கல்முனை: குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண மின்சார உற்பத்தி நிலையம்; பைஸல் - sonakar.com

Post Top Ad

Sunday 22 April 2018

கல்முனை: குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண மின்சார உற்பத்தி நிலையம்; பைஸல்


கல்முனையில் ஐந்து ஏக்கர் காணியொன்றை மாநகர சபை பெற்றுத் தந்தால் இப்பகுதியில் நிலவும் திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கு இரு வருட காலப் பகுதிக்குள் நிரந்தர தீர்வைப் பெற்றுத் தருவதாக சுகாதார பிரதி அமைச்சர் பைஸல் காசிம் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு மற்றும் திண்மக்கழிவகற்றல் திட்டங்களை மேம்படுத்தல் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று கல்முனை மாநகர சபையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலு தெரிவிக்கையில்;

"குப்பைப் பிரச்சினை என்பது எங்கும் உள்ள பிரச்சினையாகும். கொழும்பில் இதற்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்திய போதிலும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. என்றாலும் குப்பைகளை வகைப்படுத்தி சேகரிக்கும் திட்டம் வெற்றியளித்துள்ளது. எவரும் நினைத்த மாதிரி எல்லா குப்பைகளையும் ஒன்றாக கையளிக்க முடியாது. வகைப்படுத்தப்பட்ட குப்பைகள் மாத்திரமே பொறுப்பேற்கப்படுகிறது. இதற்கு அங்குள்ள மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

இத்திட்டத்தை நமது பகுதிகளில் அமுல்படுத்தினால் குப்பை பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைத்து விடும். ஆனால் இது பெரும் சவாலான விடயமாக உள்ளது. நமது மக்களுக்கு எவ்வளவு தெளிவூட்டினாலும் அவர்கள் ஒத்துழைக்க முன்வர மாட்டார்கள்.

இந்நிலையில் கல்முனை மாநகர சபைக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்ற திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உதவுமாறு முதல்வர் றகீப் என்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நான் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவிருக்கிறேன்.

குப்பைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களை அமைப்பதற்கு அவுஸ்திரேலியன் கம்பெனி ஒன்று என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறது. கிழக்கு மாகாண ஆளுநரும் இவ்விடயத்தில் ஆர்வமாக இருக்கிறார். இத்திட்டத்தை கல்முனையில் மேற்கொள்வதற்கு நான் சிபாரிசு செய்வதுடன் வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயாராக உள்ளேன்.

கல்முனையில் ஐந்து ஏக்கர் காணியை பெற்றுத் தந்தால் இத்திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்தி, இரு வருட காலத்தில் திண்மக்கழிவகற்றல் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரலாம். இதனால் துர்நாற்றமோ சூழல் மாசடைதல் பிரச்சினையோ ஏற்படாது. குப்பைகளை வகைப்படுத்தி சேகரிக்க வேண்டிய தேவையும் ஏற்படாது.

இங்கு இந்நிலையம் அமைக்கப்படுமானால் நாள் ஒன்றுக்கு நூறு தொன் குப்பைகளை குறித்த கம்பெனிக்கு மாநகர சபை வழங்க வேண்டும். குப்பைகளை சேகரிப்பதற்கான அனைத்து வளங்களையும் அக்கம்பனி தருவதுடன் குப்பைகளுக்கான பணத்தையும் மாநகர சபைக்கு செலுத்தும்.

மட்டக்களப்பு மாநகர சபையிலும் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. கல்முனை மாநகர சபையும் இதற்கு தயாராக வேண்டும். நான் முன்னின்று இதனை சாத்தியப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.

இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் முஹம்மட் கனி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, கல்முனை மாநகர பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, சட்டத்தரணி றொசான் அக்தர், எம்.எஸ்.எம்.சத்தார், எம்.எம்.நிசார், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொறியியலாளர் ரி.சர்வானந்தன், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் கணேஷ்வரன், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் கே.எல்.எம்.றயீஸ், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.அஜ்வத், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி டொக்டர் என்.ஆரிப், ஆசியா பவுண்டேஷன் நிபுணத்துவ ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத், கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.சம்சுதீன், மாவட்ட தலைமை சுகாதார பரிசோதகர் பேரம்பலம் உட்பட சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

-அஸ்லம் எஸ்.மௌலானா

No comments:

Post a Comment