தென் மாகாண மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போகும் சூழ்நிலை - sonakar.com

Post Top Ad

Sunday, 27 May 2018

தென் மாகாண மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போகும் சூழ்நிலை


மனித செயற்பாடுகள் காரணமாக தென் மாகாண மக்களுக்கு எதிர்காலத்தில் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் போகும் சூழ்நிலை தென்படுகிறது. நகத்தினால் அகற்ற வேண்டியதை, கோடாரி கொண்டு அகற்ற வேண்டிய நிலை உருவாகும் சாத்தியம்.'அண்மையில் மாத்தறை துடாவ பண்சல மற்றும் பாடசாலைகளில் அன்றாட தேவைக்காக பெற்றுக் கொள்ளப்பட்ட குடிநீரில் மலம் உட்பட கழிவுகளுடன் பற்றீரியாக்களும் பெருமளவில் கலந்திருந்ததாக தெரிய வந்துள்ளது. பல ஆண்டுகளாக இப்பிரதேசத்தில் வாழும் மக்களின் செயற்பாடுகளினால், நில்வளா கங்கையின் நீர் மாசடைந்து வருவதாக நீர் விநியோக வடிகாலமைப்பு சபையின் தரவுகள் மற்றும் ருஹூனு பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் சமுத்திரவியல் விஞ்ஞான தொழில்நுட்ப பீடத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.' 

மாத்தறை மாவட்டத்தின் உயிர் நாடியாக கருதப்படும் நில்வளா கங்கை சிங்கராஜ வனாந்தரத்திற்கு சொந்தமான இரண்டு மலைத் தொகுதிகளான தெனியாய பகுதியில் உள்ள அணில் மற்றும் பணில் ஆகிய மலைகளிலிருந்து தோற்றம் பெற்று, 72 கிலோ மீற்றர் தூரத்திற்கு முறையே கொடபொல, மொரவக, பிடபெந்தர மற்றும் அக்குரஸ்ஸ ஆகிய பிரதான நகரங்கள் ஊடாக மாத்தறை தொட்டமுன பகுதியினால் கடலில் சங்கமிக்கின்றது. 

ஆதி காலம் முதல் நில்வளா கங்கையை அடிப்படையாகக் கொண்டு மாத்தறை மாவட்ட மக்கள் தமது வாழ்வாதார தொழிலாளான விவசாயத்தை மேற்கொண்டு வருவதுடன், குடிநீரையும் பெற்றுக் கொள்கின்றனர். அத்துடன், தமது அன்றாட தேவைகளை இதனூடாக பூர்த்தி செய்து கொள்கின்றனர். மாத்தறை மாவட்டத்தில் சுமார் 4 இலட்சம் மக்களும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள 25 கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால், நில்வளா கங்கை, நாதுகல, கந்துவ, பலகாவெல ஆகிய இடங்களிலிருந்து பெற்றுக் கொள்ளும் நீரை, நாந்துகல மற்றும் மாலிம்பட ஆகிய பகுதிகளிலுள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக  விநியோகிக்கப்படுகின்றது.

நில்வளா கங்கையை அண்டியதாக வாழும் மக்கள், தமது வீடுகளிலிருந்து வீசப்படும் கழிவுகளை கங்கையில் கொட்டுகின்றனர். மேலும், நில்வளா கங்கை அக்குரெஸ்ஸ, பிடபெந்தர ஆகிய நகரங்கள் ஊடாக செல்லும் போது, அந்த நகரங்களில் உள்ள வர்த்தக நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும் இந்த கங்கையில் கலக்கின்றன. அக்குரஸ்ஸ பஸ்தரிப்பு நிலையத்தில் உள்ள பொதுமலசல கூடத்தின் மலம் உட்பட கழிவுகள், மாத்தறை வைத்தியசாலையின் கழிவுகளும், மாத்தறை சிறைச்சாலையின் மலசலககூட கழிவுகளும் நில்வளா கங்கையில் கழக்கின்றன. அத்துடன், நகரங்களில் உள்ள ஏனைய கழிவுகளும் கால்வாய்கள் ஊடாக நேரடியாக நில்வளா கங்கைக்கு திசை திருப்பப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

நீர் அசுத்தமடைவதாக தெரிவிக்கப்படும் இந்த குற்றச்சாட்டை நிரூபிப்பதற்காக நில்வளா கங்கைக்கு மாத்தறை வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும், சிறைச்சாலை மலசகலகூட கழிவுகள் ஆகியன கலக்கப்படும் இடங்களிலிருந்து ருஹூனு பல்கலைக்கழக கடற்றொழில் சமுத்திரவியல் விஞ்ஞான தொழில்நுட்ப பீடத்தின் தொழில்நுட்ப பிரிவினர் பெற்றுக் கொண்ட நீர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு இந்த நீரில் மலம் உட்பட கழிவுகளுடன் பற்றீரியாக்களும் பெருமளவில் கலந்திருப்பது தெரிய வந்துள்ளதாக அந்த பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எச் பி அஸாந்தி எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார். 

அத்துடன் தமது கல்விப் பிரிவு 2012 ஆம் ஆண்டு நீர் விநியோக வடிகாலமைப்பு சபை நீரைப் பெற்றுக் கொள்ளும் நில்வளா கங்கையின் பலகாவெல பகுதியில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகள் ஊடாக மேற்கொண்ட பரிசோதனைகளின் போது, அந்த நீரில் கலந்துள்ள இரும்பு பொஸ்பேட் கொப்பர் ஆகிய உலோகங்கள் ஆபத்தான மட்டத்தில் காணப்படுவதாக தெரிய வந்துள்ளதென கலாநிதி அசாந்தி எமது நிலையத்திற்கு மேலும் தெரிவித்துள்ளார். 


நில்வளா கங்கையில் குப்பைகள் கலக்கப்படுவதனால், இப்பிரதேச மக்களுக்கு தூய நீரைப் பெற்றுக்கொடுப்பதில் உள்ள பிரச்சினைகள் குறித்து தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாத்தறை மாவட்ட முகாமையாளர் எஸ் கே சமந்த குமாரவை நாம் தொடர்பு கொண்டு வினவிய போது, அக்குரஸ்ஸ பிரதேச சபை நில்வளா கங்கையுடன் இணையும் கிளை ஆறு அமைந்துள்ள வயல் வெளியில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதும், அக்குரஸ்ஸ பஸ்தரிப்பு நிலையத்தில் உள்ள பொது மலசகலகூடத்தில் மலம் உட்பட கழிவும் அக்குரஸ்ஸ நகரிலிருந்து நில்வளா கங்கையில் கொட்டப்படுவதாகவும், அக்குரஸ்ஸ நகர் ஊடாக நில்வளா கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக் கொள்ளும் இடமான பலகாவெலவிற்கு குறுகிய தூரம் இருப்பதனால், குப்பைகள் இயற்கையாக அழியும் சந்தர்ப்பமும் குறைவாக காணப்படுவதனால், இந்நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட முகாமையாளர் எஸ் கே சமந்த மேலும் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மாவட்ட இணைப்புக் குழு உட்பட அதிகாரிகளுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும், எந்தவித நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லையென அவர் மேலும் எமது நிலையத்திடம் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க தமது நிறுவனம் முழுமையான நடவடிக்கைளில் ஈடுபட்டு வருவதாகவும் இவ்வாறு கங்கை மாசடைவது அதிகரித்துச் செல்வதனால் நீரை சுத்திகரிப்பதற்கு செலவிடப்படும் நேரமும் செலவும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிலை தொடருமாயின் பாரிய பிரச்சினைகளை எதிர்காலத்தில் முகம் கொடுக்க நேரிடும் என்றும் திரு. சமந்த தெரிவித்தார்.  

இது தொடர்பாக மாத்தறை மாவட்ட செயலாளர் பிரதீப் ரட்னாயக்கவை தொடர்பு கொண்டு கேட்ட போது, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் மாத்தறை மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் நீரை இப்போதைக்கு அருந்துவதற்கு உகந்த முறையில் இருப்பதை நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தமக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

சுத்திகரிக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சுத்திகரிப்பு செயற்hபடுகள் பற்றி ருஹூனு பல்கலைக்கழக கடற்றொழில் மற்றும் சுமத்திரவியல் விஞ்ஞான தொழில்நுட்ப பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளார் கலாநிதி எஸ் பி அசாந்தியிடம் வினவிய போது, சபையின் சுத்திரகரிக்கும் செயற்பாடுகள் உலோகம் கலந்த பதார்த்தங்களை அகற்றுவதற்கான முறையான வேலைத்திட்டங்கள் இங்கு காணக்கூடியதாக இல்லையென அவர் தெரிவித்தார். 

இந்த பிரச்சினை குறித்து நாம் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாத்தறை மாவட்ட காரியால பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கருத்து தெரிவிக்கையில், குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களை கங்கையில் கொட்டுவது தொடர்பாக தமது அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் முறையற்ற விதத்தில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக தாம் மாவட்ட செயலகம், மாத்தறை மாவட்ட நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாவட்ட தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை காரியாலயம் ஆகிய இடங்களுக்கு முறையிட்டுள்ளதாக இந்த நிலைமை தொடருமாயின் எதிர்காலத்தில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் இந்தப் பகுதி மக்களுக்கு பாரிய பிரச்சினைகளை முகம் கொடுக்க வேண்டி ஏற்படுமென்றும் அவர் தெரிவித்தார். 

நில்வளா கங்கை கடலில் சங்கமிக்கும் பகுதிக்கு சென்று நில்வளா கங்கையின் ஊடாக படகொன்றில் ஏறி பயணம் செய்து ஆற்றோரத்தை அவதானிக்கும் போது, கங்கையில் எந்தளவு குப்பைகள் கலக்கின்றது என்பதை அவதானிக்க முடியும். கரையோரத்தை அண்டியதாகவும் ஆற்றங்கரையிலும் கொட்டப்படும் கழிவுகள் காரணமாக அதனை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதாக பிரதேசவாசிகள் எம்மிடம் தெரிவித்தனர்.

பல ஆண்டுகளாக நிலவும் இந்தப் பிரச்சினை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் சுமார் 4 இலட்சம் மக்களும் ஹம்பாந்தோட்டை மாவட்டததில் உள்ள 25 கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு எதிர்காலத்தில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பாரிய பிரச்சினையை முகம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகி வருகின்றமையை அவதானிக்க முடிகிறது. ஆகையால், நகரங்களில் உள்ள கழிவுகள் அனைத்தும கால்வாய்கள் ஊடாக நேரடியாக நில்வளா கங்கைக்கு திசை திருப்பப்பட்டிருப்பதை மாற்றியமைத்து நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் இந்த அபாயகரமான நிலையிலிருந்து இப்பகுதி மக்களை தவிர்த்துக் கொள்ளலாம். நகத்தினால் அகற்ற வேண்டியதை கோடாரி கொண்டு அகற்ற வேண்டிய நிலை ஏற்படும் வரை அதிகாரிகள் காத்திருக்கின்றார்களா? என்பதும் ஒரு கேள்விக் குறியாகவே காணப்படுகிறது. 

-Mohamed

No comments:

Post a Comment