முடிவுக்கு வந்தது கல்முனை போராட்டங்கள் - sonakar.com

Post Top Ad

Sunday 23 June 2019

முடிவுக்கு வந்தது கல்முனை போராட்டங்கள்


கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் எனக்கோரி கடந்த ஒரு வார காலமாக தமிழர் மக்களால்  முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டமும் அதற்கெதிராக முஸ்லிம்களினால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டமும் இன்று(23) ஞாயிறு நண்பகலுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.



இனத்துவ ரீதியிலும் நிலத் தொடர்பற்ற ரீதியிலும் உருவாக்கப்பட எத்தனிக்கும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தடைசெய்யக் கோரி கல்முனை முஸ்லிம் மக்கள் மேற்கொள்ளும் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்ச்சியாக நான்காவது  நாளாக இன்று (23) ஞாயிற்றுக்கிழமை கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் நடைபெற்ற நிலையில் நிறைவடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத்தின் வேண்டுகோளை ஏற்றுள்ளதுடன் அதேவேளை தமிழர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதனால் தாம் ஏற்கனவே அறிவித்ததன் பிரகாரம் தமது சத்தியாக்கிரகப் போராட்டத்தை நிறைவு செய்வதாகவும் இணக்கமான தீர்வு எட்டப்படும் வரை நாம் விழிப்பாக இருப்போம் என்றும்  அவர் ஊடகங்களிடம்  குறிப்பிட்டார்.

இறுதியாக துஆப் பிரார்த்தனையுடன் சத்தியாக்கிரகம் நிறைவுக்கு வந்தது.

குறித்த சாத்தியாக்கிரக போராட்டத்தில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப்  கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரியபள்ளிவாசல் தலைவர் வைத்திய கலாநிதி எஸ்.எம்.ஏ. அஸீஸ் உள்ளிட்ட உலமாக்கள்  அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பிரதேசங்களையும் சேர்ந்த பொதுமக்கள்  உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உறுப்பினர்கள்  வர்த்தக சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு பங்கேற்றிருந்தனர்.

இதே வேளை  பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத்தின் நீண்ட கலந்துரையாடலை  வேண்டுகோளாக  ஏற்று கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரத்ன தேரர் தலைமையிலான   உண்ணாவிரதத்தை மேற்கொண்டவர்கள்  அதனை நிறைவு செய்துள்ளனர்.

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு கூடிய விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அத்துரெலிய ரத்ன தேரர் மற்றும் கலகொட அத்தே ஞான சார தேரர் போன்றோராலும் அரச தரப்பினராலும் வழங்கப்பட்ட உத்தரவாதங்களை ஏற்றுக்கொண்டே தமது உண்ணாவிரதப் போராட்டம் காலை 10 மணி முதல்  நிறைவு செய்யப்படுவதாக ரன்முத்துக்கல சங்கரத்ன தேரர் தனதுரையில் தெரிவித்தார்.

எமது கோரிக்கையில் நாம் தொடர்ந்தும் உறுதியாக இருப்போம் எனவும் குறித்த காலப்பகுதியினுள் தமிழ் செயலகம் தரமுயர்த்தப்படா விட்டால் எமது போராட்டம் மீண்டும் மிகப்பெரியளவில் வெடிக்கும் எனவும் அவர் சூளுரைத்தார்.

தொடர்ந்து உண்ணாவிரத முன்றலில் இருந்து வெளியேறிய உண்ணாவிரதிகள் கல்முனை பௌத்த விகாரையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு உண்ணாவிரத நிறைவு நிலைமையை வெளிப்படுத்தினர்.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment