இனவாதிகளின் புலக்காட்சி! - sonakar.com

Post Top Ad

Friday 15 February 2019

இனவாதிகளின் புலக்காட்சி!


ஒருவரின் ஐம்புலன்கள் ஒரு பொருளை அல்லது சம்பவத்தை எவ்வாறு உணர்ந்து அறிகிறதோ அவ்வாறே அப்பொருளும், சம்பவமும் அவருக்குப் புலப்படும். உளவியல் இதனை புலக்காட்சி என வரைவிலக்கணப்படுத்துகிறது.  பொதுவாக பொருள்கள் அல்லது சம்பவங்கள்  பற்றி ஒரு மனிதன் பெறும் புலக்காட்சிகள் சரியானவையாகவும் இருக்கலாம். பிழையானவையாகவும் இருக்கலாம். மனித உள்ளத்தின் இத்தகைய புலக்காட்சி உணர்வுகளே இவ்வுலகில் ஆக்கங்களையும், அழிவுகளையும் ஏற்படுத்துகின்றன.

பொருளை, தனிநபரை அல்லது அத்தனிநபரைச்; சமூகம் சார்ந்து  புலக்காட்சி பெறுதல் முன்னரே அப்பொருளை, அத்தனிநபரை அல்லது அவர்சார்ந்த சமூகத்தைப் பற்றி கொண்டுள்ள மனப்பாங்கிலேயே தங்கியுள்ளது. ஒருவரை நல்லவராகக் கருதினால் அவர் செய்வதெல்லாம் சரியாகவே தோன்றும். அவ்வாறுதான் பிழையாகக் கருதினால் அவர் செய்வதெல்லாம் பிழையாகவே புலப்படும். 


இவ்விருதோற்றப்பாடு மனித உள்ளத்தில் தோன்றும் புலக்காட்சியின் வெளிப்பாடாகும். அந்த வகையில், உலகளாவிய ரீதியில் என்றாலும், இலங்கையில் என்றாலும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதமும், இனவாதிகளும் தற்காலத்தில் முஸ்லிம் தொடர்பாகக் கொண்டுள்ள புலக்காட்சித் தோற்றபாடானது முஸ்லிம்களை பல்வேறு வகையிலான அழுத்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் உள்ளாக்கி வருவதை அவதானிக்க முடிகிறது.

உலகில் இஸ்லாம் தோன்றிய காலத்திலிருந்து இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழிக்கும் செயற்பாடுகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வழிப்பு நடவடிக்கைகள் அன்று முதல் பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்பாசிஸ நடவடிக்கைகளின்; தொடரில்; இஸ்லாத்தின் பெயர் தாங்கிய ஆயுதக் குழுக்களை உருவாக்கி, அவற்றின் மூலம் முஸ்லிம்களைக் கொண்டழிப்பதுடன்,  முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புக்கள், உளவியல் ரீதியாகவும், ஊடகப் பயங்கரவாதத்தினூடாகவும், நேரடி ஆயுத மோதல்களின் வாயிலாகவும் சின்னாபின்னமாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை உலகளவில் கண்டுகொண்டிருக்கின்றோம்.

அத்தோடு, இஸ்லாத்தையும,; முஸ்லிம்களையும் உலகளவில் கொச்சைப்படுத்துவதையும் காண முடிகிறது, பயங்கரவாதிகளாகவும், அடிப்படைவாதிகளாகவும,; மதவெறியர்களாகவும், கொலைகாரர்களாகவும் முஸ்லிம்கள் உலகிற்குக் காண்பிக்கப்படுகிறார்கள். இவற்றை ஊடகப் பயங்கரவாதம் கச்சிதமாக நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றன.

மத்திய கிழக்கு நாடுகளில் இவ்வாறான நிலையை உருவாக்கியுள்ள இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்கள் எந்த நாடுகளிலெல்லாம் வாழுகிறார்களோ அங்கெல்லாம்  இஸ்லாத்தையும,; முஸ்லிம்களையும் அவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புக்களையும் அழிப்பதற்கான பாசிஸவாத நிகழ்ச்சி நிரல்களை பல்வேறு முகவர்களினூடாக முன்னெடுத்து வருகின்றனர்.  

இவ்வாறானதொரு நிகழ்ச்சி நிரல் இலங்கை வாழ் முஸ்லிம்கள் மீதும் அவ்வப்போது  கட்டவிழ்த்து விடப்பட்டாலும், மாவனெல்லை, புத்தள சம்வங்கள் தொடர்பில் இனவாத எண்ணம் கொண்ட ஒரு சில அரசியல்வாதிகளும் அவர்களின் ஊதுகுழல்களாகச் செயற்படுகின்ற ஊடகங்களும் வெளிப்படுத்துகின்ற அறிக்கைகளும், செய்தித் தொகுப்புக்களும் இந்நாட்டு முஸ்லிம்கள் தொடர்பில் ஏனைய சமூகத்திலுள்ள கடும்போக்களார்கள் கொண்டுள்ள பிழையான புலக்காட்சித் தோற்றப்பாட்டை அதிகரிக்கச் செய்யும் வகையில் அமைவதை அண்மைய நாட்களில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளன.

கடும்போக்காளர்களைக் கொண்ட அமைப்புக்கள் உருவாக்கப்பட்ட 2010 மற்றும் 2012ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் கடந்த வருட இறுதி வரை இந்நாட்டு  முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் பாசிஸவாதச் செயற்பாடுகள் இவர்கள் இந்நாட்டு முஸ்லிம்கள் தொடர்பில் கொண்டுள்ள புலக்காட்சியை நன்கு புலப்படுத்துகின்றன. ஏனெனில், கடந்த பல வருடகாலமாக இவ்வமைப்புக்களினால் முன்னெடுக்கப்படுகின்ற வெறுப்பு பேச்சுகள்,;   மத நிந்தனைகள், எதிர்ப்பு நடவடிக்கைகள் இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் அமைதி வாழ்வைச் சீர்குழைத்துள்ளதுடன், முஸ்லிம்களின் வரலாற்றையும் இந்நாட்டுக்காக அவர்களால் புரியப்பட்ட தியாகங்களையும் கேள்விக்குற்படுத்தியிருக்கிறது அல்லது மறக்கச் செய்யப்பட்டு வருகின்றன.

ஏறக்குறைய மூவாயிரம் வருட வரலாற்றைக் கொண்ட இலங்கையில்   முஸ்லிம்களின் வரலாறும் பழமை வாய்ந்தது. இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 9.7 வீதம் முஸ்லிம்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.  இவ்வாறு வாழும் முஸ்லிம்கள் அன்றும் இன்றும் இம்மண்ணுக்கு விசுவாசமாகவே வாழ்ந்து வருகிறார்கள்.  இந்நாட்டின் அத்தனை வளர்ச்சியிலும்; முஸ்லிம்கள் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். இம்மண்ணுக்காக உயிர்த்தியாகமும் புரிந்;திருக்கிறார்கள். அவ்வாறு தேசப்பற்றோடு வாழும் முஸ்லிம்கள் தொடர்பில்  கடும்போக்கு இனவாதிகள் கொண்டுள்ள புலக்காட்சியானது முஸ்லிம்களை நெருக்கடிக்குள்ள தள்ளி வருவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இருப்பினும் இப்புலக்காட்சி ஏன் உருவாகியது என்ற சுயவிசாரணையை ஒவ்வொரு முஸ்லிமும் மேற்கொள்ள வேண்டியதும் காலத்தின் அவசியமாகும்.

முஸ்லிம்கள் தொடர்பான எதிர்மறை எண்ணம்கொண்ட கடும்போக்காளர்களுக்கு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைப்பற்றியும், அவர்களால் இந்நாட்டுக்காக புரியப்பட்ட தியாகங்கள் குறித்தும் நிதானத்துடன் தெளிபடுத்தி முஸ்லிம்கள் குறித்த சரியான புலக்காட்சியை ஏற்படுத்துவது அரசியல்வாதிகளினதும், இஸ்லாமிய ஆன்மீக வாதிகளினதும் முஸ்லிம் சிவில்  அமைப்புக்களினதும் பொறுப்பாகவுள்ளது. இப்பொறுப்பைச் செய்வதற்கு முன்னதாக முஸ்லிம்களுக்கிடையிலான தவறுகளும், பிழைகளும் திருத்தப்படுவதும் அவசியமாகும். 

இனவாதமும் கடும்போக்காளர்களும் 
இந்நாட்டின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் சமாதி கட்டும் நோக்கத்திற்காக பௌத்த கடும்போக்காளர்களைக் கொண்டு உருவான அல்லது உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் அவை தோன்றிய ஆண்டுகளிலிருந்து இந்நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை அவ்வப்போது முன்னெடுப்பதை அவதானிக்க முடிகிறது. 
இன நல்லிணக்கத்தையும,; அமைதியையும,; புரிந்துணர்வையும் நேசித்து வாழும் பெரும்பான்மை பௌத்த மக்கள் மத்தியில் சிறுபான்மை சமூகங்கள் தொடர்பான குறிப்பாக இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் குறித்த விசமத்தனமான பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்து முஸ்லிம்களை சிங்கள பௌத்த மக்களின் எதிரிகளாகவும் இந்நாட்டின் இறைமைக்கும் சிங்கள பௌத்த மக்களின் வளர்ச்சிக்கும், அவர்களின் வழிபாட்டுக்கும் முஸ்லிம்கள் தடையாக இருப்பதாகவும், அடிப்படைவாதத்தை உருவாக்க முயற்சிப்பதாகவும் என்ற பிழையான புலக்காட்சியை  ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை காணக்கூடியதாகவுள்ளது. 
முஸ்லிம்;களுக்கு எதிராக 2012ஆம் ஆண்டு மே மாதம் குருநாகல் பள்ளிவாசலில் தொடங்கிய கடும்போக்காளர்களின்; கடும்;போக்கு வெறுப்புணர்வு பேச்சுக்களும், எச்சரிக்கைகளும், அறிக்கைகளும் இன்னும் ஓய்ந்துவிடவில்லை என்பதை ஒரு சில சம்பவங்கள்; நிரூபித்துக்கொண்டிருக்கின்றன.

கடந்த ஆட்சியில் கடும்போக்காளர்களினால்; ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. ஆனால், அதற்கெதிராக எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆட்சியிலும், இவ்வாட்சிக்கால வருடங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராக 100க்கும் அதிகமான தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சட்டமும், சட்டத்தை நிறைவேற்றுபவர்களும் ஒரு சில சம்பவங்களுக்கு எதிராகச் செயற்பட்டாலும் பல சம்பவங்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது  இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் ஆதங்கமாகவேவுள்ளன.

முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலுள்ள ஒரு சிலர் புரிகின்ற தவறுகளுக்கும், பிழைகளுக்கும், குற்றங்களும் ஒட்டுமொத்த சமூகமும் குற்றமிழைத்ததாக, தறிழைத்ததாக, பிழை செய்ததாக  இதர சமூகங்களின் மத்தியில் போலியான புலக்காட்;சிகளை தோற்றுவித்து சுயநலன்களை வெற்றிகொள்வத்கு ஒரு சில அரசியல்வாதிகளும் அவர்களின் சகாக்களும் முயற்;சித்து வருவதையும் காண முடிகிறது. 

முஸ்லிம்கள் தவிர்ந்த இதர சமூகத்தின் மத்தியில் இடம்பெறுகின்ற அல்லது புரிகின்ற குற்றங்களை பொருட்டாகக் கொள்ளதாக அதற்கு பெயரிடாத  கடும்போக்கு அமைப்புக்கள். முஸ்லிமகள்; சிலரினால் புரிகின்ற குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள், அடிப்படைவாதத்தை இந்நாட்டில் உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்று பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் இனவாத அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக தெரிவித்து வருவது தொடர்பில், பதவி பட்டங்களுக்காக கனவு கண்டும் பேரம்பேசிக் கொண்டுமிருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் உரிய பதில்களை வழங்க வேண்டும் என்பது முஸ்லிம் சமூகத்தின் அவவாகவும், எதிர்பார்ப்பாகவுமுள்ளன.

எவ்வித பாரிய குற்றமுமிழைக்காத இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்பட்டுக்கொண்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் கடும்போக்காளர்கள் இந்நாட்டுக்கு பேரிடரை ஏற்படுத்தும் போதைபொருள் வர்த்தகர்களின் செயற்பாடுகள் இந்நாட்டை போதைபபொருள் வர்த்தகத்தின் கேந்திர தளமாக மாற்றிக்;கொண்டிருப்பது தொடர்பில் மௌனம் காத்து வருவதையும் அவதானிக்க முடிகிறது. இந்நிலையில், இந்நாட்டு முஸ்லிம்கள்  தொடர்பான தவறான புலகட்சியை ஏனையவர்களிடமிருந்து இல்லாமல் செய்வதற்கு நிதானத்துடன் செயற்பட வேண்டிய காலத்திற்குள் முஸ்லிம்கள் தள்ளப்பட்டிருக்கிறாhர்கள். 

நிதானமும் செயற்பாடுகளும்
சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக இனவாதத்தின் இன அழிப்பு நடவடிக்கையாக 1915ல் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான  கலவரமும் 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஜுலைக் கலவரமும்; வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது.

அழிவுகள் பலவற்றை எதிர்கொள்ளச் செய்த இவ்விரு ஆண்டுகளிலும் இடம்பெற்ற இவ்வினக்கலவரங்கள் அக்காலங்களிலிருந்த அரச இயந்திரங்களின்; ஆசிர்வாதங்களுடனேயே நடைபெற்றிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அவ்வாறானதொரு நிலைமை உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு சமகாலத்தில் ஒவ்வொரு முஸ்லிமையும் சார்ந்தது. இந்நாட்டின் சட்டத்தின் மீது இறுதி வரை நம்பிக்கை வைத்து சட்டத்தினூடாக நமது இருப்பையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு நம்மால் முடிந்த முயற்சிகளை முன்னெடுப்பது ஒவ்வொரு துறைசார்ந்தோரின் பொறுப்பாகவுள்ளது. 

பிரபல்யத்தையே மூலதனமாகக் கொண்டு செயற்படும் அரசியல் தலைமைகள் மற்றும் தனிநபர்களிடம் இந்த அசாதாரண சூழ்நிலையிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்கும் பொறுப்பை முழுமையாக வழங்காது சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் சமகால இச்சூழ்நிலை தொடர்பில் விழிப்படைவதும், விழிப்புணர்வூட்டப்படுவதும் அவசியமாகும்.

பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் தனித்துவ இனமான முஸ்லிம்களின் அரசியல், சமூக, பொருளாதா,  கல்வி, கலாசார, மத, பண்பாட்டு, வர்த்தக நடவடிக்கைகள் பிற  சமூகத்தினர் மத்தியில் குறிப்பாக இனவாதிகள் மத்தியில் காணப்படும் முஸ்லிம்கள் குறித்தான பிழையான புலக்காட்சிகளை விருத்தி செய்யாது சரியான புலக்காட்சியை ஏற்படுத்தக் கூடியதாக அமைய வேண்டும். அதற்கான மாற்றங்கள் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். பணத்திற்கும் பதவி பட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கி அதற்காக நேர காலங்களை செலவழித்துக் கொண்டு மாற்றாந்தாய் மனப்பாங்குடன் முஸ்லிம்கள் செயற்படுவார்களேயானால் எதிர்காலமென்பது சூனியமாகவே அமையும் என்பதை முன்கூட்டி நினைவூட்ட வேண்டிய தேவையுமுள்ளன.

இருப்பினும், முறையற்ற முறையில், நிதானமிழந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள், செயற்பாடுகள் இனவாதத்தின் தீயிற்கு முஸ்லிம்களை இரையாக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆதலால், இனவாதத்திற்கு எதிராக நாம் முன்னெடுக்கின்ற எத்தகைய நடவடிக்கையாக இருந்தாலும் அதன் சமகால, எதிர்கால விளைவுகள் எத்தகையதாக இருக்கும் என்பதை சுய விசாரணைக்கு உட்படுத்தி நிதானத்துடன் செயற்படுவது  காலத்தின் அவசியமாகவுள்ளது.

-எம்.எம்.ஏ.ஸமட்

No comments:

Post a Comment