யாழ் பள்ளிவாயல்கள் தொடர்பில் வக்பு சபை பராமுகம்; RTI ஊடாக அதிர்ச்சி தகவல் - sonakar.com

Post Top Ad

Friday 15 February 2019

யாழ் பள்ளிவாயல்கள் தொடர்பில் வக்பு சபை பராமுகம்; RTI ஊடாக அதிர்ச்சி தகவல்


யாழ்ப்பாணம் பள்ளிவாயல்கள் தொடர்பில் வக்பு சபை பராமுகமாக இருப்பது ஏன்? என  தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்டுள்ள தகவலைக் கீழ்க்காணலாம்:

•இரண்டு பள்ளிவாயல்களிலேயே உத்தியோகபூர்வ நிர்வாகம்.
•மேலும் இரு பள்ளிவாயல்களே ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளன.
•பதிவு செய்யப்பட்ட பள்ளிவாயல் ஒன்றில் பதிவு செய்யப்பட்ட எவ்வித நிர்வாகமும் இல்லை.
•மற்றுமொரு பள்ளிவாயல் வக்பு சபையில் பதிவு செய்யப்படவே இல்லை.

முஸ்லிம் சமூகத்திற்கான வழிகாட்டல்களை வழங்குவதில் பள்ளிவாயல்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். பள்ளிவாயல்களின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் நன்றாக அறிந்தே வைத்திருக்கின்றோம். இந் நிவையில் யாழ்ப்பாணம், வேலனை, பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட  பள்ளிவாயல்கள் குறித்து சிறு விடயங்களை இவ் ஆய்வில் முன்வைக்கலாம் என நினைக்கின்றேன். 

1990 ஆம் ஆண்டிற்கு முன்னர் யாழ் மாவட்டத்தில் இருந்த பள்ளிவாயல்களின் சமூக வகிபாகமும் யுத்த முடிவிற்குப் பின்பு உள்ள நிலையிலும் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றது. அந்த வகையில் ஜனநாயக பண்புகளை மதிக்காதவர்களே பள்ளிவாயல் நிர்வாகிகளாக தொடர்ந்தவண்ணம் இருக்கின்றார்கள். பள்ளிவாயல் சொத்துக்களை தமது சுய நலத்திற்காக பாவிப்பவர்களாகவே யாழ் மாவட்ட பள்ளிவாயல் நிர்வாகிகளில் பலர் இருக்கின்றனர். எனவே இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டமான தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் யாழ் மாவட்ட பள்ளிவாயல்களின் விபரங்களை கடந்த 2018 ஜுன் மாதமளவில் சேகரித்துக் கொண்ட போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

அதாவது பல வருடங்களுக்கு மேலாக அதிகளவிலான பள்ளிவாயல்களின் நிர்வாகத் தெரிவுகள் இடம்பெறாது சர்வாதிகாரப் போக்கில் பள்ளிவாயல்கள் நிர்வகிக்கப்பட்டுவந்துள்ளமை தெரியவந்துள்ளது. அந்த வகையில் வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள 16 பள்ளிவாசல்கள் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றன. அதில் இரண்டு பள்ளிவாயில்களைத் தவிர ஏனையவை அனைத்திற்கும்
 பதவிக்காலம் நிறைவுற்றும் புதிய நிர்வாகத் தெரிவுகள் இடம்பெறாது சர்வாதிகாரப் போக்கில் ஓரிருவரின் தலைமையில் நிர்வாகம் இடம்பெற்று வருகின்றமை அம்பலமாகியுள்ளது. 

யாழ்ப்பாணத்திலுள்ள பள்ளிவாயல்களில் இறுதியாக இடம்பெற்ற நிர்வாகத் தெரிவும் - நிர்வாகப் பதவிக்காலம் தொடர்பான தகவல்களும் பின்வருமாறு. 

மேற்படி தகவல்களின் அடிப்படையில் உற்று நோக்கும் பொழுது யாழ்ப்பாணத்திலுள்ள பதிவு செய்யப்பட்ட 16 பள்ளிவாயல்களில் மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல் - பெரியகடை, யாழ் நகர் மற்றும் மொஹிதீன் பள்ளிவாசல் - நெய்னாதீவு - வேலனை ஆகிய இரு பள்ளிவாயில்களிலுமே 2019 ஆம் வரும் வரையான சட்டபூர்வமான நிர்வாகங்கள் இடம்பெறுகின்றன. மேலும் கோட்டை மொஹிதீன் பள்ளிவாசல் - யாழ்ப்பாணம் மற்றும் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசல் - வேலனை ஆகிய இரு பள்ளிவாயில்களில் மாத்திரமே நிர்வாகக் காலம் முடிவுற்ற பின்னர் ஜனநாயக ரீதியிலான நிர்வாக சபைத் தெரிவுகள் இடம்பெற்றுள்ளன. ஏனைய அனைத்து பள்ளிவாயில்களிலும் இறுதி நிர்வாக சபைக் காலம் நிறைவுற்று பல வருடங்கள் ஆகியும் இதுவரை புதிய நிர்வாக சபைக்கான எவ்வித தெரிவுகளும் இடம்பெறாது காணப்படுவதுடன், அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. 

மேலும் சின்ன மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் பதிவு செய்யப்பட்ட நிர்வாக சபை காணப்படவில்லை என்பதுடன் இறுதிப் பதிவு தொடர்பான எவ்வித தகவல்களுமே இடம்பெறவில்லை. அத்துடன் புதிய சோனகதெரு அபூபக்கர் பள்ளிவாயல் நீண்டகாலமாக ஆரம்பிக்கப்பட்டும் இன்றுவரை பதிவு செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. 

நிர்வாக சபைப் பதவிக்காலம் நிறைவுற்ற பள்ளிவாயில்களில் புதிய நிர்வாக சபையை தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால்  கடந்த 2015.08.06 ஆம் திகதிய WB/6869/2015 ஆம் இலக்க கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டும் இதுவரை உரிய நடவடிக்கைகளை பள்ளிவாயல் நிர்வாகங்கள் மேற்கொள்ளாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. 

பள்ளிவாயல்களில் உரிய வரவு செலவு விபரங்கள் காட்சிப்படுத்தப்படுவதில்லை, மஹல்லாவாசிகளை பதிவு செய்வது இல்லை, மீள்குடியேறியுள்ள மக்களை நிர்வாகங்களில் பங்கேற்கவிடாது தடுப்பதுடன், கொழும்பிலும், பிற மாவட்டங்களிலுருந்தும் பள்ளிவாயில்களை நிர்வகிக்கின்ற நடைமுறை காணப்படுகின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு தேசிய மீலாத் விழாவின் போதும் பள்ளிவாயல் நிர்வாகங்களை புதுப்பித்தல் தொடர்பாக அறிவித்தல் விடுக்கப்பட்டும் முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தினால் அது முறையாக அமுழ்படுத்தப்படவில்லை. 


மேலும் பள்ளிவாயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் வக்புச் சொத்துக்கள் நிர்வாகப் பொறுப்பிலுள்ள தனி நபர்களால் முறையற்ற வகையில் பாவிக்கப்பட்டும், பணம் பெற்றுக்கொள்ளப்பட்டு கைமாற்றப்பட்டும் வருகின்றமை பல்வேறு சந்தர்ப்பங்களில் உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது கிடப்பில் போடப்பட்டுள்ளது. பள்ளிவாயில்களின் நிலை இவ்வாறே தொடர்ந்தால் வருங்காலத்தில் யாழ் மாவட்ட முஸ்லிம்களின் பொதுச் சொத்துக்கள், பள்ளிவாயல் சொத்துக்கள், வக்புச் சொத்துக்களின் நிலை என்ன? 

எனவே யாழ் மாவட்ட பள்ளிவாயில்கள் தொடர்பில் முஸ்லிம் விவகார அமைச்சு, முஸ்லிம் கலாசார திணைக்களம், வக்பு சபை, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை, யாழ் கிளை ஜம்இய்யத்துல் உலமா சபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பகிரங்கமாகக் கேட்டுக் கொள்கின்றேன். 

ஆய்வுத் தொகுப்பு : என்.எம்.அப்துல்லாஹ்

No comments:

Post a Comment