வன்னியில் விரைவில் தனியான பல்கலைக்கழகம்: ஹக்கீம் - sonakar.com

Post Top Ad

Saturday 16 February 2019

வன்னியில் விரைவில் தனியான பல்கலைக்கழகம்: ஹக்கீம்


இதுவரை காலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கீழ்  செயற்பட்டு வந்த வவுனியா வளாகத்தை  வன்னி பெருநிலப்பரப்பில் தனியான ஒரு பல்கலைக்கழகமாக மிக விரைவில்  தரமுயர்த்துவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நகர திட்டமிடல்,நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்கான தொழிநுட்ப பிரிவின் புதிய கட்டிடத்தையும், அதனுடன் இணைந்த கணனி ஆய்வு கூடத்தையும் வெள்ளிக்கிழமை (15) மாலை திறந்து வைத்து அங்கு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,


இந்த வவுனியா  வளாகம் தனியானதொரு பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்பது  வன்னிமாவட்ட அரசியல் வாதிகளினதும், பொதுவாக வடமாகாண அரசியல் வாதிகளினதும், கல்விச்சமூகத்தினதும் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இங்கு எனக்கு முன்னர் உரையாற்றிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும், பல்கலைக்கழகத்தின் சார்பில் உரையாற்றியோரும், இந்த வேண்டுகோளை விடுத்தனர்.  

இந்த வளாகத்தை தனியான பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை தயாரிக்குமாறு எனது  அமைச்சின் செயலாளருக்கும், மேலதிக செயலாளருக்கும்   பணிப்புரை விடுக்கவுள்ளேன். அண்மையில் என்னை சந்தித்த யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரும், அதன் கீழுள்ள சில வளாகங்களின் முதல்வர்களும் இந்த வளாகத்தை  தரமுயர்த்தவேண்டியதன் தேவையை என்னிடம் கூறினர்.

1991 ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைந்த கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டு, 1997 ஆம் ஆண்டிலிருந்து அதனொரு வளாகமாக இது செயல்பட்டு வருகிறது.  இருபத்தேழு (27) வருட காலமாக இவ்வாறு இயங்கி வரும் நிலையில், இதனை தனியானதொரு பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவது இதன் அந்தஸ்த்தை கூட்டுவதோடு, எனது பதவி காலத்தில் இதனை நிறைவேற்றக்கிடைப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். 

மாறுகின்ற அரசியல் சூழலில் எதுவும் நடக்கலாம், கடந்த நான்கு வருடங்களில் நான்காவது உயர்கல்வி அமைச்சராக நான் பதவி வகிக்கிறேன்.அமைச்சுப் பதவிகள் இப்பொழுது சங்கீத கதிரைகளாக மாறிவிட்டன. எவ்வாறாயினும் இந்த விடயத்தில் அவசரமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

இந்த நாட்டின் உயர்கல்வியை பொறுத்தவரை காலத்திற்கு காலம் திருப்பங்கள் ஏற்பட்டன. இனப்பிரச்சினை கூர்மையடைவதற்கு கூட பல்கலைக்கழ அனுமதியில் ஏற்படுத்தப்பட்ட  தரப்படுத்தல் முக்கிய காரணமாக இருந்தது. அது,  பின்னர் அரசியல் போராட்டமாகவும்  உருவெடுத்தது. 

சர்வதேச ரீதியிலான பல்கலைக்கழக கணிப்பீட்டில் எமது பல்கலைக்கழகங்கள் குறைந்த தரத்திலுள்ளன.இந்த நிலைமை காணப்படுவதனால் நமது பல்கலைக்கழகங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்குவதில் பாரிய சிக்கல்கள் உள்ளன.இவற்றை நிவர்த்தி செய்வதற்கு பல்கலைக்கழகங்களின் தரநிர்ணயத்திற்கான புதிய பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த உள்ளோம். இந்த தரநிர்ணய ஒழுங்கு முறை பின்பற்றப்படும் போது எல்லாப்பல்கலைக்கழகங்களிலும் சென்று தங்களின் துறைக்கான கல்வியை கற்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவர். 

முழுமையான பல்கலைக்கழகமாக தரப்படுத்தல் என்பது அவ்வப்பல்கலைக்கழகங்களில் முக்கிய பீடங்களை உருவாக்குவதிலேயே தங்கியுள்ளது. இதன் அர்த்தம் தொழில் வாய்ப்பு இலகுவில் கிடைக்கும் துறையாக அவை அமைந்திருத்தல் வேண்டும் என்பதாகும். பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவானது வேலையற்ற பட்டதாரிகள் பட்டியலை நீட்டிக்கொண்டு செல்லும் பீடங்களை உருவாக்குவதை விரும்பவில்லை. வேலைவாய்ப்புக்கு கல்வித்துறைக்கும் இடையிலான இந்த பொருத்தப்பாடின்மையை குறைவடைய செய்தலே நாட்டின் அபிவிருத்திக்கு உதவி செய்யக்கூடியதாக இருக்கும். ஆகவே பல்கலைக்கழகங்களை தரமுயர்த்துதல்  என்பது  நாட்டின்  அபிவிருத்திக்கிடையிலான இந்த பொருத்தப்பாட்டிலேயே தங்கியுள்ளது. 
  
வவுனியா வளாகமானது முழுமையான பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும்போது இந்த பொருத்தப்பாடின்மையை நிவர்த்தி செய்யக்கூடிய புதிய பீடங்களை உருவாக்குவது அவசியமாகும்.அதன்படி தொழிநுட்ப பீடம் முதலான ஏனைய முக்கிய பீடங்கள் இங்கு உருவாக்கப்படும் என்றார்.

வவுனியா வளாக முதல்வர் கலாநிதி மங்களீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதி தலைவர் பேராசிரியர் குணரத்ன, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசியர் இரத்தினம் விக்னேஸ்வரன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனிபா ஆகியோர் உட்பட பல்கலைக்கழக மாணவர்களும்,பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

-Mohamed Farveen

No comments:

Post a Comment