இஸ்லாமிய வரம்பு பேணி விடுமுறை காலத்தை கழிப்போம்: ACJU - sonakar.com

Post Top Ad

Wednesday 28 March 2018

இஸ்லாமிய வரம்பு பேணி விடுமுறை காலத்தை கழிப்போம்: ACJU


ஆரோக்கியமும், ஓய்வும் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருட் செல்வங்களில் உள்ளவையாகும்.

(عن عبدالله بن عباس رضي الله عنهما قال: قال النبي صلى الله عليه وسلم: نعمتانِ مغبونٌ فيهما كثيرٌ من الناس: الصحة والفراغ . (رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விடயத்தில் நஷ்டமடைந்து கொண்டிருக்கின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். (புகாரி: 6412)



இந்த இரு செல்வங்களையும் முறையாக பயன்படுத்திக் கொள்ள தவறி விடுவதால் பெரும்பாலான மனிதர்கள் நஷ்டத்திற்கு உள்ளாகி விடுகின்றனர்.

ஏப்ரல் விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்படுகின்றன. தொடராக நான்கு மாதங்கள் பாடசாலை சென்று வந்த நம் பிள்ளைகள் விடுமுறை பெறும் காலம் இதுவாகும். இக்கால கட்டத்தில் எம்மில் சிலர் அவர்களை அழைத்துக்கொண்டு விடுமுறையை கழிப்பதற்காக உல்லாசப் பிரயாணங்கள் மேற்கொள்கின்றனர். பிள்ளைகளையும், குடும்பத்தவர்களையும் இவ்வாறு அழைத்துச் சென்று ஊர்களையும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பார்த்து வருவது இஸ்லாமிய போதனைகளுக்கு முரணானதல்ல. என்றாலும் நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் எமது செயற்பாடுகள் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி அமைய வேண்டும்.

ஆடைகள் அணிவது முதல் எமது உணவு, குடிப்பு ஆகிய யாவற்றிலும் ஹலால் ஹராம் பேணி இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். ஆடல், பாடல், பாட்டுக் கச்சேரிகள் என்பவற்றில் கலந்து கொள்ளுதல், மதுபானம் அருந்துதல், பிறருக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளுதல் போன்ற இஸ்லாமிய போதனைகளுக்கு முரணான விடயங்களை முற்று முழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே எமது விடுமுறை காலத்தில் உரிய நேரத்தில் தொழுது, சன்மார்க்க விளக்கங்களைக் கேட்டு, நல்ல விடயங்களில் நேரத்தை கழிக்குமாறும், சுற்றுலா செல்வோர் இஸ்லாமிய வரையறைகளையும் ஒழுக்க விழுமியங்களையும் பேணி பிற சமூகத்தவருக்கு முன்மாதிரியாக செயற்படுமாறும் சகல முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் அண்மையில் கண்டிப் பகுதியில் நடந்து முடிந்த கலவரத்தை கவனத்திற் கொள்ளும் எவரும் உல்லாசப் பயணங்களை மேற்கொள்ள மாட்டார்கள் என நம்புகின்றோம். அந்தப் பிரயாணத்துக்குச் செலவாகும் தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்துதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட சிறிய அசம்பாவிதங்கள் இம்முறையும் ஏற்படுமாயின் அது பெரும் பூதாகரமாகவே ஆகிவிடும் என அறிவித்துக் கொள்கின்றோம். ஆதலால் விடுமுறைப் பயணத்தை புறம் தள்ளிவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்ன செய்யலாம் என்பதை கவனத்திற் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் - பிரசாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment