முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு இரு வாரத்தில் தீர்வு: கபீர் ஹாஷிம்! - sonakar.com

Post Top Ad

Monday 23 July 2018

முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு இரு வாரத்தில் தீர்வு: கபீர் ஹாஷிம்!



முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டு வந்து இருவார காலத்துக்குள் தீர்வு பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக நெடுஞ்சாலைகள்வீதி அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


மாநாடு அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் சனியன்று காலை போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றது.
தலைவர் தனதுரையில்இந்த அரசிலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்ற உணர்வு  சமூகத்தில் வருகிறது. மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாதிருக்கின்றது. முஸ்லிம் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படாதுள்ளனர். ஓர் அமைச்சின் செயலாளர் கூட முஸ்லிம்கள் எவரும் நியமிக்கப்படாதுள்ளனர். இதனால் முஸ்லிம் இளைய தலைமுறையினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு வருகின்றது என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் இப்பிரச்சினைகள் தொடர்பாக விரைவில் பிரதமரைச் சந்தித்து தீர்வு பெற்றுத் தரப்படும் என்றார்.
அமைச்சர் மேலும் அங்கு குறிப்பிடுகையில்,
எமது நாடு பல ஆபத்தான கட்டங்களுக்கு முகம் கொடுத்த வேளையிளெல்லாம் முஸ்லிம் சமூகம் முன்னின்று தேசத்தைக் காப்பாற்றியுள்ளது. இலங்கை நாட்டில் முஸ்லிம்களுக்கென தனி வரலாறு இருக்கின்றது. எம்மை யாரும் பிரித்துப் பார்க்க முடியாது. முஸ்லிம்களில் பலர் படைகளில் சேர்ந்து நாட்டுக்காகப் போராடி இருக்கின்றனர். இதற்காக நாம் பெருமைப்பட முடியும். போர் நடக்கும் காலகட்டத்தில் கூட சர்வதேச மட்டத்தில் சென்று நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் முகமாக எமது நிலைப்பாட்டை வெளியிட்டு இருக்கின்றோம். சமூகத்துக்காக பாடுபடக் கூடிய உரிமை எம்மிடம் உள்ளது. எம்மை யாராலும் புறந்தள்ளிவிட முடியாது.
நாம் நாட்டைப் பற்றிச் சிந்திப்பவர்கள். அதே சமயம் எமது உரிமைகளை விட்டுக் கொடுக்கவும் மாட்டோம். அண்மைக்காலங்களாக முஸ்லிம்கள் மத்தியில் ஓர் அச்சமும் சந்தேகமும் ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோஐ.தே.க. அரசாங்கமோ  முஸ்லிம்களுக்கு ஒருபோதும் துரோகமிழைக்கமாட்டாது. அரசு மொழிமதரீதியில் சிந்திப்பதில்லை. தகுதியுள்ளவர்களுக்கு உரிய இடத்தை வழங்குவதில் இனமதமொழி வேறுபாட்டை அரசு பார்க்க மாட்டாது. நாட்டுக்காகப் பாடுபடக்கூடிய ஒரு கட்சியாகவே ஐ. தே.க.செயற்பட்டு வருகின்றது. முஸ்லிம்களுக்கு குறைபாடுகள் இருப்பதை மறுக்க முடியாது. அவற்றைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த இரண்டு வாரங்களுக்கிடையில் பிரதமருடன் பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்வேன். அதன்போது மௌலவி ஆசிரியர் நியமனம் உட்பட முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு மீது வீண் சந்தேகம் கொள்ள வேண்டாம். வருத்தமடையவும் வேண்டாம். முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அவசர முயற்சிகளை எமது சக பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு செயற்படுவோம். சவால்களை எதிர்கொண்டு முன்னேறிச் செல்வோம்.
முஸ்லிம் ஊடகவியலாளர்களின் எதிர்காலத்துக்காக எம்மாலான ஒத்துழைப்புகளை வழங்க நான் ஒருபோதும் பின்னிற்க மாட்டேன்.
கடந்த 40 வருடங்களுக்குப் பின்னர் முதற்தடவையாக ஒரு முஸ்லிம் அரசாங்க அதிபராக கடந்த வாரத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய குறைகளை நிவர்த்திக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து பிரதமருடன் பேசுவேன்.என்றார்.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

No comments:

Post a Comment