வடுக்களும் வலிகளும்…ஒரு நினைவுப் பகிர்வு

2002ல் காத்தான்குடி படுகொலைகள் தொடர்பான ஆவண சேகரிப்புக்கான விஜயமொன்று.. சுவர்களில் பதிந்திருந்த தோட்டாக்களின் ரணத்தை உணர்ந்தவனாக பல பேருடன் உரையாடிய நினைவுகள் இன்னும் மின்னிக்கொண்டிருக்கின்றன… ஏன்? என்கிற கேள்விக்கு அனுபவம் சொல்லும் விடைகள் வலி மிக்கது..

2004ல் லண்டனில் என் நண்பர் ஒருவருடைய ரெஸ்டோரன்ட்…. நானும் அவரும் இன்னும் சிலரும் அப்போதிருந்த வேறு அரசியல் பேச்சுக்களைப் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தோம்..

இருந்தவர்களில் இருவர் மதுவோடு கலந்தார்கள்.. அது அவர் உரிமை… ஆனால் நேரஞ்செல்லச் செல்ல என்னை மிகவும் உன்னிப்பாக… முறைப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்…அதில் ஒருவர்.

திடீரென அவர் என் கையைப் எட்டிப் பிடிக்க… ரெஸ்டோரன்ட் ஓனர்.. உடனே அவர் கையைப் பிடித்தார்.. விடுங்க.. பரவாலனு நான் இவர் கையைத் தட்டி விட்டு அவருக்கு பக்கத்துலயே மூவ் பண்ணி உட்காந்தன்…

அப்போ அவர் கண்கள் கலங்கியிருந்தத பார்த்தன்… என்னமோ சொல்ல வந்தார்.. தடுமாறினார்.. கடைசியில நீங்க முஸ்லிம் போலன்னாரு…ஆமா.. ஏன்?.. இல்லை குடிக்கல.. அதை வெச்சி கெஸ் பண்ணன்னாரு…. சின்னதா ஓரு புன்முறுவல்… அப்புறம் சிறு இடைவெளி…

திரும்பவும் கையை இறுக்கமா பிடிச்சிக்கிட்டு.. நான் மகா பாதகன்னாரு…. அவர் சொன்னது … ‘நான் மகா பாதக வேலை செஞ்சுட்டன்னாரு…’ என்னமோ அவர் மனசை வாட்டுது… சரி அப்டி என்ன செஞ்சிங்கனு கேட்டன்…

நான் பாதகன்… பாதகன்னு அதே வார்த்தைய திரும்ப சொல்லிட்டு…. இருந்தாலும் மேலிடத்து உத்தரவுலதான் செஞ்சன்னாரு…சரி, என்ன செஞ்சிங்கனு கேட்டன்… இல்லண்ணே… காத்தான்குடி பள்ளிவாசல்ல ஆக்கள சுட்டதுல நானும் ஒருத்தன்னாரு…. அந்த நேரம் அவர் கண்கள் ததும்பியிருந்தது….

இப்போ நான் அவர் கைய பிடிச்சு.. மனசு வலிக்குதில்லையா.. அது தான் மனுசனோட மதிப்பு…இன்னும் குடிக்காம வீட்டுக்கு போங்க.. கொஞ்சம் ப்ரே பண்ணிட்டு தூங்குங்க…னு அவரை ஆறுதல் படுத்தினன்…

அப்புறம் அந்தக் குளிர்ல தள்ளாடின அவரை கார்ல ஏத்திவிட்டதெல்லாம் இன்னொரு அங்கம்..

இங்கே யார் பிழைனு வாதிக்கிறது இந்தப் பதிவின் நோக்கம் கிடையாது… வலிகள் மரணிப்பதில்லை..காத்தான்குடி படுகொலைகளை நியாயப்படுத்துவோருக்கும்… முள்ளிவாய்க்காலில் அப்பாவி மனிதர்களைக் கொத்துக் கொத்தாக ராஜபக்ச அரசு கொன்று தீர்த்ததை நியாயப்படுத்துவோருக்கும் இடையில் என்னைப் பொறுத்தவரை வித்தியாசம் ஏதுமிலை!அலை மோதும் உணர்வுகளில் கலந்து…

-Irfan Iqbal