எம்மைப் பற்றி


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறோம்.

அல்ஹம்துலில்லாஹ், எல்லாம் வல்ல இறைவன் நல்லருளால் எமது முயற்சி இன்று இணைய அளவில் கைகூடி வந்திருக்கிறது, இது வெறும் ஆரம்பமே, இதன் வளர்ச்சியும், வேகமும் இன்ஷா அல்லாஹ் இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதே எமது அவாவும்.

இலங்கைச் சோனகர்கள் பற்றிய அரசியல் மதிப்பீடும், குழறு படியும் காலத்துக்குக் காலம் இலங்கை அரசியலில் நடைபெற்று வருவதை ஆகக்குறைந்தது, கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக நாம் பார்த்து வருகிறோம். அப்போதும் எம் மூதாதையர்கள் சோனகர்களின் தனித்துவத்தை இதை விடப் பல மடங்கு வேகமாகவும் ஆணித்தரமாகவும் எடுத்துரைத்தனர் எனும் இடத்திலிருந்து பார்க்கும் போது, கடந்த காலத்தை மாத்திரமல்ல எதிர்காலத்தையும் அவர்கள் மிக நிதானமாகக் கணித்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

அரசியல் தேவைகளின் போது நாம் மொழி ரீதியான அடையாளத்திற்குள்ளாக்கப்படுவதையும்,  வெளிப்புறத்தில் எமது உரிமைகள் பந்தாடப்படப்போவதையும் நன்கு கணித்தே நமது நிலையான அரசியல் தனித்துவத்தை நமது மூதாதையர்கள் வெள்ளையர்களின் மன்றில், நாசுக்காக எமது தனித்துவத்தைத் தகர்த்தெறிய முயன்ற புத்திஜீவிகளையும் மீறி நிலை நாட்டியிருக்கிறார்கள்.

அதன் பயனாகவே இலங்கையில் பெரும்பாலும் முஸ்லிம்களாக இருக்கும், சோனகர்கள் அரசியல் ரீதியாக தாம் பின்பற்றும் மார்க்கத்துக்கும், தமது வாழ்வியலுக்குமான தனித்துவத்தைப் பெற்று இன்றும் இடையூறு இன்றி அனுபவித்து வருகிறார்கள்.

ஆயினும், காலத்தின் கட்டாயத்தில் தற்காலத்தில் மீண்டும் சோனகரின் தனித்துவத்தைக் கேள்விக்குறியாக்கி அவர்களை மத ஒடுக்குமுறைக்கும், மொழி அடிமைத்தனத்திற்குமுள்ளாக்கி இன்னொரு பிரிவில் ஒருவராக மாத்திரம் சித்தரித்து எமது உரிமைகளைப்பறிக்க முயன்று கொண்டிருக்கிறது தற்கால இலங்கையின் நவீன வடிவம் நோக்கிப் பயணிக்கும் அரசியல்.

அந்தக் காரணிகளை அடையாளங் கண்டு, அதை எதிர்க்கும் வலுவையும், அதற்காக ஆவணங்களையும், அதற்கான நிலைப்பாட்டை நிலை நிறுத்திக்கொள்ளவும், நாம் தொடர்பில் நமக்குள் பல்வேறு ஆய்வுகளும், அதற்கான ஆவணக் கோர்ப்புகளும் அரசியல் ரீதியாக நமக்கு அவசியம் தேவைப்படுகின்றன.

அதன் இன்னொரு பக்க முயற்சியாக இணையத்தில் எமது பதிவுகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணங்கொண்ட சிலரின் கூட்டு முயற்சியாகவே இந்த வலைத்தளம் உருவாகிறது.

இந்த முயற்சியில், எம்மோடு கை கோர்க்க விரும்பும் அனைவரையும் இனிதே வரவேற்கிறோம்.