வடக்கு முஸ்லிம்களின் பலவந்தமான வெளியேற்றம்: ஓர் மீள் பார்வை - sonakar.com

Post Top Ad

Wednesday 30 December 2015

வடக்கு முஸ்லிம்களின் பலவந்தமான வெளியேற்றம்: ஓர் மீள் பார்வை


வடக்கு மாகாண முஸ்லிம்கள்  பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இன்று இருபத்து ஐந்து வருடங்கள் கழிந்துவிட்டதை நினைவுகூரும் வகையிலும் அம்மக்களின் எதிர்காலம் குறித்தும் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பில் சில நிகழ்வுகளும் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்டன.

அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. அதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.அவர் அவ்விழாவில் பின்வருமாறு தெரிவித்த கருத்து பலத்த பிரதிவாதங்களையும் எதிர்ப்பலைகளையும் உருவாக்கியிருந்தது.

’வடக்கு மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் ஓர் இனச் சுத்திகரிப்பு செயற்பாடாகும்.இதற்காக ஒவ்வொரு தமிழனும் வெட்கி தலைகுனிய வேண்டும்.

சிரேஷ்ட சட்டத்தரணி சுமந்திரன் வெளிப்படையாகத் தெரிவித்த இனச்சுத்திகரிப்பு என்ற சொல்லாடல் குறித்து பல்வேறு விமர்சனங்களை தமிழ் மக்களின் அரசியல் களத்திலும் தமிழ் ஊடகங்களின் பத்தி எழுத்தாளர்களிடமும் குறிப்பாக தமிழ் சமூகம் சார்ந்த ஊடகவியலாளர்கள் மத்தியிலும் ஒரு கொதி நிலையை ஏற்படுத்தியதுடன் பழையதைக் கிளறி தேவையில்லாத பிரச்சனைகளை முன்னகர்த்தக் கூடாது என்பதையே அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

வடபுலத்து முஸ்லிம்கள் தமது தாயகத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டது குறித்து இது ஓர் இனச்சுத்திகரிப்பு செயற்பாடு என பிரகடனம் செய்யவுமில்லை அவ்வாறு கோரவுமில்லை என்பது உண்மைதான்.அதற்காக வேண்டி இனச்சுத்திகரிப்பு முனைப்புக் கொண்ட நடவடிக்கையாக இதனைப் பார்க்கக் கூடாது என்று சொல்வது முறையல்ல.

இதனால்தான் சட்டத்தரணி சுமந்திரம் வடபுலத்து முஸ்லிம்களின் வெளியேற்றம் ஓர் இனச்சுத்திகரிப்பு எனும் அம்சத்துக்கான வரைவிலக்கணத்துக்குள் அடங்கக்கூடியது என்பதை மீண்டும் ஒரு தடவை வெளிப்படையாக சுட்டிக்காட்டத் தயங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடபுலத்து முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவு கூர்ந்ததை கிளறுதல் என வர்ணிக்கத் தொடங்கியிருப்பது சரியல்ல.ஏனெனில் தமிழ் மக்கள் வருடாந்தம் மாவீரர் தின நினைவு கூர்தல் மற்றும் இலங்கை அரசாங்க படையினராலும்,ஆதிக்க பௌத்த சிங்கள பேரினவாதிகளினாலும் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலை பற்றி நினைவுபடுத்தி பேசிவருவது என்பது வன்மத்தை வளர்ப்பதற்கான கிளறுதல் அல்லவே.

இதனைப் போன்ற ஒன்றாகவே வடபுலத்து முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் பற்றி பேசுவதை நோக்க வேண்டும்.அதுவே நேர்மையான பார்வையாகவும் இருக்கும்.அதுமட்டுமன்றி அவர்களின் மீள்குடியேற்றம் சரியாக அமுலாகாத நிலை காணப்படுவதனால் இதனை உரத்துப் பேசவேண்டிய கட்டாயத்தையும் முஸ்லிம் அரசியல் சூழல் கொண்டிருப்பதும் மறைவன்று.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் இனச்சுத்திகரிப்பு எனும் சொல் கையாளுதலுக்காக கிளர்ந்தெழுந்தவர்கள் அண்மையில் இலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் வடபுலத்து முஸ்லிம்களின் வெளியேற்றம் குறித்து தெரிவித்திருந்த இனச்சுத்திகரிப்பு என்ற கூற்றை மறுக்க முனையாமை இந்த சுட்டுதலுக்கு வடபுலத்து முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் ஏற்புடையதுதான் என்பதை தமது மௌனத்தின் ஊடான சம்மதமாக வெளிப்படுத்தியிருப்பதாக கொள்ளமுடியும்.

எது எவ்வாறு இருந்தாலும் கடந்த 1990களில் வடபுலத்து முஸ்லிம்களை அவர்களின் பூர்வீக தாயகத்திலிருந்து முற்றாக தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக வெளியேற்றினர் என்கின்ற வடுவிலிருந்து அவர்களை விடுவிக்க முடியாது.அதேநேரம் இந்த செயற்பாட்டினை நியாயப்படுத்தும் வகையில் அவ்வியக்கம் வலுவிலிருந்த காலத்துள் ஒரு நியாயமான காரணத்தைக் கூட முன்வைக்க முடியாத கையறு நிலையில்தான் அது இருந்தது என்பதே நிஜம்.

வடபுலத்து முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் நேர்மையின்றி வெளியேற்றியமைக்கு உத்தியோகபூர்வமாக எந்த காரணங்களையும் அவ்வமைப்பினர்களால் முன்னிறுத்த முடியவில்லை.இதுவே பலவந்தமாக முஸ்லிம்களை விரட்டியமைக்கு வலுவான காரணங்கள் அவர்களிடம் இல்லை என்பதை வெளிக்கொணர போதுமான சான்றாகும்.என்றாலும் இவ்வமைப்பின் சார்புநிலைக் கருத்தாளர்கள் பின்வரும் நான்கு காரணங்களை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருந்தனர்.

01)தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும் அதன் போராளிகளையும் இலங்கை அரச படைகளிடம் காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டில் வடபுலத்து முஸ்லிம்கள் ஈடுபட்டனர்.இதனால்தான் அங்கிருந்து அவர்கள் முழுமையாக விரட்டியடிக்கப்பட்டனர்.

02)ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உருவாகிய பின்னர்தான் தமிழ்,முஸ்லிம் மக்களிடையே பிளவைக் கொண்டுவந்ததென்றும் மற்றும் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததன் விளைவுக்குப் பதிலாகவே முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.

03)கிழக்கு மாகாணத்திலிருந்து வடபுலத்துக்கு வருகை தந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் கிழக்கில் நடைபெற்ற தமிழ்,முஸ்லிம் இனக்கலவரங்களுக்காக வடபுலத்து முஸ்லிம்களை தாக்குவதற்கு தயாரானதை தவிர்ப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும்தான் இங்கிருந்த முஸ்லிம்களை இடம்பெயரச் செய்யப்பட்டனர்.

04)தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்குமிடையில் அடிக்கடி மோதல்கள் இடம்பெற்றன.இதற்குள் முஸ்லிம்கள் அகப்பட்டு வீணாக இம்சைப்பட நேரிடும்.இந்த நிலையிலிருந்து முஸ்லிம்களை விடுவிக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் அவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர்.

இவ்வாறு சொல்லப்பட்ட எந்தக் காரணங்களை எடுத்துவைத்து ஆராய்ந்தாலும் அவைகள் அறிவுபூர்வமானதாகவோ நியாயபூர்வமானதாகவோ அமையவில்லை.ஏனெனில் இவை ஒவ்வொன்றுக்கும் எழுகின்ற  எதிர்த்தாடல் கேள்விகளும் விளக்கங்களும் நீட்டிக்கொண்டே இருக்கின்றன.

01)தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டத்தை வடபுலத்து முஸ்லிம்கள் காட்டிக்கொடுத்தனர் என்றால்,அது அங்கு வாழ்ந்த மொத்த முஸ்லிம்களின் முழுச்செயற்பாடாக இருந்திருக்கமாட்டாது என்பது மட்டும் மிகவும் உறுதியானது.அவ்வாறான காட்டிக்கொடுத்தல் நடைபெறவில்லை என்பதுதான் உறுதியான சங்கதி.

அவ்வாறு இருந்ததாக ஒரு வாதத்துக்கு ஏற்றுக்கொண்டால் கூட இவ்வாறான ஈனத்தனத்தில் ஈடுபட்டதாக நம்பப்படுபவர்கள் குறிப்பாக்கப்பட்டு அவர்கள் மீதான தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.மாறாக மொத்த முஸ்லிம் மக்கள் மீதும் எதிர் நடவடிக்கை மேற்கொண்டது என்பது ஒரு நாகரிகமான செயற்பாடாகவோ நீதியான நெறியாகவோ நோக்க முடியவில்லை.

உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பலம் கொண்டதும் புத்திகூர்மையானதும் என்ற நிலையில் இருந்தவை.இதனூடாக தவறான எத்தனங்களில் கைகோர்த்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை மட்டும் தண்டித்து அல்லது வெளியேற்றி ஆரம்ப எச்சரிக்கையை முன்வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு எச்சரித்தும் அல்லது தண்டித்தும் காட்டிக்கொடுக்கும் நடவடிக்கை நிறுத்தப்படாது தொடர்ந்த வண்ணம் இருந்திருந்தால் வடபுலத்து முஸ்லிம்களிடம் அதனை நேரடியாகத் தெரிவித்து அவர்களைத் தற்காலிகமாகவும் அவர்களின் சுயவிருப்பின் அடிப்படையிலும் இடம்பெயர்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவுறுத்தி வழிகாட்டியிருக்க வேண்டும்.

இப்படி நடைபெறாமல் கூட்டுமொத்தமாக முஸ்லிம்களின் பூர்வீக தாயகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டதனால் இந்த காட்டிக்கொடுப்புக்காகவே இது நடைபெற்றது என்று ஏற்றுக்கொள்வதில் தயக்கங்கள் நிறையவே உள்ளன.

02)ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றம்தான் வடபுலத்து முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்படுவதற்கு வழிசமைத்தது என்றால்,1990களுக்கு பின்னர் 1994,2000,2001,2004,2010 ஆகிய காலகட்டங்களில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் தனியான முஸ்லிம் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வடபுலத்து நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர் தெரிவாகி வந்திருக்கின்றனர்.

அதுமட்டுமன்றி 2010,2015களில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பிலும் வடபுலத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தக்கவைக்கப்பட்டுள்ளது.பொதுவாக முஸ்லிம்களுக்கான தனிக்கட்சி என்கின்ற அம்சம் இழக்கப்படாத வகையில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் வடபுலத்து முஸ்லிம் மக்களினால் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றது என்பதையே இது சுட்டிக்காட்டுகின்றது.

ஆகவே, முஸ்லிம் தனிக்கட்சிகளின் தோற்றம்தான் வடபுலத்து முஸ்லிம்களை கூட்டுமொத்தமாக வெளியேற்றியது என்றால்,தனியான முஸ்லிம் கட்சிகள் என்ற கோட்பாட்டை அம்மக்கள் ஆதரிப்பதிலிருந்து விலகியிருக்க வேண்டும்.அவ்வாறு நடைபெறாமையே இக்கருத்தில் எவ்விதமான உண்மைகளும் இல்லை என்பதை நமக்கு நிரூபிக்கக் கூடியாதாக இருக்கின்றது.

03)கிழக்கு மாகாணத்திலிருந்து வடபுலத்துக்கு வருகை தந்த தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளின் தாக்குதல்களிலிருந்து வடபுலத்து முஸ்லிம்களை விடுவிப்பதற்காகவே இந்த வெளியேற்றம் நிகழ்ந்தது என்று கூறுவது ஏற்கத்தக்கதாக இல்லை.

ஏனெனில் வே.பிரபாகரன் தலைமையில் ஒரு கட்டுக்கோப்பான கட்டமைப்பாக வளர்க்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளை தன்னால் கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியவில்லை என்ற வாதம் அவரின் ஆளுமையை கேள்விக்குட்படுத்தும் ஒன்றாகும்.

தமிழ் மக்களிலிருந்து ஆயுதம் தரித்த பல்வேறு அமைப்புக்கள் உருவாகி இருந்த அக்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும்தான் தமிழ் மக்கள் நலன்சார்ந்த போராட்டத்தை சரியான வழியில் முன்னகர்த்துகின்றது.ஏனைய அமைப்புக்கள் பல தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் அதனால் மக்கள் மத்தியில் செல்வாக்குக் குறைந்தும் விமர்சனங்களை எதிர்கொண்ட ஒரு காலப்பகுதியாகவும் 1990 காணப்பட்டது.

அதுமட்டுமன்றி தமிழ் ஆயுதம் தரித்த இயக்கங்களுக்கிடையில் மோதல்கள் வலுப்பெற்ற காலமாகவும் இது அமைந்திருந்தது.ஏனைய இயக்க உறுப்பினர்களை தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கண்டித்து தண்டித்த சம்பவங்களும் நடைபெற்றன.இந்நிலையில் வடபுலத்து முஸ்லிம்களை அவர்களின் பூர்வீகத்திலிருந்து விரட்டுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குப் போராளிகள் திட்டமிட்டதை அதன் தலைவரினால் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது எனச் சொல்வது நம்பக்கூடியதாக இல்லை.

மற்றும் தனது படையணியை அதுவும் தன்னால் கட்டுப்படுத்த திராணி இல்லை என்பது அவர் காணத்துடித்த தனித் தாயகத்தில் வாழும் மக்களுக்கான பொதுவான நீதி,நியாயம்,பாதுகாப்பு போன்றவற்றினை எப்படி அவரது ஆட்சி நிருவாகம் பெற்றுக்கொடுக்கும் என்கின்ற சந்தேகத்தையும் இவ்விடத்தில் மேற்கிளம்பச்செய்கின்றது.

04)தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்கும் இடையே ஏற்படும் யுத்த சூழழில் வடபுலத்து முஸ்லிம் மக்கள் அகப்பட்டு அழிந்துவிடாது இருப்பதற்காகவே இந்த விரட்டியடிப்பு நிகழ்ந்ததென்றால் அது பகிரங்கமாக முன்னகர்த்தப்பட்டு இது குறித்து முஸ்லிம்களின் கருத்தறியப்பட்டு அவர்கள் விரும்பினால் இங்கு வாழ்வது அல்லது இடப்பெயர்வை மேற்கொள்வதென்று முஸ்லிம்களின் முடிவுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறின்றி மிகவும் வலுக்கட்டாயமாக வடபுல முஸ்லிம்களின் அபிப்பிராயம் பெறப்படாது விடுதலைப் புலிகளினால் வடபுல முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற வேண்டும் என்ற கட்டாயத்திணிப்பை மேற்கொண்டு பகிரங்கமாக அறிவிப்புச் செய்யப்பட்டதிலிருந்து இது ஒரு திட்டமிட்ட வெளியேற்றம்தான் என்பதை உறுதிசெய்கின்றது.

அதுமட்டுமன்றி குறுகிய கால இடைவெளியில் அதாவது இரண்டு மணித்தியாலங்கள் அவகாசத்தில் 500 ரூபாய் பணம் மட்டும் எடுத்துச் செல்லும் அனுமதியில் நிகழ்ந்த இந்த மிலேச்சத்தனத்தை எப்படி நல்லெண்ணத்தின் அடிப்படையில் நிகழ்ந்தது என்று நம்புவது? அவ்வாறு நம்புவதாயின் பின்வரும் கோணங்கள் அந்த வெளியேற்றத்தின் போது பிரதிபலித்திருக்க வேண்டும்.

போதுமான கால அவகாசம் வடபுலத்து முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.அவர்களின் அசையும் சொத்துக்களில் விரும்பியதை அவர்களுடன் எடுத்துச் செல்ல அனுமதித்திருக்க வேண்டும்.அசையாத சொத்துக்களுக்கு பாதுகாப்பு பொறுப்பினை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றிருக்க வேண்டும்.இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்ளாத ஒரு சூழலில் கூட்டுமொத்தமாக வடபுலத்து முஸ்லிம்களை அவர்களின் பூர்வீக தாயகத்திலிருந்து வெளியேற்றியமை அப்பட்டமாக இக்கட்டில் தவிக்கவிட்ட செயலன்றி வெறென்ன? இது ஒரு இன சுத்திகரிப்பின் பண்புகளுக்கு அப்பாலான செயல்வடிவம் எனத்தான் கூற முடியுமா?

ஆயினும் இந்த ஈனச்செயல் தமது அமைப்பினால்தான் மேற்கொள்ளப்பட்டது என்பதை பின்வரும் இரண்டு சந்தர்ப்பங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றிருந்தனர்.இந்த வெளிப்படுத்துகைக்கு அப்பால் அவ்வமைப்பினர் வேறு எதனையும் முன்வைத்திருக்கவில்லை.
01)வடபுலத்து முஸ்லிம்களின் வெளியேற்றம் என்பது ஒரு துன்பவியல் நிகழ்வு என அண்டன் பாலசிங்கம் கூறியமை.02)கடந்த 2002இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் காணப்பட்ட ஒப்பந்தத்தில் அல்லது இணக்கப்பாட்டில் முஸ்லிம்கள் மீளக் குடியமர முடியும் எனத் தெரிவித்திருந்தமை.

இந்த சந்தர்ப்பத்தில் அநியாயமாக விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் பேசப்பட்டிருந்தாலும் அது உடன் சாத்தியப்படவில்லை. அதற்கு கூறப்பட்ட காரணங்கள் மிகுந்த அவதானத்துக்குரியவைகள்.

முஸ்லிம்களின் வீடுகளில் சில உடனடியான குடியிருப்புக்கு உகந்ததற்ற சிதைவுகளை அடைந்திருக்கின்றது.(இது கூடத் திட்டமிட்டு வீட்டின் கூரை,ஜன்னல்,கதவு போன்றவைகள் அபகரிக்கப்பட்டிருந்தன.) இது திருத்தி அமைக்கப்படும் வரையிலும் மற்றும் பல முஸ்லிம்களுக்குச் சொந்தமான இல்லங்களில் மாவீரர்களின் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டிருக்கின்றனர்.இவர்களுக்கான மாற்றீடு இருப்பிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வரையிலும் முஸ்லிம்கள் மீளக் குடியேற காத்திருக்க வேண்டும் என்பதாகும்.

இவ்வாறான மாற்றங்களைக் கொண்டுவந்து முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்கான எந்த முயற்சிகளையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு வலிமை பெற்றிருந்த நிலையிலோ அல்லது வலுவிலிருந்த காலத்திலோ முன்னெடுக்கவில்லை. வெறும் பேச்சளவோடு முஸ்லிம் மீள்குடியேற்ற சமாச்சாரம் நின்று போனதென்பதே வரலாறு.

இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை மீள்குடியேற அனுமதித்திருந்தது என்பது ஒரு கதையாடல் சம்பவமாகவே இருந்தது.உண்மையில் அன்று மட்டுமன்றி இன்றுவரை இம்மக்களின் மீள் குடியேற்றம் சரியான முறைமையின் கிழ் திட்டமிட்டு நடபெறாது இருந்துவருவது ஆழ்ந்து நோக்கத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரஃப் அவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் செய்துகொண்ட சந்திரிக்கா-அஷ்ரஃப் ஒப்பந்தத்தில் கூட வடபுலத்து முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்து எழுதப்பட்டிருந்தும் அவர்களால் கூட அன்று இந்த மீள்குடியேற்றத்தை வெற்றிகொள்ள முடியவில்லை.

அதற்கான காரணத்தை அவரது பார்வையில் கண்டிருந்த கோணத்தை சரிநிகர் பத்திரிகைக்கு 1999களில் வழங்கிய செவ்வியில் பின்வருமாறு எடுத்துக்காட்டியிருந்தார்.அதுதான் உண்மையாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டுக்காலம் நிரூபித்துக்காட்டியது.

‘விரட்டியடிக்கப்பட்ட வடபுலத்து முஸ்லிம்கள் மீண்டும் அங்கு சென்று குடியேறி வாழ்வதென்பதை அண்டன் பாலசிங்கமோ திலகரோ தீர்மாணிக்க முடியாது.அவர்கள் கூறுவதை நம்பி குடியேறக்கூடாது.தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பகிரங்கமாக முஸ்லிம்களை குடியேற அழைப்புவிடுக்க வேண்டும்.அப்போதுதான் மீள்குடியேற்றம் சாத்தியமாகும்’
எது எவ்வாறிருந்தாலும் கடந்த காலங்களை விட்டுவிட்டு,நல்லாட்சி நடைபெறுவதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ள இந்த அரசாங்கத்திலாவது வடபுலத்து முஸ்லிம்களை அவர்களின் பூர்வீக நிலத்தில் வாழும் உரிமையை நிலைநிறுத்துவதற்கும் சரியான முறையில் மீள குடியேறுவதற்கும் நடவடிக்கைகள் நடைபெறவேண்டும் என்பதே இன்றைய எதிர்பார்ப்பாகும்.

இதனை இன்றைய அரசாங்கம் செய்வதற்கு நமது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவர்களும் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்படுவார்களா? செயற்படுவதுதான் உண்மையில் அவர்களின் முக்கிய பொறுப்பாகும்.தமது பொறுப்பிலிருந்து விடுபடாத பிடிப்பும் துடிப்புமே வடபுல முஸ்லிம்களின் வாழ்வில் எழுச்சிகரமான மாற்றத்தை விதைப்பதாக அமையும்.

-எம்.எம்.எம்.நூறுல்ஹக்
சாய்ந்தமருது-05

No comments:

Post a Comment