தீர்வுத் திட்டத்தில் அக்கறையற்ற முஸ்லிம் தலைமைகள்

நமது நாட்டில் காணப்படும் இனப்பிரச்சனை தொடர்பிலான தீர்வையும் மையப்படுத்தி இலங்கையின் அரசியலமைப்பில் அதனை இணைத்துக்கொள்வது என்கின்ற அடிப்படையை முன்னிறுத்தியே இன்றைய நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது என்பது மிகவும் பட்டவர்த்தமானது.

நமது நாட்டில் காணப்படும் இனப்பிரச்சனை என்பது மூன்று வகைகளை கொண்டிருக்கின்றது. ஒன்று சிங்கள – பௌத்த ஆதிக்க சக்திகளின் தமிழர்களுக்கெதிரான அச்சுறுத்தல்களையும் இரண்டாம் தர பிரஜைகளாக அவர்கள் நடத்தப்படுகின்ற அம்சத்தைக் கொண்டிருக்கின்றது. மற்றொன்று இலங்கையின் பிரதான சமூகங்களில் ஒன்றான முஸ்லிம்கள் மேற்குறித்த சிங்கள அரசாங்கங்களினூடாகவும், மிதவாத தமிழ் அமைப்புக்களும் முன்னர் இருந்த ஆயுதம் தரித்த ஆதிக்க தமிழர் சக்தியினாலும் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களுக்கு விடிவுகாண வேண்டிய அம்சத்தோடும் தொடர்புபட்டதாகும்.

இனப்பிரச்சனையில் மதம் மொழி, நிலம், கல்வி, கலாசார பண்பாடுகளிலெல்லாம் இதன் தாக்கம் எதிரொலித்து காணப்பட்டது. மட்டுமன்றி வடபுலத்திலிருந்து முஸ்லிம் சமூகம் ஓர் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டு முற்றாக அப்பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட அம்சத்தையும் இதற்குள் நாம் பார்க்கலாம்.

இவ்வாறான இனப்பிரச்சனைக்கான தீர்வினை காண்பதற்காக முயற்சிகள் எடுப்பது போன்ற பாங்கினை இன்றைய நல்லாட்சி அரசாங்கம் வெளிப்படையில் காட்டிக்கொண்டாலும் யதார்த்தபூர்வமாக அதனை அடைந்துகொள்வதற்கான எத்தணிப்புக்களை சரிவர முன்னெடுத்திருக்கின்றதா என்ற ஒரு கேள்வியை நாம் எழுப்பினால் அதற்கான பதில் பூஜ்ஜியமாகவே உள்ளது.

இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது இலங்கையில் இருக்கின்ற நடைமுறை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்புடன் தொடர்புபட்டதாகும். அதனை அரசாங்கம் செவ்வனச் செய்வதற்கான எந்த பாங்கையும் அல்லது வெளிப்படைத் தன்மையோடு முன்னெடுப்பதாக இல்லை. மாறாக வெவ்வேறு பிரச்சனைகளோடு அரசியலமைப்பு மாற்றத்தைக்கூட முடிச்சுப் போடுவதில் அக்கறை காட்டுகின்றது.

இதில் தேர்தல் முறைமையில் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவது மற்றும் நிறைவேற்று அதிகாரமுடைய செயலாற்று ஜனாதிபதி முறைமையினை ஒழிப்பது என்பதை மாத்திரம் முன்னிறுத்தி நல்லாட்சி அரசாங்கம் தன்னை ஒரு இன நல்லிணக்கத்தின் முன்னோடியாக காண்பிப்பதிலும் அக்கறைகாட்டிக் கொண்டிருக்கின்றது.

உண்மையில் தேர்தல் சீர்திருத்தங்கள் என்பது நாட்டில் சிங்கள – பௌத்த மேலாதிக்க மனோபாவத்தை மிகவும் இறுக்கமாக வலியுறுத்தும் வகையில் அமைத்துக்கொள்வதில் அதிக அக்கறையைக் காட்டிவருகின்றது. அதனை என்ன விலை கொடுத்தேனும் நிறைவேற்றிக் கொள்வதிலும் பாரிய பங்குகளை வகிப்பது போன்று இன்றைய நல்லாட்சி அரசாங்கம் அக்கறை காட்டுகின்றது.இதன் பின்னணியில் கூட முஸ்லிம் சமூகம்தான் பெரிதும் பாதிக்கக்கூடியதாக வகுக்கப்படுவதற்கான சாயலே காணப்படுகின்றது.

அதுமாத்திரமன்றி நிறைவேற்று அதிகாரமுடைய செயலாற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிப்பதென்பதில் கூட வெகுவாக பாதிக்கப்படுகின்ற சமூகமாக முஸ்லிம்கள் இருப்பதென்பது மறைவன்று. பொதுவாக இவ்விரு விடயங்களிலும் இனப்பிரச்சனைக்கான தீர்வு என்றோ அல்லது நாட்டின் நலன்  என்றோ நோக்குகையில் பௌத்த – சிங்கள பேரினவாத ஆதிக்க சக்திகளை நிலைநிறுத்துவதற்காக உருவாக்கிக்கொள்ள எடுக்கப்படுகின்ற ஒரு கட்டமைப்பே அதற்குள் திட்டவட்டமாக செய்யப்படுகின்றது.

இந்த அவலம் ஒருபுறமிருக்க மற்றொரு சட்டச் சிக்கலும் இதிலிருக்கின்றது. நமது இன்றைய நடைமுறை அரசியலமைப்பு முற்றாக மாற்றப்பட்டு புதிதாக வரையப்படுவதா அல்லது யாப்பின் சில பகுதிகள் மாத்திரம் திருத்தத்துக்குள் உள்வாங்கப்படுவதா என்கின்ற விடயத்தில் கூட இன்றைய ஆளும் தரப்பினரிடையே ஒருமித்த கருத்து காணப்படுவதாக இல்லை. அவர்களில் ஒரு சாரார் முற்றாக அரசியலமைப்பை மாற்றி எழுதுவது என்று கூறிக்கொண்டாலும் அதன் பின்னால் பாரிய ஆதரவுக்கரம் இருப்பதாகத் தெரியவில்லை.

மாறாக ஆளும் தரப்பிலிருந்தே இன்றைய அரசியலமைப்பில் சில பகுதிகளில் மாத்திரம் திருத்தங்களை மேற்கொள்வதுதான் நோக்கம் என்பதை மிகவும் வலியுறுத்தி கருத்துரைகளை முன்வைப்பதையும் பார்க்கின்றோம். அதிலும் குறிப்பாக சர்வஜன வாக்கெடுப்பு மூலம் திருத்தம் கொண்டுவரக் கூடியவற்றில் இப்போதைக்கு மாற்றங்களைச் செய்வதில்லை என்கின்ற ஒரு தீர்மானத்தை அறுதியாகவும் இறுதியாகவும் இன்றைய நல்லாட்சியின் பங்காளர்கள் மிகவும் துலாம்பரமாக வெளிப்படுத்துகின்றனர்.

இத்தகைய நிலைப்பாடுகளெல்லாம் நமது நாட்டில் காணப்படுகின்ற இனப்பிரச்சனையை தீர்த்துவைப்பதற்காக உளத் தூய்மையோடும் உண்மையான நோக்கோடும் முன்னெடுக்கப்படுகின்றதா என்கின்ற சந்தேகத்தை மிகவும் வலுப்படுத்துகின்றது. என்றாலும் தேர்தல் சீர்திருத்தங்கள் மாத்திரம் சந்தேகங்களுக்கு அப்பால் அமுலுக்கு வருமென்கின்ற தோரணையை நமக்கு ஏற்படுத்துகின்றது.

இதில் முஸ்லிம் சமூகத்துக்கு நலன்களை விளைவிக்கக்கூடிய விடயங்கள் எதுவும் கிடையாது. அதேநேரத்தில் முஸ்லிம், சமூகம் இதனூடாக பாதிக்கப்படுகின்ற பக்கத்திலிருந்து விடுதலை அடைவதற்கான வழிகள் இல்லாத போதிலும் அதனைக் குறைப்பதற்கான முயற்சிகளை நம் மத்தியிலிருக்கின்ற நமது முஸ்லிம் கட்சிகள் வெறும் பேச்சளவிலான கருத்துக்களை பிரசாரங்களாக முன்வைத்துவருகின்றன.

ஆக்கபூர்வமான முயற்சியாகவும் எல்லா தரப்பினர்களும் ஏற்கத் தகுமான முன்வைப்புக்களை முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரே பாங்கில் முன்வைப்பதிலும் அதனை எங்கு பேசுவதால் அல்லது முன்னிறுத்துவதால் காரியமாகிவிடுமோ அங்கு எடுத்துச் செல்வதில் ஒரு பின்னடைவையும் இந்த மாற்றுச் சிந்தனைகளினால் முஸ்லிம் சமூகம் அடைகின்ற பாதிப்பை குறைக்கச் செய்கின்ற முயற்சிகளை எந்தக் கட்சியினர் செய்கின்றனர் என்கின்ற போட்டி மனப்பான்மையினாலும் ஒரு கிடப்பில் இது போடப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

எது எவ்வாறிருப்பினும் நமது முஸ்லிம் கட்சிகளிடம் ஒரு பொறுப்பு இன்று இருக்கின்றது. குறிப்பாக முஸ்லிம் சமூகம் எதிர்கொள்கின்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை எந்த அடிப்படையில் எட்டிக்கொள்ள வேண்டுமென்கின்ற விடயத்திலும், தீர்வுகளைத் தருகின்ற அரசாங்கம் என்ன வழிகளில் தீர்த்துவைக்க முனைகின்றதோ அந்த மாதிரிக்குள் நமது விடயங்களையும் சாத்தியப்படுத்திக்கொள்ளுகின்ற ஒரு திட்டமிட்ட வரையறைகளை வகுத்துக்கொள்வதிலும் நமது சமூக அரசியல் கட்சிகளும் சரி குடியியல் சமூகமும் சரி அக்கறையற்றிருப்பதை வெகுவாக பார்க்க முடிகிறது. இந்நிலையானது நமக்கு அனுகூலங்களை எட்டிவிடுவதற்கு வழிவிடுபனவைகள் அல்ல.

அதுமாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகின்ற மற்றொரு பாதகப் பண்பு யாதெனில் நாம் எவ்வாறான தீர்வுகளை நோக்கி நகர வேண்டும் அதனை எவ்வாறு அடைந்துகொள்ள வேண்டும் என்கின்ற ஒரு முழுமையான கட்டமைக்கப்பட்ட தீர்வுப்பொதிகளைக் கொண்டவர்களாக நாம் இல்லை. மாறாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் மற்றும் நமது குடியியல் சமூகங்களும் அவரவர்களுக்கு ஏதுவான வகையில் எழுந்தமாகவும் சரியான திட்டம் இன்றியும் தாங்கள் கலந்துகொள்கின்ற மேடைப் பிரசாரங்களிலும் கூடிக் கலைகின்ற கூட்டங்களிலும் வெறும் வார்த்தைகளை அடுக்கி மக்களை ஏமாற்றுகின்ற போக்கையுமே கடைப்பிடித்துவருகின்றனர்.

இதனால்தான் முஸ்லிம்களின் பிரச்சனைக்கான தீர்வாக நிர்வாக ரீதியில் தேவையாக உள்ள கல்முனை மாவட்டம் , சில இடங்களில் உருவாக்கப்படவேண்டியுள்ள உள்ளூராட்சி மன்றங்கள், குறுகிய எல்லைகளைக் கொண்ட தென்கிழக்கு அலகு, இதனை விட சற்று விரிவுபட்ட அகன்ற தென்கிழக்கு அலகு, இணைந்து வடக்கு கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட மாகாணமொன்றை உருவாக்குதல் போன்ற விடயங்களை மாற்றி மாற்றி பேசுவதும் கல்முனை மாவட்டத்துக்கு எதிராக இன்று ஒலுவில் மாவட்டம் என்ற ஒரு பெயரை முன்னிறுத்தி அதிலும் நமது சமூகம் ஒரு கேள்விக்குரியதாக இருப்பது போன்ற ஒரு பிரம்மையையும் கட்டமைத்துக் கொண்டு நமது பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் செயலாற்றிக்கொண்டிருக்கின்றன.

வெறுமனே வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புத்தான் நமக்கு அச்சுறுத்தலான அம்சம் போன்றும் அது இணைக்கப்படாவிட்டால் நமக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்கின்ற ஒரு அர்த்தமற்ற நிலைப்பாட்டிலும் நமது சமூக அரசியல் கட்சிகளும் சிவில் சமூகமும் தங்களை முன்வைப்பவர்களாக மாறிக்கொண்டிருக்கின்றனர்.

இதுவும் நமக்கு சாதகமான பலன்களைத் தரப்போதுமனதல்ல. மாறாக ஆபத்தான நிலைமைக்கே இது வழிவகுக்கும் என்பதில் நாம் மிக உறுதியாக இருக்க வேண்டும். இனப்பிரச்சனையின் தீர்வாக வரக்கூடிய அதி உச்ச தீர்வாக மாகாண சபை முறைமைதான் வரும் என்ற நம்பிக்கையே இன்று வலுப்பெற்றுக் காணப்படுகின்றது. ஏற்கனவே இந்த மாகாண சபை முறைமைக்காக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் செல்லாது என்கின்ற ஒரு பலத்த சாயல் தென்படுகின்றது.

மாகாண சபை என்று வருகின்ற போது இன்று மாகாண சபைகள் கொண்டிருக்கின்ற அதிகாரங்களில் எதுவும் மேலதிகமாக ஆக்கப்படாது, ஆக்கப்பட்டிருக்கின்ற சட்டத்தில் நடைமுறைக்கு வராதிருக்கின்ற காணி, பொலிஸ் அதிகாரங்களை குறிப்பாக வடக்கு, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் தமிழர் தரப்பினர் ஒருமித்தும் விடாப்பிடியாகவும் இருந்துவருகின்றனர். இந்த விடயத்தில் ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவும் அதற்கு பச்சைக் கொடி காட்டிவருவதையும் நாம் அவதானிக்க முடிகிறது.

இந்த நிலை முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய பாதிப்புக்களை தரக்கூடியதாக இருந்தும் நம் மத்தியில் இருக்கின்ற எந்த முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் இது குறித்து பகிரங்கமாக தமது அச்சங்களை வெளிப்படுத்தியதாக இல்லை. அது மாத்திரமன்றி, நமது குடியியல் சமூக புத்துஜீவிகளும், அரசியல் ஆய்வாளர்களும் இந்த ஆபத்துக் குறித்து நமது சமூகத்தை விழிப்பூட்டியதாகவோ அல்லது தீர்வுகளை நல்கும் இடத்தில் கொண்டு சென்றதாகவோ இல்லை.

இப்படி நாம் அக்கறை செலுத்தவேண்டிய பல பக்கங்களிலும் கோட்டை விட்டவர்களாகவும் அதுகுறித்த பிரக்ஞை அற்றவர்களாகவும் அடங்கி வாய்மூடி மௌனிகளாக இருந்து இக்கட்டுக்களை கைக்கெட்டிய தூரத்தில் வைத்துக் கொண்டிருக்கின்றோம். இதில் தமிழ் தரப்பினர்களின் எதிர்பார்ப்பில் எந்தவிதமான குலைவுகளையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்கின்ற அக்கறையுடன் கூடிய மௌனங்களையும் நமது முஸ்லிம் அரசியல் தளத்தில் காண்கின்றோம்.

சிங்களவர், தமிழர்களின் நல்லெண்ணம் நம் மீது தொடர வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அவர்களின் தீர்வினால் நாங்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்ற நிலையில் அவர்களின் நல்லெண்ணத்தைப் பெறவேண்டும் என்கின்ற உணர்வில் செயற்படுவதென்பது நமது சமூகத் தளத்தில் நின்று பார்க்கின்ற போது ஒரு போதும் நியாயமானதாகவோ நிம்மதியானதாகவோ தீர்வுகளை அடைந்துகொள்வதற்கான வழியாகி விடாது என்கின்ற யதார்த்தத்தையும் நாம் புறந்தள்ளிவிடலாகாது.

நமது நாட்டின் ஒற்றையாட்சி முறைமையினை மாற்றுவதில் சிங்கள குடிமக்கள் தொட்டு அரசியல் செயற்பாட்டாளர்கள் வரை கிஞ்சித்தும் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். இந்த அறுதித் தீர்மானத்துக்கு எதிராக தமிழர்களும் முஸ்லிம்களும் எவ்வளவுதான் எதிர்க் குரல்களை எழுப்பினாலோ அல்லது நியாயங்களை முன்வைத்தாலோ மாற்றம் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

ஆயின் ஒற்றையாட்சி முறைமைக்கு மாறான சமஷ்டி முறைமையினூடாக நமக்கான தீர்வுகளைத் தேட முனைவது என்பது முயற்கொம்பை தடவிப் பார்ப்பதற்கு சமமான ஒரு நிலையே ஆகும். இதனை நம்மில் எத்தனை பேர் சரிவர புரிந்திருக்கின்றோம் என்பதில் ஒரு கேள்விக்குறி காணப்படுகின்றது.

மாகாண சபை முறைமை நமது நாட்டில் இன்று இருப்பது ஒற்றையாட்சி அமைப்புக்குள்ளான அதிகார பரவலாக்கத்தைக் கொண்டதாகும்.இதற்கு மாறாக சமஷ்டி சாயலைக்கொண்ட அதிகாரப் பரவலாக்கத்தை நேரடியாக இன்றைய நல்லாட்சி அரசாங்கமோ அல்லது வரக்கூடிய எந்த சிங்கள – பௌத்த மக்களை பெரும்பான்மையாக பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசாங்கங்களோ முன்னெடுக்க துணியாது. ஏனெனில் அது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் இசைவுக்குரியதன்றி இருப்பதும் அந்த மக்களினால்தான் இந்த நாட்டில் அரசாங்கம் அமையக்கூடிய சூழல் இருப்பதனாலும் சிங்கள மக்களின் விருப்பையோ மகா சங்கத்தினர்களின் அபிப்பிராயங்களையோ மீறிச் செயற்படுவதில் சிங்கள மக்களின் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒருபோதும் துணியமாட்டார்கள்.

இத்தகைய பட்டறிவு அடிப்படையில் நிர்வாக அதிகாரங்களை பிரயோகிக்கின்ற பிரதேச செயலகங்கள், அரசியல் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துகின்ற உள்ளூராட்சி மன்றங்கள் போன்றவற்றில் பயன்களை அந்தந்த மாவட்டத்தில் மேலோங்கச் செய்கின்ற வகையில் தமிழ் சமூகத்தின் சார்பில் முன்வைக்கப்பட்டிருக்கின்ற சில தீர்வுத் திட்ட முன்மொழிவுகளில் முன்மொழியப்பட்டிருப்பதை அவதானிக்கின்றோம்.

இவற்றினை இன்றைய நல்லரசாங்கமும் ஏற்றுக்கொள்கின்ற ஒரு சமிக்ஞையை அதற்குள் நாம் பார்க்கின்றோம். இது ஒரு முன்னேற்றகரமான ஏற்பாடாக இருந்தாலும் இதன் பயன்பாட்டைக்கூட முஸ்லிம் சமூகம் முழுமையாக அடைந்துகொள்ளக்கூடிய வகையில் நமது மக்களை பெருவாரியாகக் கொண்டமைந்த பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் குறைந்தே காணப்படுகின்றன.

இதனை ஈடு செய்யும் வகையில் சிற்சில பிரதேசங்களை நாம் சுட்டிக்காட்டி அங்கெல்லாம் பிரதேச செயலகங்கள் அது போல தேவையான இன்னும் சில பகுதிகளில் உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்க வேண்டும் என்கின்ற கருத்துக்களை நமது தாய்க் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் காலம்தொட்டு இன்றுவரை நாம் பேச்சளவில் கேட்டும் பேசியும் வந்திருக்கின்றோம். அது மாத்திரமன்றி சில ஆணைக்குழு முன் சென்றும் நமது இந்தத் தேவைகளை பதிவாக்கியுமிருக்கின்றோம்.

இதனை சாத்தியப்படுத்தும் வகையில் பெரிதாக நாம் அக்கறை எடுத்து நாம் சார்ந்திருக்கின்ற ஆட்சி அதிகார தலைவர்களோடு நெருங்கிய உறவுகளைப் பேணி சாதித்துக்கொள்ளுகின்ற பக்குவத்தில் நாம் எப்போதும் பின்னிற்பவர்களாகவே இருந்துவருகின்றோம். ”அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்” என்ற மூதுரைக்கொப்ப நமது பிரச்சனைகள் குறித்து நாம் அடம்பிடித்துக் கேட்காத வரை தட்டில் வைத்து எந்த பௌத்த – சிங்கள மேலாதிக்க சக்தியுடைய அரசாங்கங்களும் நமக்கு தீர்வுகளைத் தந்துவிடப்போவதில்லை என்பதை நன்கறிந்தும் நாம் பேசாமடந்தைகளாகவே இருந்துவருகின்றோம்.

ஆகவே ஒரு முறைமையில் இல்லாவிட்டால் அதற்கு வேறான மற்றொரு முறைமையின் கீழ் ஓரளவு தீர்வென்று நம்பக்கூடிய எந்த விடயங்களிலும் நாம் சரியான முறையில் எங்களைத் தயார்படுத்தாத ஒரு சமூகமாகவும் எங்களை வழிநடத்துகின்ற அரசியல் கட்சிகள் அவர்களின் பதவி அதிகாரங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கு நம்மிடமிருக்கின்ற வாக்குரிமையை பகடைக்காய்களாக கையாண்டு பிரயோசனப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இப்படி எளிதாகவும் தெளிவாகவும் நமது இழப்புக்களை விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருந்தும் முஸ்லிம் சமூகம் ஏதோ ஒன்றுக்கு அடிமையாகி தங்களை அழித்துக்கொள்கின்ற பண்புக்கு இரையாகி நமது அரசியல் கட்சிகளின் பின்னால் சார்ந்து நிற்கின்றோம். இது எந்தவிதமான ஆரோக்கியமான விளைவுகளையும் நம் மத்தியில் விதைக்க மாட்டாதென்பது நிரூபிக்கப்பட்ட உண்மைகளாக இருந்தும் பல முறை பட்டறிவுகள் இருந்தும் படிப்பினை பெறாதவர்களாக நாம் இருப்பதென்பது நமது கையறு நிலையே அன்றி நமது அரசியல் செயற்பாட்டாளர்களின் நேர்த்தியான அணுகுமுறைகளினால் அல்ல.

எனவே முஸ்லிம் சமூகம் இன்று தமது கடந்த கால செயற்பாட்டு அக்கறையின்மை நிலைப்பாடுகளை எல்லாம் மறந்து நம் மத்தியில் இருக்கின்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒருமித்த குரலாக நமது பிரச்சனைகளுக்கு தீர்வு எது என்பதை சரியாக அடையாளம் கண்டு அவற்றினை வெறும் தலையங்கங்களாக வரைந்துகொள்ளாது அதற்கான செயற்திட்ட வடிவங்களோடு கூடிய தீர்வுப் பொதியாக முன்வைக்க முன்வர வேண்டும்.

உதாரணமாக நிலத்தொடர்பற்ற ஒரு அரசியல் அதிகார அலகை முஸ்லிம் சமூகம்  பெறவேண்டும் என்றால் அதற்குள் அடங்குகின்ற பிரதேச செயலகங்கள் மற்றும்  உள்ளூராட்சி மன்றங்களின் பெயர்களை மாத்திரம் குறிப்பிடாமல் அதன் எல்லைகள் எவ்வாறு அமைய வேண்டுமென்கின்ற கோவைகளை வரைவுத்திட்டத்தினூடாக அமைத்துக்கொள்கின்ற பாணியில் நமது எல்லாப் பிரச்சனைகளுக்குமான தீர்வுகளிலும் நாம் தெளிவுடையவர்களாகவும், திட்டமுடையவர்களாகவும் நமது அரசியல் கட்சிகள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு அவர்கள் மாறாதவரை எந்தவிதமான விமோஷனங்களையும் முஸ்லிம் சமூகம் அடையப்போவதில்லை. ஆயின் நமது அரசியல் செயற்பாட்டாளர்கள்  முன்வரும் வகையில் அழுத்தங்களை பிரயோகிப்பவர்களாக மாறினால் அன்றி இதில் மாற்றம் நிகழ்ந்து விடாது என்பது உறுதியானது.

-எம்.எம்.எம்.நூறுல்ஹக்
சாய்ந்தமருது – 05