முஸ்லிம்களின் கட்சி அரசியல்: புரட்டப்படும் பக்கங்கள்! - sonakar.com

Post Top Ad

Sunday 5 August 2018

முஸ்லிம்களின் கட்சி அரசியல்: புரட்டப்படும் பக்கங்கள்!


சுதந்திர இலங்கையின் வரலாற்றில் அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்த சமூகமாகவும்  இனவாதத்தின் பலிக்கு விலைகொடுத்த சமூகமாகவும் சிறுபான்மை சமூகங்களில் ஒன்றான முஸ்லிம் சமூகம் காணப்படுகிறது. இந்நாடு அந்நியர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்னரும்,  பின்னருமான காலகட்டங்களில் அவ்வப்போது பல நெருக்கடிகளை முஸ்லிம்கள் எதிர்நோக்கியிருக்கிறார்கள்.


இவ்வாறான நெருக்கடிமிக்க கால கட்டங்களின்போது அவற்றிற்கெதிராக குரல் கொடுக்கவும் போராட்டங்களை முன்னெடுக்கவுமென முஸ்லிம்கள் மத்தியில் கட்சிகளும், இயக்கங்களும், உருவாகியிருக்கின்றன. இருப்பினும்;, இந்நிறுவனங்களினதும் இந்நிறுவனங்களுக்கு தலைமை விகித்துச் செயற்பட்டவர்களினதும் செயற்பாடுகள்; மக்கள் விரும்பிய திசையில் செல்லாது திசைமாறியது,  அதனால், அத்தலைமைகள், கட்சிகள் மற்றும்;, இயக்கங்கள் மீது  மக்கள் வைத்திருந்த நம்பிக்கை வீணடிக்கப்பட்டன.

இந்நிறுவனங்களினதும் அவற்றின் தலைமைத்துவங்களினதும் உருவாக்கம் எந்தப் புள்ளியிலிருந்து  ஆரம்பிக்கப்பட்டதோ அந்தப்புள்ளியிலே முடிவடைந்தது. சமூக நலனில் அக்கறை செலுத்துவதாக காட்சியளித்து சுய இலாபத்தை இலக்காகக் கொண்டு செயற்பட்ட இத்தகைய தலைமைகளும், அமைப்புக்களும் முகவரியைத் தொலைத்திருக்கின்றன. அவ்வாறு முகவரி தொலைக்கப்பட்;ட கட்சிகளும், இயக்கங்களும,; தலைமைகளும் மீளவும் எழுச்சிபெறவில்லை என்பது வரலாற்று உண்மைகளாகும்.

இவ்வரலாற்றுப் பின்னணியானது முஸ்லிம்களிடையே தனித்துவமான அரசியல் தலைமைமைத்துவத்துக்கான வெற்றிடங்களை அவ்வப்போது ஏற்படுத்தியிருக்கிறது. உண்மைக்குண்மையாக, மக்களது நலனில் அக்கறைகொண்டு செயற்படக் கூடிய தனித்துவமிக்க தலைமைத்துவத்துக்கான தாகம் காலத்துக்குக் காலம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. அத்தாகம் கிழக்கு மக்களிடையே  அதிகரித்துக்குக் காணப்பட்டதையும் வரலாற்றில் அவதானிக்க முடிகிறது.. 

தலைவர்கள் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக்கொண்டு அல்லது தங்களின் கருத்துக்களுக்கும், செயற்பாடுகளுக்கும் தலையாட்டுகின்றவர்களின் ஆதரவோடு அரசியல் ரீதியாக முஸ்லிம்களைப்; பகடைக்காய்களாகக் கருத்திச் செயற்பட்டவர்களின்; செயற்பாடுகள் மக்களைத் திருப்திப்படுத்தவில்லை. காலத்திற்குக் காலம் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்படும் அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்பட முடியாதவர்களாகவும், பேரம்பேசும் சக்தி இழந்தவர்களாகவும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் செயற்பட்டிருப்பதோடு முஸ்லிங்களின்  அபிலாஷைகளையும நிறைவேற்றி வைக்கும் கையாலாகாத நிலையும் காணப்பட்டிருக்கிறது. . 


இவ்வாறான நிலைதான் தென்னிலங்கை முஸ்லிம்களிடையே மாத்திரமின்றி அரசியல் அதிகாரத்தை வழங்கக் கூடிய வாக்குச் செறிவைக் கொண்டுள்ள கிழக்கிலும் காணப்பட்டது.  மக்களின் ஆணைகளையும், அபிலாஷைகளையும் அடகு  வைத்து தங்களது சுய இலக்குகளை தலைமைகளும,; அத்தலைமைகளின் விசுவாசிகளும் அடைந்து கொண்டிருந்த நிலைமையிலேதான் கிழக்குக்கான தனித்துவ அரசியல் தலைமைத்துவத்தின் அவசியம் உணரப்பட்டும் அதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், அவற்றுக்கு தலைமைத்துவம் வழங்குவது யார்?  மாற்றம் உருவாக வேண்டும் அதை உருவாக்குவது யார்?  பூனைக்கு மணி கட்டுவது அவசியம். யார் அந்த மணியைக் கட்டுவது என்ற கேள்விகள் நீண்ட காலமாக கிழக்கு மக்கள் மத்தியில் தொடுக்கப்பட்டு வந்தபோது  மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் என்ற  தலைமையினால் அக்கேள்விகளுக்கு விடைகொடுக்கப்பட்டது

வரலாறு சொல்லும் கதை

தமது பிரதிநிதித்துவ அரசியல் அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்காக கிழக்கு மக்களை பச்சை என்றும் நீலமென்றும் அன்றைய அரசியல் தலைமைகள் பிரித்துவைத்தமை மக்களிடையே வெகுவாக உணரப்பட்டதும், அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுமான செயற்பாட்டு வடிவங்கள் முஸ்லிம் காங்கிரஸ் எனும் பெரும் அரசியல் சக்தியை கிழக்கு மற்றும் வடக்கு மக்களின் ஆதரவுடன் மர்ஹும் அஷ்ரபினால்  ஸ்தாபிக்க முடிந்ததோடு அவற்றை உரமூட்டி வளர்க்கவும் செய்தது.

மர்ஹும் அஷ்ரபின்  அரசியல் பயணம் முடிவடைந்த 2000ஆம் ஆண்டு காலப்பகுதி வரை  வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பெரும்பான்மை முஸ்லிம்களை முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் கொடியின் கீழ் தொடர்ச்சியாக அவரால் ஒன்றிணைக்க முடிந்தது. இருப்பினும்,; அவரின் மரணம் எதிர்பாராத தலைமைத்துவ வெற்றிடத்தை முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம்களிடையே உருவாக்கியது என்ற உண்மையை மறுக்க முடியாது.

இழக்கப்பட்ட உரிமைகளையும் பெறவேண்டி உரிமைகளையும் பெற்றெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கொள்கைகளை மறந்த நிலையில், தலைமைத்துவ போட்டிகளை எதிர்கொண்டதுடன்; தலைமைத்துவம்; கேட்டும் பெறப்பட்டது. அவ்வாறு கேட்டுப் பெறப்பட்ட தலைமைத்துவம் ஏறக்குறைய இரண்டு தசாப்பதங்களாக முஸ்லிம் காங்கிரஸுக்கு தலைமைதாங்கிய போதிலும,; முஸ்லிம் காங்கிரஸுக்கு தலைமை தாங்கி அக்கட்சியை ஏறக்குறைய 14 வருடங்கள் ஆட்சி அதிகாரத்துடன் வழிநடத்திய மறைந்த அஷ்ரப் சாதித்த சாதனைகளில் ஒன்றையாவது 18 வருட கால தலைமையினால் சாதிக்க முடியவில்லை என்ற ஒப்பீட்டுப் பார்வையானது மனக்கிலசத்தை வடக்கு கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களில் நிலவச் செய்துள்ளதை மறைக்க முடியாது. இந்த ஒப்பீட்டு சமூகப்பார்வையானது மேலும் பல அரசியல் தலைமைகளை வடக்கு, கிழக்கு முஸ்லிம்; சமூகத்துக்குள் உருவாக்க வழிகோலியிருக்கிறது  என்ற வரலாற்றுக் கதையையும் நிராகரிக்க முடியாது.

அஷ்ரபின் புரட்டப்படும் பக்கங்கள்

இலங்கையின் 9.7 வீத முஸ்லிம்களின் எண்ணிக்கை வீதத்தில் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் மாகாணம் கிழக்கு என்பது தெரிந்தது. அதனால்தான், இலங்கையின் சுதந்திரத்தில் பங்கெடுத்த முஸ்லிம்களின் தலைவர்கள் என போற்றப்படும் சேர் மாக்கான் மாக்கார், சேர் ராசிக் பரீட், பதியூதீன் மஹ்மூத் போன்றவர்கள் தங்களது பிரதிநிதித்துவ அரசியல் அதிகாரத்துக்காக கிழக்கில் போட்டியி;ட்டு வெற்றியும் தோல்வியும் கண்டனர். 

அவ்வாறு அரசியல் பிரதிநிதித்துவ அதிகாரத்தை வழங்கக் கூடிய சக்தி கொண்ட கிழக்கு முஸ்லிம்களிடையே அஷ்ரபின் மரணத்தின் பின்னர் ஏற்பட்ட அரசியல் தலைமைத்துவத்துக்கான வெற்றிடம்  இது வரை முழுமைபெற்றதாக நிரப்பப்படவில்லை. கிழக்கு மாகாணத்தின் அரசியல் பலமானது இத்தேசத்தின் ஏனைய மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை குறைந்தபட்சம் நிறைவேற்றியிருக்கிது. கிழக்கு  முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் அஷ்ரபை ஆதரித்து அவருக்கு அரசியல் பலம் கொடுத்ததன் மூலம் அவரால்  முழு முஸ்லிம் சமூகத்துக்குமான உரிமைகளைப் பேரம்பேசி  பெற்றுக்கொள்ள வழிகோலியது.  வரலாறு பேசும் அபிவிருத்திகளை செய்யத் துணை நின்டது. 12 வீகித விகிதாசார வெட்டுப்புள்ளிக் குறைப்பு, தென்கிழக்கு பல்கலைக்கழக உருவாக்கம், ஒழுவில் மீன்பிடித் துறைமுகம் என  உரிமைகளையும் வரலாறு காணாத அபிவிருத்திகளையும் அவரால் செய்து காட்ட முடிந்தது. அஷ்ரபின் பேரம் பேசும் சக்தியின் மூலம் கிடைக்பெற்ற அநுகூலங்கள் எதிர்காலத்தில்; கிழக்குக்கான முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் வலுவுள்ளதாக கட்டியெழுப்பட வேண்டும் என்ற யதார்த்தத்தைப் புடம்போட்டு நிற்கிறது என்பதை நிராகரிக்க முடியாது.

அஷ்ரபின் தலைமையத்துவத்தின் பின்னரான முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துத்தின் செயற்பாடுகள் அதன் நம்பிக்கைத்தன்மை என்பவை ஏற்படுத்திய தாக்கம், அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற இரு அரசியல் கட்சிகளைத் தோற்றுவித்தது. தற்போது மேலும் பல கட்சிகள் உருவாக வழிவகுத்திருக்கிறது.

கட்சி அரசியல்

தேசிய காங்கிரஸின் தலைமைக்கு கட்சி அதிகாரங்களை பரவலாக்குவதற்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை பிரதேச மயப்படுத்துவதற்கும்  காணப்பட்ட இறுக்கமான நிலைமை கட்சித் தலைமையை விட கட்சியை இறுக்கி வைத்துக்கொண்டவர்களில் மீது கிழக்கு மக்களினால் அதிருப்தியை வெளிப்படுத்தியது. குறிப்பாக இந்த அதிருப்தி அம்பாறை மாவட்டத்தில் அதிகமாகக் காணப்பட்டதை கடந்த பொதுத்தேர்தல் எடுத்துக்காட்டியது. ஏறக்குறைய 12  வருட அரசியல் பயணத்தை கொண்ட இக்கட்சியின் செல்வாக்கின்மைக்கு தலைமையை விட தலைமைச்சுற்றியுள்ளவர்களே பொறுப்பேற்க வேண்டுமென்பது பொதுவான கருத்தாகும்.

வடக்கு, கிழக்கு முஸ்லிம்களிடையே அரசியல் கட்சியாகப் பிரிணமித்து ஏறக்குறைய 12 வருடங்களாக அரசியல் பயணத்தைத் தொடர்கின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையின் செயற்பாடுகள் கட்சியை வளர்ப்பதற்காக கட்சி அதிகாரங்களையும், அபிவிருத்தி நடவடிக்கைகளையும,; பதவிகளையும் பரவலாக்கி வழங்கி வருவதுடன் நாட்டின் பல பிரதேசங்களிலும் காலூண்டவும் ஆரம்பித்திருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். கிழக்கு மக்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாக பொதுவாகப் பேசப்படுகின்ற முஸ்லிம் காங்கிரஸின் 18 வருடகால தலைமைக்கு கிடைத்துள்ள அமைச்சில் அல்லது அமைச்சின் நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கிழக்கைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை விடவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமைக்கு கிடைத்துள்ள அமைச்சிலும், அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களிலும் கிழக்கைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் நியமிக்கப்பட்டிருப்பதானது கட்சியை கிழக்கில் பலப்படுத்துவதற்கு அல்லது கட்சி அரசியலை விரைவுபடுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது என்பதை வெளிப்படையாக அவதானிக்க முடிகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 33 ஆயிரம் வாக்குகளைப் பெற்று கட்சியின் நிலைப்பாட்டை நிரூபித்துள்ள மக்கள் காங்கிரஸ்  கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலுpம் அக்கட்சியின் வேர் வடக்குக் கிழக்கில் ஆழப்பதிக்கப்பட்டிருக்கிறது என்பதை கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் வசம் இருந்த பல உள்ளுராட்சி சபைகள் தோல்வி கண்டமை போதுமான சான்றுகளாகும். அத்துடன,; மாகாண சபைத்தேர்தல் புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா நடைபெறும் என்ற சர்ச்சைக்கு இன்னும் விடை காணாத நிலையில் மாகாண சபையிலும் அதிகளவிலான ஆசனங்களை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றும் என்ற கருத்தாடல் இப்போதிருந்தே கிழக்குப் பிரதேசங்களில் ஒலிப்பதையும் அவதானிக்கக் கிடைக்கிறது.

இந்நிலையில் அஷ்ரபின் மரணத்தின் பின்னராக கடந்த 18 வருடங்களில்  ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு மக்களின் அபிலாஷைகளும், விருப்பங்களும், பிரச்சினைகளும் முஸ்லிம் காங்கிரஸிpனால் தீர்த்து வைக்க முற்பட்டவில்லை என்ற மக்களின் ஒப்பிட்டுப் பார்வைக்கம், ஆதங்கங்களுக்கும் மத்தியில் முஸ்லிம் காங்கிரஸின் 28வது பேராளர் மகாநாடு ஞாயிற்றுக்கிழமை(05) கண்டி பொல்கொல்லை மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெறவுள்ளது. 

இற்றைக்கு 18 வருடங்களுக்கு முன்னர் மறைந்த அஷ்ரபின் தலைமையில் பேராளர் மகாநாடுகள் நடைபெறுகின்றபோது அம்மகாநாட்டுக்கு முன்னதாக அஷ்ரபினால் மக்களின் உரிமை மற்றம் அபிவிருத்தி தொடர்பில்  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அல்லது புரிந்த சாதனைகள் அம்மகாநாட்டில் அவரின் பிரதான உரையின்போது முன்வைக்கப்பட்டதாகவும் ஆனால், அவரது மரணத்தின் பின்னர் நடைபெற்ற போராளர் மகாநாடுகளில் அந்த மரபு பின்பற்றப்படவில்லை. அதற்கு காரணம் இக்கட்சியினால் வரலாற்றில் பதியுமளவிற்கு மக்கள் நலன்கள் நிறைவேற்றப்படவில்லை என அஷ்ரபின் அபிமானிகள்; இந்நாட்களில் ஞாகமூட்டிப் பேசுவதை அவதானிக்க முடிகிறது.

நம்பிக்கையும் தலைமைத்துவமும்

இருப்பினும,; தற்காலத்தில் கிழக்கு முஸ்லிம்கள்; மத்தியில் சமகால முஸ்லிம் தலைமைகளின் மீதான நம்பிக்கை ஒப்பீட்டளவில் மறைந்த அஷ்ரபின் தலைமை மீது வைத்திருந்த நம்பிக்கையளவு காணப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவது பொறுத்தமாகும். மர்ஹும் அஷ்ரபின் தலைமைப் பண்புகளிலும், செயற்பாடுகளிலும் கிழக்கு மக்கள் கொண்ட திருப்தியானது  சமகால தலைமைகள் மீது வைத்துக்ககொள்ள முடியாமல் போனமை கிழக்கு மக்களிடையே அரசியல் தலைமைத்துவத்துக்கான தாகத்தை ஏற்படுத்தியிருப்பதை தவறெனக் கருத இயலாது. 

முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமைகளின் ஒப்பிட்டுப்பார்வையில் மக்கள் விரும்புகின்ற மக்கள் நலனில் அக்கறைகொண்டு செயற்படக்கூடிய தலைமை அவசியம் என்ற தாகம் கிழக்கு முஸ்லிம் தொழில்வாண்மைச் சமூகத்தில் தற்போது உருவாகியிருக்கின்ற போதிலும்;, மக்கள் விரும்புகின்ற தலைமை, தலைமைப் பண்புகளைக் கொண்டிருப்பதும் அவசியமாகும். தூரநோக்கோடு ஒன்றை உருவாக்கி அதை அடைவதற்கான செயல் நுணுக்கத்தை விருத்தி செய்து, ஏனையவர்களின் ஆதரவைத் திரட்டி, தூரநோக்கை அடைந்து கொள்வதற்கான செயற்பாட்டை ஊக்கப்படுத்தி. அதன் மூலம் இலக்கை அடைந்துகொள்ளக் கூடிய தலைமைத்துவப் பண்பு ஒரு தலைமைக்கு அவசியமாகும். இந்தப் பண்பின் வழியில்தான் முஸ்லிம் காங்கிரஸும் அஷ்ரபினால் உருவாக்கப்பட்டது.

ஒரு செயல் திறன் மிக்க தலைவர் எதிர்காலம் பற்றிய தூர இலக்கை உருவாக்குவார். அத்தூர இலக்கை நோக்கி இயங்குவதற்கான அறிவுபூர்வமான செயல் உபாயங்களை விருத்தி செய்வார். அவ்வாறு இயங்குவதற்கு அவசியமாகின்ற ஆதரவையும் இணக்கத்தையும் குழு முயற்சியை வழங்கக் கூடிய மிக முக்கியமான அங்கத்தினர்களின் ஒத்துழைப்பையும் திரட்டுவார். அவற்றுடன் செயல் உபாயங்களை அமுல்படுத்தும் விடயத்தில் பங்குகொண்டு தொழிற்படக் கூடிய நபர்களை நல்ல முறையில் ஊக்கப்படுத்துவார்.

இவ்வாறான பண்புகள் பலவற்றை மறைந்த அஷ்ரப் கொண்டிருந்தனால் அவரையும் கட்சியையும் ஏற்று நாளுக்கு நாள் அபிமானிகள,; ஆதரவாளர்கள் அவர் பக்கம் திரண்டனா.; அதற்கான வரலாற்றுச் சான்றுகளாக நிழற்படங்களும் காணொளிகளும் இப்போதும் காட்சிகளாக உள்ளன. அக்காட்சிகள் முஸ்லிம் அரசியல் கட்சிகளினால் காலத்திற்குக் காலம் நடைபெறும் தேர்தல் காலங்களில் காண்பிக்கப்படுவதையும் அதைக் கண்டு அவரது அபிமானிகள் கண்கலங்குவதையும் வாக்குகளை அள்ளி வழங்குவதையும் கடந்த தேர்தல் காலங்களின்போது முஸ்லிம் பிரதேசங்களில் காண முடிந்திருக்கிறது. இருப்பினும், கடந்த வெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கு வேட்டையில் இச்சாணக்கியம் முற்றுமுழுதாக வெற்றி பெறவில்லை என்பதே பலரது அபிவிப்பிராயமாகும். 

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மேற்கொள்ள வேண்டிய விடயங்களை நிர்ணைத்து, ஒழுங்குபடுத்தி, அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றத் தேவையான திட்டங்களை வகுத்து, அத்திட்டங்களைச் செயலுருப்படுத்தி தம்மோடு இணைந்திருக்கும் பலரையும் ஆர்வத்தோடு பங்குகொள்ளச் செய்வதற்கும், குறித்த திட்டங்களைச் செயற்படுத்தும்போது அல்லது மேற்கொள்ளும்போது ஏற்படக் கூடிய முரண்பாடுகள், பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெறக் கூடியவராகவும் தலைவர் அல்லது தலைமைத்துவம் இருக்க வேண்டும். இத்தகைய தலைமைத்துவத்துக்கான அடிப்படைத் தகைமையை மறைந்த தலைவர் அஷ்ரப் கொண்டிருந்தார். அதனால்தான், இன்றுவரை அவரின் தலைமைத்துவ வழிகாட்டல்களையும் அவரால் சமூகம் அடைந்த நன்மைகளையும் அபிமானிகளால் மறக்க முடியாமல் இருக்கிறது.

வற்புறுத்தல், வலுக்கட்டாயமில்லாத வழிகளினூடக மக்களைச் செயற்பட ஊக்குவிப்பதன் மூலம் ஒரு திட்டமிட்ட திசையில் நகர்த்திச் செல்லும் செயல்முறை கொண்ட தலைமைத்துவத்தினால் நீண்டகால, குறுகிய கால நோக்கங்களை அடைய முடியும். அதன் அடிப்படையில் பல குறுகிய கால செயற்றிட்டங்களில் வெற்றி கண்ட அஷ்ரப் நீண்ட கால செயற்றிட்டங்கள் பலவற்றையும் வகுத்துச் செயற்பட்டார். அதில் ஒன்றுதான் 2012ஆம் ஆண்டை நோக்கி என்ற அடிப்படையில் தேசிய ஐக்கிய முன்னணி என்ற அரசியல் கட்சியை புறாச் சின்னத்தில் ஸ்தாபித்து அதில் அனைத்து இனங்களையும் இணையச் செய்ததாகும்.

தலைவர்கள், உண்மைத்தன்மை, நன்பகத்தன்மை, தூரநோக்குச் சிந்தனை, தொடர்பாடல் திறன், ஏனையவர்களுடன் சுமுகமான உறவு, செல்வாக்குச் செலுத்தும் தன்மை, நெகிழ்வுத் தன்மை, தீர்மானிக்கும் ஆற்றல், திட்டமிடல். கலந்துரையாடல் போன்ற பண்புடையர்வளாக இருத்தல் அவசியம.; அவ்வாறன தலைமைத்துவ குணாதிசயங்கள் பல அஷ்ரபிடம் காணப்பட்டதனாலும் அவற்றினால் அவர் மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தலைவராகத் திகழ்ந்ததனாலும்; அவர் மறைந்து 18 வருடங்களை அடையவுள்ள நிலையிலும் அவரை அபிமானிகளால் மறக்க முடியாதுள்ளது. 

ஆனால், அவர் கண்ட தேசிய ரீதியிலான தூர நோக்குகளும் சமூக ரீதியிலான எதிர்கால எதிர்பார்ப்புக்களும் அவரது பாசறையில் வளர்ந்தவர்களாலும், பயிற்றப்பட்டவர்களாலும்,  அனுபவப்பட்டபவர்களாலும் அவர் வளர்த்தெடுத்த முஸ்லிம் காங்கிரஸியினாலும் மறக்கப்பட்டுவிட்டது என்ற கவலை பொதுத்தளங்களில் முன்கை;கப்பட்டு வருவதோடு பிரதிநிதித்துவ அரசியல் அதிகாரத்தை வழங்கக் கூடிய மக்கள் சக்தி கொண்ட கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் முதல் புல்மோட்டை வரை வாழும் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற அரசியல், சமூக ,பொருhளதார கல்வி, சுகாதார, வாழ்விடம் உள்ளிட்ட பல குறுகியகால மற்றும் நீண்ட கால பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படாது தேங்கிக் கிடக்கின்றன. இந்நிலைமை தொடர்பில் தொடரான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இம்மக்களால் வளர்க்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸினால் மேற்கொள்ளப்படவில்லை என்ற ஆதங்கங்களும் வெளிப்டுத்தப்பட்டு  வருவதையும் காண முடிகிறது.

அதுதவிர, தேர்தல் காலங்களில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தொடங்கிய அபிவிருத்தி நடவடிக்கைகள் முழுமை பெறவில்லை. அடிமட்ட போராளிகளின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படவில்லை என்ற  அதிருப்திகளுக்கு மத்தியில,; கட்சியின் உருவாகத்திலும் அதன் வளர்ச்சியிலும் பங்குகொள்ளாத பலர் இக்கட்சியினால் பல நன்மைகளை அடைந்துள்ளனர். மக்களுக்காக கட்சியல்ல கட்சிக்காக மக்கள் என்ற தோற்றப்பாடு கட்சியின் தலைமையிடமும் உயர்பீடத்திலும் மேலோங்கி காணப்படுவதாக அடிமட்ட கட்சிப் போராளிகளும் அஷ்ரபின் அபிமானிகளும் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர். 

இந்நிலையில், இக்கட்சியை நம்பி இன்னும் தியாகங்களைப் புரிய முடியாது என்ற நிலைக்கு கட்சியின் அதி தீவிர விசுவாசிகளைத் தவிர சமூக அரசியல் நீரோட்டத்தை நடுநிலையாக இருந்து சிந்திக்கக் கூடியவர்களி;ன் கருத்துக்களிலிருந்து அறிய முடிகிறது. இந்த மக்கள் நிலைப்பாடானது மாற்றுக் கட்சிகளை நோக்கி நகரவும் செய்திருக்கிறது என்பதை இம்மாகாணத்தில் எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் என்பது பொதுவான அபிவிப்பிரயாமாகும். இவ்வாறு, மக்கள் மனநிலையை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுவதை  பிரதேசவாதமென்றோ அல்லது  மாகாண வாதமென்றோ இடைபோட்டுவிடுவது நாகரியமல்ல. அவ்வாறு இடைபோடுவது அவரவர் அறிவதுத்தன்மைக்கு ஏற்றதாகும். 

கட்சிகளினாலும், கட்சித் தலைமைகளினாலும் ஏமாற்றப்பட்டுள்ள மக்களினதும், தனிநபர்களினதும் கிழக்கு முஸ்லிம்களுக்கான அரசியல் தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்புவது குறித்த தாகம் நியாயமாக இருந்தாலும். அத்தாகத்திற்கான தீர்வானது மக்கள் சக்தியை பலவீனப்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது.

இயற்கை வெற்றிடத்தை வெறுக்கும் என்பது இயற்பியலில் அனைவருமறிந்த ஒன்றாகும். ஏதோவொன்றில் வெற்றிடம் இருக்குமாயின் அதன் மறைவில் இன்னுமொன்று இருந்து கொண்டே இருக்கும்;. ஓளியின் வெற்றிடத்தில் இருள் இருக்கும். அறிவின் வெற்றிடத்தில் அஞ்ஞானம் இருக்கும்.

இவ்வாறு வெற்றிடங்கள் நிரப்பப்படக் கூடியதாக இருந்தாலும், சமுதாயமொன்றில் வாழ்ந்து அச்சமுதாயத்தின் விருப்பு வெறுப்புக்களில் பங்குகொண்டு, பிரதேசத்தினதும், பிரதேசத்தின் சொத்துக்களான மக்களினதும்  எழுச்சிக்கும,; வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து செயற்பட்டு, அச்சமூகத்தின் உரிமைக்காகவும்,; முன்னேற்றத்திற்காகவும் குரல் கொடுத்தவர்கள், குரல் கொடுப்பவர்கள்   மண்ணையும் அந்த மண்ணில் வாழும் மக்களையும்; விட்டு பிரிகின்றபோது, அவர்களால் சமுதாயத்தில் ஏற்படுகின்ற வெற்றிடங்கள் நிரப்பப்படுவதற்கு பல நூறு ஆண்டுகள் கழிகின்றன அல்லது அந்த வெற்றிடங்கள்; நிரப்பப்படாமல் வெற்றிடங்களாகவே காணப்படுகின்றன.

சமூகங்களுக்கிடையே ஒற்றுமையும், புரிந்துணைர்வும், ஒருமைப்பாடும் ஏற்படுத்தப்பட வேண்டும். அவற்றினால் நாடும் மக்களும் சுபீட்சமும் நிம்மதியும் அடைய வேண்டும் என்ற உன்னத மனப்பாங்கு கொண்டு, அவற்றை மலரவிப்பதற்காக  அறிவு, ஆற்றல், அனுபவம் என்பவற்றைப்  பகிர்ந்து செயற்பட்ட பல சமூகச் சிற்பிகள் இன்று நம்மிடையே இல்லை. இருப்பினும், தலைமைத்;துவ பண்புகளும், ஆளுமையும், ஆற்றலும் கொண்டவர்கள் சமூகத்தில் இருந்தாலும் அத்தகையவர்கள் தங்களது ஆற்றலையும், அனுபவத்தையும் சமுதாயத்தின் சமகால, எதிர்கால நலன்களுக்காக அர்ப்பணிப்பதற்கு முன்வராத சமூக உலோபிகளாக ஒதுங்கியுள்ளதாக குற்றச்சாட்டப்படுகிறது.

முஸ்லிம் தலைமைத்துவங்களின் செயற்பாடுகளிலுள்ள நம்பிக்கை, திருப்தி, அதிருபதி என்பவறறிலுள்ள  சமூக ஒப்பீடானது எந்ததத்தலைமைய ஏற்று அரசியல் பயணத்தைத் தொடர்வது என்ற தீர்மானிக்க முடியாது கணதியான கேள்விக் கணைகளுக்குள்;, கிழக்குப் பிராந்தியத்துக்கான  அரசியல் எதிர்காலப் பயணத்தை முன்நகர்த்;திச் செல்ல வேண்டும். ஆளுமையுள்ள அரசியல் தலைமைத்துவ  வெற்றிடம் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற ஆதங்கங்கள் பரவலாக வெளிப்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பதை நியாயப்படுத்தினாலும் இந்த முயற்சிகளும் அதற்கான செயற்பாடுகளும் குளிக்கப்போய் சேற்றில் விழுந்த கதையாக மாறிவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தப்படுவது அவசியமென்பதும் பொதுவான அபிப்பிராயமாகும்.

-எம்.எம்.ஏ.ஸமட்

No comments:

Post a Comment