ஓட்டமாவடி சர்ச்சை: நாளை பிரதேச சபையில் தீர்மானம் - sonakar.com

Post Top Ad

Monday 18 February 2019

ஓட்டமாவடி சர்ச்சை: நாளை பிரதேச சபையில் தீர்மானம்


ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் மீறாவோடையில் நடாத்தப்படும் வாராந்த சந்தையினால் ஓட்டமாவடி வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதை கண்டித்து ஓட்டமாவடி வர்த்தகர்கள் கடையடைப்பு செய்து கவணஈர்ப்பு பேரணியை இன்று (18.02.2019) திங்கட்கிழமை நடாத்தினர். 

மீறாவோடையில் நடாத்தப்படும் வாராந்த சந்தையால் பாதிக்கப்பட்;டுள்ள ஓட்டமாவடி வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் கடைகள் பூட்டப்பட்டு ஓட்டமாவடி சந்தையில் இருந்து ஆரம்பமான பேரணி ஓட்டமாவடி பிரதான வீதி வழியாக ஓட்டமாவடி பிரதேச சபையை சென்றடைந்தது. 

இதன்போது தரம் குறைந்த பொருட்கள் எமக்கு வேண்டாம், வாராந்த சந்தையை நாளாந்த சந்தையாக மாற்றும் வரை போராடுவோம், உடன்படிக்கை செய்து விட்டு நயவஞ்சகம் செய்யாதே வாக்கை காப்பாற்று, சமூகத்தின் முதுகெழும்பே வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்காதே என்ற வாசங்கள் அடங்கிய பதாதைகளுடன் பேரணியில் கலந்து கொண்டோர் ஏந்தி வந்தனர். 

ஓட்டமாவடி பிரதேச சபையை சென்றடைந்த வர்த்தகர்கள் பிரதேச சபை நுழைவாயிலை பூட்டி சபை முன்பாக அமர்ந்து போராட்டத்தினை மேற்கொண்டனர். அவ்விடத்திற்கு வருகை தந்த தவிசாளரை உள்ளே விடாது அவரது வாகனத்தை தடுக்க முற்பட்ட போது அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்படடது. 

அவ்விடத்திற்கு வருகை தந்த பிரதேச சபை உறுப்பினர்களும் வர்த்தகர்களுடன் பேசி தவிசாளரை உள்ளே அனுப்பி தீர்க்கமான முடிவை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரியும் வர்த்தகர்கள் அதற்கு இடம் வழங்காததால் தவிசாளர் திரும்பிச்சென்றார்.





அதன்பிற்பாடு பிரதேச சபை உறுப்பினர்களும் வர்த்தகர்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்ற போது வாழைச்சேனை பொலிஸார் அதனை தடுக்க முற்பட்டனர். பொலிஸாரை பொறுப்படுத்தாது வர்த்தகர்கள் பிரதான வீதியினை மறிந்து அமர்ந்து போக்குவரத்து தடையை ஏற்படுத்தினர். 

போக்குவரத்துக்கு தடையை ஏற்படுத்திய வர்த்தகர்களை அகற்ற பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்ட போது பொலிஸாருக்கும் வர்த்தகர்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்ற நிலையில் வர்த்தகர்களை பொலிஸார் வீதியில் இருந்து அகற்றினர்.

இறுதியில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி சபைக்குள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டதுடன் அவரது தலைமையில் உப தவிசாளர், சபை உறுப்பினர்கள், சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் உட்பட்ட வர்த்தகர்கள் சிலருடன் சபை கேட்போர் கூட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வர்த்தகர்கலாள் முன்வைக்கப்பட்ட கோறிக்கை அடங்கிய மகஜரை பெற்றுக்கொண்ட தவிசாளர் நாளை செவ்வாய்க்கிழமை சபை உறுப்பினர்களின் விஷேட கூட்டம் நடைபெற்று அதில் எடுக்கப்படும் தீர்மாணத்தை தெரிவிப்பது என்று அறிவிக்கப்பட்டதையடுத்து வர்த்தகர்கள் சபையை விட்டு கலைந்து சென்றனர்.

கடந்த எழு மாத காலமாக மீறாவோடை ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினரால் நடாத்தப்பட்டு வரும் வாராந்த சந்தை காரணமாக உள்ளுர் வியாபாரிகள் மொத்த வியாபாரிகள் நடமாடும் வியாபாரிகள் என அனைத்து வியாபாரிகளும் பெரும் பாதிப்புக்கும் நஷ்டத்திற்கும் உள்ளாகியுள்ளதை கருத்தில் கொண்டு ஓட்டமாவடி வர்த்தக சங்கம் பல முயற்சியை செய்து ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாயல், மீறாவோடை ஜும்ஆ பள்ளிவாயல் கல்குடா உலமாக சபை, பிரதேச சபை என அனைத்து தரப்பினருடன் பேசி பலமுறை கலந்துரையாடல்களை செய்து ஊரின் ஒற்றுமையை கருதி மீறாவோடை ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினருடன் பல விட்டுக் கொடுப்புக்களை  செய்து நான்கு மாத காலத்திற்குள் வாராந்த சந்தையை நிறுத்துவது எனவும், அதன் பிறகு தொடர்ச்சியாக நாளாந்த சந்தை நடைபெறும் எனவும் முடிவு காணப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்டது.

ஆனால் மீறாவோடை ஜும்ஆ பள்ளிவாயல் ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்தும் வாராந்த சந்தையை  நடாத்தி வருகின்றனர். எனவே உடனடியாக வாராந்த சந்தையை நிறுத்தி நாளாந்த சந்தையாக மாற்றி கைச்சாத்திட்ட உடன்படிக்கையை நிறைவேற்றுமாறு வர்த்தகர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

-அனா

No comments:

Post a Comment