புது எதிர்பார்ப்புகளும் பழைய திசை காட்டிகளும் - sonakar.com

Post Top Ad

Friday 7 June 2019

புது எதிர்பார்ப்புகளும் பழைய திசை காட்டிகளும்



சரி – பிழைகள், விமர்சனங்களுக்கப்பால் 2019 ஜூன் மாதம் 03ம் திகதி ஒட்டு மொத்த இலங்கை சமூகமும் அரசியல் ரீதியாகப் புத்துணர்ச்சி பெற்ற ஒரு நாளாக அமைந்தது என்றால் மிகையில்லை. 



சிங்கள மன்னர்கள் காலத்திலிருந்து அமைச்சுப் பொறுப்புகளில் முஸ்லிம்கள் இருந்து வந்துள்ளார்கள். 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் தனியான ஒரு இனப்பிரிவில்லையென அடக்கியொடுக்க பொன் இராமநாதன் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து, அப்போதைய சட்டசபையில் ஒரு உறுப்பினருக்கான உரிமையைப் பெறுவதற்காக போராடியதிலிருந்து அடுத்த நூற்றாண்டுக்குள் நாடாளுமன்றில் 21 உறுப்பினர்களைக் கொண்டிருப்பதற்கான வளர்ச்சி போற்றத்தக்கது மாத்திரம் அன்றி வலியும் வேதனையும் நிறைந்தது.

குறிப்பாக கடந்த இருபது வருடங்களாக 21ம் நூற்றாண்டின் இலங்கை அரசியலில் முஸ்லிம் சமூகத்தின் பங்கும் விளைவுகளும் இன்றைய தலைமுறையினர் அறிந்தது. அது முஸ்லிம் தனித்துவ அரசியலின் அடிப்படையில் முஸ்லிம் கட்சியொன்றை ஸ்தாபித்த மர்ஹும் அஷ்ரபின் மரணத்திலிருந்து ஆரம்பிக்கிறது.

பலம் பொருந்திய போhர்த்துக்கீயர் இலங்கையை ஆக்கிரமிக்க வந்த போது அவர்களை எதிர்த்து நின்று போராடியதாகட்டும், அவர்களின் அடக்குமுறைக்கு எதிராக எதிர்நீச்சல் போட்டு கடந்து வந்த வரலாகட்டும், ஒல்லாந்தரின் கடும் பிடிக்குள் சிக்கித் தவித்து நலிந்து போனதாகட்டும் பின் அவர்கள் படையணியிலேயே சோனக சேனையை உள்வாங்கும் அளவுக்கு வளர்ந்ததாகட்டும் ஆங்கிலேயரை தனியொரு சமூகமாக முகங்கொடுத்து பாரம்பரிய உரிமைகளைப் பேணப் போராடியதாகட்டும் இவையெல்லாம் இன்றைய தலைமுறையினர் மறந்து போன விடயங்கள்.

அவை பற்றிப் பேசுவதற்கு எம்மிடம் எந்தப் பொறிமுறையுமில்லை, அவ்வப்போது உணர்ச்சியூட்டப்பட்ட நிலையில் வரலாறு எங்கே? நம் முன்னோர் என்ன செய்தார்கள் என்று தற்காலிகமாகத் தேடுவதோடு முடிந்து விடுகிறது. இத்தனைக்கும் எமது சமூகத்தில் இல்லாத பணக்காரர்கள் இல்லை, அறிவாளிகளுக்குப் பற்றாக்குறையில்லை, அரசியல் ஆளுமைக்கும் இதுவரை பஞ்சமிருந்ததில்லை. 

கடந்த அரை நூற்றாண்டுக்குள் இச்சமூகத்துக்குள் உருவான சிந்தனை மாற்றங்கள் ஒரு வகையில் நம்மை இலங்கையர்களாக சிந்திக்க விடவும் இல்லையென்பதையும் சேர்த்துக்கொள்ளலாம். இச்சூழ்நிலையில் முஸ்லிம் சமூக அரசியல் தம் மீதான பொறுப்பை சரியாகச் செய்ததா? எனும் கேள்வியெழுகிறது.

இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கட் போட்டியொன்று வந்ததும் மர்ஹும் அலவி மௌலானா அலறியடித்துக் கொண்டு முஸ்லிம்கள் இலங்கைக்குத் தான் ஆதரவளிக்க வே;ணடும் என்று அவ்வப்போது அறிக்கை விட்ட அண்மைக்கால நினைவுகளை அலசினால் கூட அந்த நிலை ஏன் வந்தது? என்ற கேள்விக்கு அப்போதும் இப்போதும் நாமாக விடை தேடவில்லையென்பதை மனச்சாட்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அவ்வாறாயின், எங்கே பிழைக்கிறது? என்ற கேள்வியை சமூகத்திலிருந்து தான் கேட்க வேண்டும். சமூக அரசியல் அதனை எங்கிருந்து எதுவரை கொண்டு சென்றுள்ளது? என்ற கேள்விக்கும் இதே சமூகத்திலிருந்து தான் விடை தேட வேண்டும். இந்த சூழ்நிலையில் 2019 ஏப்ரல் 21ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களையடுத்து அரசியல் சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒன்றிணைந்து எதிர்கொள்ளத் தயாரான அந்தத் தருணம் புல்லரிக்கவும் மெய்சிலிர்க்கவும் வைத்தது என்றால் மிகையில்லை.

இது ஒட்டு மொத்த முஸ்லிம்களின் கடந்த ஏழு வருட கால எதிர்பார்ப்ப. இ;ப்பின்னணியில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்காலிகமாகவேனும் ஒன்றிணைந்து தமது பதவிகளைத் துறந்தமையானது சமூக ஒற்றுமைக்கு அவசியப்பட்ட, நீண்டகாலமாகக் காணக்கிடைத்திருக்காத தேவையாக இருந்தது என்பதை சொல்லியே ஆக வேண்டும்.

அதேவேளை, இந்த 'ஒட்டுமொத்த' இராஜினாமா நம்பக்கூடிய ஒற்றுமையா? எனும் கேள்வியும் எழாமலில்லை. ஆனாலும், சமூகத்தின் இன்றைய தேவை அதனை மேவி நிற்பதனால் நம்புவதைத் தவிர வேறு வழியில்லையென்பதே விடையாக இருக்க, இச்சூழ்நிலைத் துவக்கத்தைக் கெட்டியாகப் பிடித்து, எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டியது மக்களின் பொறுப்பாக இருக்கிறது.

உங்கள் பிரதிநிதிகள் 'ஏதோ' ஒரு காரணத்திற்காகவே இராஜினாமா செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட அரசியல் தளத்தில் அது மிகத் தெளிவான ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறது. எந்த அரசு பதவிக்கு வந்தாலும் அந்த அரசின் பங்காளிகளாக இருக்கிறார்கள் எனும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் அதன் சுயநல தேவைகளை மீறி அதில் சமூக அக்கறையும் இருக்கிறது என்பதைக் காட்டக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது.

ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியல்களில் வைக்கப்பட்டு, பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வரும் அப்பாவி மக்களின் நிலைமைக்கும், பேரினவாத எழுச்சிக்காக முஸ்லிம் சமூக அரசியல் பலிக்கடாவாக்கப் படுவதை தவிர்ப்பதற்கும் நிறைவான ஒரு சந்தர்ப்பமாகவே இன்றைய கால நிலை நிலவுகிறது. அதனை சரிவரப் பயன்படுத்தி, சரியான தருணத்தில் கால அவகாச இராஜினாமா செய்தது பாராட்டத்தக்கது.

முக்கியமாக கிழக்கு-மேற்கு ஆளுனர்கள் ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுகள் முறைப்பாடுகள் இருப்பின் அதனைப் பெறுவதற்கென மூவர் கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டு அதற்கான கால எல்லையும் அறிவிக்கப்பட்டிருப்பதானது பேரினவாத சூழ்ச்சிக்கு எதிரான திருப்தியான எதிர்வினையென்பதால் அந்த அழுத்தத்தை உருவாக்கிய ஒற்றுமையான அரசியல் நகர்வு முக்கிய முடிவாகிறது.

அப்படி என்னதான் முறைப்பாடு வரப்போகிறது என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும். அதுவரை, இப்போதும் இனியும் மக்களாகிய நமக்கிருக்கும் சமூகக் கடமைகள் என்னவென்பதும் அறியப்பட வேண்டும்.

இலங்கைத் தீவெங்கும் பரவி வாழும் நிலையில் முஸ்லிம் சமூகம் தம்மைத்தாமே மீளாய்வு செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகியிருக்கிறது. சமூகக் கட்டமைப்பு, வாழ்வியல், கலாச்சார பண்பாட்டு மற்றும் உணர்வு ரீதியிலான அனைத்து விவகாரங்களும் தற்போது மீளாய்வு செய்யப்பட வேண்டிய கால கட்டமாகும்.

உலக நடைமுறைகளுக்கேற்ப, அதன் பரிணாம வளர்ச்சிக்கேற்ப நாமும் நமக்குள்; தேவையான நவீனமயப்படுத்தலை உள்வாங்கத் தவறியதன் சூட்சுமங்களையும், நமது வாரிசுகளுக்கு மார்க்கம் என்ற பெயரில் நாம் கைமாற்றும் பழக்கவழக்கங்கள், சித்தார்ந்தங்கள், அவற்றின் நியாயயத் தன்மை என பல்வேறு அம்சங்கள் அலசி ஆராயப்பட வேண்டும்.

இதற்கான தார்மீகப் பொறுப்பை இதுவரை ஏற்க மறுத்திருக்கும் நாம் அவ்வப்போது ஞானசார ஊடகங்களில் தோன்றி எமது சமூகத்தைப் பற்றி எமக்கே புள்ளிவிபரங்களுடன் தகவல் தரும் போது சில வேளைகளில் அதிர்ந்து போகிறோம். ஒரு அரபுப் பெயர், முஸ்லிம் குடும்பம் என்ற அடையாளம் மாத்திரம் நாம் முஸ்லிம்களாக வாழப் போதுமானதா? என்ற கேள்வி நமக்குள் எழ வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது.

இக்கட்டுரை எழுதப்படுவதற்கு முன் இவ்வாரம் ஞானசார நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து முஸ்லிம் சமூகத்தின் மீதான பொறுப்புக்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் பற்றிப் பேசும் போது இச்சமூகத்தின் தலைமைகள் அதன் தார்மீகக் கடமைகளைத் தவற விட்டதன் விளைவினால் கடும்போக்குவாதிகள் அறிவுரை வழங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறதே என சிந்தித்து முடிக்க முன்பாக அதே ஞானசார முறையான தகவல்களையும் புள்ளிவிபரங்களையும் வெளியிடும் போது அட, நிறைவாக தகவல் வழங்கவும் ஆளிருந்திருக்கிறதே என ஆச்சரியம் வந்தது.

பல் கலாச்சார விழுமியங்களுடன், பல் சமூகம் வாழும் ஜனநாயக சோசலிஷ குடியரசான இலங்கையில் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் அதேவேளை ஏனைய சமூகங்களின் சமய, வாழ்வியல் சுதந்திரங்கள் பேணப்பட வேண்டும் என்ற அரசியலமைப்பின் கீழ் இயங்கும் நாடாளுமன்றில் நமது கடமை என்னவென சரிவரப் புரிந்து கொள்ளப்படுகிறதா? என்ற கேள்வியும் இங்கு மேலெழுகிறது.

இணக்கப்பாட்டு அரசியல் எனும் போர்வையில் நாம் இதுவரை சமூகத்துக்குத் தேவையான பாதுகாப்பையும் இணக்கப்பாட்டையும் பெற்றுக் கொடுக்கத் தவறியதன் விளைவே நமது கூட்டு இராஜினாமா என வரலாறு பதிந்து கொள்ளும். அதற்கேற்பவே நமது கடந்த காலம் அமைந்திருக்கிறது. இப்பின்னணியில், இன்றைய சூழலில் நமது எதிர்காலத்தின் தேவைகள் என்ன? எனும் கேள்வியெழுகிறது.

கடந்த காலத்தை சரி செய்ய முடியாது போயினும், அதனை மீளாய்வு செய்து எதிர்காலத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டிய காலக் கடமையுடன் வாழும் சமூகம், முதலில் யாருக்கோ தான் அது கடமையெனும் மனநிலையிலிருந்து விடுபட வேண்டும். நம் மீதான கடமை நம்மிலிருந்து நமது வீட்டுச் சூழலிருந்து ஆரம்பிக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடெனும் அடிப்படையில் தங்கி வாழ்தல் சூழ்நிலையிலிருந்து இன்னும் இலங்கை விடுபடவில்லை. முஸ்லிம்கள் அதற்கு விதிவிலக்கும் இல்லை. இந்நிலையில், தேசிய அரசியலில் பங்கெடுப்பதன் முக்கியத்துவம் பெரும்பாலும் ஆதரவாளர்களையும், அனுசரணையாளர்களையும் திருப்திப்படுத்துவதற்கான வரையறையோடு நின்று கொள்கிறதே தவிர முக்கிய மாற்றங்களில் உறுதியான பங்களிப்பைத் தருவதாக இல்லை.

ஒரு முஹைதீன் பேக் பாடிய சிங்கள பாடல் இன்று வரை சிங்கள சமூகத்தின் முக்கிய பௌத்த கீதமாக இருக்கிறது. முஸ்லிம் தலைவர்களினால் முன் வைக்கப்பட்ட எத்தனை அரசியல் - அபிவிருத்தித் திட்டங்கள் இவ்வாறு நாடு போற்றும் நிலையில் உள்ளது? என்று கேள்வியெழுப்பப் பட வேண்டும். இல்லையென்றால் அது ஏன்? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதையும் தாண்டி அப்படியான தலைவர்களை உருவாக்கியிருக்கிறோமா என சமூகம் தம்மைத்தாமே வினவ வேண்டும்? உருவாகிறவர்களையும் செயற்பட விட்டிருக்கிறோமா? எமது முஸ்லிம் உணர்வு எதற்கெல்லாம் உதவியாக இருக்கிறது? எதற்கெல்லாம் தடையாக இருக்கிறது? என்றெல்லாம் சிந்திக்கக் கடமைப்பாடு உருவாகியுள்ளது.

அண்மையிலே அவிஸ்ஸாவெல, புவக்பிட்டி தமிழ் பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட போது முஸ்லிம் ஆளுனர் ஒருவர் இருந்ததனால் தான் உடனடி தீர்வைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் அவ்வாசிரியர்கள் குறைந்தளவு மன உளைச்சலுடன் சூழ்நிலையிலிருந்து விடுபடக்கூடியதாகவும் அமைந்தது. அதே ஆளுனர் தற்போது இராஜினாமா செய்த பின்னர் அவர் கொஞ்சம் கவனமாக நடந்து கொண்டிருக்கலாமோ? பிரச்சினையின் போது குறைத்துப் பேசியிருக்கலாமோ? வகை தொகையின்றி இடம்பெற்ற கைதுகள் தொடர்பில் மௌனியாhக இருந்திருக்கலாமோ? என்றெல்லாம் அபிப்பிராயம் சொல்லப்படுகிறது.

முதலில் இச்சமூகம் தமக்குள் ஒரு தெளிவை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உண்மையில் நீங்கள் அரசியலில் உங்களுக்காக எதிர்பார்ப்பது என்ன? செயல்வடிவத்தில் ஒவ்வொரு மனிதனும் பொதுவாகவே வேறுபடுவான். இதில் எவ்வகையானவர்கள் மாத்திரம் அல்லது எவ்வகையானோரின் கலவை உங்களுக்குத் தேவைப்படுகிறது? இன மையக் கொள்கையில் நகரும் இலங்கையில் எவ்வகையிலான குரல்களுக்கு அவசியமிருக்கிறது? நமது வாக்கு வங்கிகளைப் பிரித்தும் - திரித்தும் சண்டையிட்டுக் கொள்வதன் மூலம் இவ்வாறான சூழ்நிலையை இனி வரும் காலங்களில் எவ்வாறு எதிர்நோக்கப் போகிறோம்? என பல நூறு கேள்விகள் சமூகத்தின் முன் கட்டாய வினாக்களாக தொக்கு நிற்கிறது.

எது எவ்வாறாயினும், கடந்து சென்ற சில நாட்கள் இன்னும் ஒரு செய்தியை சமூகத்தை நோக்கி உரத்துச் சொல்லியிருக்கிறது. அது தான் உங்கள் பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையின் அவசியம். தமது பிரதிநிதிகள் யார்? தலைவர்கள் யார்? என்பதைத் தீர்மானிக்க வேண்டியது மக்களின் பொறுப்பு. ஆனால், நீங்கள் யாரைத் தெரிவு செய்தாலும் நாடாளுமன்றின் 225 ஆசனங்களில் ஒரு பங்கினை உங்கள் பிரதிநிதிகள், எந்தக் கட்சியினூடாகவேயேனும் நிரப்புவதை உறுதி செய்வது உங்கள் கடமையாகிறது.

நாட்டின் சனத்தொகையில் 10 வீதத்தை நெருங்கியிருக்கும் நாம் நாடாளுமன்றில் எமது உறுப்பினர் தொகையின் எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதன் அவசியமும் இருக்கிறது என்பதால் விரும்பியோ விரும்பாமலோ அதன் பால் செயற்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. தற்கால சூழ்நிலையில் எதிர்காலத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்த சிந்தனை அவசியப்படுகிறது.

அனைத்தின மக்களின் வாக்குகளையும் பெற்று நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்கக் கூடிய சூழ்நிலையிலிருந்தும் பாதையிலிருந்தும் இலங்கை அரசியல் வெகு தூரம் விலகிச் சென்று விட்டது. அதனை சீர் செய்யக் கூடிய சிற்நத வாய்ப்பிருந்தும் கூட பலவீனமான மைத்ரி – ரணில் கூட்டணி அதனை முற்றாகக் கை நழுவ விட்டு விட்டது. இந்நிலையில் நாட்டின் தலைமைத்துவம் எவர் பக்கம் போகும்? என்ற கேள்விக்கும் அனுமானத்துக்கும் அப்பால் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நமக்கு காலக் கட்டாயம் அதிகரித்திருக்கிறது.

நம் பிரதிநிதிகள் செய்யும் தவறுகளை நாம் தட்டிக்கேட்கலாம், அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து சமூகத்தேவைக்காக இயங்க வைக்கலாம். ஆனாலும் நமது அரசியல் ரீதியிலான பிரசன்னம் முக்கியம் பெறுகிறது. முஸ்லிம் சமூகத்தின் மீது ஏற்படுத்தப்பட்ட பாரிய அழுத்தத்தை ஒற்றுமையாக எதிர்கொண்டு எதிர்வினை காட்டியதன் பயனை இரு தினங்களுக்குள் நாம் கண்ணுற்றோம்.

மகா சங்கத்தினர் (சங்க சபா) அவர்களாகவே முன் வந்து, மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கோரிக்கை விடும் அளவுக்கு இதன் தாக்கம் அமைகிறதெனும் போது தேசிய அரசியலில் எமது பங்கும் அதன் அவசியமும் அது முறையாகத் திட்டமிடப்பட்டு இயக்கப்படுதலின் தேவையும் உணர்த்தப்படுகிறது.

கடந்த காலத்தில் விட்ட தவறுகளை சீர்படுத்தக் கிடைத்திருக்கும் இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை இயக்க – கட்சி பேதங்களுக்கு அப்பால் சரிவரப்பயன்படுத்திக் கொள்வது நமது காலக் கடமை!

2ld3lJX

- Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment