கல்முனை நகரில் கால்நடைகளை கைப்பற்றும் நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Thursday 3 May 2018

கல்முனை நகரில் கால்நடைகளை கைப்பற்றும் நடவடிக்கை


கல்முனை நகரில் நடமாடிய கட்டாக்காலி கால்நடைகள் பல இன்று  வியாழக்கிழமை பிற்பகல் மாநகர சபையினால் அதிரடியாக கைப்பற்றப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் விடுத்த அவசர உத்தரவின் பேரில் கல்முனை மாநகர சபை சுகாதார பிரிவு மேற்கொண்ட இந்நடவடிக்கையின்போது 17 மாடுகளும் 12 ஆடுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.


இதன்போது மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்களும் குறித்த இடங்களில் பிரசன்னமாகி கால்நடைகள் கைப்பற்றப்படும் நடவடிக்கைகளை அவதானித்தார்.

கல்முனை மாநகர பிரதேசங்களில் பிரதான வீதிகள், பொதுச் சந்தைகள், விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டங்களினால் பொது மக்களுக்கு பாரிய இடையூறுகள் ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. இதனால் வர்த்தகர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது தொடர்பில் மாநகர சபை கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரி ஊடகங்களில் செய்திகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இவற்றைக் கருத்தில் கொண்டே கட்டாக்காலி மாடு, ஆடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு அவற்றைக் கைப்பற்றுமாறு தாம் உத்தரவிட்டதாகவும் அவ்வாறு கைப்பற்றப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் அதன் பின்னர் விடுவிக்கப்படும் கால்நடைகளை தமது சொந்த இடங்களில் வைத்து பராமரிக்கத் தவறும் பட்சத்தில் அவை மீண்டும் கைப்பற்றப்படுமானால் நீதிமன்ற அனுமதியுடன் அவை அரசுடமையாக்கப்படும் எனவும் மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

இது விடயத்தில் எவ்வித நெகிழ்வுப்போக்கும் காட்டப்பட மாட்டாது என்பதுடன் எதிர்காலத்தில் மாநகர சபை ஊழியர்களைக் கொண்டு இதற்கென தனியான செயலணி ஒன்று நிறுவப்பட்டு தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் முதல்வர் குறிப்பிட்டார்.

"பொது இடங்களில் நடமாடும் கால்நடைகளினால் பொது மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் பெரும் அசௌகரியங்கள் ஏற்படுத்துவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. குறிப்பாக பொதுச் சந்தைகள் மற்றும் பிரதான வீதிகளில் இவற்றின் நடமாட்டங்கள் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. இதனை அவற்றின் உரிமையாளர்கள் உணர்ந்து செயற்பட முன்வர வேண்டும் எனவும் மாநகர சபையின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்" என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-அஸ்லம் எஸ்.மௌலானா

No comments:

Post a Comment