சமூகத்துக்கான பேரெழுச்சியொன்று அவசியப்படுகிறது.

இன்று முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்தப்பட்டு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் ஒவ்வொருவர் மீதும் சமூக மட்டத்தில் விமர்சனங்கள் உண்டு. அவை பல காரணங்களுக்காக முன் வைக்கப்;படலாம். சில வேளைகளில் கட்சி பேதம் மற்றும் கொள்கை முரண்பாடுகளும் காரணமாக அமையலாம். ஆனால், நமக்கிருக்கும் கட்டாயம் அதனைத் தாண்டியது என்பதால் முன் கூட்டியே இது குறித்த விழிப்புணர்வுடனான செயற்பாடு அவசியப்படுகிறது.

இதற்கான பொறுப்பு எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உட்பட ஊர்ப்பிரமுகர்கள், பள்ளிவாசல் நிர்வாகங்கள் என எல்லோருக்கும் உண்டு. இதனடிப்படையில் கால விரயமின்றி இது தொடர்பில் செயற்பட வேண்டிய தேவை நம் முன் நிற்கிறது.

2015ல் கூட நாடாளுமன்றில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் என்னதான் நன்மை? என்ற கேள்வி மேலோங்கியிருந்தது என்ற உண்மையை இங்கு மறுக்க முடியாது. 2012 முதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இனவாத சூழ்நிலைக்கான தீர்வைப் பெற்றுத் தரும் கடமையும் அரசியல் பிரதிநிதிகளுக்கே இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆயினும், அவர்களின் வரையறை என்ன? அதன் ஒன்று பட்ட சக்தியின் ஆளுமையென்ன என்பதை ஜுன் 3ம் திகதிய மாய மான் வெளிக்காட்டியது.

தற்சமயம் தோன்றி மறைந்திருந்தாலும் கூட, அரசியல் விளை நிலத்தில் மீண்டும் பல மான்களை எம் சமூகம் உருவாக்கலாம். ஒவ்வொரு மானும் இச்சமூகத்தின் பயன்பாட்டுக்காகவும் எதிர்கால இருப்பினைப் பாதுகாத்துக் கொள்ளும் அடிப்படையிலும் இயங்க வேண்டும் என்ற நிபந்தனையையும் இதே சமூகம் உருவாக்கலாம். அதற்கான செயற்பாடு முன் கூட்டியே திட்டமிடப்பட வேண்டும், அது தொடர்பிலான விழிப்புணர்வு சமூக மட்டத்தில் விதைக்கப்பட வேண்டும்.

ஆயிரமாயிரம் வருடங்கள் வரலாற்றைக் கொண்ட எம் சமூகம் அண்மைக்கால பேரினவாத நடவடிக்கைகளால் துவண்டு போயுள்ளது. சுதந்திர இலங்கையில் முஸ்லிம் அமைச்சர்கள் இல்லாத அமைச்சரவை இருந்த இரு வாரங்களும் வரலாற்றில் பதிவாகி விட்டது. இந்நிலையில், அடுத்த கட்டம் என்ன? என்று சிந்திக்க மாத்திரமன்றி செயற்படும் தேவையும் காலத்தால் உணர்த்தப்பட்டிருக்கிறது.

இல்லை, அடுத்த தேர்தல் வரை காத்திருந்து வாக்களித்து, அதற்கடுத்த பிரச்சினைகள் தோன்றும் போது அதே பிரதிநிதிகளைக் கை நீட்டிக் குற்றம் கூறிக் கூப்பாடு போட்டு திருப்தியடைவதுதான் நம் தெரிவென்றால்.......? 
சிந்திப்போம்!


2ld3lJX
Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment