பந்தாடப்படும் வில்பத்தும் வினைத்திறனற்ற அரசியலும்

தேர்தல் காலம் வந்தாலே வில்பத்து விடயம் மீண்டும் அலசப்படுவதில் மக்களுக்கு சந்தேகமில்லையென்றால் அது முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் நகைப்பாகிவிடும். சந்தேகம் இருக்கவே செய்கிறது!

இந்த சந்தேகத்துக்கு வெளியில் தமது இருப்புகளும் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள மக்களின் நியாயங்களை முன் வைத்து எதிர் நீச்சலடிக்கும் அரசியல் போராட்டம் உறுதியானதாக இல்லையென்பதால் இதன் பளுவைச் சுமக்க முடியாமல் சுமக்கிறது முஸ்லிம் சமூகம்.

பாசிசப் புலிகளினால் முஸ்லிம் சமூகம் வெளியேற்றப்பட்டு 26 வருடங்கள் கரைந்தோடி விட்டன. அன்று அகதியான எத்தனையோ மக்கள் இன்று சொந்த இடம் திரும்பும் சூழ்நிலையும் சுயதேவையுமற்றோராய் குடியமர்ந்த இடங்களில் வாழப் பழகிக்கொண்டனர். விதி விலக்காக அக்காலப் பகுதியில் மாத்தளை, உக்குவளை, வராகாமுற பகுதிகளில் குடியேறிய மன்னார் மக்கள் ஒரு சில வருடங்களுக்குள்ளேயே மீளச் சென்று தமது சொந்த ஊர்களில் வாழ்க்கைப் போராட்டத்தை ஆரம்பித்ததையும் அதில் சிலர் ஓரளவு தடைகளைத் தாண்டி முன்னேறியதையும் பற்றி அறிவேன்.

இது தவிர, புத்தளம் உட்பட மேலும் சில இடங்களில் குடியேறிய மக்களுக்கு மீளச் செல்ல முடியாத நிலை இருந்தது. அதில் முக்கியமாக காணிப் பிரச்சினை.

ஒரு பக்கம் விடுதலைப் புலிகளாலும் மறுபக்கம் இராணுவத்தாலும் அபகரிக்கப்பட்ட நிலப்பகுதியில் மன்னாரிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சுமார் 8200 முஸ்லிம் குடும்பங்களுக்கான மீள் குடியேற்றத்தின் தார்மீகப் பொறுப்பையேற்று அதற்கான ஆவன செய்ய வேண்டிய பொறுப்புள்ள அரசாங்கம் அது தொடர்பில் அவசர கவனம் செலுத்தவில்லையென்பது குற்றச்சாட்டு.

அதேவேளை, அரசியல் ரீதியாக இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை உடனடியாகக் காண்பது இலங்கை அரசியலில் அத்தனை இலகுவானது என பேச்சளவிலும் சொல்ல முடியாது என்பதற்கு நடைமுறை அரசிலும் யாழ் மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் மாத்திரமன்றி, தந்தால் நிரந்தரமான வீட்டைத் தா எனும் தமிழ் அரசியலின் நிலைப்பாடும் எடுத்துக்காட்டு.
இவ்வாறு முரண்டு பிடிக்கும் நிலையில் இல்லாத முஸ்லிம் சமூகமும் அதன் அரசியலும் அடிக்கடி பந்தாடப்படுதைக் கண்டு அவ்வப்போது எழும் உணர்வலைகளுக்கு மேல் இதற்கான நிரந்தரத் தீர்வைக் காண முடியாது தடுக்கும் காரணி எது? என்பதும் விடை காணப்பட வேண்டிய கேள்வியாகும்.

அகதிகளோடு அகதியாக வந்து இன்று அமைச்சர் எனும் நிலை வரை உயர்ந்துள்ள ரிசாத் பதியுதீனிடம் இது பற்றி பல தடவைகள் நான் உரையாடியிருக்கிறேன். அரசின் அலட்சியத்துக்கும் நிதி நெருக்கடிக்கும் மேலாக வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுத் தம் மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றி அவர் விளக்கியிருப்பது மாத்திரமன்று, அது போலவே அவரின் அரசியலுக்கான எதிர்ப்பு இதற்குத் தடையாக இருப்பது தொடர்பிலும் பேசியிருக்கிறோம்.

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கான இந்திய வீடமைப்புத் திட்டம் தனியாக ‘தமிழர்களுக்கான’ திட்டம் எனும் கோசம் எழுப்பப் பட்டபோது, குறிப்பாக புலம் பெயர்ந்த மண்ணிலிருந்து இந்தக் கோசம் விரிவான போது, இடம்பெயர்ந்தோருக்குள் விரட்டப்பட்ட முஸ்லிம் சமுதாயமும் உள்ளடங்கும் எனும் நியாயயத்தை யாழ்ப்பாணத்தில் எடுத்துரைக்க அரசியல் பலமற்றதாகவே எமது சமுதாயம் இருந்தது.

வன்னியிலும் மன்னாரிலும் இந்த சூழ்நிலையைக் கையாள ஒரு முஸ்லிம் அரசியல்வாதியிருந்ததும், இருந்து கொண்டிருப்பதும் இதனடிப்படையிலேயே நியாயத்தை எடுத்துரைக்கின்றது, ஆனாலும் அங்கும் வினைத்திறன் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியதாகவேயுள்ளது.

விடுதலைப்புலிகளின் நீதிமன்றம் ஒன்றில் நீதிபதியாகப் பணியாற்றிய எனக்கு நெருக்கமான ஒருவர் லண்டனில் சட்டத்தரணியாகப் பணியாற்றுகிறார், ஒரு நாள்.. யாழ்ப்பாணத்திலிருந்மு முஸ்லிம்கள் விரட்டப்பட்ட விவகாரம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது., மனித நேயத்துடன் அவர் முன் வைத்த கருத்தொன்று என் மனதில் இன்னும் பசுமையாக இருக்கிறது.

‘ சும்மா சொல்வோமே.. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்ததே வெறும் ஆயிரம் முஸ்லிம் குடும்பங்கள் தான் என்று.. அதில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரேயொரு நண்பர்தான் இருந்திருந்தால் கூட.. ஆயிரம் பேர் தெருவில் இறங்கி எம் சகோதரர்களை விரட்டாதீர்கள் என்று சொல்லியிருக்கனும்.. ஆனா எங்கட ஆக்கள் ஆக்களையும் விரட்டி அவங்கட சாமான்சட்டுகளையும் ஏலம் போட்டாங்க, எலத்துல நின்டவனுக்கு சோடாவும் கொடுத்தாங்க’

அவர் இப்படிச் சொன்ன போது ஆயுதமும் அரசியலும் சமூக வாழ்வை எத்தனை தூரம் மாற்றியமைக்கின்றன என ஆழமாக சிந்திக்கலானேன். ஆதலால் வடபுல முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்தைக் குறைத்து மதிப்பிட முடியாதென்றாகிறது. ஆனால், இருக்கும் தெரிவுகளின் முன்னுரிமை எதில் தங்கியிருக்கிறது எனும் கேள்வி எழுப்பப்படாமல், ஒரு வகையில் சுய விமர்சனம் இல்லாமல் இந்தக் கேள்விகளுக்கு விடை காணமுடியாது என்பதே யதார்த்தம்.

மஹிந்த ராஜபக்ச அரசின் வீழ்ச்சியிலிருந்து இன்று வரையான காலப்பகுதிக்குள் ஆகக்குறைந்தது மூன்று தடவைகள் வில்பத்து விவகாரம் தேசிய அரசியல் அரங்கில் சூடுபிடித்துள்ளது. திறமையான முறையில் சிந்தித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன், முதற்கட்டமாக ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்று உண்மை நிலையை உலகுக்குக் காட்டினார், அதன் பின் தொலைக்காட்சி விவாதத்திலும் பங்கேற்று ஓரளவுக்கு யதார்த்தத்தை உணர்த்தினார். என்றாலும் மீண்டும் அதுவொரு பிரச்சினையாகவே தொடர்கின்றது எனும் போது அரசியல் வினைத்திறன் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியுள்ளது.

தொடர்ந்தும் இணக்கப்பாட்டு அரசியலைப் பேணி வரும் நமது சமூக அரசியல் பிரச்சினைகள் எழுந்து அடங்கி மறுமுறை அவை பேசுபொருளாகும் வரை தீர்வைக்காண என்ன செய்தது? எனும் கேள்வி மக்கள் மட்டத்தில் எழுவது தவிர்க்கப்பட முடியாதவொன்று.

தேசிய அரசிலும் முக்கிய பங்கு வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளால் கால் நூற்றாண்டைத் தாண்டிய பிரச்சினையொன்றுக்கு விடிவைக் காண முடியாத நிலையில் எந்த சமூகத்துக்காக இந்த அரசியல் தலைமைகள் உழைக்கின்றன என கேட்கப்படுவது நியாயமானது.

புதுப்புது வடிவங்களானாலும் பிரச்சினைகளின் கருப்பொருள் ஒன்றாக இருப்பதனால் அவை தீர்க்கப்பட முடியாத சங்கடத்தைப் பற்றிய சிந்தனையும் அவசியப்படுகிறது. அவ்வாறே நோக்கின், கேள்விக்குள்ளாக்கப்படும் மறிச்சுக்கட்டி போன்ற கிராமங்களுக்கு ஆகக்குறைந்தது 100 வருட வரலாறு இருப்பதற்கான சான்றுகளை அரச ஆவணங்கள் ஒப்புவிக்கிறது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் மீள் குடியேற்றத்திற்குப் பெரும் தடையாக இருப்பது என்ன? எனும் கேள்விக்கு கடற்படையின் பிரசன்னம் கூட ஒரு காரணமாக முன் வைக்கப்படுகிறது.

இவற்றைத் தீர்க்கும் அல்லது எதிர்கொள்ளும் சக்தி சாதாரண ஏழைக் குடி மக்களுக்கு இல்லாததால் இதன் பொறுப்பு அரசியல் தலைமைகளிடம் சுமத்தப்படுகிறது. அரசியல் தலைமைகள் இதை ‘சீசன்’ தேவை கொண்டு கையாள்கிறார்களா? தொடர் போராட்டத்தின் விடிவைப் பெற்றுத்தருவார்களா? என்பதை மக்கள் அறிந்துள்ளதால் இடம்பெயர்ந்து வாழும் பல குடும்பங்கள் திரும்பவும் அங்கு செல்லவே விரும்பாத சூழ்நிலையும் நிலவுகிறது.

கடந்த பொதுத் தேர்தலின் போது புத்தளத்தில் இருந்து வாக்களிக்க வர முயன்றவர்கள் தடுக்கப்பட்ட வரலாறும் உண்டு, அதைச் செய்தவர்களும் அதே பிராந்தியத்தின முஸ்லிம்; அரசியல்வாதிகளே எனும் நிலையிலேயே வில்பத்து விடயம் ஒரு பந்தாட்டமாக மாறிக் காட்சியளிக்கிறது.

அதற்கு வலுச்சேர்க்க இப்போது வனப் பிரதேச விஸ்தரிப்புக்கான ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியாகி பூதாகரமாய் காட்சியளிக்கிறது. இதன் பின்னணியும் பின் விளைவும் பற்றி அரசியலுக்கு அப்பால் நின்று சிந்திக்க முடியாது.

ஏனெனில், வில்பத்து வனப்பகுதியை அழித்து முஸ்லிம்கள் குடியேறவுமில்லை குடியேற்றங்கள் அமையவும் இல்லையென ஜனாதிபதியும் அவருக்காக அடிக்கடி பேசும் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் ஒப்புவித்துக்கொண்டிருக்கும் மறுபுறம்தான் இன்று முஸ்லிம்கள் வாழ்ந்த பூர்வீக இடங்கள் பறிபோகும் அபாயம் பற்றிப் பேசப்படுகிறது.

குடியேறிய முஸ்லிம்கள் வனப்பகுதியை அழிக்கவில்லையென்றால் விஸ்தரிப்பினால் முஸ்லிம்களின் கிராமங்கள் எவ்வாறு இல்லாது போகும் எனும் கேள்வியும் தொக்கு நிற்கிறது. இந்தப் பந்தாட்டத்தில் உணர்வுகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆக்கத்திறனாக மாற்றப்படுவதற்குத் தடையாக இருப்பது எது என்று அலசினால் அது அரசியலையே சுட்டி நிற்கின்றது.

இதன் விளைவில், இவ்வாறு அடிக்கடி இப்பிரச்சினைகள் எழுந்து ஓய்வு பெற்றதும் இனியொரு தடவை எழாத வகையில் எவ்வகையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என முஸ்லிம் சமூகத்துக்கு விளக்கும் கடமைப்பாடு பிராந்திய அரசியல் தலைமைகளுக்கு இருக்கிறது.

அதன் அடுத்த கட்டமாக அங்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் கட்சி வேறுபாட்டில் மக்கள் பிரச்சினை மழுங்கடிக்கப்படுவது எவ்வளவு தூரம் உண்மையோ அதே போன்று மீள் குடியமர்தல் ஏறத்தாழ எட்டாப்பழமாகவே மாறி வருவதால் மக்கள் மத்தியிலும் வெறுப்பு ஓங்கி வருகிறது.

எனினும், தங்கி வாழும் சமூகத்தை வளர்ப்பதில் மாத்திரம் குறியாக இருக்கும் எமது சமூக அரசியல் இதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

வரையப்படாத எல்லைகளை வகுத்து சமூகத்தை ஆள நடந்து கொண்டிருக்கும் போட்டியின் விளைவால் 12 வருடங்கள் ஆகியும் நுரைச்சோலை சுனாமி வீடுகள் யாருக்கும் பயனற்று வெறிச்சோடியிருக்க சொந்த வீடுகளும் எம் மூதாதையர் வாழ்ந்த நிலத்தின் பள்ளிவாசலும் கூட பழங்காலக் காட்சிப் பொருளாக மாறி நிற்கிறது. எனவே, சமூக அரசியலின் வினைத்திறன் கேள்விக்குள்ளாக்கப்படுவதில் நியாயமிருக்கிறது.

விடை கிடைக்கப் போவதில்லை, அது போலவே தீர்வு காண்பது இலக்கில்லையென்றால் தெளிவு பிறக்கப் போவதுமில்லை!

யாழ் வீட்டுத்திட்ட விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கப்படுகிறது அதிலும் குறிப்பாக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் முறைகேடுகள் இடம்பெறுகிறது என ஆதாரத்துடன் முறைப்பாடு கிடைத்தபோது அதை வடபுலத்தின் ஒவ்வொரு அரசியல்வாதியின் கவனத்துக்கும்; கொண்டு சென்றபோதும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.

விளைவு..? இன்று முஸ்லிம் சமூகம் அக்கறையிழந்து நிற்கிறது. அண்மையில் பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பிப்பதில் பின்னடிப்பும் அலட்சியமுமாக நம் சமூகம் இருந்தது. காரணம், தீர்வுகள் நோக்கிய அரசியல் பயணத்தை அந்த மக்கள் இன்னும் காணவில்லையென்றால் அதுவும் மிகையாகாது.

இனியாவது இதற்கொரு நிரந்தரத் தீர்வைக் காண நமக்கு நிர்ப்பந்தம் இல்லையா? எனும் கேள்வியும் இங்கு அவசியமாகிறது. பிரச்சினைகள் எழும்போது மாத்திரம் நாம் பேசும் வீரவசனங்களும் சூழ்நிலைக்கான எதிர்ச்செயலில் மாத்திரம் ஈடுபட்டு விட்டு உறங்கச் சென்றுவிடும் சமூகமாக நாம் இருந்து கொண்டிருந்தால் 2020 தேர்தலிலும் இதே வில்பத்துவும் மறிச்சுக்கட்டியும் கரடிக்குழுயும் மக்களின் சுமைகளாக மாறி நிற்கும்.

இன்று ஒற்றுமை அவசியப்படுகிறது, அதை ஓரளவு நம் அரசியல் அரங்கில் காண்கிறோம், ஆனால் அது வினைத்திறன் கொண்டதாக இல்லாவிடின் ஈற்றில் அரசியல் ஒப்பந்தங்கள் ஒன்றே எஞ்சியிருக்கும். காட்டிக் கொடுப்புகளுக்கும் குழி பறிப்புகளுக்கும் பஞ்சமில்லாத முஸ்லிம் அரசியலில் வில்பத்து ஒரு விளையாட்டுப் பொருளாகவே இன்றுவரை காட்சியளிக்கிறது.

-இர்பான் இக்பால்

https://www.facebook.com/irfaninweb