புதிய முறையிலான மாகாண சபைத் தேர்தலும் முஸ்லிம் MPக்களின் பொறுப்புக்களும் - sonakar.com

Post Top Ad

Wednesday, 21 March 2018

புதிய முறையிலான மாகாண சபைத் தேர்தலும் முஸ்லிம் MPக்களின் பொறுப்புக்களும்எதிர்வரும் 22.03.2018 இல் மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்திற்கு வருகின்றது. இது தொடர்பில் ஆங்காங்கு ஒருசில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் அரசியல் விமர்சகர்களும் இத்தேர்தல் முறைமைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.


கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைத்தேர்தல்கள் (திருத்தச்) சட்டம் ஓர் அவசரமான சூழலில் கொண்டுவரப்பட்டது என்பது வெளிப்படையானது. இதனால், அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக சட்டமூலத்தை வாசித்து விளங்கிக்கொள்ளாத நிலையில், அதனை ஆதரித்து வாக்களிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம் , ரிஷாட் பதியுதீன் பின்னர் குறிப்பிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்தில் வரக்கூடிய அல்லது இயற்றப்படக்கூடிய சட்டங்களின் ஊடாக முஸ்லிம் சமூகம் பாதிப்பை அடைய நேரிடும் எனத் தோன்றக்கூடிய எந்த சட்டங்களையும் ஆதரித்து வாக்களிக்க வேண்டிய தேவை எந்த கட்சியை சார்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவசியமற்றது. இதனை நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெளிவடைந்து கொள்ளாத ஒரு பக்கமாக இருந்து வருவது இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்திருக்கின்ற ஒரு மாபெரும் தூரதிஷ்டமான நிலை என்றே கூற வேண்டும்.

ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்காக ஆதரவு வழங்குகின்ற பங்காளிக் கட்சிகளாக நாம் இருந்தாலும் சரி, அவ்வரசாங்கத்தின் ஆட்சிக்குரிய கட்சி சார்ந்தவர்களாயினும் சரி மற்றும் எதிர்க்கட்சி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி இவர்கள் தமது சமூகத்திற்கு பாதிப்பை தரக்கூடிய எந்தச் சட்டங்களுக்கும் ஆதரவை வழங்க வேண்டிய எந்தவித தேவையும் இல்லை. இது எதுவரை என்றால், அவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்றோம் என்கின்ற உணர்வும், கடமைப்பொறுப்பும் இருக்கும்வரை காணப்படும் பண்பாகும்.

அவ்வாறில்லாமல், சமூகத்திற்கு பாதிப்பை தரும் என்கின்ற அம்சங்களுகு நமது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவதென்பது அவர்களது கட்சிப்பதவிகள் மற்றும் அமைச்சுப் பதவிகள் போன்ற நலன்கள் தங்களை விட்டும் கைநழுவிச்சென்றுவிடக்கூடாது என்கின்ற அவதானத்தைத்தவிர வேறு நோக்கம் இதில் இருப்பதற்கில்லை. இது சமூகத்தைப்பார்க்கிலும் தங்களது நலன்கள் மீதுள்ள பற்றையும் விருப்பையும் முன்னிலைப்படுத்திய செயற்பாடு என்பது மிக வெளிப்படையானது.

மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயத்திற்கான செயற்குழு, ஊடகங்களின் ஊடாக நிர்வாக மாவட்ட அடிப்படையில் தொகுதி ரீதியாக தெரிவு செய்யப்பட வேண்டிய மொத்தம் 222 உறுப்பினர்கள் என்றும் மாவட்ட அடிப்படையிலான விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்யப்பட வேண்டிய மொத்த 215 உறுப்பினர்கள் என்பது நிர்ணயிக்கப்பட்டு பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட நிலையில்தான், எல்லை நிர்ணயக்குழு தமது செயற்பாடுகளை ஆரம்பித்துமிருந்தது. இது கடந்த 1988இல் நமது நாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபை தேர்தல்களின் ஊடாக தெரிந்தனுப்பப்பட்ட 437 ஆசனங்களில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் பிரிக்கப்பட அனுமதிக்கப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகின்றது.

உண்மையில், 1988களில் மாகாண சபைகளுக்கான உறுப்பினர்களின் தொகைகளை நிர்ணயிக்கின்ற போது நடைமுறையிலிருந்த உத்தியோகபூர்வமான 1981ஆம் ஆண்டுக்கான குடிசன மதிப்பீட்டின் அடிப்படையை மையமாகக் கொண்டு வகுக்கப்பட்டதாகும் புதிதாக நடைமுறைக்கு வர உத்தேசிக்கப்பட்டிருக்கின்ற கலப்பு முறையிலான மாகாண சபை தேர்தலுக்காக தொகுதி எல்லை நிர்ணயங்களைச் செய்கின்ற குழு அமைக்கப்படுகின்றபோது, இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான குடிசன மதிப்பீட்டு தொகை 2011 இற்குரியது நடைமுறையிலிருக்கின்றது. இது 1981களில் காணப்பட்ட நமது நாட்டு  மக்கள் சனத்தொகையினரை விட 2011ஆம் ஆண்டு சனத்தொகை அதிகரித்திருப்பதை பார்க்கலாம்.

அவ்வாறெனில், அதிகரிக்கப்பட்ட மக்களுக்கேற்ற வகையில் குறிப்பாக இனக்குழுமங்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசனங்களை பங்கீடு செய்ய வேண்டிய பொறுப்பு அவசியப்படுகின்றது. இந்த அவசியங்கள் குறித்து நமது நடைமுறை நாடாளுமன்றத்தில் இருக்கின்ற 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்தி மாகாண சபைகளின் மொத்த உறுப்பினர் தொகைகள் அந்தந்த மாவட்டங்களின் சனத்தொகை அல்லது நிலப்பரப்பை கவனத்திலெடுத்து உறுப்பான்மையை அதிகரிக்கப்பட வேண்டுமென்ற முன்வைப்பை முன்னெடுக்காத தவறை இந்த விடயத்தில் நமது முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் செய்திருக்கின்றனர்.

என்றாலும் முஸ்லிம் புத்திஜீவிகள் சில ஆய்வுகளை இதுவிடயத்தில் முன்வைத்து 500 உறுப்பினர்களாக மாகாண சபையின் மொத்த உறுப்பினர்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்கின்ற சுட்டுதலை பகிரங்கமாக 2011ஆம் ஆண்டுக்கான குடிசன தொகை மதிப்பீட்டை ஆதரப்படுத்தி ஆய்வுகளை முன்வைத்தும் இருந்தனர். மற்றும் இரட்டை வாக்குச் சீட்டுக்கள் வழங்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தையும் முன்வைக்கத் தவறவில்லை. ஆனாலும், இவைகள் எந்த தரப்பினாலும் உள்வாங்கப்பட்டு கருத்தூன்றி வாசிக்கப்பட்டதாகவோ அதன்மீது அக்கறை கொண்டதாகவோ தெரியவில்லை. ஆக இவ்விடத்தில் இரண்டு தவறுகளை நமது முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் செய்திருக்கிறார்கள். ஒன்று  சட்டம் வருகின்ற போது சரியாக விளங்கிக்கொள்ளாமல் வாக்களித்தமை மற்றொன்று மொத்த உறுப்பான்மையை அதிகரிக்கவும், இரட்டை வாக்குச்சீட்டு கேட்காமை போன்றனவாகும்.


மாகாண சபைத் தேர்தல் எல்லை நிர்ணயக்குழு ஐந்து அங்கத்துவர்களைக் கொண்டதாகும். இதில் முஸ்லிம் சமூகம் சார்பில் புவியியல் துறை சார்ந்த பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இந்த எல்லை நிர்ணயக்குழு தமது விதப்புரைகளை மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளித்ததன் பின்னர் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் முஸ்லிம் சமூக இனக்குழுமத்திற்கு போதிய பிரதிநிதித்துவம் வரும் வகையில் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் அமையவில்லை என்றும் அவ்வாறு அமையக்கூடிய இடங்களை, தான் சுட்டிக்காட்டியும் அவற்றினை ஏற்றுக்கொள்ளாது தட்டிக்கழித்ததாகவும் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைத் தேர்தல் எல்லை நிர்ணயக்குழு தொகுதி ரீதியாக 74.9 வீதமான  சிங்கள மக்களின் பிரதிநிதித்துவங்கள் 175, 11.2 வீதமான இலங்கை தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்கள் 25, 9.2 வீதமான  முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவங்கள் 13, 4.2வீதமான மலையக தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்கள் 09 என்று நிர்ணயித்து பரிந்துரை செய்துள்ளது. இவற்றில் எவைகள் மக்கள் தொகைக்கு முன்னுரிமை அளித்தும் , நிலப்பரப்புக்கு முன்னுரிமை அளித்தும் வகுக்கப்பட்டது என்பதில் நமக்கு வெளிப்படையாக தெரியாது. உண்மையில் இவ்வெல்லை வகுப்புக்குழுவில் இருந்தவர்களுக்குத்தான் அதன் முழுமையான விபரங்கள் நன்கறிந்தவர்களாக இருப்பார்கள்.

என்றாலும், தீர்மானிக்கப்பட்ட 222 மொத்த தொகுதிகள் இலங்கையின் சனத்தொகை அடிப்படையில் பின்வருமாறு அமைந்திருக்க வேண்டும் என்கின்ற ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது. சிங்கள பிரதிநிதித்துவங்கள் 167, இலங்கை தமிழர் பிரதிநிதித்துவங்கள் 25, மலையக தமிழர் பிரதிநிதித்துவங்கள் 09, முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் 21 என்ற வகையிலும் விகிதாசார அடிப்படையில் பகிரப்படவுள்ள 215 உறுப்பான்மையில் சிங்களவர்களுக்கு 161, இலங்கை தமிழர்களுக்கு 25, மலையக தமிழர்களுக்கு 09, முஸ்லிம்களுக்கு 20 என்ற வகையில் பிரதிநிதித்துவங்கள் அமைதல் வேண்டும்.

விகிதாசார பிரதிநிதித்துவம் என்பது நிச்சயிக்கப்படாத தேர்தலில் கட்சி அல்லது சுயேட்சைக்குழுக்கள் பெறுகின்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் அமையக்கூடிய ஒன்றாகும். அதேநேரம் தொகுதி ரீதியான வெற்றி என்பது இனப்பரம்பலுக்கு ஏற்ப பெற்றுவிடக்கூடிய உறுதித்தன்மையுடையது. அந்த வகையில், தொகுதி ரீதியான 21 ஆசன ஒதுக்கீடுகள் பங்கிடப்படாது முஸ்லிம்களுக்கு 13 என வரையறுத்து இருப்பதும் முஸ்லிங்களுக்கு கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவத்தில் குறைபாட்டை கொண்டிருப்பதை இது காட்டுகின்றது. அதேநேரம் முஸ்லிம் சமூகத்திற்கு வெளிப்படையாகவே அநீதி இழைத்ததாகவும் கொள்ளப்படல் வேண்டும்.

உண்மையில் எல்லை வகுப்பு நிர்ணயக்குழுவின் கவனத்திற்கு உட்படுத்த வேண்டுமென சட்டம் சொல்வதில், இனப்பரம்பல் மற்றும் மத வேறுபாடுகள்  கொண்ட மக்களை கவனத்திற்கொண்டு பல் அங்கத்துவ தொகுதிகளை வகுக்க வேண்டுமென்கின்ற விதப்புரையையும் இச்சட்டம் கொண்டுள்ளது. இந்நிலையில் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் நேர்மையான முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையிலான சுட்டிக்காட்டுதல்களை எல்லை நிர்ணயக்குழு அங்கீகரிக்காது விட்டிருப்பதானது அப்பட்டமான ஓர் உரிமை மீறலாக பார்க்க முடியும்.

இவ்வாறான பிழையான அணுகுமுறைகள் கூட நடந்திருந்தும் அதுபற்றி நமது மக்கள் பிரதிநிதிகளாகிய 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் உள்ளிட்ட எல்லைப்பிரிப்பு விடயதான அறிவுடைய வேறு சில புத்திஜீவிகளையும் அழைத்து, எங்கெங்கு முஸ்லிம் பிரதிநிதித்துவம் பெறுவதற்கான சாத்தியம் இருந்தும் தொகுதிகள் வகுக்கப்படாது விடுபட்டிருக்கிறது என்பது பற்றிய முழு விபரங்களை தெரிந்துகொண்டு அதுபற்றிய மாற்றீடுகளை முன்வைப்பதற்கான முன்னாயத்தங்களை மேற்கொள்வதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடாது இன்று வரை காணப்படுவது நமது மக்கள் பிரதிநிதிகளின் மக்கள் நலன் கரிசணையில் தொய்வுடையவர்களாக இருப்பதையே காட்டுகின்றது.

அதுமாத்திரமன்றி, பல் அங்கத்துவ தொகுதிகளிலிருந்து பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற போது முதல் அதிக வாக்குகளை பெற்ற கட்சிக்கே பிரதிநிதிகள் பங்கீடு  செய்வதென்பது பல் அங்கத்துவ நோக்கத்தையே சிதைப்பதாகும். இவ்வாறுதான் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் சட்டம் நடைமுறைப்படுத்தியது. இதேநிலை மாகாண சபைத் தேர்தலின் பல் அங்கத்துவ தொகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படுமானால், அதுவும் ஒரு அநீதியான பங்கீடாகவும், பல் அங்கத்துவத்தின் நோக்கத்தை அர்த்தமற்றதாக்கி விடுகின்ற நிலைக்குமே இட்டுச்செல்லும். இதுபற்றியும் நமது முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றனர்.

அண்மையில் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் சிபாரிசுகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமானால் , அவைகள் பாராளுமன்றத்திலேயே செய்துகொள்ளப்படும் என்ற ஒரு அறிவிப்பையும் செய்திருந்தார். 2/3 பெரும்பான்மையால் தொகுதி எல்லை நிர்ணய குழுவின் சிபாரிசு நாடாளுமன்றில் நிராகரிக்கப்பட்டால், மீளாய்வுக் குழு ஒன்று இடம்பெறுவதற்கு சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் அமைச்சரின் மேற்படிய கூற்றானது காலத்தை தாமதிக்காது, உடனடியாகவே இதன் தீர்வை காண வேண்டுமென்கின்ற எண்ணத்தை வெளிப்படுத்துவதாகக் கொண்டாலும், அதற்கேற்ற வகையில் நமது முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் குறித்த விடயதான அறிவுடனும், விளக்கத்துடனும் இருக்கின்றார்களா என்பதும் இதில் ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு பக்கமாகும்.

பாராளுமன்றத்தில் திருத்தங்களை செய்வதாக இருந்தாலும் சரி அல்லது மீளாய்வு குழுவினூடாக மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தாலும் சரி தொகுதி ரீதியாக முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய உறுப்பான்மை தொகையினை சரி செய்து கொள்ளும் வகையில் முன்வைக்கப்பட்டிருக்கின்ற 13 தொகுதிகள் போக, மிகுதியான 08 வரக்கூடிய தொகுதிகளை சரியாக கோடிட்டுக்காட்டி அடையாளப்படுத்தும் வகையில் நமக்குள் தெளிவுகளை பெற்றிருக்கின்றோமா? ஆகக்குறைந்தது அதற்கான ஒரு சிறிய கலந்துரையாடலையாவது ஏற்படுத்தியிருக்கின்றோமா என்றால், இல்லை என்றுதான் எம் தரப்பிலிருந்து பதில் கிடைக்கும்.

நாடாளுமன்றிற்கு வருகின்ற எல்லை நிர்ணய விவாதத்தை தோற்கடிப்பதன் மூலமோ அல்லது வெற்றி பெறச் செய்வதன் ஊடாகவோ முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்டிருக்கின்ற அநீதியை சரிக்கட்டுவதற்கு முடியாது. ஆகவே, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது நமது முஸ்லிம் பிரதிநிதிகளான 21 பேர்களின் அனுசரணை இல்லாமலும் வெற்றியடைய முடியும்.

இந்நிலையில், மாகாண சபைகள் தேர்தல் முறைமையில் கடைப்பிடிக்க உத்தேசிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டிருக்கின்ற கலப்பு முறைமைத் தேர்தல் மாதிரியில் நமக்கு ஏற்ற சில மாற்றங்களை செய்வதற்கான வழி வகைகளை நமக்குள் இனம்கண்டு அவற்றினை நமது நாடாளுமன்றில் பதிவு செய்வது நமது முதற் கடமை. நமது நியாயங்கள் மறுக்கப்படுகின்ற போது நாம் எதிர்த்து வாக்களித்தாலும் வெற்றிபெறும் சூழல் நாடாளுமன்றில் இருக்கின்றது - காணப்படுகின்றது என்பதற்காக நாம் வாக்களித்தோம் என்று சொல்லி கைசேதப்படாது நமது எதிர்ப்பை வாக்களிப்பிலும் காட்ட வேண்டியதும் நமது இரண்டாவது கடமையாகும்.

நடந்து முடிந்த கலப்பு முறையிலான உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் பல சங்கடங்களை தந்திருக்கின்றன. அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் கூட ஆட்சியமைக்க முடியாத கையறு நிலைகளை கண்டிருக்கின்றன. முன்னைய உள்ளூராட்சி மன்றத்தேர்தல் முறைமையில் அதிக வாக்குகளைப் பெறும் கட்சிக்கு குறித்த உள்ளூராட்சி மன்றத்தில் மேலதிகமாக இரண்டு ஆசனங்கள் வழங்கப்படும். இது வெற்றி பெற்ற கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் தனித்து ஆட்சியமைப்பதற்கு பெரிதும் உதவியிருப்பதை அவதானிக்கலாம். இம்முறைமை புதிய தேர்தல் அமைப்பில் இல்லாமை தான் அதிக ஆசனங்களைப்பெற்ற கட்சிகள் கூட தனித்து ஆட்சியமைக்க முடியாத பின்னடைவை பெற்றிருக்கின்றன.

இதிலிருந்து பாடத்தை கற்று முன்பிருந்தது போன்று ஒவ்வொரு மாகாண சபைகளுக்கும் அதிக ஆசனங்களை பெறுகின்ற கட்சிக்கு அல்லது சுயேட்சை குழுவிற்கு இரண்டு போனஸ் ஆசனங்கள் வழங்குகின்ற முறைமையை புதிய தேர்தல் முறைமையிலும் கொண்டுவருவதற்கான வலியுறுத்தல்களை மேற்கொள்ள வேண்டிய நிலை இருப்பதையும் நாம் சிந்தித்தாக வேண்டும்.

பொதுவாக புதிதாக நம் நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்ற கலப்பு முறைத் தேர்தல் என்பது பல பிரச்சினைக்ளை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனால், இதற்கு முன்பிருந்த விகிதாசார தேர்தல் முறைமையை பெருந்தேசிய கட்சிகளும் சிறிய கட்சிகளும் விரும்புகின்ற ஒரு பாங்கை அவதானிக்க முடிகின்றது. இதனால், அவசர அவசரமாக கட்சிகள் மாநாடு ஒன்றை கூட்டி முன்பிருந்தது போன்று விகிதாசார தேர்தல் முறைமையை தொடர்ந்தும் நம் நாட்டில் செயற்படுத்தல் என்ற உடன்பாட்டுக்கு வந்தால், அவற்றினை ஒருமித்த குரலாக நாடாளுமன்றத்தில் வருகின்ற எல்லை நிர்ணய விவாதத்தில் அதனை முன்வைத்து மாகாண சபைக்காக அண்மையில் இயற்றப்பட்ட 2017ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சட்டத்தை இரத்து செய்து பழைய முறைமைக்கு திரும்புவது தொடர்பான சட்டத்தை கொண்டுவந்து மாகாண சபைத் தேர்தல்களை எதிர்கொள்வது பொருத்தமானதாக அமைய முடியும். இதற்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள், அங்கம் வகிக்காத கட்சிகள் என்கின்ற பாகுபாடுகளுக்கப்பால் எல்லா கட்சிகளும் ஒருமித்து குரலெழுப்ப வேண்டிய தேவையையும் புறந்தள்ளிவிட முடியாது.

எனவே, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகளின் முடிவையும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் நாடாளுமன்றத்தில் சபைப்படுத்தி அதன் நியாயங்களை வலியுறுத்துவதை நமது முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு இசைவாக குரல் கொடுப்பவர்களாக மாற்றுகின்ற செயற்பாட்டையும் முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியத்தையும், அவசரத்தையும் நமக்கு இன்று ஏற்படுத்தியிருக்கின்றது.

-எம்.எம்.எம்.நூறுல்ஹக்


No comments:

Post a Comment