ஊமைக் குயில்கள்...! - sonakar.com

Post Top Ad

Friday, 10 May 2019

ஊமைக் குயில்கள்...!


இனவாதத்தின் முன் கம்பீரமாக நின்ற முஸ்லிம் சமூகம் இன்று தீவிரவாதத்தின் முன் தலைகுனிந்து நிற்கிறது.

திரும்பும் இடமெல்லாம் பள்ளிவாசல்களிலிருந்து வெடிபொருட்கள், வாள்கள், கத்திகள் மீட்கப்பட்டன எனும் செய்திகள் பரவிக் கொண்டிருக்க, சிங்கள மக்களின் மனதில் முஸ்லிம்கள் எல்லோருமே தீவிரவாதிகள் தான் எனும் முத்திரை வலுவாக குத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.இந்த சூழ்நிலையிலிருந்து வெளிவருவதற்கு எத்தனை காலம் எடுக்கப் போகிறது? என்கின்ற கேள்வி ஒரு புறமிருக்க இவ்வாறான சூழ்நிலையை உருவாக்கியதில் நம் ஒவ்வொருவருக்கும் எத்தனை பங்கிருக்கிறது என்பதையும் சிந்திக்கும் அவசியம் உள்ளது.

கெட்டவர்களின் இரைச்சலை விட நல்லவர்களின் அமைதியே சமூக இடர்களின் அடிப்படையென கருப்பின சமூக விடுதலைக்காகப் போராடிய மார்டின் லூதர் கிங் ஜுனியர் தெரிவித்திருந்தார். அவரது அனுபவப் பாடம் உலகில் வாழும் பெரும்பாலான சமூகங்களுக்கு, குறிப்பாக இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு நன்கு பொருந்தும்.

இன்று இலங்கை முஸ்லிம் சமூகம் நல்லவர்களையும் - கெட்டவர்களையும் அடையாளம் காணத் துடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நல்லவர்களையும் கெட்டவர்களையும் அளவிட வேறு காரணிகளை பொதுத்தளத்துக்குள் கொண்டு வர இயலாத காரணத்தினால் கொள்கை இயக்க வேறுபாடுகள் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

இலங்கை முஸ்லிம் சமூகத்துக்குள் பெயர் போன கடத்தல்காரர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள். வரி மோசடி செய்யும் கில்லாடிப் பேர்வழிகள் இருந்தார்கள், இருக்கிறார்கள். கொலை – கொள்ளை – போதைப் பொருள் விற்பனை போன்ற பாதகச் செயல்களில் ஈடுபடுவோர் இருந்தார்கள், இருக்கிறார்கள். மக்களை உணர்ச்சியூட்டி அரசியல் பிழைப்பு நடாத்தினாலும் ஆள் வைத்துத் தம்மை உத்தமர்களாக விளம்பரப்படுத்துவோர் இருந்தார்கள், இருக்கிறார்கள். மார்க்கத்தின் பெயரில் என்.ஜி.ஓக்களைத் திறந்து அதனூடாக மத்திய கிழக்கு அரபிக் காரனிடம் வழிப்பறி செய்பவர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள். சவுதி;க் காரன் தந்த பணத்துக்காக ளுஹருக்கும், குவைத் காரன் தந்த பணத்திற்காக அசருக்கும் அதே பள்ளிவாசலுக்கு திறப்பு விழா நடாத்துவோரும் இருந்தார்கள், இருக்கிறார்கள். ஈற்றில் தற்கொலைத் தாக்குதல் நடாத்திய தீவிரவாதிகளும் இருந்தார்கள் என்று வரலாறு பதிவாகி விட்டது.

இப்படி எல்லா விடயத்திலும் பங்கேற்றுக் கொண்ட முஸ்லிம் சமூகம் தம்மைத் தாம் மீளாய்வு செய்வதில் மாத்திரம் எப்போதும் தயக்கம் காட்டியே வருகிறது. அரசாங்கத்துக்கு வரி கட்டாவிட்டாலும் இறைவனுக்குப் பயந்து சக்காத் கொடுப்பதோடு தாம் தூய்மையடைந்து விட்டதாக கருதுவது போலவே தம்மை நோக்கிப் பாயாத பிரச்சினையைத் தமதாகக் கருதுவதில்லை. மாறாக, அது வந்த பின்னர் கூப்பாடு போடும் ஊமைக் குயில்களாகவே வாழப் பழகிக் கொண்டுள்ளது.

2009ல் யுத்தம் நிறைவுக்கு வந்தது. அதன் பயனாக கடந்த 10 வருடங்களை இனிதே முன்னெடுத்து வந்த நிலையில் திடீரென அரங்கேற்றப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் அதிர்விலிருந்து உலகெங்கும் பரந்து வாழும் இலங்கை முஸ்லிம்கள் இன்னும் முழுமையாக விடுதலை பெறவில்லை. நம் மீதும் இரத்தக் கறை விழுந்து விட்டதே எனும் வெளியில் சொல்ல முடியாத கோபமும் இதில் அடங்கும். 

ஆகையால், இதற்கெல்லாம் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்? என்ற கேள்வியெழுவதும் சாதாரணம். யாரைக் குற்றஞ் சொல்லலாம்? அரசியல்வாதிகள், தஃவா இயக்கங்கள், முஸ்லிம் நாடுகள், அவற்றின் தூதரகங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அவசியத்துக்காக இயங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். என தெரிவுகள் முன் வைக்கப்படுகிறது.

ஆயினும், இவற்றைத் தாண்டி, தனி மனித எண்ணங்களும், அறிவு மற்றும் தேடல் குறைபாடுகளும் இதில் பங்களிக்குமா? என்று சிந்திக்க விளைந்ததால், இ;ங்கு சில விடயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கடந்த வாரம், லண்டன் ஐ.பி.சி தொலைக்காட்சியில் இலங்கையில் ஈஸ்டர் தினம் இடம்பெற்ற தாக்குதல்கள் பற்றிய நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற நேயர் ஒருவர் 'மதங்கள் ஒரு வியாபாரமா'? எனும் கேள்வியொன்றை முன் வைத்திருந்தார். கிறிஸ்தவர்களும் - இஸ்லாமியர்களும் அண்ணன், தம்பியாகவே இருப்பதாக சொல்கிறார்களே அப்படியானால் அவர்களுக்குள் ஏன் இவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனவும் அப்பாவித்தனமாக தன் கேள்வியை முன் வைத்த அவர், பொதுவாக மதங்கள் பற்றிய தேடல் இல்லாதவர் என்பதை விளக்கியிருந்தார்.

உலகில், இப்படியும் மனிதர்கள் இருப்பதைக் கொண்டு ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரு சிலர் மதங்களின் மீதான வெறுப்பினால் அவற்றைத் தேடி அறிய மறுக்கிறார்கள். இன்னும் சிலர், மதங்களின் பெயரால் மனிதர்கள் நடந்து கொள்ளும் விதத்தின் பின்னணியிலான வெறுப்பில் அவற்றைக் கண்டு கொள்வதைத் தவிர்க்கின்றனர். 
எனவே, தமக்குப் புகட்டப்படும் மத சார்ந்த விடயங்கள், அவற்றின் ஆழம், விரிவு, வரலாறு மற்றும் தமக்குக் கூறப்படும் கதைகளின் உண்மைத்தன்மைகள் பற்றி அலசி ஆராய்ந்தே ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயக் கடமை ஒவ்வொரு தனி நபருக்கும் உரியதாகிறது. நமது நடத்தைகளும், வழிமுறைகளும் மற்ற மனிதர்களைப் பாதிக்கப் போகிறது என்கின்ற அடிப்படை பொறுப்புணர்வு அவசியப்படுகிறது. ஆயினும், பெரும்பாலும் முஸ்லிம் சமூகத்தில் இது தொடர்பிலான நாட்டம் மிகக் குறைவாகவே இருக்கிறது.

ஒரு வகையில் 'முஸ்லிம்' என்றால் யார்? என கடந்த நாற்பது வருடங்களாக இலங்கையில் வாதிட்டு, தெருச் சண்டைகளில் ஈடுபட்டு வரும் எம் சமூகத்துக்குள் மற்றவர் முன் முஸ்லிமாக வாழ்வதற்கான பொறுப்பேதும் தனக்கிருப்பதாக இன்னும் உணரவில்லையெனவும் கூறலாம். இன்னும் சிலருக்கு தொப்பியணிந்து தாடி வைத்தால் போதும், அல்லது முஸ்லிம் நாடுகளின் அரசியலுக்கு எதிர் விளைவு காட்டினால் போதும், ஏதாவது ஒரு மதரசா நெறியில் வாழப் பழகிக் கொண்டால் போதும், தாம் கற்றுக்கொண்ட பாடத்திட்டத்துக்குள் அடங்குபவர்களை மாத்திரம் முஸ்லிமாக ஏற்றுக்கொண்டால் போதும் என்ற எண்ணப்பாடு.

அதையும் தாண்டிச் சிந்திக்க விளைந்த சஹ்ரான் போன்றவர்கள் தாம் மட்டுமே சொர்க்கத்துக்குரிய முஸ்லிம்கள் எனவும் முடிவெடுத்து விட்டார்கள். இவ்வாறு சொர்க்க – நரகத்தைத் தமது அறிவை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கும் ஆற்றல் மிக்க சமூகமாகத் தம்மை இச்சமூகம் மாற்றிக் கொள்ள யாரெல்லாம் பொறுப்பாளிகள் என்கிற கேள்வியும் இங்கு கட்டாயம் கேட்கப்பட வேண்டும்.

1990களில் 'பயில்வான்' என்று அறியப்பட்ட அப்துல்லாஹ் பயில்வான் எனும் பிரச்சாரகரின் சூபிச வடிவம் கொழும்பிலும் காலூன்றியது. பல முக்கிய தொழிலதிபர்கள் அதன் பால் ஈர்க்கப்பட்டு, பெருமளவில் நிதியுதவி செய்து அதனை வளர்த்து விட்டார்கள். காத்தான்குடியில் நவீன காலத்திலும் பல கட்டுக்கதைகளை மார்க்கமாகப் புகட்டிக் கொண்டிருக்கும் ரௌப் மௌலவி எனும் நபரும் இவரின் சீடராக அறியப்படுகிறது.

இக்கால கட்டத்தில் குறித்த குழுவினர் சுன்னத்துல் வல் ஜமாத்தினரை அறிந்து கொள்வது எப்படியென ஒரு புத்தகத்தை வெளியிட்டார்கள். இதனைக் கண்ணுற்ற போது அதில் கண்ட பல முரண்பாடுகள் குறித்து பயில்வானிடம் நேரடியாகவே கேட்டறிய வேண்டும் என்று காத்திருந்த எனக்கு ஒரு தடவை அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.

மருதானையில் இருந்த வீடொன்றில் பயில்வானிடம் நான் கேட்ட கேள்விகளுள் ஒன்று: நீங்கள் அல்-குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்கள் ஒவ்வொன்றுக்கும் இரு வகையான விளக்கங்கள் இருப்பதாகத் கூறுகிறீர்களே என்றேன். ஆம், பாமரர்கள் புரிந்து கொள்ளவும் படித்தவர்கள் புரிந்து கொள்ளவும் இரு வகையான விளக்கங்கள் உண்டென்;றார். அப்படியானால், ஒரு பாமரன், படித்தவனுக்கு வழங்கப்பட்டதாக நீங்கள் கூறும் விளக்கத்தைத் தனக்கு வழங்கப்பட்டதாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது? என கேட்டேன். அதற்கு அது அவனுடைய முனாபிக் தனம் என்று பதிலளித்தார்.

ரௌப் மௌலவி என்பவருக்குத் தனது முக்தி நிலையில் தான் சொல்லிக் கொடுத்த ஒரு விளக்கத்தினை அவர் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவே அவர் ஏற்படுத்திய குழப்பங்கள் என்றும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் போக, கொழும்பில் இருக்கும் பிரபல தைக்கியா ஒன்றில் 'சங்கைக்குரிய ஷேகு' என அறியப்பட்ட ஒருவரிடம் நீங்கள் வேதத்தில் முக்தியடைந்துள்ளதாக சொல்கிறார்களே, உண்மையா? என வினவியிருந்தேன். அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள் என்றார். அப்படியானால் உங்களிடம் வரும் யாராவது, எப்போதாவது நீங்கள் முக்தியடைந்த வழியைக் காட்டித்தருமாறு உங்களிடம் கேட்டிருக்கிறார்களா எனக் கேட்டேன். அதற்கு அவர், போங்க தம்பி, வருகிறவன் எல்லாம் சுவர்களின் மூலையில் தொங்க விட கூடு செய்து தரும்படியும், கடை லாச்சியில் வைப்பதற்கு இசும் எழுதித்தரும்படியும் தான் வருகிறார்கள் என அலுத்துக் கொண்டார்.

முஸ்லிம் பெண்ணொருவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஒரு நபர், மாத்தளை மாவட்டத்தின் ஒரு முஸ்லிம் கிராமத்தில் அமைதி தேடிக் குடியேறியிருந்த போது, அவ்வூரின் பெருந்தகைகளால் கட்டாய 'சுன்னத்து' செய்யப்பட்ட சம்பவம் ஒன்றும் இடம்பெற்றது. அதை முன்னின்று நடாத்திய ஹாஜியாரிடம் கேட்ட போது, எங்கள் ஊரில் இதை அனுமதிக்க முடியாது என அப்போது 'கர்வமாக' பதிலளித்தார். 

குருநாகலில், கிறிஸ்தவ ஆணொருவரை விரும்பி முடித்த முஸ்லிம் பெண்ணொருவர் தானாகவே பள்ளிவாசலை அணுகி தனக்கு 'ஹத்' அடிக்கும் படி கோர, பின்னர் தேதி தருகிறோம் என்று சொன்னது பள்ளிசால் நிர்வாகம். திடீரென பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது, ஆனாலும் அன்றைய தினம் மாதவிடாயினால் வர முடியாது, வேறொரு தினத்தை ஏற்பாடு செய்யுங்கள் என கேட்ட அந்தப் பெண்ணுக்கு மோட்டார் சைக்கிளில் வீடு தேடிச் சென்ற பள்ளி நிர்வாகியொருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் ஒன்று ஏழு வருடங்களுக்கு முன் நடந்தது. ஆசிய மனித உரிமை அமைப்பும்; அதில் தலையிட்டது. இந்த நபரைத் தொடர்பு கொண்டு பேசிய போது, முதலில் அடிக்கவில்லையென்றவர் பின்னர், நிர்வாகத்தின் அழைப்பைப் புறக்கணித்ததால் ஆத்திரப்பட்டதாக என்னிடம் கூறினார்.

இது தவிர, இலங்கையை எப்படியும் முஸ்லிம் மயப்படுத்தி விடலாம் என்ற சிந்தனைப் போக்குடன் 8ம் வகுப்பிலிருந்து வகுப்புகளுக்குச் சென்று, பிரபல அரபுக் கலாசாலையொன்றில் கற்றுத் தேர்ந்து வந்ததாகக் கூறும் ஒரு நபர், தேச எல்லைகள் இல்லாத பூமியை ஒற்றையாட்சிக்குக் கீழ் கொண்டு வர வேண்டும் என்று வாதிட்ட போது, இப்பூமி எப்போது அப்படியிருந்தது? என்று கேட்க விளைந்திருந்தேன். பதில் இல்லாவிடினும் தம் நிலைப்பாடுகளை விட்டுக் கொடுக்க இதில் எவ்வகையினரும் தயாராக இருக்கவில்லை.

இப்படி ஒவ்வொரு தனி நபர்களும், அவர்களது மார்க்கத்தின் பேரிலான நிலைப்பாடுகளும் சமூகத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது தொடர்பில் 'சமூகம்' சிந்திக்கிறதா? என்ற கேள்விக்கு விடைகாணச் செல்வின் தாம் சார்ந்த கொள்கையமைப்புகளைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயக் கடமை நிமித்தம் இவை அலட்சியப்படுத்தப்பட்டு மறைக்கப்படுகிறது எனும் உண்மையை உணர்ந்து கொள்ளலாம்.

எனவே, ஆகக்குறைந்தது மாற்றத்தின் அவசியமும் கட்டாயமும் உணரப்பட்டிருக்கும் இக்கால கட்டத்திலாவது மனிதத்தை முன்நிறுத்திய சிந்தனைப் போக்கு நம் மத்தியில் எழுமா என்ற ஆதங்கம் தொக்கு நிற்கிறது.
சிலுவைக்கும் - பிறைக்குமிடையிலான யுத்தம் நடந்து முடிவதற்காகவே இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கிறது என மாத்திரம் நம்புவோர், பிரபஞ்சம் ஏன் இத்தனை விசாலமாகவும் மனிதன் தேடி அறிவதற்காகவும் படைக்கப்பட்டிருக்கிறது என்ற கேள்விக்கு விடை காண முயல்வதில்லை. அத்தோடு பூரணப்படுத்தப்பட்ட இஸ்லாம் அரேபியாவில் அறிமுகமான காலத்தில் அதன் மேற்கிலும் கிழக்கிலும் பல நாடுகளில் மனித சமுதாயம் வாழ்ந்தது என்று ஏற்றுக்கொள்வது கூட இல்லை. ஆனாலும் வசதிக்காகவும் கட்டாயத்துக்காகவும் மேலோட்டமாக சபூர், தவ்றாத், இன்ஜீல் போன்ற வேதங்களும் இருந்தது என்று ஏற்றுக்கொள்கிறார்கள். இதேவேளை, மத்திய கிழக்கை அடிப்படையாகக் கொண்ட வேத முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் உலகின் ஏனைய பகுதிகளை வேண்டுமென்றே மறந்து விடுகிறார்கள்.

இஸ்லாம் உண்மையில் அதைத்தான் சொல்கிறதா? என்ற அடிப்படைக் கேள்வியைக் கூட தமக்குத் தாமே கேட்கத் துணிவில்லாத நிலையில் பக்தகோடிகளும் மார்க்கத்தின் பெயரால் தமக்குள் மனிதவிரோத நிலைப்பாடுகளை வளர்த்துக் கொள்கிறார்கள்.

ஐரோப்பா, உமையாக்களின் ஆட்சிக்குட்பட்ட காலத்தில் அதனை எதிர்த்து, மக்களைத் திரட்டிப் போராடி, பின் நாளில் ரோமின் பேரரசரான பிரெஞ்சு மன்னன் சார்லமேன் தனது மக்களை அணி திரட்டிய போது, முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் புரிபவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள், இறப்பவர்களுக்கு உடனடியாக சொர்க்கம் கிடைக்கும் என்றே பிரச்சாரப்படுத்தினான். ஜெரூசலத்தை மீட்க வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கிய போது கத்தோலிக்க ஆயர்கள் தம் பக்தர்களுக்கு சொர்க்கம் காத்திருக்கிறது, போருக்குச் செல்லுங்கள் என்றே கூற விளைந்தார்கள். இதனால் ஈர்க்கப்பட்ட சாதாரண மக்கள் அணி அணியாக மரணத்தைச் சுவைக்கத் தயாரானார்கள் என்பது வரலாறு. முஸ்லிம்களின் ஆட்சியிலிருந்து இறுதி நிலப்பகுதியான கிரனடாவை விடுவிக்கும் போதும் இவ்வாறே சிலுவை யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டது. மறுமுனையில் போரில் உயிரிழப்பது வீரமரணம், அதற்கு நேரடியாக சுவர்க்கம் என நம்பிய நிலையிலேயே முஸ்லிம் சமூகமும் மூர்க்கமாக போரிட்டது, 

ஆனாலும், உயிரின் மதிப்பை இஸ்லாம் எத்தனை வலியுறுத்துகிறது என்பதை சில சாதாரண மனிதர்கள் மிக அழகாக உணர்ந்து வைத்திருக்கிறார்கள். இந்த வாரம், அதிக மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு மொழிபெயர்ப்பு உதவி செய்ய சிகிச்சை நிலையத்துக்கு அவரோடு சென்றிருந்தேன். அவரிடம் மருத்துவர், உங்களுக்கு நீங்களே தீங்கு செய்யும் வகையிலான எண்ணங்கள் உங்களுக்கு வருகிறதா? என கேட்ட போது, வருகிறது ஆனால் நான் பின்பற்றும் இஸ்லாம் எனும் மார்க்கம் அதனைத் தடுக்கிறது என்று அவர் பதிலளித்தார்.

வழிந்தோடிய கண்ணீரோடு ஊமைக்குயில்களாய் வாழும் எம் சமூகத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டேன்.

2ld3lJX
-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

1 comment:

ஜெயபாலன் said...

https://www.facebook.com/jaya.palan.9/posts/10156605008744332?notif_id=1557495444110466&notif_t=feedback_reaction_generic

ஊமைக் குயில்கள் ஒற்றுமையின் கயிற்றைப் பற்றி இனி வசந்தமென பாடட்டும்.

.
தலைபோகிற நெருகடிகளில் ஒற்றுமையையும் சுய விமர்சனத்தையும் ஜனநாயகத்தையும் இறுக பற்றுகிற இனங்கள் புத்துயிர்து வெற்றி பெறும் என்பதுதான் காலந்தோறும் மானுட வரலாற்றின் படிபினையாக இருக்கிறது.

மீண்டு நிமிர்கிற முஸ்லிம் ஊர்களில் பெரும்பாண்மையான ஜனநாயக சக்திகள் புத்துயிர்த்து ஒற்றுமைப்படுவது நம்பிக்கை தருவதாக உள்ளது. ஒற்றுமை விமர்சனம் சுயவிமர்சனம் ஊடாக புத்தெழுச்சிபெறும் முஸ்லிம் மக்களை வாழ்த்துவதும் வரவேற்பதும் அரவனைப்பதும் ஆதரிப்பதும் ஈழ மலையக தமிழரதும் சிங்கள ஜனநாயக சக்திகளதும் தலையாய கடமையாகும்.

இன்று சோனர் டட் காம் ஆசிரியர் இர்பான் இக்பால் எழுதிய ஊமைக்குயில்கள் விமர்சனம் சுயவிமர்சனம் கட்டுரையை வாசித்தேன். விவாதத்துக்காக பகிர்கிறேன்.
.

Post a Comment