கண்டி: இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்க நிகழ்வு - sonakar.com

Post Top Ad

Monday 25 February 2019

கண்டி: இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்க நிகழ்வு


இலங்கையின் கூட்டுறவுத் துறையில் இளைஞர்களின் ஈடுபாடு மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. சர்வதேச கூட்டுறவுத் துறையை எடுத்துக் கொண்டால் இளைஞர்கள் ஆரோக்கியமான பங்களிப்பைச் செய்வதை நாங்கள் காணுகின்றோம். வர்த்தக கைத்தொழில் மற்றும் நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலுடன் இலங்கையில் கூட்டுறவு வியாபாரத்தை இலங்கையில் பலப்படுத்துவதற்கும் கூட்டுறவுத் துறை ஊடாக இளைஞர்களைச் சக்திப்படுத்துவதற்கும் இளைஞர் வலுவூட்டல் கூட்டறவு சங்கத்தின் மூலம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அந்த வகையில் நவீன முறையில் நுகவோர்களின் நலன்கருதி  1000 கூட்டுறவுக் கடைகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். 


அதேவேளை  இம்முறை  இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் சர்வதேச இளைஞர் கூட்டுறவு  மாநாடு நடாத்த அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. எதிர்வரும் ஜுலை மாதத்தில் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தலைமையில் ஐந்து நாட்கள் வரகாப்பொல பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது. இதில்110 நாடுகள் கலந்து கொள்ளவுள்ளன என்று  இலங்கை கூட்டுறவுத் திணைக்களத்தின்  பதில் ஆணையாளரும் வர்த்தக கைத்தொழில் மற்றும் நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் எஸ். எல். நஷீர் தெரிவித்தார்.

இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் கண்டி மாவட்டத்திலுள்ள இளைஞர்களுக்கான கூட்றவு துறை தொடர்பாக விளக்கமளிக்கும் மாநாடு பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ மண்டபத்தில் இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கத்தின் தவிசாளர் எம். எஸ். முஹமட் ரியாஸ் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இலங்கை கூட்டுறவுத் திணைக்களத்தின்  பதில் ஆணையாளரும் வர்த்தக கைத்தொழில் மற்றும் நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் எஸ். எல். நஷீர் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், இலங்கையின் கூட்டுறவுத் துறையை எடுத்துக் கொண்டால்  அது நூறு வருடத்தைக்  கடந்த வரலாற்றைக் கொண்டு இருக்கின்றது. எனினும் வேறு நாடுகளில் கூட்டுறவுத் துறையானது 50 அல்லது  60  வருடங்களைத்தான் கடந்து இருக்கிறது . அந்நாடுகளில் அது பற்றி சரியாக விளங்கிக் கொண்டு முன்னேற்றப் பாதையில் சிறந்த  பொருளாதார ரீதியில் வெற்றி இலக்கை அடைந்துள்ளனர். அந்த நிலையை இலங்கiயில் காண முடியாதுள்ளது.   கூட்டுறவுத் துறையில் நல்ல  கொள்கைகள் உள்ளன.  இதில் இன, மத, கட்சி வேறுபாடுகளின்றி எல்லோரும் ஒன்றிணைந்து சேவையாற்ற முடியும். 

இலங்கை கூட்டுறவுத் துறை சர்வதேச ரீதியில் பின்னடைவுகளைச் சந்தித்து இருந்தாலும் ஏனைய சமூகங்கள் இந்தக் கூட்டுறவுத துறை ஊடாகப் பல்வேறு நன்மைகளைப் பெற்று இருக்கின்றது. காலியில் கூட்டுறவுமத் துறையைப் பார்த்தால் தெற்காசியாவிலே  ஆகக் குறைந்த விலையில் இருதய சத்திர சிகிச்சையைச் செய்கின்ற கூட்டுறவுத் துறை இருந்து கொண்டு இருக்கிறது. அவ்வாறே குருநாகலில் உள்ள வைத்தியசாலை மிகவும் வெற்றிகரமாக செயற்படுகிறது. 

எனவே எமது இந்த  வேலைத் திட்டங்களில் கவனத்தில் கொள்ளாதவர்களையும் ஒன்றிணைத்து செயற்படுவதற்காகவே இளம் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றோம். இந்த கூட்டுறவுத் துறையில் எந்த வகையிலான முதலீடுகளை மேற்கொள்ளவும் எல்லா சமூகத்தினரையும் ஈடுபத்தவும் தான் இதனை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இளைஞர்கள் எந்த துறையிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.  இலங்கையில் 14028 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகள் இருக்கின்றன. 5000 கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் நுகர்வோர் கூட்டுறவுக் கடை அமைப்பதற்கு விசேடமான கலந்துரையாடல் நடத்தினோம்.  அது சாத்தியமாகாது என்ற யோசனையில் அடிப்படையில் 1000 கிராமங்களைத் தெரிவு செய்து நுகவோர் கூட்டுறவுக் கடைகளை திறப்புதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்.  இந்த செயற் திட்டத்தின் தலைவர் சகோதரர் ரியாஸின் பங்களிப்பு அளப்பரியது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ் விரிவுரையாளர் கலாநிதி அஸீஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கண்டி மாவட்ட அமைப்பாளர் அம்ஜாத்,  அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாத் ரஹ்மத்துல்லா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கண்டி மாவட்ட அமைச்சரின் இணைப்பதிகாரி ரியாஸ் இஸ்ஸதீன், நுகர்வோர் அதிகார சபையின் தலைவர்  ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான முஷ்ஷரவ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

-இக்பால் அலி 


No comments:

Post a Comment