மறக்கப்பட்ட யாழ் முஸ்லிம்கள்: ஒரு பயண அனுபவம்! - sonakar.com

Post Top Ad

Sunday 17 February 2019

மறக்கப்பட்ட யாழ் முஸ்லிம்கள்: ஒரு பயண அனுபவம்!

 

வியாபாரத்தில் ஊர் ஊராக செல்வோர் தவிர பெரும்பாலானோருக்கு 1990 வரை யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்பதே மறந்து போன காலமாக யுத்த காலம் இருந்தது. தமிழீழத்துக்கான ஆயுதப் போராட்டம் முன்னெக்கப்பட்டிருந்த நிலையில் முஸ்லிம்கள் தம்மில் ஒரு பகுதியில்லையென முடிவெடுத்த விடுதலைப் புலிகள் யாழ்; மற்றும் வடபுலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை 24 மணி நேரத்துக்குள் தம் பூர்வீக நிலங்களை விட்டு விரட்டியிருந்தனர்.



தற்கால மத்திய வயதுடைய பலருக்கு 1990 ஒக்டோபரில் இடம்பெற்ற இந்நிகழ்வே வடபுலத்தில், குறிப்பாக யாழ்;ப்பாணத்தில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என நினைவூட்டியது. அங்கிருந்து உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட இச்சமூகத்தின் நிலை பற்றி அண்மைக்காலமாக சற்றே விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும் அதன் தாக்கம் போதிய அளவு இல்லையென்பதே எனது கணிப்பு.

ஓமந்தை, மீசாலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற பெயர்களை சிறு வயதில் கேள்வியுற்றிருந்தாலும் ஒரு தடவையேனும் வடபுலத்துக்குச் செல்லும் வாய்ப்பு அப்போது கிட்டியிருக்கவில்லை.


ஈற்றில், 2018 ஒக்டோபரில் நெதர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சும் சுவிட்சர்லாந்து, சூரிக் பல்கலைக்கழகமும் இணைந்து, யுத்தத்துககுப் பின்னான இலங்கையின் அபிவிருத்தியில் புலம்பெயர்ந்து வாழும் சமூகங்களின் பங்களிப்பு எனும் தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் ஆய்வாளராகப் பங்கேற்கச் சென்றிருந்த வேளையில், நவம்பர் 1ம் திகதி நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றி, தகவல் தேடும் ஆய்வுப் பயணமாக யாழ் செல்லக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் லண்டனில் எனக்கு நெருக்கமான தமிழ் சமூகத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் வீட்டிலேயே நானும் என்னை அங்கு அழைத்துச் சென்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் மஹ்ரூப் ஏ. காதர் மற்றும் நண்பர் ரமலியும் தங்கியிருந்தோம். ஆனாலும் எப்போது யாழ் சோனகத் தெருவுக்குச் செல்வோம் என்ற எண்ணமே மேலோங்கியிருந்த நிலையில் தங்குமிடம் சென்று அடுத்த அரை மணி நேரத்துக்குள் அங்கு சென்று விட்டோம்.

மனதுக்குள் ஒரு இனம்புரியாத சோகமும் எதிர்பார்ப்பும் இழையோடிக் கொண்டிருந்த நிலையில் அங்கு சென்ற இப்பயணம் Sri Lanka’s internally displaced people: The case study of Jaffna Muslims என்ற தலைப்பிலான எனது ஆய்வறிக்கையின் அடிப்படையிலானது. எனவே, யாரெல்லாம் நான் தேடும் தகவல்களைத் தருவார்களோ அவர்களையெல்லாம் எங்கு சென்று வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராகவே இருந்தேன். எனினும், என்னை அழைத்துச் சென்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் உதவியால் தேவையானவர்களை சந்திப்பது மிகவும் இலகுவாகவும் விரைவாகவும் நடந்தேறியது.

இரண்டு தேடு தளங்களை நான் எதிர்பார்த்துச் சென்றிருந்தேன். ஒன்று, அங்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், அதில் எதிர்நோக்கும் சிக்கல்கள், சவால்கள் மற்றும் 90க்கு முற்பட்ட வாழ்வியல் நிலவரங்களை அறிந்து கொள்ளுதல். மற்றையது, யாழ்; முஸ்லிம்களின் இன்றைய கல்வி நிலை.


எனவே, யாழ்;. ஓஸ்மானியா கல்லூரிக்கான விஜயம் கட்டாயமானதும், முக்கியமானதுமாக இருந்தது. இப்பின்னணியில் அஸர் தொழுகையையடுத்து அங்கு சென்று, தற்போதைய கல்லூரி அதிபருடன் நீண்ட அளவளாவலில் ஈடுபட்டு, பாடசாலை சூழ்நிலை மற்றும் சமூகத்தின் கல்வித்துறை மீதான அக்கறை, கட்டமைப்பு போன்ற பல்வேறு விபரங்களைத் திரட்ட முடிந்தது.

அதிபர் எம். சேகு ராஜீதுடனான சந்திப்பு சுவாரஸ்யமாக இருந்தது மாத்திரமன்றி எனக்குள் பல கேள்விக்கணைகள் ஆச்சரியங்களையும் உருவாக்கியது. முதலில் அன்னாரிடம் காணப்படும் அதீத ஆர்வம் என்னை வியக்க வைத்தது. அரசாங்க ஊதியம் பெறும் ஒரு அதிபர் என்ற வரையறைக்கு அப்பால், சமூகத்தின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என அவரிடம் பிரதிபலித்த நல்லெண்ணமும் அதன் மீதான நாட்டமும், குறிப்பாக மீள் குடியேறிக்கொண்டிருக்கும் யாழ்;ப்பாண முஸ்லிம்களின் இன்றைய தலைமுறையினர் மத்தியில் கல்வி மீதான அக்கறையை வளர்ப்பதில் அவர் காட்டும் அக்கறையும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. 


'இறைவா இன்றைய என்னுடைய சம்பளத்தை பாவப்பட்டதாக ஆக்கி விடாதே' என்று கல்லூரி வாசலில் ஒட்டப்பட்டிருந்த வாசகம் அவரின் நடவடிக்கைகள் மீதான ஈர்ப்பை இன்னும் அதிகரித்தது. அங்கிருக்கும் ஆசிரியர்கள் தம் கடமையுணர்ந்து செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்த சிரத்தையுடன் அவர் மேற்கொண்ட முயற்சிகளுள் ஒன்றாகவே இவ்வாறான நடவடிக்கைகளைக் காணக்கூடியதாக இருந்தது. 

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு அவர் வகுத்திருந்த திட்டங்கள் பற்றியும் விளக்கிய போது, அதையும் தாண்டி ஏனைய வகுப்புகளில் மாணவர்களின் கல்வி மீதான அக்கறையும் பெற்றோரின் ஒத்துழைப்பும் எவ்வாறு இருக்கிறது என அறிய விரும்பிய என் கேள்விகளுக்கும் அவர் நிறைவாக பதிலளித்தார். 

ஆயினும், அவற்றைக் கொண்டு யாழ் முஸ்லிம் சமூகம் கல்வியில் அபிவிருத்தி காண்கிறது என நிறைவடையும் திருப்தி உருவாகவில்லையென்பது என் அனுபவத்தின் சாராம்சம்.

ஏன்? என்ற கேள்விக்கு பல விடைகள் உண்டு. பெற்றோர் மற்றும் சமூகத்தின் ஈடுபாட்டிலிருந்து இதனை ஆரம்பித்தாக வேண்டும். 

பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளில் யாழ்;ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்கள் சில நூறுகளிலாவது வாழ்கிறார்கள். சில வருடங்களாகவே தம்மை அமைப்பு ரீதியாகப் பலப்படுத்தி இவர்கள் இயங்கி வருவதோடு, தம் மண்ணின் சமூக அபிவிருத்திக்காக பல பணிகளை செய்து வருகிறார்கள். அதில் தொடர்புபட்ட பலர் எனக்கு அறிமுகமானவர்கள். அவர்கள் மூலமும் பல விடயங்களை நான் ஏலவே அறிந்து வைத்திருக்கிறேன்.

யாழ் மண்ணில் நிரந்தரமாகத் தங்கியிருந்து பாடசாலை அபிவிருத்திக்காகப் பாடு படும் ஒரு அன்பரையும் சந்திக்க நேர்ந்தது. இவ்வாறு பல கோணங்களில் பெற்ற தகவல்கள், அனுபவங்களோடு ஒப்பிட்டே ஒஸ்மானியா அதிபரின் நடவடிக்கைகளை அளவிட முடிந்தது. எனவே, சமூகம் அவரது கரத்தைப் பலப்படுத்தாது தனி மனிதராக அவரால் எத்தனை தூரம் இழுத்துச் செல்ல முடியும்? என்ற கேள்வி எழாமலும் இல்லை.
15 முதல் 20 வயதுக்கிடைப்பட்ட காலத்தில் இவன் உழைப்பதே எனக்கு, அதன் பின் அவன் மனைவிக்குத்தான் என்ற மனப்பாங்கு உள்ள பெற்றோர்களால் குழந்தைகளுக்கு க.பொ.த சாதாரண தரம் மீதான அக்கறையைக் கூட அதிகரிக்க முடியுமா என்ற கேள்வியிருக்க, உயர்தரக் கல்வி இன்னும் கேள்விக்குறியாகிறது. எனவே, யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் கட்டமைப்பை இன்னும் ஆழமாக அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்தது. 

இரவிரவாகப் பலரை சந்தித்து உரையாடிய அதேவேளை பிரதேசத்தின் அரசியல் முக்கியஸ்தர்கள் (அவ்வேளையில் ஊரில் இருக்காத) சிலருடன் தொலைபேசியூடாகவும் உரையாடியிருந்தேன். 9ம் தரத்தில் கல்வி கற்கும் அதே மாணவர் எண்ணிக்கையை 10ம் தரத்தில் பெற முடிந்தால் அதுவே சாதனையாக அமையும் என்ற ரீதியில் அன்று கருத்துப் பரிமாறப்பட்டிருந்தது. 9ம் தரத்தில் 27 மாணவர்கள் இருந்த போதிலும் 10ம் தரத்துக்கு அதில் அரைப்பங்கு கூட தேறாத நிலை பற்றியறிந்தது கவலையைத் தந்தது.

எனினும், இவ்வருடம் (2019) க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இவ்வாரம் கேள்வியுற்றது மன மகிழ்ச்சியைத் தருகிறது.


இத்தனை போராட்டங்களைத் தாண்டி, ஒஸ்மானியாவில் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் இருக்கும் ஆசிரியர்களிடம் மேலதிக பளுவைச் சுமத்தியாவது மாணவர்களின் கல்வித் தரத்;தை உயர்த்த வேண்டும் என தற்போதைய அதிபர் மேற்கொள்ளும் முயற்சிகளை பாராட்டாமல் இருக்க முடியாது. அதேவேளை, குறுகிய கால எதிர்பார்ப்புகளை விட நீண்ட கால அடிப்படையில் கல்வியபிவிருத்தியைத் திட்டமிடும் அவசியம் இருப்பதாக நான் உணர்ந்ததையும் அங்கு சுட்டிக் காட்டத் தவறிவில்லை.

எனினும், இவ்வாறான பணிகளுக்கு அரச ஊதியத்துக்கப்பால் ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்பும், இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் ஊக்குவிப்புத் தொகையும் கூட அவசியப்படுவதை உணர முடிந்தது. அதிபர் தன் வரையறைக்கப்பால் செயற்படுகிறார் என்பதற்காக அனைத்து ஆசிரியர்களிடமும் அந்த அர்ப்பணிப்பை எதிர்பார்க்க முடியாது என்பதே யதார்த்தம். இந்நிலையில், குழந்தைகளுக்கு மேலதிக வகுப்புகள் மற்றும் செயற்பாடுகளை வழங்க பாரிய திட்டங்கள் அவசியப்படுகிறது.

எனக்கு ஏற்பட்ட தனி மனித ஆர்வத்தின் அடிப்படையில் நீண்ட கால செயற்பாட்டைக் கருத்திற் கொண்டு முதல் 12 மாத காலத்துக்கு என நான் முன் வைத்திருந்த சிறு பரீட்சார்த்த முயற்சித் திட்டம் முழுமையாக விளங்கிக் கொள்ளப்படவில்லையோ என்னவோ, இதுவரை எனக்கு அது குறித்த சாதகமான பதில் கிடைக்கப் பெறவில்லை. அங்குள்ள தேவைகளின் காரணமும் பார்வைக் கோணமும் மாறுபடுதல் அதற்கான காரணமாக இருக்கலாம். ஆயினும், ஏதோ ஒரு வகையில் அங்கு நீண்ட கால கல்வியபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியதும் சமூகக் கட்டமைப்பை மீள உருவாக்கும் தேவையும் வெகுவாக உணரப்பட்ட விடயங்களாகும்.

அஸர் தொழுகையை யாழ் சின்னப் பள்ளிவாசலில் தொழுதிருந்தோம். அன்றைய தினம் என்னோடு வந்திருந்த இருவர் மற்றும் இமாம் உள்ளடங்கலாக ஜமாத்தில் ஏழு பேர் இணைந்திருந்தோம். இது அங்குள்ள சமூகத்தைப் பற்றி இன்னும் அறிய வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குள் அதிகரித்தது. ஈற்றில் யாழில் 16 - 23 பள்ளிவாசல்கள் இருப்பதாக அறியக் கிடைத்தது. ஆயினும் 23 பள்ளிவாசல்களிலும் தொழுவதற்கான சமூகம் மீளவும் குடியேறிவிட்டதா எனும் கேள்விக்கு இல்லையென்பதே பதிலாக அமைந்தது. அத்துடன் ஒரு காலத்தில் சோனகத் தெரு பகுதியில் 100 வீதம் முஸ்லிம்களே வாழ்ந்திருந்த போதிலும் தற்சமயம் அது 5 வீதமளவே இருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.


இப்பின்னணியில் தற்சமயம் மீளக்குடியேறியுள்ளவர்களின் வாழ்வியல் மற்றும் சமூக சூழ்நிலை பற்றி அறிந்து கொள்ள மேலதிக தேடலில் ஈடுபட்ட போது அங்கு நிலவும் அரசியல் வெறுமையும் போட்டியும் இன்னும் ஆரோக்கியமான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு பக்க பலமாக இல்லையென்பதையும் உணர முடிந்தது.

குறிப்பாக, மீள் குடியேற்ற சவால்கள் பற்றி இரவிரவாக பலரிடம் உரையாடிய போது, தாம் 'முஸ்லிம்கள்' என்ற காரணத்திற்காகவே புறக்கணிப்புக்குள்ளாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன. 

யாழில் மீளக் குடியேற அரசினால் வழங்கப்படும் சிறு உதவித் தொகையைப் பெறுவதற்குக் கூட, மீண்டும் குடும்பத்தோடு அங்கு குடியேறி, பிள்ளைகளை யாழில் பாடசாலைக்கு அனுப்பி, வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருப்பதாகவும், அதையும் செய்து காட்டினாலும், சிதைக்கப்பட்ட வீடுகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்க செயலகம் சக்திக்கு மீறிய நிபந்தனைகளை விதித்து சலிக்கச் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டதுடன் அவற்றுக்கான ஆதாரமாக ஆவணங்களும் காட்டப்பட்டன. 

இடைப்பட்ட காலத்தில் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்களுக்கு மதிப்பில்லாத அதேவேளை கெடுபிடிகளுக்கு மத்தியில் வீட்டுத் திட்ட வரைபை (plan) எட்டுத் தடவைகள் மாற்ற வேண்டியேற்பட்ட அனுபவத்தையும் செவிமடுக்க நேரிட்டது.

இவ்வாறு பல குற்றச்சாட்டுகளை தனித்தனி நபர்கள் தெரிவித்திருந்த போது, இவற்றிற்கு எதிராகப் போராடக்கூடிய பொது அமைப்பொன்று இல்லாதது எனது பார்வையில் குறையாகத் தென்பட்டது. அவரவர் பிரச்சினையை அவரவர் தமக்குத் தெரிந்த வழிகளில் எதிர்கொள்கிறார்கள் என்பதையே உணர முடிந்தது. எனினும், இந்த நிலைப்பாட்டோடு மீண்டும் லண்டன் திரும்பியிருந்த நிலையில், யாழ் மாநகர சபையின் முஸ்லிம் அரசியல் பிரதிநிதியொருவர், யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேற முஸ்லிம்கள் மத்தியில் ஆர்வம் போதாது என அறிக்கை வெளியிட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.

அவர் எதை வைத்து அப்படிச் சொல்கிறார்? ஏன்பதை ஆராய்வதை விட நான் நேரடியாகக் கண்டு – உரையாடிய மக்களின் ஆதங்கம் மேலோங்கியிருப்பதால் இருக்கும் சமூகமும் அரசியல் ரீதியாக பிளவுண்டிருப்பதையும் வழமை போன்று முஸ்லிம் அரசியல் சக்திகளின் ஆதரவு அடிப்படையில் அபிப்பிராய பேதங்கள் காணப்படுவதையும் கூட உணர முடிந்தது.


யாழ்ப்பாணத்தை விட்டு, வெளியேற முன்பதாக பெரும்பாலான பள்ளிவாசல்களையும் முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகளையும், மீள் குடியேற்றப் பகுதிகளையும், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் சிலவற்றையும் நேரில் பார்த்திருந்தேன். அரபுக் கல்லூரி ஆரம்பிக்கவென கட்டியெழுப்பப்பட்டு சிக்கலாகி மூடிக் கிடக்கும் 'கட்டிடத்தையும்' பார்க்க விளைந்தேன். நேற்று முன் தினம் 15ம் திகதி யாழ் நகரின் முதலாவது அரபுக் கல்லூரியாக குறித்த இடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அவ்வப்போது யாழ்ப்பாணத்திலிருந்து பிரசுரத்துக்காக வரும் செய்திகளும், அதைக்கொண்ட என் கணிப்புகளும் ஒட்டுமொத்தமாக பொய்த்துப் போனதாகவே நேரடி விஜயம் அமைந்திருந்தது. 

எனவே, உங்கள் பிரச்சினைகளை ஒன்றிணைந்து வெளியில் கொண்டு செல்லாது தனித்தனியாக போராடிக் கொண்டிருக்கிறீர்களே? என பாதிக்கப்பட்ட ஒருவரிடம் கேள்வியெழுப்பிய போது, வெளியில் உள்ள முஸ்லிம்கள் எங்களுக்கு உதவுவார்களா? என அவர் திருப்பிக் கேட்டிருந்தமை என்னை வெகுவாகப் பாதித்தது.

அந்த அளவுக்கு யாழ் முஸ்லிம்களுக்கும் நாட்டின் ஏனைய பகுதியில் வாழும் முஸ்லிம்களுக்குமிடையிலான தொடர்பறுந்து போயிருந்ததாக மனது வேதனைப்பட்டது. அதற்கு யார் பொறுப்பென்று தெரியவில்லை. ஆனால், அடுத்து புத்தளம் சென்றிருந்த போது அங்கு இடம்பெயர்ந்து வாழும் மக்கள் பற்றியும் ஒரு கட்டத்தில் உரையாடப்பட்டிருந்தது. அதன் போது, யாழ்; முஸ்லிம்கள் பெரும்பாலும் சுய முயற்சியூடாக தமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளவே விரும்பியதாகவும் அபிப்பிராயம் வெளியிடப்பட்டிருந்தது. 


வை.எம்.எம்.ஏ உட்பட உள்ளுர் அரசியல் பிரமுகர்களின் முயற்;சி, மற்றும் புலம் பெயர்ந்து வாழ் யாழ்; முஸ்லிம் சமூக அமைப்புகளின் உதவிகள் என தற்சமயம் கிடைக்கப் பெற்றுக்கொண்டிருக்கும் விடயங்கள் இன்றைய யாழ்; முஸ்லிம் சமூகத்தின் மனத்திடத்தை அதிகரிக்கவும் உற்சாகமளிக்கவும் போதியதாக இல்லையென்பதே எனது அனுபவத்தின் வாசிப்பாக அமைந்தது. 

இதற்கேற்ப, விடுதலைப்புலிகளினால் அனைத்து சொத்துக்களும் அபகரிக்கப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டு, விரட்டியடிக்கப்பட்ட போதிலும் தற்போது வவுனியாவில் செல்வச்; செழிப்புடன் வாழும் ஒரு வர்த்தகர், தனக்கு மீண்டும் யாழ்; செல்லும் அளவுக்கு நம்பிக்கை வரவில்லையென தெரிவித்திருந்தார். யாழ்; நகர்ப்பகுதியில் தனக்குச் சொந்தமான வர்த்தக கட்டிடத்தை மீளக்கட்டியும் அதனை மூடி வைத்திருப்பதாகவே தெரிவித்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது குடியிருப்போரிடமும் ஒரு வகையில் இந்த அச்ச உணர்வு மேலோங்கியிருந்ததோடு தமக்கெதிரான ஆபத்து முழுமையாக நீங்கி, நல்லுறவும் இன ஐக்கியமும் முழுமையாகக் கட்டியெழுப்பப் படவில்லையெனும் எண்ணப்பாடும் காணப்படுகிறது.

வெளியிடங்களில் சென்று குடியேறிய யாழ் முஸ்லிம் சமூகம் மீளக்குடியேறுவதில் தயக்கம் காட்டுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கின்ற அதேவேளை, நியாயபூர்வமான ஒத்துழைப்பு அரச மட்டத்திலிருந்து கிடைக்கவில்லையென்பதும் மக்கள் மத்தியில் நிலவும் குறைபாடாக இருக்கிறது. 


தமக்கு நேர்ந்த அநீதியை முஸ்லிம் அமைச்சர் ஒருவரைக் கொண்டு சமாளித்ததாகவும் இன்னொரு நபர் தெரிவித்திருந்தார். எனினும், அவர் போன்று எல்லோருக்கும் அரசியல் தொடர்பில்லையென்பதால் ஏனையோர் தனித்து நின்றே தாம் எதிர்நோக்கும் சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

சமூகத்துக்காக பேச வேண்டும், ஆனால் அதிகம் 'சத்தம்' போட முடியாத அளவுக்கு அச்சமும் இருக்கிறது என துடிப்பான இளைஞர்கள் கூறிய போது மூன்று தசாப்த இடைவெளியின் பின்னும் இன்னும் அவர்களை வாட்டி வதைக்கும் வலியின் ஆழம் புரிந்தது. இதற்கு வெளியிலிருக்கும் முஸ்லிம் சமூகம் என்ன தீர்வளிக்கப் போகிறது? யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்தவும், நம்பிக்கையை வளர்க்கவும் எவ்வகையில் ஒத்துழைக்கப் போகிறது? போன்ற கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

நான் இங்கு முன் வைத்திருப்பது வெறும் மேலோட்டமான பார்வையே, சாமான்யர்கள் தினந்தோறும் சந்திக்கும், பொருளாதார, வாழ்வியல் பிரச்சினைகளையும் அவை குழந்தைகளின் கல்வி மற்றும் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் விபரங்களும் , தனியாக ஆராயப்பட வேண்டிய ஆழமான விடயங்கள் என்பதால் அவை இப்பதிவில் பேசப்படவில்லை. ஆனாலும் இன்றைய யாழ் முஸ்லிம் சமூகத்தை ஆட்டிப்படைக்கும் முக்கிய சமூகப் பிரச்சினைகளுள் அவை பிரதானமானவையென்பதை சுட்டிக்காட்டியாக வேண்டும்.

இந்நிலையில், யுத்த கால வடுக்களோடு மெல்லத் துளிர்விடும் யாழ்; முஸ்லிம் சமூகம் சார்ந்தோரும் சாராதோரும் மீண்டும் யாழ் முஸ்லிம் சமூகத்தினைக் கட்டியெழுப்புவதில் பங்களிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

2ld3lJX

-இர்பான் இக்பால்
பிரதம ஆசிரியர், சோனகர்.கொம் 

1 comment:

saleem mohideen said...

யாழ் முஸ்லிம் என்ற வகையில் தங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். மீள் குடியேற்றம் என்பது அரச பலத்தில் செயல்படுத்த வேண்டும் என்பது சிறந்தது அல்ல தமிழ் மக்களின் மனதில் மீளவும் உள்ளிடவேண்டும்.புலிகளால் ஏற்படுத்தபட்ட சந்தேக உணர்வுகள் சீர் செய்ய பட வேண்டும்.

Post a Comment