ரமழான் மாதத்தின் சிறப்பம்சங்கள் - sonakar.com

Post Top Ad

Saturday 26 May 2018

ரமழான் மாதத்தின் சிறப்பம்சங்கள்


இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாகிய  ரமளான்  மாத நோன்பினை உலகில் வாழும் சகல முஸ்லிம்களும்  நோற்று அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேறிக் கொண்டிருக்கின்றார்கள் . 

இம்மாதத்தில் நோன்பு நோற்பது சகலர் மீதும் உள்ள கடமையாகும்.


ரமளான் மாதம்    ஏனைய மாதங்களை விட பல அம்சங்களைக்  கொண்டு சிறப்புற்று விளங்குகின்றது . அல்லாஹ் எமக்கு அளித்திருக்கும் இப்பெறுமதிமிக்க ரமளானின் சில சிறப்பம்சங்களை விளங்கி செயற்படும் போது அதன் பயனை முழுமையாக பெற அல்லாஹ் எமக்கு  துணைபுரிவான்.

ரமளானில்  மேற்கொள்ளப்படும்  ஒவ்வொரு செயற்பாடும் மிகப்  பெறுமதியானதும் இரட்டிப்பானதுமான நன்மையினை அல்லாஹ்விடத்தில் பெற்றுத்  தரக்கூடியவையாகும்.  படிப்பினைக் காக பின்வரும் செயற்பாடுகள்  எமக்கு சிறந்த நன்மையினை பெறவும் ரமளான்  

மாதத்தினை சிறப்பாக உயிர்ப்பித்த வர்களின் பட்டியலில் அல்லாஹ் எம்மை சேர்க்கவும்   வழிவகுக்கும் அவையாவன.

சுவனத்தின் கதவுகள் திறக்கப்படும் 

இம்மாதத்தின் புனிதத்துவத்தினை அல்லாஹ் வானத்தினதும் மற்றும்    சுவனத்தினதும்  கதவுகளைத் திறந்து , நரகத்தின் கதவுகளை மூடி ஷைத்தானை  விலங்கிட்டு அவனது செயற் ற்பாடுகளை கட்டுப்படுத்துகின்றான் .

நபி  (ஸல்)  அவர்கள்  கூறினார்கள்  "ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, நரகத்தின் வாயல்கள் மூடப்பட்டும் . சைத்தான் விலங்கிடப்படுகின்றான்"  ஆதாரம்  (புஹாரி )

குவாசி  இயாழ்  (றஹ்)  அவர்கள் பின்வருமாறு விபரிக்கின்றார்கள் "ரமளான்  மாதத்திற்கு  என்று தனித்துவமான செயற்பாடுகளைக்  கொண்டு மனிதன்  சிறப்பிப்பதன் முலம்  அல்லாஹ் நன்மையின் வாசலை திறந்து  மனிதர்களின் உள்ளங்கள்  தீமையினை  நாடாது நன்மையின் பக்கம்  வேண்டி செயற்படும் நிலையில் நரகத்தின் வாயல் மூடப்பட்டு  ஷைத்தானின் செயற்பாடுகள் கட்டுப் படுத்தப்படுகின்றன". 

நோன்பு நோற்றல் 

ரமளான் மாதம்  பிரதானமாக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடு நோன்பு  நோற்பதாகும் நபி  (ஸல்)  அவர்கள் கூறினார்கள்  " யார் ராமளான் மாதத்தில்  ஈமானுடனும் மற்றும் உள  தூய்மையுடனும்  நோன்பு நோற்கின்றாரோ அவரது முன் பின் பாவங்கள் மன்னிக்கப் படுகிண்றன"

ரமளான் பாவங்களை சுட்டெரிக்கின்றது. 

நபி  (ஸல்)  அவர்கள்  கூறினார்கள்  "ஐவேளை  தொழுகைக்கும் ,இரு  ஜும்ஆ வுக்கும்  ,மற்றும்   இரு ராமலானுக்கும்      இடைப்பட்ட காலத்திற்குள்  பெரும்பாவங்களைத்   தவிர மனிதனின் அனைத்து சிறு பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. 

லைத்துல் கத் ர்  

ரமளான் மாதத்தில் அல்லாஹ் ஓர்  இரவினை அடையாளப் படுத்தியுள்ளாள்.  அவ்விரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது . அதுவே  லைலத்து கத்ர்  ஆகும்.   அவ்விரவினை  வணக்க செயற்பாடுகளால் உயிர்பிக்கும்  மனிதனின் பாவங்கள் களையப் பட்டு சுத்தப்படுத்தப் படுகின்றன. அவ்விரவு இறுதிப் பகுதியில் வரும் ஒற்றைப்பட்ட நாட்களிலே உள்ளது அதன் நன்மைகளைப் பெற  முயற்சிக்க வேண்டும் .

மேலும் அவ்விரவானது  அல்குர்ஆன்   அருளப்பட்டதும்  ,  அபிவிருத்தியும்  மற்றும்  அமைதியும், சாந்தியும் நிறைந்த கண்ணியமிக்க சிறப்புக்களை கொண்டது  .

நபி  (ஸல்)  அவர்கள் கூறினார்கள்    " யார் லைலத்து கத்ர்  இரவில்    ஈமானுடனும் மற்றும் உள  தூய்மையுடனும்  நின்று  வணங்குகின்றாராரோ  அவரது முன் பின் பாவங்கள் மன்னிக்கப் படுகிண்றன" 

இவ்விரவு நன்மைகளை  அதிகமாக பெற்றுத்தரும் சிறப்புமிக்க இரவாக இருப்பதனால் பிரார்த்தனைகள், பாவமன்னிப்பு மற்றும் குர்ஆனை பாராயனம் செய்தல்  போன்ற நன்மை பயர்க்கும் செயற்பாடுகளால் சிறப்பிப் பதன்  மூலம் அதன் பலன்  எமக்கு நிச்சயம்  கிடைக்கப்பெறும்.

இரவு வணக்கம்  (கியாமுல் லைல்)

ராமளான்  மாதம்  மேற்கொள்ளப்படும்  சிறந்த இபாதத்களில் இரவு வணக்கம் முக்கியமானதாகும் இதனை  “ஸலாது  தராவீஹ்”  என்றும்  அழைக்கப்படும். நபி  ஸல்  அவர்கள் ரமளான் மாதத்திலும் அது அல்லாத காலங்களிலும் இவ்விரவு வணக்கத்தினை மேற் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக ரமளான்  இரவு வணக்கம் பற்றி பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதன் மூலம் இவ்வணக்கத்தின் முக்கியத்துவத்தினை அறியலாம்.    " யார் ரமளான்   இரவில்    ஈமானுடனும் மற்றும் உளத்  தூய்மையுடனும் நின்று வணங்குகின்றாராரோ  அவரது முன் பின் பாவங்கள் மன்னிக்கப் படுகிண்றன"  

அல்குர் ஆ ன் அருளப்பட்ட மாதம் 

அல்லாஹ் ஏனைய மாதங்களை விட இம்மாதத்தில் அல்குர்ஆனை மனித  சமூகத்திற்கு நேர்வளிகாட்டியாக  நபி (ஸல்) அவர்களுக்கு அருளியதன்  மூலம் சிறப்பிக்கின்றான்.அதனை  அல்லாஹ்  பின்வருமாறு  உபதேசிக்கின்றான் .

“ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே” (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (2:185)

ரமளானில் உம்ரா 

இந்த மாதத்தின் சிறப்புகளில் ஒன்று உம்ரா  கிரிகைகளில் ஈடுபடுவதாகும். வசதி வாய்புக்களைப் பெற்றவர்கள் இம்மாதத்தில் உம்ரா வணக்கத்தினை நிறை வேற்ற முடியும் ஏனெனில் ரமளானில்  மேற்கொள்ளப்படும் உம்ராவானது  ஹஜ்  கடமைக்கு ஈடானது என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளதை ஹதீதுகளில் காண முடிகின்றது.

அல்குர் ஆ னை பாராயன ம்  செய்தல் 

எங்ககளில் பலர் குர்ஆனை முழுமையாக அல்லது அதனை முறைப்படி ஓத முடியாத நிலையில் இருக்கின்றனர். ரமளானை குர்ஆனை விளங்க,  முறையான  சட்டங்களை பேணி ஓத எமது நேரங்களை செலவிடும் போது  சிறந்த பலனை  பெற்று  குர்ஆனை ஓதி இரட்டிப்பு நன்மைகளை பெறலாம்  . நபி  (ஸல்)  அவர்கள் ரமளான் ஒவ்வோர் இரவும்  ஜிப்ரியில் (அலை)  அவர்கள் மூலமாக குர் ஆனை ஓதிக்காண்பிப்பார்கள்.

எமது முன்னோர்கள் அல்குர் ஆனை ரமளானில் தினமும்  முழுமையாக ஓதி முடிக்கக் கூடியவர்களாக இருந்துள்ளனர். நாமும் இம்மாதத்தினை அல்குர்ஆனுக்கான மாதமாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாம் .

தான தர்மங்களில் ஈடுபடல் 

அல்லாஹ் எமக்கு அருளிய செல்வத்தில்  இருந்து முடிந்தளவு மற்றவர்களுக்கு நன்மைகளை செய்ய வேண்டும். நபி  (ஸல்) அவர்கள் வீசும் காற்றை  விட மிக வேகமாக  தர்மங்களை ரமளான்  மாதத்தில் புரிந்துள்ளார்கள் . எனவே  நாமும் எமது செல்வங்களில்  இருந்து  தேவையுடைய மக்களுக்கு உதவி செய்து நன்மைகளை கொள்ளையிட்டுக் கொள்வோம்.

பள்ளிவாசலில் இஃதிகாப் இருத்தல்:

இஃதிகாப் இருத்தல்  நபி  (ஸல்)  அவர்கள்  மேற்கொண்ட முக்கியமான  செயற்பாடாகும்  . பள்ளிவாசலில் தரித்து அல்லாஹ்வினை வணங்கி அவனை இப்பாதத்துக்களால் நெருங்குவதற்கு மிக பொருத்தமான ஒரு வணக்கம் இஃதிகாப் ஆகும்  . நபி (ஸல்)  அவர்கள் மரணிக்கும் வரை ரமளானில் இறுதிப்பத்தில் பள்ளிவாசலில் இஃதிகாப்  இருக்கக்கூடியவர்களாக  இருந்தார்கள் என அன்னை  ஆயிஷா (றழி)  அவர்கள் அறிவிப்பதன் மூலம் இதன் முக்கியத்துவத்தினை விளங்கலாம் 

நோன்பு திறப்பிக்க உதவுதல்


ரமளான்   காலப் பகுதியில்  மேற்கொள்ளப்படும் கிரிகைகளில்  இப்தார் முக்கிய  இடத்தினை வகிக்கின்றது. நோன்பாளிக்கு நோன்பு திறக்க உதவுதல் ஒரு வணக்கமாகும் , அதன் மூலம்  அல்லாஹ்வின் நெருக்கம்,மற்றும் பொருத்தம் என்பன  கிடைப்பதுடன்  ஏனைய சகோதரர்களின் நலனில் கவனம் செலுத்தி மனிதர்களுக்கிடையில்  பரஸ்பர உறவும்    கட்டியெழுப்படுகின்றது.

நோன்பாளிக்கு கிடைக்கூடிய  நமையில் இருந்து எந்த குறைவும் இன்றி நோன்பினை திறக்க உதவி புரிந்தவருக்கு  அதேபோன்ற  நன்மை  கிடைக்கும் என  நபி (ஸல்) அவர்கள்  இச்செயற்பாட்டின்  நன்மையினை  எடுத்துக்கூறி மற்றவர்களை ஆர்வம் ஊட்டியதை கவனத்திற் கொள்ளலாம்.
எனவே அல்லாஹ் எமக்கு அருளியுள்ள இம்மாதத்தினை வீணாகா கழிக்காது  கிடைக்கப்பெறும்  சந்தர்ப்பங்களை   முறையாக ரமளானை  சிறப்பித்து  உரிய பயனைப்  பெற நாம் எல்லோரும் முயற்சிப்போமாக.

-எம்.எல்.பைசால் (காஷிபி)

No comments:

Post a Comment