காபீர் - முஸ்லீம் - முஃமீன்: தர்க்கம்! - sonakar.com

Post Top Ad

Friday 21 September 2018

காபீர் - முஸ்லீம் - முஃமீன்: தர்க்கம்!


சூரியனுக்கு மிக அண்மையில் சென்று அதன் நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக ஒரு விண்கலம் அமெரிக்காவில் இருந்து ஏவப்படதையும் அது 7 வருட பிரயாணத்தில் சூரியன் பற்றியும் அதன் சுற்றாடல் பற்றியும் மனிதனுக்கு தகவல் அனுப்பவுள்ளது என்ற விடயம் பற்றியும் அனேகமாக அனைவரும் அறிந்திருப்பீர்கள். 

இத்தகைய ஆராய்ச்சிகளை  மேற்கு நாடுகளும், குறிப்பாக அமெரிக்காவும் செய்ய இஸ்லாமிய நாடுகள் என்றறியப்பட்ட நாடுகள் தங்களுக்கு புரியாத ஏழு வானங்களைப் பற்றி ஏதோ சொலிக் கொண்டிருக்கின்றன. ஆசியா, ஆபிரிக்க நாடுகளில் இருந்து வீடுப் பணிப்பெண்களை இறக்குமதி செய்வதை விடுத்து அரச அனுசரணையுடன் விஞ்ஞானிகளை இறக்கி வின்வெளி ஆராய்ச்சி துறையில் கால் பதிக்கலாம். ஆகக் குறைந்தது மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்தாவது குர்-ஆன் கூறும் விஞ்ஞான தரவுகளை உறுதிசெய்து கொள்ளும் முகமாக  காரியமாற்றுவது பற்றியும் கூட சிந்திக்கலாம்.  ஆனால் அசந்தர்ப்பவசமாக அவை பற்றிய  எந்த அக்கறையும் இல்லாம்ல் இல்லாமல் மேற்கு நாட்டான் ஒருவன் இந்த மனித இனதுக்கு நல்லவைகளை இட்டுச்சென்றாலும் அதை ஏற்றுக்கொள்ள முன், அதற்காக அவனை பாராட்ட முன் அவன் காபிரா இல்லையா என்ற ஆராய்ச்சி செய்வதிலும்  அது தொடர்பாக பத்வா(தீர்ப்பு) சொல்வதிலும் காலத்தை செலவிடுகின்றோம். ஆகவே இந்த அர்த்தமற்ற நடவடிக்கை தொடர்பாக ஒரு சரியான பர்வையை நோக்கிய பயணத்துக்கான ஒரு சிறு முயற்சியே இது.   
  


தர்க்கம் என்றவுடன்  நம்மில் பலர் முகம் சுழிப்பர், இது தேவையில்லாத, இஸ்லாம் விரும்பாத விடயம் என்று. இதற்கு அடிப்படை காரணம் தர்க்கம் என்ற ரீதியில் குழப்பம் விளைவிக்க முயலலும், சண்டை சச்சரவு என்று விடயங்கள் புதிய உருவம் எடுப்பதான நம் அனுபவம். ஆனால் இதை இஸ்லாம் ஊக்குவிக்கின்றது அல்லது ஆகக் குறைந்தது ஒருகுறிப்பிட சூழ்நிலையில்  அந்த தர்க்கம் எப்படி அமைய வேண்டும் என்று இஸ்லாம் சொல்லித் தருவதை நாம் இலகுவில்  மறந்துவிடுகின்றோம். இதில் இஸ்லாத்தின்  நிலைப்பாட்டை மிக இலகுவாக சொல்வதானால் "அழகிய முறையில் தர்கம் புரியுங்கள்" (குர்-ஆன் 20:44)என்ற உத்தரவை ஆதாரமாகக் கொள்ளலாம்.  

இஸ்லாமிய போதனைகள்  என்பது ஒட்டுமொத்தமாக புத்தக வடிவில் தலைப்புக்கள் இடப்பட்டு ஓரே நேரத்தில்  நமக்கு இறைவனால் இறக்கிவைக்கப்படவில்லை என்பதை  நாம் அறிவோம்.  அதைவிடவும்  அவை சம்பந்தா சம்பந்தம்மில்லாத சந்தர்பங்களில் தேவையில்லாமலும் இறக்கப்படவில்லை என்பதையும்  நாம் அறிவோம்.   ஆகவே  நாம் சிந்திக்க வேண்டியது; கேள்விகள் எழும்போது அந்த கேள்விகளுக்கு விடையாக, விளக்கமாக  குர்-ஆன் இறக்கப்பட்டது என்ற அம்சமாகும்.  ஆனால் இப்படி எழுப்பப்பட்டவை எப்போதும் வெறும் கேள்விகளாகத்தான் இருந்தனவா என்ற புரிதலும் இங்கு அவசியமாகும். அதே போல் இஸ்லாமிய போதனைகள் எப்போதுமே "ஹராம், ஹராம்" என்றும் ஆரம்பிக்கப்படவில்லை.  பரிணாம வளச்சி என்ற ஒருவகை இயங்கியல் போக்கிலேயே அவை "ஹராம், ஹலால்" பகுப்புக்கு  உட்படுத்தப்பட்டது. ஆகவே இன்நிலையில் ஏற்பட்ட கருத்துக் குழப்பங்கள் அல்லது புரிதல் குழப்பங்கள் ஊடாக சர்ச்சைக்கள் கிளம்ப அவைகளை நிவர்திக்கும் முகமாகம் அறிவுறுத்தல்கள் இறங்கின என்பது நம் அடிப்படை புரிதலுக்கு உட்படவேண்டிய விடயமாகும். 

இந்த வகையில்  மேலுள்ள காபீர், முஸ்லீம், முஃமீன் என்ற பதங்களை எடுப்போமேயானால் நடைமுறையில்  இவை குழப்பமில்லாதவையாக தெரிகின்றன. சிறுபிள்ளைகளும் கூட  காபீருக்கும், முஸ்லீமுக்கும் உள்ள வேறுபாட்டை கூறிவிடுவார்கள். ஆனால்  இந்த "சொற்கள்" அவ்வளவு இலகுவானதல்ல என்பதைவிட இவை பலவிதமான குழப்பகரமான மனப்பதிவுகளை ஏற்படுத்தி   நம்மை சிக்கலில் சிக்கவைத்துள்ளதையும்  நாம் இன்னும் அறியாதவர்களாக இருக்கின்றோம் என்ற  என் பார்வையின் வெளிப்பாடு இந்தப் பதிவின்.அடுத்த நியாயம்.

இது சமகாலத்து சிந்தனைவாதிகளில் ஒருவரான பேராசிரியர் தாரிக் ரமதான் போன்றோரின் ஆளமான பார்வையை அல்லது அவர் மேற்கோள் காட்டும் இஸ்லாமிய அறிஞர்களின் இன்னும் ஆழமான  பார்வைகளை பிரதிபலிக்க வேண்டும்  என்ற எந்த கட்டுப்பாடும் இல்லாமல்   சராசரி (முஸ்லீம் என்று  நம்பும்) மனிதனின் ஆய்வறிவுக்குட்டப்பட விதத்தில் இதை தர்க்கிக்க விரும்புகின்றேன். இது  பிழையாக அல்லது சரியாக அல்லது இரண்டும் கலந்ததாகக் கூட இருக்கலாம். ஆகவே அதையும் தர்க்கித்தே உறுதி செய்ய வேண்டியுள்ளது என்ற என் நிலைப்பாட்டில் இதை முன்வைக்கின்றேன். 

" ஒர் ஆன்மாவின் சக்திக்கப்பால்  இறைவன் அதை சோதிப்பதில்லை" என்ற ( அத்தியாயம் 2 வசனம் 286) குர்-ஆன் வசனம் நமது ஆய்வறியும் புரிதலுக்கு ஒரு வரம்பையும் அதை அடியொட்டிய நமது செயல்பாடுகளுக்கு ஒரு அங்கீகாரத்தையும் தருகின்றது. இருந்தும் அடிப்படை இஸ்லாமிய விழுமியங்கள் மீறப்பட முடியாதென்ற அளவுகோலை  நாம் அமைத்துக் கொண்டே  நம் புரிதலை விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவை இங்குள்ளதை மறுதலிக்க முடியாதுள்ளது.  

காபீர் யார் என்று  முஸ்லீம்( என்று அறியப்பட்ட) ஒருவரைக் கேட்டால் பட்டென வரும் பதில் முஸ்லிம் அல்லாத அனைவரும் என்பதாகும். அதை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள "முஸ்லீம்" என்றால் யார் என்றால் அதற்கான உடனடி பதில் இஸ்லாம் என்ற சமயத்தை பின்பற்றுபவர்கள் என்பதாகும். இலகுவன பதிகள், இதுவரை  அனேகமாக எல்லாரும் சொல்லி வந்த பதில்கள். ஆனால் இந்த வரையறைதான் பிரச்சினைகளை தோற்றுகிப்பதாக எனக்குப் படுகின்றது. காரணம் "பிறக்கும் எல்லா குழந்தைகளும் முஸ்லீம்களாகவே பிறக்கின்றனர், அவர்களின் பெற்றோர்களே அவர்களை,..." என்ற ஒரு ஹதீதை ( சஹி முஸ்லீம் கிரந்தம் 033 இலக்கம் 6426) ஆதாரம் காட்டமுடியும். ஆக முஸ்தபாவும், முஹைபாவும் மாத்திரமல்ல, குமரனும், தேவியும், மெனிக்கேயும், பண்டாவும், டேவிட்டும், ஸ்டெல்லாவும் கூட முஸ்லீகளே. 

அப்படியனால் அவர்களின் பெற்றோர்கள் எப்படி அவர்களை ஏதோவாக மாற்றுகின்றார்கள்? அந்த மாற்றம் பெற்றோரின் வெறும் சந்தோசத்துக்காக செய்யப்படும் சமய கிரிகைகளின் அடிப்படையைக் கொண்டது எனலாம். காரணம் ஒரு ஆண் குழந்தை விருத்தசேதனம் செய்யப்பட்டு இஸ்லாமியனாகவோ அல்லது ஞானஸ்நானம் கொடுக்கப்படுவதால் குழந்தைகள் கிறிஸ்தவராகவோ அல்லது  துவசம் கழித்து தலை முடி வெட்டப்படுவதால் சைவர்களாகவோ ஆவதில்லை காரணம் அந்த சின்னஞ் சிறார்களும் தம் தொடர்பாக நடத்தப்படும் சமய கிரிகைகள் என்னவென்றோ அது ஏன் அவ்வாறு செய்யப்படுகின்றன என்றோ  தெரியாதவர்களாகவே இருக்கின்றனர். ஆக இவை பெற்றோரின் சந்தோசத்துக்காக அல்லது தமது சமயம் தொடர்பான கிரிகையை செய்துவிட்டோம் என்ற மனத்திருப்திக்காக செய்யும் விடயமே அல்லாமல் அது நிரந்தரமான ஒரு செயல் அல்ல. அல்லது அந்த குறிப்பிட்ட குழந்தையின் மனம்மாறா தம்மையை  பறைசாற்றும் நிகழ்வுகள் அவை என்றும் சொல்ல முடியாதுள்ளது. 

உதாரணமாக முன்னை நாள் முஸ்லீம்(Ex Muslim)என்று தம்மை அழைப்போரைப் பாருங்கள்.  யார் அவர்களை மாற்றியது அல்லது இஸ்லாமியர்களாக இருந்து கிறிஸ்தவராக மாறியயோர் விடயத்தில் அந்த மாற்றத்துக்கு யார் காரணம்?  சரி பெளத்தராக, கிறிஸ்தவராக , சைவராக இருந்து அல்லது சமயமே இல்லை என்றிருந்து இஸ்லாத்தை பிற்காலதில் ஏற்போரை யார் அப்படி மாற்றியது? பெற்றோரா இல்லையே. ஆக ஒரு மனிதன் எப்போது எதிலோ நம்பிக்கை கொண்டு தன்னளவில் மாற்றதை ஏற்படுத்திக் கொள்ளும் போது அவன் அதுவாக மாறுகின்றான்.  

அதாவது பெளத்தனாக, சைவனாக, கிறிஸ்தவனாக அல்லது நாத்திகனாக மாறுகின்றான். அப்படியானால் ஒருவன் எப்போது முஸ்லீமாக மாறுகின்றான் என்றால் மனிதர் எல்லாரும் முஸ்லீமாகவே பிறந்துள்ளதால் அவன் மீள்முஸ்லீமாகுதல் என்ற கேள்விக்கே இடமில்லை என்பது என் புரிதல். மாறவேண்டிய தேவையில்லை, ஆனால் மாற்றத்தை வேண்டி நிற்பவர் இஸ்லாமியனாக மாறலாம். ஆக முஸ்லீமாக பிறத்தல் வேறு, இஸ்லாமியனாக இருத்தல் அல்லது மாறுதல் வேறு என்பது எனது புரிதல். 

இந்த அடிபடையில் எப்படி முஸ்லீமாக  மனிதன்  பிறக்கின்றான் என்ற நியாயமான கேள்விக்குக் பதில் கண்டாக வேண்டும். இறைவன் மனிதனை தன் பிரதிநிதியாக உலகத்தில் படைதுள்ளான் என நாம் அறிகின்றோம்(குர்-ஆன் 17:70). மனிதன் இறைவனின் பிரதிநிதி எனும் போது அவனுக்கு இறைவன்  தன் சக்திகளில் பலதை சிறு அளவில் கொடுத்து அதை சரியான பயன்பாட்டுக் குற்படுத்துமாறும் பணித்துள்ளான். ஆகவே இறைவனின் இணையற்ற அன்பின் சிறு பகுதியை பெற்ற நாம் அதை சக மனிதன் உட்பட சகல உயிரினங்கள் மீது செலுத்தக் கூடிய வல்லமை பெற்றவர்களாக இருகின்றோம். அப்படியே இறைவன் நமக்கு தந்துள்ள, நீதி செலுத்துதல் உள்ளிட்ட  அனைத்து சக்திகளுமாகும். இது ஆக்கல் முதல் அழித்தல் வரை நீள்கின்றது. இறைவன் நீதி தவராமல் பாவிக்கும் தன் எல்லையில்லா சக்திகளை நாமும்  நீதி தவறாமல் பவிப்போமானால் நாம் என்றும் இறைவனுக்கு முற்றாக அடிபணியும் முஸ்லீமாவோம்.  இறைவனால் நமக்கு தரப்பட்டுள்ள சக்திகளை நீதி தவறி தாறுமாறாக பாவிப்பதால்  இறைவனின் கடளையை மீறி காபிராகும் நிலை ஏற்படுகின்றது. ஆக  நீதி மறந்து நன்றி கெட்ட தனமாக நடக்கும் ஒருவர் காபீராகின்றார்( குர்- ஆன் 26:19, 20- இறைதூதர் மூஸாவுக்கும்- பிரவூனுக்கும் இடையில் நடக்கும் சம்பாசனையை அவதானிக்கவும்)  

குர்-ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட 25 இறைத் தூதர்களையும் இன்னும் பெயர் குறிப்பிடப்படாத 123,975  இறைத்தூதர்களையும் நாம் முஸ்லீம்கள் என்றே கருதுகின்றோம். அதாவது தனது படைப்பாளனுக்கு முற்றாக கட்டுப்படவர், அடிபணிந்து நடப்பவர் என்கின்றோம். ஆகவே அந்த இறைத்தூதர்களை பின்பற்றிய சந்ததியினரும் முஸ்லீம்கள் என்ற வரையறைகுள்ளேயே வரவேண்டும். அப்படியில்லை என்றால் அனைத்து இறைதூதர்களும் அல்லது ஆகக் குறைந்தது வேதம் கொடுக்கப்பட்ட, மூஸா(Moses), தாவூத்(David), ஈஸா(Jesus) ஆகியோர் முஸ்லீம்களே என்ற நம் வாதம் வலுவிழக்கும்.

ஆக இறைவன் ஒருவன், முஹமது (ஸல்) இறைவனினால் வேதம் அளிக்கப்பட கடைசி தூதர் என்ற பிரதிக்ஞை(declaration) செய்தவர் மாதிரம்தான் முஸ்லீமென்றால், இறைதூதர் மூஸா, தாவூத், ஈஸா என்போர் அப்படியான பிரதிக்ஞை செய்திருக்க வாய்ப்பில்லை. ஏன் அவர்களை பின்பற்றியோருக்கு முஹமத்(ஸல்) பற்றிய எந்த அறிவும் இருந்திருக்க வேண்டிய தேவையும் கூட இல்லை. அவர்கள் முறையே அவரவர் மொழிகளில் இறைவன் ஒருவன் மூஸா, தாவூத், ஈஸா இறைவனின் தூதர்கள் என்று மாத்திரமே பிரதிக்ஞை செய்ய பணிக்கப்படிருப்பர். ஆகவே இஸ்லாம் என்ற தூதை பின்பற்றுபவர் மாத்திரமல்ல  தெளராத்,ஸபூர், இஞ்ஜில் என்ற தூதை பின்பற்றியோரும்  முஸ்லீமாகவே இருந்திருப்பர்.  

மேலே சொன்னவைகள் ஒரு வேளை சரியாக இருக்கலாம் ஆனால் முஹம்மதின் வருகைக்குப் பின்னால் அவரை எல்லாரும் ஏற்றாக வேண்டும் அப்படி ஏற்காதவர் காபீர் என்ற வாதத்தை சிலர் முன்வைக்கலாம். ஆனாலும் அங்கும் சின்ன சிக்கல் இருப்பது போல் தெரிகின்றது. காரணம் இறைவனுக்கு இணை வைக்கும் செயலைத்தவிர தான் அனைத்தையும் மன்னிப்பதாக இறைவன் மனிதனுக்கு வாக்களித்திருக்கும் போது முஹம்மதை இறுதி இறைத்தூதராக ஏற்றல் அல்லது மறுத்தல் என்ற அம்சம் அதில்  அடங்கவில்லை. அதே நிலைப்பாடே வேதம் கொடுக்கப்பட்ட மற்றைய இறை தூதர்கள் காலத்திலும் இருந்திருக்கும். ஆக இஸ்லாமியனாக இருக்க இறைத்தூதர் முஹம்மதை ஏற்கும் விடயம் அவசியமாக இருக்கலாம். ஆனால் முஸ்லீமாக, அதாவது இறைவனுக்கு முற்றும் கட்டுப்பட்டவனாக இருப்பதற்கு இது அவசியமா என்பது கேள்விக் குறியே.  இந்த அடிப்படையிலேயே காபீர், முஸ்லீம் என்ற பகுப்புக்கள் குழப்பதுக்குள்ளாகின்றன. இதை இன்னுமொரு சின்ன உதாரணத்தின் மூலமும் விளங்க முயலலாம். 

அதாவது இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பவர்தான் முஸ்லீம் என்றால்  ஒரு நாட்டின் சட்ட திடங்களுகளை மீறி நடப்பதை ஒரு பக்கத்தில் வைத்தாலும், பஞ்சமா பதகங்களில் ஈடுபடுவோரை, பயங்கரவாத்தின் மூலம் உலகத்தில் குழப்பம் விளைவிப்போரை  அவர்கள் அறபு சாயல் கொண்ட பெயர்களை தாங்கியுள்ளார்கள் என்ற ஒரே காரணத்துக்காக காபீர் என்று அழைப்பதை தகிர்க்க முயல்கின்றோம். அதே நேரம் சராசரி மனிதனிடம் எதிர்பார்க்கப்படும் அனைத்து விடயங்களையும் கைக் கொண்டு சக மனிதனுக்கு தீங்கு செய்யாமலும் வாழும் மனிதனை அவன் ஏற்றுள்ள பெயருக்காக இவன் முன்னையவனைவிட சிறந்தவனாக இருப்பினும் காபீர் என்றழைக்க தயங்குவதில்லை.  ஆக நல்லவனை கெட்டவனாகவும், கெட்டவனை நல்லவனாக்கும் நமது முயற்சிக்கு புனித குர்-ஆனை துணைக்கிழுத்து தொடர்ந்தும் நாம் குழப்பதை ஏற்படுத்துபவர்களாகவே இருகின்றோம். ஆகவே  இந்த குழப்பதில் இருந்து நாம் விடுபட வேண்டுமாயின் யரையும் காபீர் என்று அழைப்பதை நிறுத்தியாக வேண்டும். யாரும் எவருமாக இருந்துவிட்டு போகட்டும். மற்றோரின் இறையச்சத்தை, இறையன்பை  கணக்கிடவும் அளவிடவும் அந்த அடிப்படையில் மனிதனை வரையறுக்கவும் இறைவன் நமக்கு அதிகாரம் அளிக்கவில்லை என்ற அறிவு இங்கு அவசியமாகின்றது.            

மேலுள்ள குழப்பம் போலவே முஃமீன் என்ற வார்த்தை தொடர்பாகவும் நமக்கு பிரச்சினை உள்ளது. அனேகமா முஸ்லீம் = முஃமீன் என்று கருதுவோர் நம்மில் நிறையவே காணப்படுகின்றனர். முஸ்லீமாக பிறக்கும் மனிதன் தன் நேர்த்தியான வாழ்வொழுங்கினால் அடையும் நிலைதான் முஃமீன். ஆக இஸ்லாத்தின் ஊடாக சில கிரிகையின் மூலம் பூரண முஸ்லீமாக தன்னை வரையறுத்துக் கொண்ட மனிதன் முஃமீனாதல்  என்ற விடயத்தையும் தனியுரிமையாக பார்ப்பதும் எந்தளவு நியாயமானது என்று தெரியவில்லை. 

அனத்து மனிதரும்  ஒரே மூலத்தில் இருந்தே இறைவனால் படைக்கப்பட்டதும்(குர் ஆன் 4:1),  பல்வேறுபட்ட வித்தியாசங்களுடன் படைக்கபட்டதும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவே  என நமக்கு அறிவுறுதப்பட்டதை நாம் சரியாக புரிந்து கொள்வோமானால் தேடித் தேடி  சக மனிதனுக்கு காபீர் பட்டம் வழங்குவதை உடனேயே நிறுத்திவிடுவோம். வெறுமனே இஸ்லாமிய கிரிகைகளை கைக் கொள்வதின் மூலம் மூஃமீனாக முடியும் என்ற நம் தப்பபிராயத்தையும்z களைந்து இறைவனின் தூதின் நோக்கதையறியவும் அதன் படி செயல்படவும் முயற்சிப்போம்.

- Mohamed SR. Nisthar

No comments:

Post a Comment