பிரதமர் - சட்ட ஒழுங்கு அமைச்சருடன் முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு! - sonakar.com

Post Top Ad

Thursday 15 March 2018

பிரதமர் - சட்ட ஒழுங்கு அமைச்சருடன் முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு!


புதிதாகப் பதவியேற்ற சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்றைய தினம் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளின் விசேட சந்திப்புகள் இடம்பெற்றன.


அரசியல்வாதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்ட இச்சந்திப்பின் போது இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் அச்ச சூழ்நிலை மற்றும் அநீதி தொடர்பில் அழுத்தமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதுடன் அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தொடர்பிலும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.



அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில், தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி உட்பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்ட இச்சந்திப்பின் போது, அளுத்கம -  கிந்தொட்ட வன்முறைகளில் பாதிக்கப்பட்டோருக்கும் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லையெனவும், பிரதமர் ரணிலே அதற்குத் தடையாக இருப்பதாக தெரிவிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து தனது செயலாளரை உடனடியாக தொடர்பு கொண்ட ரணில், இழப்பீடுகளை உடன் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு முஸ்லிம் விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதை சட்ட-ஒழுங்கு அமைச்சருக்கு சுட்டிக்காட்டிய பிரதிநிதிகள் இது தொடர்பில் அமைச்சர் தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டும் எனவும் இனவன்முறைகளில் தொடர்பு பட்ட அனைவரையும் கைது செய்து நீதியை நிலை நாட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி சோனகர்.கொம்முக்கு விளக்கமளித்தார்.

இன வன்முறை காரணமாக மத்திய கிழக்கிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகையும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் நம்பிக்கையிழக்கப்பட்டிருப்பதாகவும் கண்டி விவகாரத்தில் அரசாங்க அதிபர், பொலிஸ் நிலைய அதிகாரிகள் உட்பட அனைவர் மீதும்  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment