கொரோனா 'தீ' பலி கொண்ட 19 வயது குழந்தை! - sonakar.com

Post Top Ad

Tuesday 27 October 2020

கொரோனா 'தீ' பலி கொண்ட 19 வயது குழந்தை!



வாழைத்தோட்டத்தில் வாழ்ந்து வந்த மின்ஹாஜ் பிறந்து 19 வருடங்கள். ஆனால் அது மற்றவர் பார்வையில் தெரியும் கணக்கேயன்றி, மூளைவாதத்தால் (cerebral palsy) பாதிக்கப்பட்டிருந்த அவன் ஒரு குழந்தை.


படுக்கையிலேயே காலங்கழித்த குழந்தையின் மரணம் ஈற்றில் கொரோனா என அடையாளப்படுத்தப்பட்டு ஜனாஸா எரியூட்டப்பட்டிருப்பதை குடும்பத்தவர்களால் மாத்திரமன்றி விபரமறிந்த யாராலும் தாங்கிக் கொள்ள முடியாதுள்ளது.


இலங்கையில், இரண்டாம் சுற்று கொரோனா பரவலில் இம்மாதத்தில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இறைவன் நாட்டப்பட்டி மின்ஹாஜின் உயிரும் பிரிந்துள்ளது. ஆயினும், அதன் பின் வலுக்கட்டாயமாக செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மீது குடும்பத்தாருக்கு எள்ளளவும் நம்பிக்கையில்லை. இறுதி வரை போராடிப் பார்த்தார்கள். எனினும், ஈற்றில் அந்த உடலமும் எரியூட்டப்பட்டு விட்டது.


கொரோனா உயிரிழப்பு எல்லா சமூகங்களிலும் நிகழ்கிறது. ஆனாலும், முஸ்லிம் சமூகம் தமது உடன்பிறப்புக்களை இழக்கும் சந்தர்ப்பங்கள் முரண்பாடுகளாகவே தொடர்கிறது. நேற்றைய ஸ்லேவ் ஐலன்ட் நபராக இருக்கட்டும் இன்றைய வாழைத்தோட்ட சிறுவனாக இருக்கட்டும் நிலைமை அவ்வாறே தொடர்கிறது. இதற்கான அடிப்படைக் காரணம் என்னவென்பதைக் கண்டறிந்து களைவது காலத்தின் கட்டாயத் தேவையாக இருக்கிறது.


தனியாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக எதுவும் 'வித்தியாசமாக' நடப்பதாக நினைக்கவில்லையென நீதியமைச்சர் அலிசப்ரி என்னிடம் நேரடியாகவே நேரலையில் வைத்து  தெரிவித்திருந்தார். ஆதலால், திரும்பத் திரும்ப அவரைக் கேள்வி கேட்கவும் முடியாது. ஒரு சில மார்க்கத் தலைமைகளோ, நாட்டில் எதுவுமே நடக்கவில்லை போன்று ஆளாளுக்கு ஒரு பேஸ்புக் டிவி நடாத்திக் கொண்டிருக்கிறார்கள், ஆதலால் அவர்கள் சமூகத்துக்கு சொல்வதற்கு எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை.


எமது அரசியல்வாதிகள் இது பற்றி வாய் திறக்கக் கூட முடியாத படி 'இருபதால்' மூடப்பட்டுள்ளார்கள். எனவே, அவர்களிடமும் பேசிப்பயனில்லை. தயார் படுத்தல் இல்லாததால் தயார் நிலையில் இருக்காத சமூகமே இன்று தம் உணர்வுகள் காயப்பட்டுத் தவிக்கிறது. இருந்தாலும் அதை வெளியில் பேச முடியாத அரசியல் அச்சமும் தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது.


கொரோனா 'பொசிடிவ்' என்று மருத்துவ அறிக்கை சொன்னால் அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர மாற்று வழியில்லை. கொரோனாவால் உயிரிழந்ததாக அடையாளப்படுத்தப்பட்டால் அந்த உடலத்தை எரிப்பதொன்றையே 'சட்டம்' வலியுறுத்துகிறது என்பதால் அதற்கும் மாற்றுவழியில்லை. ஆனால், கொரோனா பரிசோதகைள் முறையாக நடாத்தப்படுகின்றனவா? என்ற கேள்விக்கு நியாயமான விடையைக் காண்பதற்கான மக்கள் வேட்கைக்காவது அரசியல் மட்டத்தில் தீர்வு அவசியப்படுகிறது.


அதைச் செய்வதை விடுத்து, சிந்திப்பதற்குக் கூட, இப்போதுதான் சுடச்சுட மக்களை ஏமாற்றி ஏப்பம் விட்ட அரசியல் தலைமைகள் முன் வருமா? இதில் சிவில் சமூகத்தின் பங்களிப்பு தான் என்ன?










-Irfan Iqbal

Chief editor, Sonakar.com

No comments:

Post a Comment