ஹசனலியின் பிரதேசவாதம்; இயக்கும் கறுப்பாடு(கள்) யார்?

தேர்தல்கள் வந்தாலே கரையோர மாவட்டம் எனும் பேச்சைக் கையிலெடுக்கும் கெட்டிக்கார அரசியல்வாதி ஹசன் அலி அந்தக் கரையோர மாவட்டம் எனும பேசு பொருள் ஒரு வியாபார யுக்தியென தற்போது தூக்கியெறியப்பட்ட பின் பேச விளைகிறார்.

இதன் தொடர்ச்சியை அறியாத மக்களைப் பொறுத்தவரை இவரால் தூண்டிவிடப்பட்டுள்ள பிரதேசவாதத்தின் விளைவை அறியமாட்டார்கள். ஆனால் நாளை ரவுப் ஹக்கீமுடன் ஒரு சமரசம் வந்து விட்டாலும் எனும் அச்சப் போக்கில் சின்னச் சின்னதாய் கதை அவிழ்த்து விடும் யுக்தியை இவர் கையாள்வதும் மாகாண உணர்ச்சியைத் தூண்டிவிட்டிருப்பதுவும் கூட பதவிக்கான பேரம் என்பதை வரலாறு வெகு விரைவில், ஆகக்கூடியது 2017 ஏப்ரல் மாதத்திற்குள் சொல்ல வேண்டும்.

அறிவு சார் அரசியலால் தம்மை நிலைநிறுத்த முடியாத வெற்று நிலையை சமாளிக்க தூண்டப்பட்டுக்கொண்டிருக்கும் கிழக்கு மாகாண உணர்ச்சியென்பது இரு தனி மனிதர்களின் இச்சைக்கான ஆயுதமாகும்.

இறுதியாக, ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவிடம் பணம் பறிப்பதற்காகத் தூக்கியெறியப்பட்ட கரையோர மாவட்டம் எனும் ஆயுதத்தை ஊடகங்களுக்கு முகங்கொடுத்துப் பேசிய அதே ஹசனலி, இன்று தனக்கே பதவியில்லையென்று ஆகும் வரை நல்லாட்சியின் எந்த மட்டத்திலும் இது குறித்துப் பேசவில்லை.

அதற்கான காரணம் என்னவென்பதை ரவுப் ஹக்கீமின் தலையில் அரைப்பதற்கு ஹசனலி மேற்கொள்ளும் முயற்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்றாலும் ரவுப் ஹக்கீமும் ஹசனலிக்கு சளைக்காத அரசியல் வியாபாரி என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கூட்டு முயற்சியில் கடந்த பல வருடங்களாகக் கொண்டு செல்லப்பட்ட வியாபாரத்தினை தனித்து நின்று துகிலுரிக்கப் போவதாக ஹசனலி தனது ‘பினாமி’கள் மூலம் பேசத் துணிந்திருக்கிறார். இதற்கான ரவுப் ஹக்கீமின் எதிர் நடவடிக்கை தேர்தல் நெருங்கும் போதே எதிர்பார்க்கக் கூடியது என்றாலும் தலையிடியைக் குறைக்க ஏதாவது ஒரு சமரசம் வரும் எனும் எதிர்பார்ப்பில் தனது மகனையும் மருமகனையும் கொண்டு ஹசனலி செய்யும் பித்தலாட்டம் வன்மையாகக் கணடிக்கத்தக்கது.

பதவிகளின் சுகபோகங்களை விட்டுக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் மாகாண உணர்ச்சியைத் தூண்டி அதன் மூலம் இலாபம் தேடும் இவர்களில் யாரும் தேர்தல் மூலம் மக்கள் அபிப்பிராயத்தை வெல்ல முடியாதவர்கள் என்பதால் தமது கட்சிப் பயண வரலாற்றையே முதலீடாகக் கொண்டவர்கள். அந்த முதலீட்டுப் பயணத்தில் அவ்வப்போது கட்சியில் நடந்ததாக இவர்களே இப்போது கூறும் குறைகளும் குற்றங்களும் அவர்களால் ஒரு போதும் சுட்டிக்காட்டப்பட்டவையல்ல எனும் போது இப்போது அதற்கான தேவை எங்கிருந்து வந்தது அல்லது இந்தத் திடீர் மனமாற்றத்தின் அவசியம் என்ன எனும் கேள்வி எழுகிறது.

அதற்கான விடையை ஹசனலியின் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதிலிருந்தும் அவரது தேசியப்பட்டியல் ஆசை நிராகரிக்கப்பட்டதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். அதை தற்போதைக்கு இல்லையென மறுத்து ஹசனலி தமது ஆதரவாளர்கள் மத்தியில் அரங்கேற்றக் கூடிய நாடகம் விரைவில் முடிவுக்கு வரும்.

ஏனெனில், இவையனைத்தும் குறுகிய கால நலனைக் கொண்டவை.

தமது செயற்பாடுகளைப் பொறுத்தவரை அதற்கு ஊடக விளம்பரத்தைப் பெற்று பூதாகரமாக்குவதைத் தவிர வேறு வழியில்லாத நிலையில் சிங்கள ஊடகங்களைக் கொண்டு ஏற்படுத்த முனைந்த சலசலப்பும் எதுவித பலனையும் கொண்டுவராத நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களை நம்பித் தன்னை நியாயவாதியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

எனினும், மிகவும் தாமதமாக, அதாவது தனக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லையென்பதை அறிந்த பின்னர் ஹசனலியும் பஷீர் சேகுதாவுதும் இணைந்து உருவாக்கிய இந்த நாடகத்தில் கெட்டிக்காரன் பஷீர் சேகுதாவுத் தள்ளியே இருக்கிறார். ஏனெனில் அவர் தனது உறவினர்களை இதில் ஈடுபடுத்தவில்லை.

ஆனால், ஹசனலி தனது குடும்பத்தினரை இறக்கி, கிழக்கு மாகாணத்துக்கே முஸ்லிம் காங்கிரசின் பதவி வேண்டுமானாலும் கூட அது தனது குடும்பத்தினருக்கே கிடைக்க வேண்டும் எனும் திட்டத்தை முயற்சி செய்து தற்போது மக்கள் மத்தியில் ‘ஏதோ’ நிலையில் இருந்த நற்பெயரையும் கெடுத்துக் கொண்டுள்ளார்.

உண்மையான எழுச்சிப் போராட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு ஏற்கனவே வளர்ந்த ஒரு கட்சிதான் அவசியம் என்றில்லை. உண்மையிருந்தால் அடிமட்டத்திலிருந்து அந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கலாம். ஆனால் இங்கு இவர்களது பிரதேச வாதத்தின் ஒரே நோக்கம் ரவுப் ஹக்கீமின் தலையில் சுமத்தி முஸ்லிம் சமூகத்தைப் பிளவுபடுத்துவதாகவுள்ளது எனும் போது இதன் பின்னணயில் இயக்கும் இயக்குனர்கள் தமக்கான வலுவான தேவையும் காரணமுமில்லாமல் இயக்கப் போவதில்லை ஊரில் ‘மொத்த வியாபரிகளாக’ அறியப்பட்ட சேகு இசதீன் குடும்பம் இதில் இயங்கப் போவதுமில்லை.

அந்தக் கறுப்பாடு(கள்) யாரென்பபதை அறிந்து கொண்டதும் பிந்தி விட்டதே என்ற கவலை கொள்ள முன் வெளிநாட்டில் வசித்துக்கொண்டு இவர்களுக்கு முகநூல் லைக் போட்டு ஊககுவிப்பவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

-அ. நவாஸ்