சுதந்திர இலங்கையும் - முஸ்லிம் சமூகமும்! - sonakar.com

Post Top Ad

Sunday 3 February 2019

சுதந்திர இலங்கையும் - முஸ்லிம் சமூகமும்!


பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து இலங்கை சுயாட்சியைப் பெற்று 71 வருடங்களாகிறது. தமது அதிகாரத்துக்குள் வைத்திருந்த சில நாடுகளுக்கு முதற்கட்டமாக மேலாட்சி என அறியப்படும் னுழஅinழைn அந்தஸ்த்துடனான சுதந்திரத்தை வழங்கியது பிரித்தானியா. இதன் மூலம் பெயரளவிலாவது பிரித்தானியாவின் முடியாட்சி தனது ஆளுமையைத் தக்க வைத்துக்கொண்டது.


இந்நிலையில்;, 1972 மே மாதம் 22ம் திகதி இலங்கை பூரண சுதந்திரத்துடனான குடியரசாக (சுநிரடிடiஉ) மாற்றம் பெற்றது. ஆயினும் கூட இன்றும் பொதுநலவாய (ஊழஅஅழறெநயடவா) நாடுகளமைப்பில் அங்கம் வகிப்பதோடு பிரித்தானிய பாரம்பரிய சம்பிரதாயங்களை முழுமையாகக் கைவிடாது தொடர்ந்து வருகிறது.

டச்சுக்காரர்களை விரட்டுவதற்கு ஏங்கிக் கொண்டிருந்த இலங்கை, ஆங்கிலேயரின் உதவியைப் பெற்றுக்கொண்டதன் விளைவாக பிரித்தானிய ஆதிக்கம் இலங்கைக்குள் ஊடுருவியது. நூளடைவில் நாட்டின் அதிகாரத்தையும் பறிகொடுத்தாலும் 1803 முதல் 1948 வரை முதலில் சண்டையிட்டும் பின்னர் சாத்வீக மற்றும் மக்கள் போராட்டங்கள், எழுச்சிகள் மூலமாகவும் பிரித்தானிய ஆளுமையிலிருந்து விடுபடுவதற்கான போராட்டம் நடந்து கொண்டேதான் இருந்தது.

முதலாவது கண்டி யுத்தத்தில் (1803-1805) படுதோல்வியடைந்த பிரித்தானிய படையினர், அடுத்து வந்த 12 வருடங்கள் அயராது பாடுபட்டுத் தம் பிரித்தாளும் தந்திரம் ஊடாக சிங்கள மக்களிடையே பிளவை உருவாக்கி, அதன் பயனில் 1815 – 1818 காலப்பகுதிக்குள் அடங்காதிருந்த கண்டி ராஜ்ஜியத்தையும் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

இக்கால கட்டத்திலும் அன்னியர் ஆட்சியை எதிர்த்துப் போராட இலங்கையர்களாகவே ஒன்று பட்டுப் பணியாற்றியது முஸ்லிம் சமூகம்.

போர்த்துக்கீயர், ஒல்லாந்தர் ஆட்சிகளிலும் மூன்று நூற்றாண்டுகளாகப் பெரும் கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்து வந்திருந்த போதிலும் பிரித்தானியருக்கு எதிரான போராட்டம் தம் தாய் நாட்டுக்குரியது என்ற ரீதியில் அனைத்து புரட்சிகளிலும், போர் நடவடிக்கைகளிலும், அமைதிப் போராட்டங்களிலும் இலங்கை முஸ்லிம்கள் சுதந்திரம் வரையும் பின்னரும் முக்கிய பங்களித்து வந்தனர்.

1804ம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியாளர்களால்; தமக்கெதிராகப் போராடிய காரணத்தினால் எதிரிகளாகப் பிரகனப்படுத்தப்பட்டோர் பட்டியலில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஏழு முஸ்லிம்களும் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
மீரா உசைன் அபூபக்கர், உசன் லெப்பை உதுமா லெப்பை, அபூபக்கர் ஈஸா, அனில் லெப்பை ஆகிய மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் சேகுதாதி, பீர் முஹம்மது, சலம்பதி உடையார் ஆகிய திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுமே இவர்கள். குறிப்பிட்ட முன்னோர்களுள் டச்சு காலத்தில் இயங்கிய சோனக படையணியில் பணியாற்றியோரும் உள்ளடக்கம்.

21ம் நூற்றாண்டில் இடம்பெற்ற ஆங்கிலேயருடனான போராட்டம் பிரித்தாளும் தந்திரத்துக்கெதிரான ஒற்றுமையை வலியுறுத்தும் கோணத்திலும் பார்க்கப்பட வேண்டியுள்ளது. சிங்கள மன்னர்களை வெல்வதற்கு, படித்தோர் – படிக்காதோர், செல்வம் படைத்தோர் - இல்லாதோர், உயர்ந்தோர் – தாழ்ந்தோர் என பிரித்தானிய ஆட்சியாளர்கள் உருவாக்கிய பிரிவினைகள் இன்னொரு கோணத்தில் இன அடிப்படையிலான பிரிவினைகளாகவும் உருவெடுத்தது.

எனினும், தமது இனத்தின் தனித்துவத்தைப் பாதுகாக்கவும், வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியைத் திட்டமிடவும் முனைப்பாக இயங்கிய அதேவேளை தேசிய ஒற்றுமை மற்றும் தேசியத்தில் பங்களிப்பதற்கும் முற்காலத் தலைவர்கள் தயங்காது பணியாற்றியதன் விளைவிலேயே இன்று வரை அரச இயந்திரத்தில் முஸ்லிம் சமூகத்தின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அவசியமானதாகவும் இருந்து வருகிறது.

இதனை சுதந்திர இலங்கையில் இன்று வாழும் முஸ்லிம் சமூகம் எவ்வாறான விடயங்களுக்குப் பயன்படுத்துகிறது என்பதை இத்தருணத்தில் சுயவிமர்சனத்துக்குள்ளாக்கி அலசக் கடமைப்படுகிறேன்.

முஸ்லிம்கள் என்பதே எமக்கான மத அடையாளம். அதை எக்காரணத்தைக் கொண்டும் நாம் விட்டுக் கொடுக்கப் போகவதில்லை. ஆனாலும், முஸ்லிமாக வாழ்வதனால் முழப் பூர்வீகம் உள்ள குடிகளான நாம் தேசியத்திலிருந்து அன்னியப்பட்டு வாழ வேண்டுமா? என்பது சதா காலமும் கேட்கப்பட வேண்டிய கேள்வியாக இருக்கிறது.

இக்கேள்வியை இம்முக்கிய தருணத்தில் முன் வைக்கக் காரணங்கள் பல உண்டு. வரலாற்றில் நெடுந்தூரம் செல்லாது 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து கடந்த பத்தொன்பது வருட காலத்தை சற்று அலசுவோமாக இருந்தால் காலஞ்சென்ற அலவி மௌலானா மேல் மாகாண ஆளுனராக இருந்த காலத்தில் அடிக்கடி நாம் இலங்கையர் என்ற அடிப்படையில் இலங்கை கிரிக்கட் அணிக்கே ஆதரவளிக்க வேண்டும் என முஸ்லிம்களுக்கு பகிரங்க அறிவித்தல் விடுத்ததை முதலில் எடுத்துக் கொள்வோம்.

இச்சிக்கல் பெரும்பாலும் பாகிஸ்தானுடனான கிரிக்கட் போட்டியின் போதே உருவானது. முஸ்லிம் சமூகம் இலங்கை தேசிய கிரிக்கட் அணிக்கே பெரும்பாலும் ஆதரவளிக்கிறது. இருந்தாலும் கையளவு தொகையினர் தேசிய அணி தேசிய இனங்களை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்கிற கோபமும் தமது சமூகம் புறக்கணிக்கப்படுகின்றது என்ற அங்கலாய்ப்பும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

அது தவிரவும், இயற்கையாகவே 'முஸ்லிம்' உறவு அவ்வாறான உணர்வைத் தூண்டிவிடுவதையும் மறுக்க முடியாது. இங்கு இரண்டு விடயங்கள் முக்கியம் பெறுகிறது. ஒன்று தேசியம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டதா என்கிற கேள்வி, இரண்டாவது அது மக்களால் உணரப்பட்டு விட்டதா என்கிற கேள்வி. இவ்விரு கேள்விகளுக்கும் இலகுவான விடையில்லை என்பதோடு இலங்கை தொடர்ந்து இன மையக் கொள்கையடிப்படையிலான அரசியலையே முன்னெடுத்துச் செல்கிறது.

ஆதலால், பௌத்தர்கள் தாம் சார்ந்த மக்களின் மனதை வெல்வதற்கும் முஸ்லிம்கள் தாம் சார்ந்த மக்களின் மனதை வெல்வதற்குமே போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, பிரித்தானிய சூழ்ச்சியை மிஞ்சி தேசிய நலனுக்காகப் பணியாற்றிய உணர்வு தற்போது இல்லை.

அண்மைய கிரலகல சம்பவம் இதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இதற்கு வெறுமனே தென் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களை மாத்திரம் குறை கூறவோ அல்லது அவர்கள் மீது தவறில்லையெனக் கூறவோ முடியாது. இதன் பொறுப்பு கல்வித் திட்டம், ஆசிரியர்கள், மார்க்க விளக்கவுரையாளர்கள், கொள்கை இயக்கங்கள் மற்றும் அரசாங்கம் என பலர் மீது சுமத்தப்பட வேண்டியுள்ளது.

சுற்றுலாத்தளமொன்றென நினைத்து உள் நுழைந்தது தவறெனின் அங்கு உள் நுழையக் கூடாது எனும் அறிவித்தல் இருந்ததா? என்பது முதற் கேள்வி. அதையும் மீறி கிரலகல மீது ஏறிப் படம் பிடித்து ஒரு வருட காலமாக அது தவறென இந்த மாணவர்களுக்கு எடுத்துக் கூறும் அளவுக்கு ஒரு சிங்கள நண்பரோ, விடயம் தெரிந்த ஆசிரியரோ, விரிவுரையாளரோ, இல்லை முஸ்லிம் நண்பரோ கூட இல்லாமல் போனது பெருங் குறையாகும். அவ்வாறு யாராயினும் இது பற்றித் தெரிவித்திருந்தால் உடனடியாக சமூக வலைத்தளங்களிலிருந்து அப்படங்கள் நீக்கப்பட்டிருக்கலாம்.

இன்னுமொன்று, இஸ்லாமிய சமூகம் தொல்லியல், புராதன விடயங்களைக் காத்தல், வரலாற்று ஆவணங்களைப் பாதுகாத்தல் மற்றும் சான்றுகளை அழிக்காதிருத்தல் போன்ற எந்த விடயத்திலும் கவனமற்ற சமூகமாகும்.

ஞானசார எம்மை வந்;தேறு குடிகள் என்று சொல்லும் தருணத்தில் மாத்திரம் கொதித்தெழுந்து வரலாற்றைத் தேடிப்பிடித்து சமூக வலைத்தளங்களில் நான்கு கருத்தெழுதி விட்டு இச்சமூகம் அடங்கி விடுகிறது. இவ்வாறு நமக்கு அடிப்படையில் இல்லாத அக்கறை அடுத்தவர்களுக்கு இருக்கும் பெறுமதியைக் கணிப்பிட முடியாத தடையாகவும் இருக்கிறது.

இச்சமூகத்தின் கல்வி மற்றும் கட்டமைப்பை உருவாக்குவதில் தமது நேரத்தையும் செல்வங்களையும் செலவு செய்த முன்னோர்கள் கூட இதற்கான பொறிமுறையொன்றை உருவாக்கவில்லை. இருப்பினும் இலங்கை சோனக முஸ்லிம் கலாச்சார நிலையம் என அறியப்படும் ஆஐஊர் பரவலான ஆவணப்படுத்தலில் ஈடுபட்டது. இருப்பினும் கூட, தற்போது அந்த நிறுவனத்திலுள்ளவர்களுக்கும் தமது பாரம்பரியம் பற்றிய தெளிவில்லாத நிலையே காணப்படுகிறது.

கடந்த வருடம் நவம்பரில் அங்கு சென்ற போது பழமை வாய்ந்த நூலகத்தைப் பேணுவதைத் தவிh, முன்னோர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்வதற்கான ஆட்பலமில்லாத நிலையில் அவ்வமைப்பு இயங்குவதை அவதானிக்கக் கிடைத்தது.

அடிப்படையில், 1400 வருடங்களுக்கு முன் நடந்த வரலாற்று சம்பவங்களைச் சுற்றியே மார்க்க விளக்கம் மற்றும் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டு அதில் நேரத்தை செலவு செய்யும் இன்றைய சமூகம் நம்மைச் சுற்றியுள்ள ஏனைய இனங்களின் உணர்வுகள், அவர்களின் முக்கிய தளங்கள் தொடர்பான போதிய அளவான அறிவைப் பெறுவதும் இல்லை, சமூக சூழ்நிலை அதனைத் தருவதும் இல்லை. எனவே, இதற்குப் பலரும் பொறுப்பேற்க வேண்டும்.

2015ம் ஆண்டு கல்முனை முஸ்லிம் பாடசாலையைச் சேர்ந்த ஒரு மாணவி சீகிரியவுக்கு சுற்றுலா சென்றிருந்த தருணத்தில் அங்குள்ள புராதன ஓவியம் ஒன்றில் மையால் எழுதிய சர்ச்சையொன்று உருவானது. அத்தருணத்தில் விடயம் பாரதூரமாக முன்பதாக மாணவிக்குப் பிணை கிடைத்திருந்தது. இதை விளையாட்டுத்தனம் என்று நமக்கு நாமே ஆறுதல் கூறிக்கொண்டாலும் குறித்த மாணவி அப்போது உயர் தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்தவர் என்பது அவதானிக்க வேண்டிய விடயம்.

கிரலகலயில் ஏறியது பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள். இவற்றைப் பார்க்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் சூழல் கொண்ட கிழக்கு மண்ணில் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள முக்கியத்துவம், அப்பகுதிகளில் வாழும் மக்களின் உணர்வுகள் மற்றும் சமய – உணர்வு விடயங்கள் பற்றிய போதிய தெளிவு கிடைக்காமலே போகிறதா? எனும் கேள்வி தொக்கு நிற்கிறது.

சிங்கள மொழியின் ஆளுமை அப்பகுதிகளில் குறைந்திருந்தாலும் தேசிய இனம் எனும் அடிப்படையில் இத்தீவில் பரந்து வாழும் சமூகமாக, அவ்வாறான அறிவையும் புரிதலையும் வளர்த்துக் கொள்வதும் அவசியப்படுகிறது.

இவ்வாறான தருணங்கள் வந்ததும் பாய்ந்து விழுந்து சம்பந்தப்பட்டவர்களை விடுவித்துக் கொண்டு வருவதுதான் தமது சாதனையென மக்களை நம்ப வைக்கும் அரசியல்வாதிகள் இன்னும் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள். கடந்த டிசம்பர் மாதத்திலேயே தேசிய ஜனநாயக போராட்டத்தில் ஏனையோருடன் இணைந்து முன்னரங்கில் நின்று முஸ்லிம் சட்டவல்லுனர்கள் போராடி வெற்றி பெற்ற நிலையில் அதே சட்டத்தை தம்முடைய தேவை வரும் நேரத்தில் அரசியல்வாதிகளின் சட்டைப் பைக்குள் திணிக்க எதிர்பார்க்கும் மன நிலையை மக்களும் மாற்ற வேண்டும்.

நாம் தவறிழைக்கவில்லை அல்லது அறியாமல் தவறிழைத்தோம் என்பதை நீதிமன்றில் நிரூபிக்க வேண்டிய கடமையுள்ள எம் சமூகம் சட்டவல்லுனர்களை நம்புவதை விட அடுத்த தேர்தலுக்கு வாக்குகளைக் குறி வைத்து சட்டத்தை மீறும் வல்லமை படைத்தவர்களாகத் தம்மைக் காட்டிக்கொள்ள முனையும் அரசியல் தலைமைகளின் பின்னால் செல்லும் போது, சிங்கள சமூகத்தின் வாக்குகளில் தங்கியிருக்கும் ஒருவர் தமது சமூகத்தின் சார்பாக நிற்பதாகக் காட்டிக் கொள்வதிலும் தவறில்லை.

எனவே, இங்கு சிந்தனை மாற்றம் பெற வேண்டியதும் தமது சிந்தனை வட்டத்தை பெருப்பித்துக் கொள்ள வேண்டியதும் மக்களே என்பது தெளிவு.

இவ்வாறான விடயங்கள் போக, இலங்கையைக் கைப்பற்ற வந்த போர்த்துக்கீயரை எதிர்த்துப் போராடியதிலும் இன்றளவிலும் தேசிய பாதுகாப்புத்துறையிலும் முஸ்லிம் சமூகம் பங்களித்து வருவதுடன் தேசிய அபிவிருத்தியிலும் பங்குதாரர்களாகவே இருந்து வருகிறது. எனவே, உணர்வு ரீதியான சிறு விடயங்கள் மூலம் இச்சமூகம் கட்டியெழுப்பி வரும் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் கெடுக்காமல் இருப்பதும் அனைவரினதும் கடமையாகும்.

டிசம்பர் மாதத்தில் பிரிகேடியர் பரீஸ் யூசுப் மேஜராகவும் கேர்ணல் அசாத் இசதீன் பிரிகேடியராகவும் இலங்கை இராணுவத்தில் பதவியுயர்வுகளைப் பெற்றிருந்தனர். என் பாடசாலைக் கால நண்பரான உஸ்மான் விடுதலைப்புலிகளின் 1991 ஆணையிறவு தாக்குதலில் உயிரிழந்தது முதல் இன்று வரை இராணுவம், பொலிஸ், கடற்படை, விமானப்படையென பாதுகாப்புத் துறைகளில் முஸ்லிம்களின் பங்களிப்பை அவதானித்து வருகிறேன். மாவனல்லையைச் சேர்ந்த கபார் ஏ.எஸ்.பியாக பதவியுயர்வு பெற்றுள்ளார், மேலும் எத்தனையோ பலர் அர்ப்பணிப்புடன் அனைத்து தரங்களிலும் தேசிய பாதுகாப்புப் பணியில் பங்காற்றி வருகின்றனர்.;  

ஜனவரியில் எம்.எம். முஹம்மத் தேர்தல் ஆணையாளராக பதவியுயர்வு பெற்றுள்ளார். இவ்வருடம் இரு முஸ்லிம் ஆளுனர்கள் நியமனம் பெற்றுள்ளனர். முஸ்லிம் அமைச்சர்களுக்கு தலைக்கு மேல் பொறுப்புகளும் பார்க்கும் இடமெல்லாம் அவர்களின் கீழுள்ள நிறுவனங்களின் பணிப்பாளர்களாக முஸ்லிம்களும் நிறைந்துள்ளனர். இவ்வாறு தேசமெங்கும் செழிப்புடன் திகழும் முஸ்லிம் சமூகம் அற்ப சொற்ப விடயங்களுக்காக ஒட்டு மொத்த சமூகத்தின் கௌரவத்தையும் கேள்விக்குட்படுத்துவதும் அதனடிப்படையில் இனவாதிகளுக்குத் தீனி போடுவதும் முறையன்று.

இது பற்றிய அறிவையும் தெளிவையும் மக்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் அதனைக் காலத்தின் கட்டாயமாகக் கருதிச் செயற்பட வேண்டும். ஆனாலும் எமது மார்க்க அறிஞர்கள் சம கால விடயங்களை மக்கள் மத்தியில் விவாதிப்பதை தவிர்த்து வேறு விடயங்களிலேயே கவனங்களை திசை திருப்பிக் கொண்டிருக்கின்றனர். நாட்டு நடப்பைத் தெளிவு படுத்தும் கடமைப்பாட்டுடன் மிம்பர்களில் ஏறினாலும் கூட மீண்டும் ஒவ்வொரு வருடமும் அதே அட்டவணைக்கேற்ப பிரசங்கங்களை மேற்கொண்டு வருகின்றனரே தவிர, சம கால தேவைகள் தேசிய உணர்வோடு பேசப்படுவதற்கான களமாக அவற்றை மாற்றிக் கொள்ள 'பெரும்பாலும்' தயக்கமுள்ளவர்களாகவே காணப்படுகின்றனர்.

அவ்வப்போது, இனவாதப் பிரச்சினைகள் வரும் போது மாத்திரம் நாம் இலங்கையர்கள் என பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் நாம் எப்போதும் இலங்கையர்களே எனும் அடிப்படையை அவ்வப்போதாவது எடுத்துச் சொல்லும் தேவை இச்சமூகத்தில் தொடர்ந்தும் காணப்படுகிறது. அதன் கடமைப்பாடு அனைவருக்கும் உண்டு. 

அவ்வப்போது சுய விமர்சனம் செய்து கொள்வதால் இச்சமூகத்துக்கு எவ்வித குறையும் வரப்போவதில்லை. மாறாக, தொடர்ச்சியான சுய விமர்சனச் செயற்பாடு இச்சமூகத்தை மேலும் மேம்படுத்தும். பல நூற்றாண்டு காலங்களாகக் கட்டியெழுப்பப்பட்ட நன்மதிப்பும் கௌரவமும் மேலும் உயரும்.

எகிப்து - ஈரான் - சவுதி அரேபியா – கட்டார் - இந்தியா – பாகிஸ்தானில் நடக்கும் உள்நாட்டு அரசியல் விவகாரத்தின் பால் அக்கறையை அதிகரித்து, இலங்கை முஸ்லிம்கள் தம் பூர்வீக பூமியோடு ஒன்றி வாழ்வதைத் திசை திருப்பும் Nபுழுக்கள் கொள்கை இயக்கங்களை ஒதுக்கி வைக்க வேண்டும்.
சிறுபான்மை சமூகமாகவும் - சமவுரிமையுள்ள குடிகளாகவும் - கௌரவ பிரஜைகளாகவும் அதேவேளை முஸ்லிம்களாகவும் வாழ்வது எப்படி? என்பதன் அடிப்படையில் செயற்திட்டங்களை அமைத்து இளைய சமுதாயத்துக்கு வழி காட்ட வேண்டும். 

இப்போது மாத்திரமல்ல எப்போது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டாலும் அதில் எம் முன்னோர் பங்கு மறைக்கவோ மறுக்கவோ முடியாதது. அதுபோலவே, இன்றைய கால கட்டத்தில் நாம் செய்யும் பங்களிப்பும் எதிர்கால சந்ததியினரால் போற்றப்படக் கூடிய அளவில் முஸ்லிம்களாக வாழ்வது நமது கடமையாகும்!


-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment