வரலாறு

அஸ்ஸலாமு அலைக்கும்

இலங்கைச் சோனகர்களின் வரலாறு தொடர்பில் இன்றைய தேதி வரை பல்வேறு ஆய்வுகள், பல்வேறு வரலாற்றுக்குறிப்புகள் நம்மிடையே காணக்கூடியனவாக இருக்கின்றன. இவற்றில் பெரும்பான்மையான பதிவுகள் இலங்கைச் சோனகர்களில் வரலாற்றை கி.மு 1ம் நூற்றாண்டிலிருந்து ஆவணக் குறிப்புகள் மூலம் எடுத்தியம்பிக்கொண்டிருந்தாலும், அதற்கு முன்னர் இலங்கையில் சோனகர்கள் வாழ்ந்திருக்க முடியாதா? எனும் கேள்வியும் விடை காணப்படாமலேயே இருக்கிறது.

சோனகர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்களாகவே இருப்பதனால் அவர்களது வரலாற்றை இஸ்லாம் ஆரம்பித்த கி.பி 7ம் நூற்றாண்டிலிருந்து தொடர்பு படுத்தும் இன்னொரு பக்கமும் இலங்கை வரலாற்றில் காணப்படுவது மாத்திரமன்றி, இதுவே பெரும்பாலும் இஸ்லாமியக் கல்வியில் திணிக்கப்பட்ட ஆரம்பமாகவும் காணப்படுகிறது.

இலங்கையை ஆண்ட வெள்ளையர்கள் முதல் அதற்கு முந்தைய வெளிநாட்டவர்களும் ஏற்றுக்கொண்ட கி.மு 1ம் நூற்றாண்டிலிருந்து கி.மு 300 க்கிடையிலான இலங்கை தொடர்பான குறிப்புகளிலும் இலங்கையில் குடியிருந்த சோனகர்கள் பற்றிய குறிப்புகளும் சில விளக்கங்களும் காணப்படுவதனால், இஸ்லாமிய வளர்ச்சிக்குப் பின்னான சோனகர் வரலாறு என்பது முற்று முழுதாக மட்டுப்படுத்தப்பட்ட வெளியீடு என்பது தெளிவாகிறது.

இலங்கைச் சோனகர்களின் உரிமைகள் தொடர்பில் வெள்ளையர் மன்றிலேயே வாதிட்டு, வென்றெடுத்த எமது முன்னோர்கள் கலாநிதி I.L.M. அசீஸ் போன்றோரின் பெரு முயற்சியில் உலகறிந்து கொண்ட பண்டை கால சோனக வரலாறும், வாழ்வியலும் மற்றும் எம் மரபும் இலங்கை வரலாற்றில் சோனகர்கள் தனித்துவத்துடன் வாழ்ந்து வந்ததையும், அவர்கள் நாகரீகம், பொருளாதாரம், பொறியியல் முதல் வர்த்தகத்திலும் தனித்துவத்துடன் தம்மை நிலை நிறுத்தியிருந்தமையையும் நாம் காண்கிறோம்.

எனவே, எமது வரலாறு இன்னும் ஆழமாக ஆராயப்படவேண்டும் என்பது நம்மிடம் தங்கியிருக்கும் வரலாற்றுக் கடமையாகவும், நமது ஆய்வுகள் நாம் நம் பின் வருவோருக்கு விட்டுச் செல்லப்போகும் சான்றுகளாகவும் இருக்கப் போகிறது.

அதன் அடிப்படையில், சோனகர் வரலாற்றை விரிவாக ஆராயும் பல்வேறு கோணங்களைத் தாங்கிய ஆய்வுக் கட்டுரைகள், திறனாய்வுகள், வரலாறுகளை இவ்வலைத்தளம் தாங்கி வர இருக்கிறது.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நம் வரலாறு ஒரு பக்கத்தில் அடைக்க முடியாதது, எனவே இவ்விணையத்தை அதற்கான அடிப்படைத் தளமாகவே கொண்டு இங்கே பிரசுரிக்கப்படும் ஆக்கங்களின் மூலமும் நம் தனித்துவத்தையும், வரலாறையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பையும், நம் அரசியல் தனித்துவத்தை நாம் பேணிக்கொள்ள நமக்குதவும் வழிமுறைகளையும் கண்டறிந்து பயன் பெற, ஆவணப்படுத்தத் தேவையான அறிவையும், ஆற்றலையும் எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்குத் தந்தருள்வானாக!

உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், வரவேற்கப்படுகின்றன.