ஹசனலிக்கு மெத்தப் பெரிய ‘நன்றி’; ஜஸாகல்லாஹ்! (கடிதம்)

முஸ்லிம் காங்கிரசின் செயலாளராக இருந்த வரை எதையெல்லாம் மறைத்து ஒத்தூதி வந்தாரோ அதுவெல்லாம் இப்போ மாயையென நிரூபித்து, முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மீதான நியாயமான விமர்சனங்களை காலம் தாழ்த்தி ஏற்றுக்கொண்டுள்ள முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன் அலிக்கு மெத்தப்பெரிய நன்றி, ஜஸாகல்லாஹ்.

தான் அந்தக் கட்சியின் செயலாளராக இருக்கும் தர்மத்தையும் கடமையையும் தவறிய ஒரு முஸ்லிம் அரசியல் கட்சியின் தலைவர் விமர்சிக்கப்படுவதை ஹசன் அலி அனுமதிக்கவில்லை. மாறாக, விமர்சனங்கள் திட்டமிடப்பட்ட எதிர்க்கட்சிப் பிரச்சாரங்கள் என வாய்கூசாது சொல்லி வந்தார்.

ஆனால், இன்று நிலைமை மாறி அதே ஹசன் அலி ரவுப் ஹக்கீமின் மீதான விமர்சனங்கள் உண்மையெனவும் அவர் ஒரு தான்தோன்றி, அதிகார வெறி பிடித்த தலைவர் என முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை, நிந்தவூர் முக்கியஸ்த்தர்களுடன் இணைந்து மேடை போட்டு சொல்லியிருக்கிறார்.

அவர் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்த பதவி பறி போன பின்னர் தான் ஹசன் அலிக்கு இந்த ஞானம் பிறந்திருக்கிறது என்றாலும், சமூகப் பொறுப்புடன் இயங்கியிருக்க வேண்டிய கால கட்டங்களில் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் படம் காட்டிய ரவுப் ஹக்கீமையும் அவரது நிர்வாகத்தையும் கூட இருந்த ஒருவரே துகிலிருத்துள்ளமை பாராட்டத்தக்கது.

கடந்த காலங்களில், முக்கியமாக இன ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த காலத்தில் மஹிந்த அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அதே மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறையும் அதன் பின் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் அரசாளும் வகையில் 18ம் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு ஆதரவளித்த போது எழுந்த விமர்சனங்கள் ஹசன் அலியை உசுப்பவில்லை.

மாறாக, சமூக ஆர்வலர்கள் வெகுண்டெழுந்து எழுதித்தள்ளினார்கள். ஆனால் இப்போது அதன் இரகசியங்களை அம்பலப்படுத்தும் ஹசன் அலி ரவுப் ஹக்கீம் சமூகத்தின் பெயரில் செய்து வரும் அரசியல் வியாபாரத்தைப் பற்றிப் பேச விளைகிறார்.

தான் வாய் திறந்தால் அது இனப்பிரச்சினையாகி விடும் என அவ்வப்போது சாக்குச் சொல்லித் தப்பிக் கொண்ட ரவுப் ஹக்கீம் தனது பதவியைக் காக்க அந்த இனவாதத்தை நுணுக்கமாகக் கையில் எடுத்த வரலாறுகளையும் போட்டுடைத்துள்ள ஹசன் அலி, 2015 ஜனாதிபதி தேர்தல், சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான வாக்களிப்பு என திருகுதாளங்களையும் மேடை போட்டுச் சொல்லியிருக்கிறார்.

ஆனாலும், இதற்கு முன்னரும் ரவுப் ஹக்கீமின் தவறான முடிவுகள் ஒரு சமூகத்தைப் பாதித்தது என்கிற அறிவை அப்போது அவர் இழந்து நின்றது அவர் தற்போது இழந்த பதவியினாலும் கிடைத்த கௌரவத்தினாலும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டியாக வேண்டும்.

அதனைத் தாண்டிய நிலையில், ரவுப் ஹக்கீமின் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் படிப்படியாக ஒவ்வொரு ஊரின் ஆதரவையும் இழந்து வருகிறது என்பதை யதார்த்தம் உணர்த்துகிறது. இதற்குச் சில வருடங்களுக்கு முன் ஒதுக்காமல் ஒரே ஒரு தடவை தலையில் குட்டி பாடம் கற்பித்திருக்க வேண்டும். ஆனாலும், சமூகம் மேலதிக உணர்வாலும் சுய விமர்சனம் செய்யத் தயங்கிக் கொண்டதனாலும் அதனைச் செய்யத் தவறியது.

இப்போது நிலைமை மாறிக் கொண்டு வருகிறது, உள்ளூராட்சித் தேர்தலில் அவ்வாறு முஸ்லிம் காங்கிரசை ஒதுக்க முடியாது. அது அடுத்த ஐந்து வருடங்களுக்கு பெரும் பின்னடைவைத் தரும். ஆனாலும் தமக்கென ஒரு அரசியல் அடையாளம் வேண்டுமென உணர்வுபூர்வமாக வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு கட்சியை பதவி வெறியர்களின் கூடமாக மாற்றியமைத்து, வெளியார் எள்ளி நகையாடும் வகையில் இரண்டு வருடமாகியும் தேசியப் பட்டியலை வைத்து உட்கட்சி முரண்பாடுகளை உருவாக்கி அதில் குளிர்காய்ந்து வரும் ரவுப் ஹக்கீம் ஏதோ ஒரு வகையில் மக்கள் முன் நிறுத்தப்பட வேண்டும்.

ஹக்கீம் இல்லாத முஸ்லிம் காங்கிரசுக்கு மக்கள் எப்போதோ தயாராகி விட்டார்கள், ஆனால் அவரை சுற்றியிருக்கின்ற கமான்டுகள் தான் அதற்குத் தயாராகவில்லை. எனவே, ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் தலைவரே முடிவெடுங்கள் என்று கலைந்து செல்லும் புண்ணியவான்களாக இருக்கிறார்கள்.

அதன் விளைவில் செயலாளர் தான் விரும்புகிறவரே இருக்க வேண்டும் எனும் உத்தரவு போடும் சர்வாதிகார தலைவராக ஹக்கீம் உருவாகியிருக்கிறார் எனவும் அவரது குற்றங்களின் கடந்தகால பங்காளி ஹசன் அலி போட்டுடைத்திருக்கிறார். முடிவெடுக்கும் பீடத்திலும் அரைப் பங்குக்கு மேல் தலைவரால் நியமிக்கப்பட்டோரே இருக்கிறார்கள் எனும் போது பதவி வெளியர்களின் ஒவ்வொரு கூட்டமும் எவ்வாறு முடியும் என்பதன் வடிவமே இதுவரை நடந்தேறி வந்திருக்கிறது.

இனியாவது இந்தக் கட்சி மக்கள் சக்தியின் வெளிப்பாடாக இருக்க வேண்டுமென்றால் ஹக்கீமுக்கு கூட நின்று ஒத்தூதிக்கொண்டிருப்போர் மனச்சாட்சியுடன் இயங்க ஆரம்பிக்க வேண்டும்.

ஹசன் அலியே சொல்வது போல் அவரின் கோடிகளுக்கு முன்னால் இந்தக் கேடிகள் என்ன செய்யப் போகிறார்கள்?

அ.நவாஸ்