பிழைகளிலிருந்து சரிகளை நோக்கி.. - sonakar.com

Post Top Ad

Thursday 22 March 2018

பிழைகளிலிருந்து சரிகளை நோக்கி..



வேண்டாத மனைவியின் கை பட்டாலும் குற்றம் கால் பற்றாலும் குற்றம் என்பது போலவே பெரும்பான்மை சமூகத்தின் மத்தியிலுள்ள  கடும்போக்காளர்களினாலும் அவர்களுக்கு போசனை வழங்குவபர்களினாலும் முஸ்லிம்களினால் புரியப்படும் தவறுகள்; நோக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.

முஸ்லிம்களின் சமூக, சமய, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள், கல்வி, வர்த்தக நடவடிக்கைகள்; குறித்த எதிர்மறை சிந்தனைகள் பல்வேறு வழிகளில் போசனையூற்றப்பட்டு பௌத்த சிங்கள மக்களிடையே வளர்க்கப்பட்டு வருவதனால் முஸ்லிம்களால் புரியப்படுகின்ற நேர்மையமான செயற்பாடுகளும் கூட எதிர்மறை சிந்தனையோடுதான் மதிப்பீடப்படுகிறது என்பதை குறித்த கடும்போக்காளார்கள் மற்றும் துறைசார்ந்தோரின் கருத்தாடல்கள் மூலம் அறியக் கூடியதாகவுள்ளன.

ஜனநாயகத் தேசமொன்றில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவது அவசியமாகும். அந்தவகையில், தனித்துவ அடையாளங்களைக் கொண்ட பல்லின சமூகத்தின் மத்தியில் வாழும் முஸ்லிம்கள்; தமக்குரித்தான உரிமைகளோடு ஏனைவர்களின் உரிமைகளை மீறாத வகையில் வாழ உரித்துடையவர்கள். அந்தவகையில், பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் வாழும் முஸ்லிம்கள் தங்களது, சமூக, சமய, பண்பாட்டு விழுமியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தனித்துவத்துவத்துடன் வாழ்கிறார்கள். 

இருப்பினும,; ஒரு தனித்துவ சமூகத்துக்கான தனித்துவத்துடன் வாழவும், அத்தனித்துவ அடையாளங்கள் ஏனைய சமூகத்தை பாதிக்காத வகையிலும் அல்லது ஏனைய சமூகங்களின் சமூகப் பார்வையில் பிழையானதாகக் கருதப்படாமலும் தங்களது தனித்துவத்தை பின்பற்றுவதும் அதைப் பாதுகாப்பதுவுமே தற்போது முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள சவாலாகும். இச்சவாலை மிகச் சாதுரியமாகவும், இராஜதந்திர பொறிமுறைகளினூடாகவும் எதிர்நோக்கவேண்டிய காலத்திற்குள் முஸ்லிம்கள் வலிந்து தள்ளப்பட்டிருக்கிறார்கள். 



இருந்தபோதிலும், முஸ்லிம்களின் சமூக, சமய, பண்பாட்டு, கலாசார விழுமியம், கல்வி, வர்த்தகம் உட்பட பல்வேறு விடயங்கள் மீதான அழுத்தங்கள் புதிதாகத் தோன்றியதொன்றல்ல. 19ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த 21ஆம் நூற்றாண்டு வரை முஸ்லிம்களின் வர்த்தக நடவடிக்கை முதல் பல்வேறு விடயதானங்களில் தொடரான அழுத்தங்கள் கட்டமைக்கப்பட்ட வடிவத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதை வரலாற்று நெடுங்கிலும் காணலாம்.

இன அடக்குமுறையிலிருந்து தோற்றம் பெற்ற 30 வருட கால யுத்தமானது பேரினவாத சக்திகளின் கழுகுப்பார்வையிலிருந்து முஸ்லிம்களை மறைந்து வந்தது. ஆனாலும், யுத்தம் நிறைவடைந்த கையோடு முஸ்லிம்கள் மீதான பாய்ச்சல் ஆரம்பிக்கப்பட்டன. இதன் அண்மைய வெளிப்பாடுகள்தான் அளுத்தமை முதல் கிந்தோட்டை வரையிலும் அம்பாறை முதல் கண்டி வரையும் நடந்தேறிய வன்முறைகளாகும். இதனால், அத்தனையையும் இழந்து பல்வேறு துயரங்களை சுமந்து வாழ வேண்டிய நிலைக்கு பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.  

முஸ்லிம்களும் எதிர்நோக்கும் அழுத்தங்களும்

முஸ்லிம்களின் மொத்தக் குடிப்பரம்பலில் மூன்றில் ஒரு பகுதியினர் வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்கின்றனர். ஏனைய மூன்றில் இரண்டு பகுதியினர் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் வாழ்;ந்து வருகின்றனர். வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் கடந்த யுத்த காலத்தில் பல்வேறு அழுத்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும், இடம்பெயர்வுகளுக்கும,; இழப்புக்களுக்கும், இன்னல்களுக்கும் முகம்கொடுத்து வந்ததைப் போன்று யுத்தம் வெற்றி பெற்ற பின்னரான காலங்களில் வடக்கு கிழக்கிற்கு வெளியே பெரும்பான்மை சமூகத்தினரோடு மிக அன்னியயொன்னியமாக வாழும் முஸ்லிம்களும் பல்வேறு அழுத்தங்களுக்கும், அழிவுகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

பௌத்த சிங்கள மக்களோடு சகோதர வாஞ்சையோடு வாழ்ந்து வந்தாலும் கடும்போக்காளர்கள் தங்கள் மீது ஏன் காழ்ப்புணர்ச்சி கொள்கிறார்கள். எத்தகைய தவறுகளுக்காக எங்கள் மீது இத்தாக்குதல்களை மேற்கொள்கிறார்கள் என்பது குறித்த விழிப்புணர்வு இன்னும் இப்பிரதேச முஸ்லிம்கள் மத்தியில் முறையாக ஏற்படுத்தப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

பல்லின சமூகத்தின் மத்தியில் வாழும் முஸ்லிம்களில் சிலர் புரிகின்ற சிறு சிறு பிழைகள் பிற சமூகத்தின் மத்தியில் பெரும் தவறாகப் நோக்கப்படுகிறது. குறிப்பாக பொதுவான இடங்களில் எத்தகைய ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எவ்வித விழிப்புணர்வுமில்லாமல் சிலர் தங்களது சேவைகளையும், தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள எடுக்கும் முயற்சிகள் பிற சமூகத்தின் மத்தியில் விமாசனத்திற்குள்ளாகுவதோடு, முஸ்லிம் சமூகம் தொடர்பிலான எதிர்மறை சிந்தனை உருவாக்குவதற்கும் வழிகோலுகிறது என்பதை பெரும்பான்மை சமூகத்தினர்;களின் கருத்துக்களிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

அரச திணைக்களமொன்றில் அல்லது வங்கியொன்றில் ஒரு சேவைப் பெறுவதற்காக மக்கள் வரிசையில் நின்றுகொண்டிருக்கின்றபோது அவ்வரிசையைப் புறந்தள்ளி தனது காரியத்தை நிறைவு செய்து கொள்ள முஸ்லிம்  என்ற அடையாளத்துடன் முனைபர்களாகவும், பாதையைக் கடப்பதற்கு அமைக்கப்பட்ட பாதசாரிகளுக்கான கடவை உள்ள நிலையில், முஸ்லிம் என்ற அடையாளத்துடன் அக்கடவையினூடாக பாதையைக் கடக்க முற்பாடாது நடு வீதியினூடாக பாதையைக் கடக்க முற்படுவதும், முஸ்லிம் என்ற அடையாளத்துடன் பொதுபோக்குவரத்து பஸ்களில் ஏனைய பயணிகளுக்கு இடஞ்சலை ஏற்படுத்துவம் வகையில் உரத்த குரலில் கையடக்கத் தொலைபேசியில் பேசுவதும் போன்ற பல்வேறு விடயங்களில் முஸ்லிம் சமூகத்தின் சிலரினால் புரியப்படுகின்ற தவறான செயற்பாடுகள்,  பிற சமூகத்தினர்களினால்; விமர்சிக்கப்படுவதோடு  எதிர்மறை சிந்தனைகளை உருவாக்கியிருக்கிறது.

இவ்வாறேதான், முஸ்லிம் சமூகத்திலுள்ள மேல்தட்டு வர்க்கத்தினர் சிலரினால்; புரியப்படுகின்ற தவறுகளும் பெரும் பிழைகளாகவே நோக்கப்படுகின்றன. பள்ளிவாசல் தொழுவதற்காக நடந்து வரக் கூடிய தூரத்தில் இருந்தாலும்;, தமது  சொகுசு வாகனங்களில் வந்து அவ்வாகனத்தை ஏனையவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் நிறுத்திச் செல்வதும். இஸ்லாத்தின் போதனைகளையும் வழிகாட்டல்களையும் மறந்து விட்டு திருமணங்களை மிக ஆடம்பரமாக நடாத்துதல், விருந்தோபல்களை மேற்கொள்ளுதல், போன்ற பல்வேறு விடயங்களை மேல்தட்டு வர்க்கம் என்ற பெருமையோடு முன்னெடுப்பதனால் அவை முஸ்லிம் சமூகத்தின்; மீதான காழ்ப்புணர்ச்சிக்கு வழிவகுப்பதுடன்;, விமர்ச்சிக்கப்படுவதையும் காணலாம்.

இந்நிலையில்,  முஸ்லிம் சமூகத்திலுள்ள மேல்தட்டு வர்;க்கத்தினினர் பலருக்கு இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு என்ன நடக்கிறது?. ஏன் முஸ்லிம்கள் இவ்வாறு தாக்கப்படுகிறார்கள்? இவற்றை எவ்வாறு எதிர் கொள்ள முடியும்? அதற்கான வழிகள் எவை? என்பது தொடர்பான ஆரம்ப தெளிவு கூட இல்லாமல் தங்களுக்கே உரித்தான வாழ்கை முறையில் நேரங்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில், கொழும்பிலுள்ள ஆடம்பர நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இஸ்லாமிய அடையாளம் தாங்கிய ஆடைகளுடன் முஸ்லிம் சமூகத்திலுள்ள மேல்தட்டு வர்க்க மங்கையர்;கரசிகள் பலர் ஒன்று கூடி சகோதர மொழி பாடலுக்கு ஆடிப்பாடி கும்பாளமிட்ட காணொளிக்காட்சிகள் இதற்குச் சான்றாகவுள்ளன. அம்பாறையிலும், கண்டி உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் முஸ்லிம்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டு, அவர்கள் நடுத்தெருவில் கண்ணீரோடு நாளைய எதிர்காலத்தை எதிர்வு கூறமுடியாது தத்தளித்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் முஸ்லிம் பெயர்தாங்கியவர்கள் இவ்வாறு கூத்துப்போட்டமை இஸ்லாத்தின் வழிமுறையையும், முஸ்லிம்களையும் பிற சமூகத்தின் மத்தியில் கேள்விக்குற்படுத்தியிருக்கிறது.

இவ்வாறு பிற சமூகத்தின் மத்தியில் வாழும் நாம் அம்மக்கள் மத்தியில் புரிகின்ற செயற்பாடுகளில் எது சரி எது பிழை என்பது தெரியாமல்  மேற்கொள்கின்ற நடவடிக்கைக்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மீது காழ்புணர்;ச்சி கொள்ளவும், போலிக் குற்றச்சாட்டுக்களைக் சுமந்தவும,; தனித்துவ அடையாளங்களை கேள்விக்குட்படுத்தவும் விளைகிறது என்பது புரியப்படுதல் அவசியமாகும்.

முஸ்லிம்கள் மீது பௌத்த கடும்போக்காளர்கள் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிக்கான காரணங்கள் தொடர்பில் முஸ்லிம்களின் அனுசரைணயுடன் பெரும்பான்மையின ஆய்வு நிறுவமொன்றினால் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வுகளின் பிரகாரம், சமகால முஸ்லிம்களின்  நடத்தைகளும், செயற்பாடுகளும் பெரும்பான்மை மக்களை கோபத்திற்குள்ளாக்குவதாகவும், கடும்போக்காளர்கள் தங்களது எதிர்மறை சிந்தனையூட்டலுக்கான சான்றாக அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இவை முஸ்லிம்கள் தங்களது பிழையான செயற்பாடுகளிலிருந்து சரியான நகர்வுகளை நோக்கி நகர வேண்டிய தேவையை உணர்த்துகின்றன. 

கடும்போக்காளர்களினால் தொடர்ச்சியாக நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டிருப்பதானது நமது செயற்பாடுகளிலுள்ள திருத்தப்படாத பிழைகள்தான் காரணமா என்பது குறித்து ஒவ்வொரு முஸ்லிமும் சுயவிசாரணை செய்ய வேண்டிய  தேவை அவசிமாகவுள்ளதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

குற்றச்சாட்டுகளும் பதில்களும்

முஸ்லிம்களை தமது இராஜதந்திர தூதர்களாகவும், பாதுகாப்பு வீரர்களாகவும், தொடர்பாடலளாரகவும், நம்பிக்கைக்குரியவர்களாகவும் சுதந்தரத்திற்கு முற்பட்ட பெரும்பான்மை சமூகத்தின் இராஜதானிகள் வைத்திருந்த வரலாற்றுக் காலம் நம்முன் பேசிக்கொண்டிருக்கையில்,  இந்நாடு உங்களுக்குச் சொந்தமில்லை, இந்நாட்டில் நீங்கள் அதிகமாகத்துள்ளக் கூடாது. அடங்கி வாழ வேண்டும் என்று  கடும்போக்காளர்கள் முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டு வருவதைக் காண முடிகிறது.

2001ல் மாவனல்லையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆரம்பித்த இந்நூற்றாண்டுக்கான முதல் வன்முறையின் பிற்பாடு முஸ்லிம்கள் தொடர்பில்  பல்வேறு குற்றச்சாட்டுக்கள்  பௌத்த சிங்கள் மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவை தொடர்பான பிரச்சாரங்களை முன்னெடுப்பதுடன்  அவற்றை நம்ப வைப்பதற்கான முயற்சிகளையும்  மேற்கொண்டு வருவதோடு இவ்விடயத்தில் பௌத்த மக்களில் பலர் மூளைச் சலவையும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் சிங்களவர்களை விட பொருளாதாரத்தில் மிகைத்து விட்டார்கள,; முஸ்லிம்களது சனத்தொகை அதிகரித்து விட்டது, உடை நடை பாவனையில் அரபு நாட்டுக் கலாசாரத்தைப் பின்பற்றுகிறார்கள், அடிப்படைவாதம் பரவி வருகிறது. அடிப்படைவாதத்தை இஸ்லாமிய மத்ரஸாக்கள் பரப்புகின்றன, நாட்டில் பள்ளிவாசல்கள் அதிகரித்து விட்டன,. மதம் மாற்றுகிறார்கள், ஹலான உணவை முஸ்லிம் அல்லாதவர்களுக்குத் திணிக்கிறார்கள், ஷரீயாச் சட்டத்தை நாட்டுக்குள் திணிக்க முற்படுகிறார்கள். 

பயங்கரவாதத்திற்கு உதவி செய்கிறார்கள். நிகாப் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவுள்ளது. ஹிஜாப் மற்றும் ஹபாயா முஸ்லிம் பெண்களைப் பிரித்துக்காட்டுகிறது, நாட்டுப் பற்றில்லாதவர்களாக காணப்படுகிறார்கள். சர்வதேச கிரிக்கட் போட்டி நடைபெற்றால் முஸ்லிம் நாடுகளுக்கு ஆதரவு வழங்குகிறார்கள், அரபு நாடுகளை விடவும் இங்கு முஸ்லிம்களுக்கு சுதந்திரம் அதிகம்  வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மிருக வதையில் ஈடுபடுகிறார்கள், போதைப் பொருட்களை சிங்களவர்களுக்கு விற்பனை செய்து அடிமையாக்குகிறார்கள் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவற்றிற்கான ஆதரங்களையும் சோடித்து பௌத்த சிங்கள மக்கள் அறிகை ரீதியாக சிந்திக்கச் செய்யப்படுவதானல் முஸ்லிம்கள் தொடர்பான  எதிர்மறை சிந்தனைகள் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வலுப்பெற்றிருப்பதை அவதானிக்க முடிகிறது.

அடிப்படைவாதம் குறித்தும், முஸ்லிம்களின் ஆடை குறித்தும் அண்மையில் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினராலும், அரசில் அங்கம் வகிக்கும் பிரதி அமைச்சர் ஒருவரினாலும் ;பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் முஸ்லிம்கள் தொடர்பில் கடும்போக்குகாளர்களினால் முன்வைக்கப்பட்;டு வருகின்ற குற்றச்சாட்டுக்களால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்களா என வினச் செய்துள்ளது. 

இவர்களின் கருத்தை ஒத்ததாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிவினால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்தும் முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டின் வீரியத்தைப் புடம்போடுவதாக அமைந்துள்ளது. ' அராபியக் கலாசாரத்தின் சில அம்சங்;களை இலங்கை முஸ்லிம்கள் பின்பற்றுவது எரியும் நெருப்புக்கு மேலும் எண்ணெய் சேர்ப்பதாகவும், இதனால், முஸ்லிம் பெண்கள் சமூகத்தால் அவமதிக்கப்படுவதுடன், காளான்கள் போன்று முளைக்கும் முஸ்லிம்களால் நடாத்தப்படும் சர்வதேச பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலைக்குத்தள்ளப்படுகின்றனர்' என அவர் குறிப்பிட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில்; பதிவேற்றியிருந்தன.

இவ்வாறான கருத்தாடல்கள் பெரும்பான்மை சமூகத்தின் அடிமட்ட வர்க்கத்தினர் முதல் மேல் தர வர்க்கத்தினர் வரை முஸ்லிம்கள் குறித்து கடும்போக்காளர்களினால் முன்வைக்கப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டுக்களை வேரூண்டச் செய்திருக்கிறது என்பது தெளிவாகிறது. இதனால் இக்குற்றச்சாட்டுக்களுக்கு; பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டிற்கு முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்கப்பட்டுள்ளபோதிலும் அவை வெற்றியளிக்கதக்கதாக அமையவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

முஸ்லிம்களை ஒரு வர்த்தக சமூகமாகவும், சுரண்டல் சமூகமாகவும் சித்திரிக்கும் பிரச்சாரங்கள் 19ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கப்பட்டதாகும். இலங்கையின் வர்த்தகத்துறையில் முஸ்லிம்களின் சதவீதம் இரண்டு வீதத்திற்கும் குறைவானதாகும். குறிப்பிட்டுச் சொல்லத்தக் ஒரு சில முஸ்லிம் வர்த்தகர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலைங்கள் தேசிய ரீதியாக பிரபல்யமடைந்திருக்கிறது. ஒரு சில முஸ்லிம்கள் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்திலும், முதலீட்டு வர்த்தகத்திலும் ,ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிறுவனங்களையும், வர்த்தக நடவடிக்கைகளையும் உதாரணங்களாகக் கொண்டு முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அளவிட்டு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் சிங்களவர்களை விட வர்த்தகத்துறையில் முன்னேறி விட்டார்கள். அவர்களின் பொருளாதாரம் வளர்ந்து விட்டது என்பது தவறான மதிப்பீடாகும்.

அரச, தனியார் தொழிலும்,  வெளிநாட்டு வேளைவாய்ப்பும், விவசாயமும், கடற்றொழிலும், சிறு வியாபாரமுமே பெரும்பாலான இந்நாட்டு முஸ்லிம்களின் வருவாய்த்துறைகளாகவுள்ளன. வடக்கு, கிழக்கு உட்பட்ட தென்னிலங்கையில் வாழும் பல முஸ்லிம் குடும்பங்கள் தமக்குரித்தான வருவாயைத் தேடுவதற்கான துறையைத் தெரிவு செய்து கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கி வருகிறார்கள். அரச துறைகளில் தொழில்வாய்ப்பைப் பெறுவது உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழும் முஸ்லிம்கள் சிங்கள மக்களை விட பொருளாதாரத்தில் முன்னேரிவிட்டார்கள் என்ற போலி மாயையை சிங்கள மக்கள் மத்தியில் ஒட்டுமொத்த  முஸ்லிம்களினது பொருளாதாரத்தை அழிக்க முற்படுவது எவ்விதத்தில் நியாயமாகும்.

இலங்கையின் 1911 முதல் 2012  வரையான ஓர் நூற்றாண்டில் பெரும்பான்மை இனத்தினரின் சனத்தொகை வளர்ச்சி 10 வீதத்தினால் அதிகரித்திருக்கிறது. ஆனால், இந்நூற்றாண்டு காலத்தில் முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சியானது வெறும் 2 வீத்தினால் மாத்திரமே அதிகரித்திருக்கிறது. இவ்வாறான நிலையில,; கடும்போக்காளர்கள் கூறுவது போன்று 2050ல் எவ்வாறு இந்நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மை இனமாக மாற முடியும். இந்நாடு முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட நாடாக எவ்வாறு மாற்றம் பெறும் என்பதை நடுநிலையாகச் சிந்திக்கின்றவர்கள் புரிந்து கொள்வார்கள்.

அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களின் மூலம் முஸ்லிம்களின்; வாழ்வுரிமைக்கு சவால் விடுக்கப்படும் இக்கால கட்டத்தில் அவர்களால் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களுக்கு இராஜதந்திர பொறிமுறைகளினூடாக பதிலளிக்கப்படுவதோடு மட்டும் நின்றுவிடாது முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலுள்ள பிழைகளும் திருத்தப்படுவது அவசியமாகும்.

நமக்குள் நாம் மேற்கொள்ளும் சுயவிசாரணை மூலம் நமது செயற்பாடுகளில் உள்ள தவறுகள் திருத்தப்பட வேண்டும். பிழைகளிலிருந்து சரிகளை நோக்கி நம்மை நகர்த்த சுயவிசாரணை இன்றியமையாதது. முஸ்லிம்கள் மீது சுமத்தப்படுகின்ற குற்றங்களுக்கும் அவற்றின் வீரியத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அழிப்பு நடவடிக்கைகளுக்கும் சர்வதேசத்திடம் சென்று நியாயம் கேற்பதால் தீர்வு கிடைக்கப்போவதில்லை. 30 வருடங்கள் யுத்தத்தால் சிதைந்து  போன தமிழ் மக்களுக்கு இது வரை தீர்வைப் பெற்றுக்கொடுக்காத சர்வதேச சமூகம்; முஸ்லிம்களுக்கு எவ்வாறு தீர்வைப் பெற்றுக்கொடுக்கப்போகிறது.

அதனால், காலம் கடத்தாது நமது தரப்புப் பிழைகளைத் திருத்திக்கொண்டு சரியான செயற்பாடுகளின்பால் நமது அத்தனை நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதுடன் நம்பக்க நியாயங்களை உரிய இராஜதந்திர பொறிமுறைகளினூடாக பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்நகர்துவதுடன் இந்நாட்டில் சகவாழ்வைக் கட்டியெழுப்ப முன்நின்று செயற்படும் தரப்புக்களுடனும் கைகோர்த்து செயற்படுவதற்கும் இஸ்லாம் காட்டிய வழியில் முஸ்லிம்கள் தங்களைப் புடம்போட்டுக்கொள்ள தயாராக வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

-எம்.எம்.ஏ.ஸமட்

No comments:

Post a Comment