தொல்பொருள் ஆய்வு: தேசத்துக்குரியதை ஒரு இனம் உரிமையாக்கக் கூடாது!

தொல்பொருள் ஆய்வு, புனித பூமித் திட்டம் என்பன நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் நலன் சார்ந்ததாக அமைய வேண்டும். அதற்கு முக்கியமாக காணப்பட வேண்டிய பண்பு இந்நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களுக்கும் இந்த நாடு பூர்வீகமானது என்கின்ற உணர்வுடைய அரசாங்கம் அமைவதன் மூலமே இது சாத்தியப்படும்..

நமது நாட்டைப் பொறுத்தவரை சிங்கள மக்களுக்கு மாத்திரமே இந்த நாடு உரித்துடையதென்றும், அவர்களே இங்கு பூர்வீகமானவர்களென்றும் சொல்லப்படுகின்ற கதையாடல் பரந்துபட்ட சிங்களவர்களின் கருத்தாகவும், அதேநேரம் நமது நாட்டில் நடைமுறையிலிருந்துவந்த அரசாங்கங்களின் கொள்கையாகவும் இக்கோட்பாடு பின்பற்றப்பட்டு வருவது மிகப் ,பகிரங்கமானது.

இந்த அடிப்படையில் தொல்பொருள் ஆய்வுகள், புனித பூமித் திட்டங்கள் பொதுவாக எமது நாட்டில் வாழும் எல்லாச் சமூகங்களையும் பிரதிபலிப்பதை இலக்காகக் கொள்வதற்கும் செயற்படுவதற்கும் பௌத்த – சிங்களப் பேரினவாத ஆதிக்க சக்திகளின் உணர்வலைகள் பெரும் தடைச் சுவர்களை எழுப்பி நிறுத்தியிருக்கின்றது.

உண்மையில் நமது இலங்கை நாட்டைப் பொறுத்தவரை சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய சமூகங்கள் பிரதான இடத்தை வகிக்கின்றனர். இந்த யதார்த்தத்தை கட்டுடைப்புச் செய்து சிங்கள மக்களின் நாடே என்கின்ற குறுகிய வாதத்தை அரசியல் அதிகாரத்துடன் அரங்கேற்றுகின்ற நிலைப்பாடானது தமிழர்களையும், முஸ்லிம்களையும் காவு கொடுப்பதிலிருந்து விடுவிக்காத பக்கமென்பதும் மறுக்க முடியாத ஒன்றாகும்.

குறிப்பாக இந்நாட்டு முஸ்லிம்களைப் பொறுத்தவரை தொல்பொருள் சாதனங்கள், புராதனப் பொருட்கள் என நிறுவுவதற்கு அதிகளவிலான அடையாளங்களை கொண்டிராததும் மற்றும் புனித பூமி திட்டத்திற்குள்ளும் முஸ்லிம்கள் உள்வாங்கப்படுவதற்கும் சிரத்தைக்குரிய ஒரு விடயமாக இருப்பதும் மறைவன்று.

பொதுவாக தொல்பொருள் ஆய்வுகள், புனித பூமித் திட்டம் தமிழர்களையும், முஸ்லிம்களையும் ஓரங்கட்டுவதற்கும், புறக்கணிப்பதற்கும் ஏதுவாகக் கையாளப்படுகின்ற ஒரு போக்கு நீண்ட காலமாகவே நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஓர் அம்சமுமாகும். இது அரசாங்கத்தின் அதிகாரத்துடன் கையாளப்படுவது நமது அவதானங்களுக்கு அப்பாலானதல்ல.

எது எவ்வாறிருப்பினும், இலங்கை முஸ்லிம்கள் மேற்குறித்த இரு முன்னெடுப்புக்களின் ஊடாக பலத்த இழப்புக்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய இடர்பாடுகள் இயல்பாக அவர்கள் மீது பற்றிக்கொள்ளாது, திட்டமிட்ட நடவடிக்கைகளின் காரணமாகவும் ஆதிபத்தியமாகவும் முஸ்லிம்களை நசுக்கிக் கொண்டிருப்பது ஒரு முறையற்ற செயற்பாடாகவும் எம்மை நோக்க வைக்கின்றது.

பாவாத மலை, தப்தர் ஜெய்லானி, கண்ணியா போன்ற சில இடங்களும் மற்றும் தொன்மையான ஸியாரங்கள், பள்ளிவாயல்கள் போன்றவற்றின் தடயங்களையும் இல்லாதொழிப்பதற்கும் முஸ்லிம்கள் பாரம்பரியமாகவும், காலம்காலமாகவும் வசித்து வந்த பிரதேசத்தின் வரலாறுகளை அழிப்பதற்கும் அவர்களின் காணிகளைச் சுவீகரிப்பதற்கும் மேற்குறித்த இரு திட்டங்களும் கடுமையாக பிரயோகிக்கப்பட்ட தடயத்தையே நமது நாடு தொடர்ந்தேர்ச்சியான பதிவாகக் கொண்டுள்ளது.

கடந்த அரசாங்கங்கள் இவ்வாறான கடும்போக்குகளை முஸ்லிம் மக்கள் மீது திணித்து வந்திருப்பது ஆச்சரியத்திற்குரியதல்ல. ஏனெனில், மேற்குறித்த இரு திட்டங்களும், குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்களை அடக்கி ஒடுக்குவதற்கும், நசுக்கி விடுவதற்கும் குறியாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்புக்களாகும். ஆதலால், அது ஒரு வியப்புக்குரியதாக பார்க்கும் தேவையை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தி இருக்கவில்லை.

நமது நாட்டில் புரையோடிக் காணப்பட்ட இனவாதக் காயத்தை இனியும் நமது நாட்டில் வைத்திருக்கலாகாது என்கின்ற நன்னோக்கில் அனைத்து மக்களும் ஒருவகை சமத்துவத்திலும் அவரவர்களுக்கான தனித்துவத்திலும் நிலைப்பேறாக நிலைகொள்வதற்கான நல்லிணக்க அடிப்படை தீர்வொன்றைக் காண்பதற்கு நல்லாட்சி அரசாங்கமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்கின்ற தூய எண்ணத்தையும், கோட்பாட்டையும் முன்னிறுத்தி அமைக்கப்பட்ட தற்போதைய அரசாங்கமும், அதன் தலைவரும் இன்றிருப்பது உலகறிந்த விடயம். அத்தகைய நிலையிலும்கூட மீண்டும் இனவாதத்தை நோக்கி எமது நாடு நகர்வதற்கு நல்லாட்சி அரசாங்கம் துணையாகி இருப்பது ஆரோக்கிய விளைவுகளை சிதைக்கக்கூடியதாகும்.

பௌத்த சின்னங்களை அழிப்பதில் முஸ்லிம்கள் மும்முரம் காட்டி வருகின்றனர் என்கின்ற முன்மொழிவோடு நன்கு திட்டமிட்டு முஸ்லிம் மக்கள் மீது சிங்கள குடிமைச் சமூகத்தை பகையாக்குவதற்கும் இந்த இனவாதத் தீயை பற்ற வைத்து அதற்குள் தமது அரசியல் இருப்பை நிலைப்படுத்துவதற்கும் பௌத்த – சிங்கள பேரினவாத ஆதிக்க சக்திகள் கையாள்வதற்கு முனைப்புடன் திட்டம்தீட்டி செயற்படுத்தியும் வருகின்றனர். இதன் ஓர் அங்கமாகவே பௌத்த சின்னங்களை முஸ்லிம்கள் அழிக்கின்றனர் என்கின்ற உண்மை இல்லாத கோஷ அரசியலின் பின்புலமாகும்.

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை பௌத்த சின்னங்களையோ, வேறு சமூகத்தினருக்குரிய தடயங்களையோ திட்டமிட்டு நாசப்படுத்துவதிலோ, அழிப்பதிலோ கவனம் செலுத்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இதுதான் முஸ்லிம்களின் யதார்த்தபூர்வமான நிலையும், என்றைக்குமான நிலைப்பாடுமாகும்.

இவ்வாறான நன்நோக்குடைய முஸ்லிம் மக்கள் மீது அபாண்டமாக பலி சுமத்தி பெரும் சிங்கள – முஸ்லிம் குழப்பத்தை தோற்றுவித்தல் அல்லது அடக்கியாள்வதற்கு முஸ்தீபு எடுப்பது ஒருபோதும் நமது நாட்டை அமைதியின்பால் நிலைப்படுத்த உதவப்போவதில்லை. மாறாக அது பலத்த துன்பவியலின் வரலாற்றையும், பதிவையும்தான் நமது நட்டின் வரலாறாக அடையாளப்படுத்தி நிற்கும்.

கடந்த சுமார் ஐந்து வருடங்களாக முஸ்லிம் மக்கள் மீதும், அவர்களின் மார்க்க விடயத்திலும் இல்லாததும் பொல்லாததுமான அபத்தக் கருத்துக்களை முன்வைத்து, முஸ்லிம்களுக்கு வதை கொடுத்துக் கொண்டிருக்கின்ற தேரர்களில் முக்கிய இடத்தை வகிப்பவர் ஞானசார தேரர் என்பது வெள்ளிடை மலையானது. இத்தகைய கடும்போக்குடைய தேரர்களை ஜனாதிபதி அழைத்துப் பேசுவது ஓர் இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் என்றால், அது தேவையுடையதாகப் பார்க்கலாம்.

ஆனால், அவர்களின் இனவாதக் கருத்தை செவி சாய்த்து அதன் உண்மைத் தன்மையைப் புரிந்துகொள்வதற்கு எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாது தேரர்களின் பொய்க்கூற்றுக்களின் அடிவருடியாக ஜனாதிபதி மாறுவதற்கு இதனை ஒரு வாய்ப்பாக உபயோகிப்பதற்கு முன்வந்திருப்பதுதான் அந்த சந்திப்பை முஸ்லிம்கள் கேள்விக்குட்படுத்தும் நிலையை தோற்றுவித்திருக்கின்றது. இதனை இன்னும் உறுதி செய்வது போன்று பின்வரும் இரண்டு செயற்பாடுகள் அண்மையில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

(01) அக்கரைப்பற்று பிரதேச எல்லையிலுள்ள திருக்கோயில் பிரதேச செயலாளர் பிரிவில் பொத்தானையில் அமைந்துள்ள சுமார் 250 வருடங்கள் பழமைவாய்ந்த அமீருல் ஜப்பார் ஹமதானி தைக்காப் பள்ளிவாசலும், அதனுடனான ஸியாரமும் புதைபொருளாராய்ச்சிப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது ஏறத்தாள இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பினை கொண்டதென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரகடனத்தோடு அங்கு வெளியாள்கள் யாரும் உட்செல்லல் ஆகாதென்ற கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனூடாக அப்பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலில் முஸ்லிம் மக்களின் கட்டாயக் கடமையான தொழுகையை நிறைவேற்றுவது மற்றும் ஸியாரத்தை தரிசித்தல் எனும் ஸுன்னத்தான நற்காரியமொன்றுக்கும் தடை விதிக்கப்பட்டதாகவும் அமைந்திருப்பது இதுவிடயத்தில் கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய ஒருபக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(02) வில்பத்து பிரதேசத்தை வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு ஜனாதிபதி பணித்திருப்பதன் மூலம் வில்பத்துப் பகுதியின் எல்லைகள் விரிவாக்கப்படுவது உறுதிப்படுத்துவதை குறித்து நிற்கின்றது. இது அங்கு நீண்டகாலமாக வாழ்ந்த முஸ்லிம்களின் காணிகளை கபளீகரம் செய்கின்றதையும் குறியாகக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இச்செயற்பாடானது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று அதாவது, விடுதலைப் புலிகளால் மிலேச்சத்தனமாக விரட்டியடிக்கப்பட்ட வடபுலத்து முஸ்லிம்களை அரசாங்கம் வேறொரு முறைமையின் ஊடாக அப்புறப்படுத்துகின்ற காய்நகர்த்தலை செய்கின்றது எனக் குறிப்பிடுவது மிகையான அபிப்பிராயமல்ல.

மேற்குறித்த இரண்டு விடயங்களும் முஸ்லிம் மக்களை குறிவைத்து எய்தப்பட்ட அம்புகளாகவே பார்க்க வேண்டியுள்ளது. 250 வருடங்கள் பழைமைவாய்ந்த ஒரு முஸ்லிம் அடக்கஸ்த்தலம், தைக்கா என்பது ஏனைய சமூகத்தின் புதைபொருள் சான்றாக என்றும் மிளிர முடியாது. அவ்வாறு ஏனைய சமூகத்தின் புதைபொருள் தடயத்தை அழித்து 250 வருடங்கள் நிலைத்திருக்கவும் முடியாது. ஏனெனில், இவை வரலாற்றுக்குட்பட்ட காலமாகவும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கக்கூடிய தொன்மையைக் கொண்ட காலத்திற்குள் வருகின்ற ஒரு நிகழ்வுமாகும்.

உண்மையில் முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தில் தொல்பொருள் சான்றாக பொத்தானை தைக்காப் பள்ளிவாசலும் அதனோடு இணைந்துள்ள ஸியாரமும் அமையக்கூடியது. அதனை இப்போது அபகரிப்பதற்கு முன்னெடுக்கும் தொல்பொருள் பிரகடனமானது இலங்கை முஸ்லிம்களுக்கென்று புதைபொருள் சான்றுகள் எதுவும் இருந்துவிடக்கூடாது என்கின்ற நீண்ட நாட்களின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் இனவாத மையத்தைக்கொண்ட செயற்பாடாகவே முஸ்லிம்கள் நோக்குவது குறுகிய சிந்தனையின் வெளிப்பாடன்றி விழிப்பிற்கு உட்பட்டதாகும்.

இத்தகைய நிலையில் இவ்வாறானதொரு செயற்பாட்டை நல்லாட்சியில் தொடங்கியிருப்பதானது பெயரளவில்தான் இந்த அரசாங்கம் நல்லாட்சி என்று சொல்ல முடியுமே தவிர இயங்குதளத்தை வைத்து நோக்கினால் இதனை ஒரு நல்லாட்சியின் பண்பென்று பறைசாற்ற முடியாது. ஆயின், தற்போதைய அரசாங்கம் நல்லாட்சியையோ, நல்லிணக்கத்தையோ வேரூன்றச் செய்யப்போவதில்லை. என்று கணிக்க வேண்டிய நிர்பந்தத்தை முஸ்லிம் மக்களாகிய எம்மீது ஏற்றி வாசிக்க வைக்கின்றது.

இதுபோன்றுதான் வன ஜீவராசி பகுதியான வில்பத்துவில் முஸ்லிம்கள் அடர்ந்தேறி நிலங்களைப் பிடித்தோ அல்லது அங்குள்ள காடுகளை அழித்தோ தங்களை நிலைப்படுத்துவதற்கு அல்லது வேரூன்றுவதற்கு முயலவில்லை என்பது மிகவும் துலாம்பரமான உண்மை. அப்படியிருந்தும் அதன் எல்லைக் கிராமங்களில் குறிப்பாக மறிச்சுக்கட்டியில் காலம்காலமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களின் குடியிருப்புக்கள் அமைந்திருந்ததென்பதும் அவர்கள் அங்கு நீண்டகாலமாக வாழ்ந்தனர் என்பதும் பட்டவர்த்தமான உண்மை நிலையாகும். அதுமாத்திரமன்றி , அரச ஆவண ரீதியான சான்றுகளும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் அப்பிரதேச முஸ்லிம் மக்களிடம் உள்ளன.

கடந்த 1990களில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் நன்கு திட்டமிட்டு வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஒரு இனச்சுதிகரிப்பு அடிப்படையில் வெளியேற்றப்பட்டிருந்தனர். அவ்வாறு வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் வாழ்விடம் வில்பத்துவ பகுதியை அண்டிய பகுதியில் இருந்ததென்பது பொய்யானதல்ல. இதனால்தான் கடந்த மகிந்தவின் அரசாங்கத்தில் இம்மக்களின் மீள்குடியேற்றத்திற்காக அடையாளப்படுத்திக் கொடுக்கப்பட்ட இடங்களில்தான் தற்போது முஸ்லிம்கள் குடியேறி வாழ்ந்துவருகின்றனர் (இது முற்றான முஸ்லிம்களின் குடியேற்றம் அல்ல). அதிலும் குறிப்பாக அவர்களின் ஜீவனோபாயத்திற்காக வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட காணிகள் கூட இன்னும் வழங்கப்படாமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை உள்ளடக்கியதாக வில்பத்து வன ஜீவராசி வலயம் விரிவுபடுத்தி பிரகடனப்படுத்தப்பட இருப்பதாகச் சில செய்திகள் தெரிவிக்கின்றன. அவை உண்மையானால், இந்த நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய ஒரு உரிமையை அவர்களே மீறுவதாகவும் பார்க்க முடியும்.

பயங்கரவாத சூழலின் காரணமாக விட்டு விட்டு வந்த தமது அசையாச் சொத்துக்களை மீளவும் உரியவர்கள் நீதிமன்றம் சென்று கூட மீட்டுக் கொள்ள முடியும் என்கின்ற சட்டமொன்றையும் கடந்த ஆண்டில் இவ்வரசாங்கம் ஏற்றியுள்ளது. இச்சட்டமானது ”2016ஆம் ஆண்டு 05ஆம் இலக்க, காலவிதிப்பு(விஷேட ஏற்பாடுகள்) சட்டம்” என்றழைக்கப்படுகின்றது.

இவ்வாறான ஒரு சூழலில் வில்பத்து வன ஜீவராசிகள் வலயத்தினுள் முஸ்லிம்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்து பயங்கரவாத நடவடிக்கையின் காரணமாக விட்டுவிட்டு வந்த பகுதிகள் உள்ளடக்கப்படுவதாக பேசப்படும் இத்தருணம் இச்சட்டத்தை ஏற்றிய அரசாங்கமே அதனை மீறுகின்ற ஒரு நிலையாகவே அமைய முடியும். அவ்வாறு ஏற்படுவதென்பது நேரிய முன்மாதிரியையும் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையையும் சிதைக்ககூடியதாக அமைய முடியும்.

உண்மையில் வன ஜீவராசி விரிவுபடுத்தலுக்கு முஸ்லிம்களின் காணிகள் உட்செல்லுமேயானால், அது தேவையுடையதாக இருப்பின் முதலில் அந்த மக்களுக்கு வேறு இடத்தை இழப்பீட்டுக்கு ஏற்ற வகையில் அடையாளப்படுத்தி வழங்கிய பின்னரே சுவீகரிப்பு நடவடிக்கையை முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்வாறான முன்னேற்பாடுகள் எதுவுமில்லாமல் திடுதிடுப்பென்று ஜனாதிபதி வில்பத்து சரணாலயத்துக்குரிய வனப் பிரதேசங்களை விரிவுபடுத்தி தற்போது வன ஜீவராசிகள் திணைக்களத்திற்குச் சேராத அது சார்ந்த அனைத்து நிலப்பரப்பையும் உள்ளடக்கக் கூடியவாறு வன ஜீவராசிகள் வலயத்தை வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது நீதியற்ற ஒரு செயலாகவே பாதிக்கப்படுகின்ற முஸ்லிம் மக்களுக்கு தென்படுமென்பதில் சந்தேகமில்லை. அதேநேரம் பௌத்த – சிங்கள பேரினவாத ஆதிக்க சக்திகளின் இனவாத கர்ஜனைக்குள் நல்லாட்சியின் தலைவரும் இரையாகிப்போய் விட்டார் என்ற அடையாளத்தையே மேலெழச் செய்யும். இவை எல்லாவற்றிற்கும் அப்பால் இந்த நல்லாட்சி மாற்றத்தின் மீது அதி தீவிரப்பற்றும் நம்பிக்கையையும் வைத்து செயற்பட்ட முஸ்லிம் சமூகத்தினை மீண்டும் எல்லா அரசாங்கங்களும் இனவாதத்தை வெலிப்படையாக முன்னிறுத்தி செயற்படும் பாரபட்சமானதென்ற கோணத்தில்தான் இந்த நல்லாட்சியையும் முஸ்லிம் சமூகம் வர்ணித்துக்கொள்ளவும், எடை போடவும் வழிவிடுவனவாகவே அமையும்.

வில்பத்து வன சரணாலய பிரதேசத்தின் எல்லையை அதிகரித்து வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப் பணித்திருக்கும் ஜனாதிபதி, அப்பகுதியின் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை உறுதி செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிட வேண்டும் என ஜாதிக பலசேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித தேரர் தெரிவித்துள்ளார். இவ்வாறான குரல்கள் முஸ்லிம் சமூகத்திற்கு ஆறுதலைத் தருவதாக இருந்தாலும் அரசு இயந்திரத்தின் கையகப்படுத்தும் முயற்சியை இது தடுத்து நிறுத்தப்போவதில்லை.

இவைகள் ஒருபுறமிருக்க குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதை பொருள் ஆராய்ச்சிக்கென்றும், புனித பூமி திட்டத்தின் அடிப்படையிலும் முன்னர் சிங்கள மக்கள் வாழாத பகுதிகளில் அம்மக்களை மீளக் குடியேற்றுதல் என்ற போர்வையிலும் ஊர்களின் பெயர்களை சிங்கள மயப்படுத்துவதின் ஊடாக அத்துமீறல்களை இந்த நல்லாட்சி அரசாங்கமும் மேற்கொள்ளத் தொடங்கியிருப்பதன் ஆரம்ப நிகழ்வாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது.

வில்பத்துவ விவகாரத்தை ஐ.நா.சபை வரை கொண்டு சென்று தீர்ப்பதற்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நடவடிக்கை எடுக்க இருப்பதாக ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். ஐ.நா.சபைக்கு கொண்டு சென்று இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினையத் தீர்க்க முனைவதென்பது முயற்கொம்பை தடவிப்பார்ப்பதை ஒத்ததாகும். இதனைத் தவிர்த்து நமது நாட்டுப் பிரச்சினையை நமது அரசாங்கத்தோடு பேசி தீர்ப்பதற்கும் சுமூகமான தீர்வை காண்பதற்கும் முயல்வதுதான் ஆரோக்கியமானதாகவும் நிரந்தரமானதாகவும் மனக்கசப்புக்கு அப்பாலான தீர்வாகவும் அமைய முடியும்.

-எம்.எம்.எம்.நூறுல்ஹக்
சாய்ந்தமருது – 05