சுவனரும் (சோனகர்) தமிழரும் – I

இந்து சமுத்திரத்தின் முத்தென வர்ணிக்கப்படும் இலங்கைத் தீவின் சிறுபாண்மையினமாக இன்று உலகம் காணும் இலங்கைச் சோனகர் இனம் பற்றி பேச ஆரம்பித்தாலே பலருக்குப் பெரும் தலைவலி வந்து விடுகிறது. இலங்கையின் வரலாறு முக்கிய திருப்புமுனையைச் சந்திக்கும் ஒவ்வொரு காலத்திலும் இலங்கையில் சோனகர் என்றொரு தனியினம் உண்டு என்பதை மீண்டும் எடுத்துக்கூறும் நிர்ப்பந்தம் எம் மீது திணிக்கப்படுவதை கடந்த கால ஆவணப்படுத்தப்பட்ட வரலாறுகள் எடுத்தியம்புகின்றன.

நவீன கால சோனக வரலாற்று ஆசிரியர்கள், ஆர்வலர்கள் தற்கால தகவல் தொழிநுட்பம், மற்றும் பிற ஆய்வுகளின் பயனாக இலங்கையில் வாழ்ந்த “சுவனக” இனம் பற்றிய அடிப்படையைத் தம்மால் முடிந்த வகையில் வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கும் இக்காலத்தில், அவை பெருமளவு பேசு பொருளாக மாறும் நிலை வரை ஆகக்குறைந்தது 2000 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் குடியிருக்கும், அதுவும் மிக இலகுவாகத் தம்மை முஹம்மதியர்களாகவும் பின்னர் முஸ்லிம்களாகவும் (இஸ்லாமியர்) மாற்றிக்கொண்ட, அடையாளப்படுத்திக்கொண்ட வரலாறையும், தொண்டு தொட்டு இலங்கையின் அரச நிர்வாகத்தில் எப்போதுமே செல்வாக்குடனும், தம் உரிமைகளைத் தனித்துவத்துடன் பேணிப் பாதுகாப்பவர்களாகவும் காணப்படும் இலங்கைச் சோனகர்கள் பற்றிய ஆழமான ஆய்வுகளும் தெளிவுகளும் இனி வரும் காலத்தில் மிக வேகமாகவும், மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட வரலாறுகளுடன் நிரூபிக்கப்படப்போவதையும் உலகம் காணத்தான் போகிறது.

எனினும், இந்த பேசு பொருளுக்குள் சோனகர்கள் (முஸ்லிம்கள்) காலடி வைப்பதை அடியோடு வெறுக்கும் இனமாக இலங்கை வாழ் சைவர்கள் அதிலும் பெரும்பாலும் அரசியல் கொள்கை வகுப்பாளர்கள் காணப்படுகிறார்கள். இவர்களின் இக் கோபத்திற்கு ஆகக்குறைந்தது ஒரு நூற்றாண்டிற்கு மேலான வரலாறு காணப்பட்டாலும், அன்றும் அவர்கள் குள்ள நரித்தனத்தை நம் முன் வாழ்ந்த சோனகப் பெரியார்கள் உண்மையை மட்டும் நம்பியவர்களாகப் பெரும் சபைகளில் தனித்து நின்று போராடி நிலை நாட்டினார்கள், அதன் பின்னரான காலத்தில் அவ்வழி வந்த பெரியோர்கள் முஸ்லிம்களாக அல்லது சோனகர்களாக நமது சமூகத்தின் தனித்துவத்தை இலங்கை அரசியல் களத்தில் பாதுகாத்துத் தந்தார்கள், அவர்களின் அடுத்த தலைமுறையினரான நாங்கள் மற்றும் எங்கள் குழந்தைகள் இன்றளவும் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் அவர்கள் போராடிப் பெற்றுத்தந்தார்கள், அதற்கு அவர்களுக்கு முந்திய வரலாறு அவர்களுக்கு உதவியது, அவர்களின் வரலாறு நமக்கு உதவுகிறது, நம் வரலாறு இனி வரும் எதிர்கால சந்ததியினருக்கு உதவ வேண்டும்.

அப்படியாயின், இலங்கைச் சோனகர் மத்தியில் தம் இனம், மொழி, வாழ்க்கை, பாரம்பரியம், வரலாறு, கலாச்சாரம் மற்றும் தனித்துவம் பற்றிய போதிய அறிவு வளர வேண்டும். இறைவன் நாட்டத்தால் ஆங்காங்கே முஸ்லிம் எழுத்தாளர்கள் இப்பணியைத் தனித்தனியாக செய்து வருகிறார்கள். அதில் தொடர்பாடல் வசதிகள் மூலம் இணையக்கிடைத்த எழுத்தாளர்கள் இவ்விணையத்திலும் (sonakar.com) தம் பங்கை இனி வரும் காலத்தில் சமூக நோக்குடன் செய்வதற்கு எத்தனித்துள்ளார்கள், எல்லாம் வல்ல இறைவன் நல்லருளும் நாட்டமும் அவ்வாறே இருக்கிமிடத்து இனி வரும் காலத்தில் பல தமிழ் மொழி மூலமான ஆக்கங்களை இவ்விணைய மூலம் கொண்டு வர எண்ணியிருக்கிறோம்.

இதில் தங்கள் பங்கையும் வழங்க விரும்பும் சகோதர, சகோரிகள் எம்மைத் தொடர்பு கொண்டு உங்கள் சிந்தனைகளையும் எம்மோடு இணைத்துக்கொள்ளுங்கள்.

இலங்கை முஸ்லிம்களின் இவ்வாறான எழுச்சியென்பது பல சைவக் கொள்கை வகுப்பாளர்களுக்கு தாங்கிக் கொள்ள முடியாத ஒரு விடயமாகும். அதை முறியடிப்பதற்கு அவர்கள் எப்போதும் பாவிக்க முனையும் மிக அழுத்தமான ஆயுதம் நம்மில் பெரும்பாலானோரும் அவர்களும் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் தமிழ் மொழியாகும். தமிழகத்தைப் போன்றே இலங்கை முஸ்லிம்களையும் தமிழர்கள் எனும் வரையறைக்குள் கொண்டு வந்து அடைப்பது மூலம் இலங்கைச் சோனகர்கள் எப்போதுமே தமது தனித்துவத்தைப் பெற்று விடக்கூடாது என்பதில் அவர்கள் மிகவும் உறுதியாகவும், நுணுக்கமாகவும் செயற்படுகின்றனர்.

சில வேளைகளில் நம்மில் சிலர் இதன் ஆழத்தை அறிந்துணராமலே ஆம் நாமும் தமிழர் தான் என்று பறை சாற்றவும் செய்திருக்கிறோம். தவறில்லை, ஏனெனில் ஒரு நாட்டில் வாழும் இனம் மொழி ரீதியிலான அடையாளத்தைப் பெறுமாக இருந்தால் அதில் தமிழைத் தாய் மொழியாகக்கொண்டிருக்கும் முஸ்லிம்களும் தம்மைத் தமிழர்கள் எனும் அடையாளத்திற்குள் கொண்டுவரவுதில் தவறே இல்லை. ஆனால், இந்தியா போன்றல்லாது இலங்கையின் அரசியல் வரலாறு மொழியடையாளத்தின் மூலம் இனங்களைப் பிரித்துப் பார்க்கவில்லை. மாறாக பூர்வீகத்தையும், சில வேளைகளில் அவர் பின்பற்றும் மதங்களைக் கொண்டுமே பிரித்துப் பார்த்து பதிவிலிட்டிருக்கிறது.

இந்த அடிப்படையை போர்த்துக்கீயருக்கு முந்தைய மன்னர்கள் கடைப் பிடித்தார்களோ இல்லையோ ஆகக்குறைந்தது இந்த நாட்டில் எப்போதுமே மூன்று இனங்கள் வாழ்ந்து வந்ததாகவே வரலாற்றை எழுதி வைத்திருக்கிறார்கள். அவையாவன பெரும்பாண்மை மக்களான சிங்கள மொழியைப் பேசும் பெளத்தர்கள், தமிழ் அல்லது தமிழ் கலந்த அரபு மற்றும் தம் பூர்வீகமான வேறு சொற்களுடன் கூடிய தமிழ் அல்லது சிங்கள மொழியைப் பேசிய “சோனகர்கள்” , தமிழ் மொழியைப் பேசும் இந்து மதப் பிரிவினரான சைவர்கள்.

போர்த்துக்கீய வருகைக்குச் சில காலங்களுக்கு முன்னர் இலேசாக இத்தீவில் பரவ ஆரம்பித்த கத்தோலிக்க மதமும் அதைப் பின்பற்றியவர்களும், தமது அரசியல் ஆளுமையை விரிவாக்கிக்கொள்ளும் பொருட்டு, காலணித்துவத்துக்குப் பின் வந்த காலங்களில் தாம் பேசும் இவ்விரண்டு மொழிகளில் ஒன்று சார்ந்த இம் மூன்றில் ஒரு இனத்தாருடன் கூட்டு சேர்ந்து கொண்டதனால் அவர்கள் பெரும்பாலும் மத ரீதியாகத் தனித்துவத்துடன் திகழ்ந்தாலும் தம்மை தனியினமாகப் பார்ப்பதில்லை.

எனினும், இலங்கையில் அறியப்படக்கூடிய, ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றுக் காலங்களிலிருந்து இலங்கைச் சோனகர்கள், ஒவ்வொரு மொழியிலும் இன்னபிற பெயர்களில் அறியப்பட்டாலும், எப்போதுமே தனித்துவமான ஒரு இனமாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அரச சபைகளிலும், தொழில் நிபுணத்துவத்திலும், கலாச்சாரத்திலும் இலங்கை வரலாற்றின் ஆவணங்கள் எங்குமே சோனகர்கள் என்பார் தனித்துவத்துடனும், தம் உரிமைகளை எப்போதும் நியாயமான முறையில் பேணிப் பாதுகாத்தவர்களாகவும் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் எனும் வரலாறு நம் முன் வைக்கப்படும் சம காலத்தில் தமிழர்கள் என்று அறியப்பட்டவர்கள் வேறு ஒரு இனமாக எப்போதும் பிரித்துக் காட்டப்பட்டும், பதியப்பட்டும் இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கும்.

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னரான இலங்கையின் வரலாற்றுப் பதிவுகளே இப்படியிருக்க, அவ்வப்போது நம் மீது திணிக்கப்படும் நிர்ப்பந்தங்கள் நிமித்தம் நமது தனித்துவத்தை நாம் நிலை நாட்ட முன் வருவது மாத்திரம் தமிழ் அரசியல் கொள்கை வகுப்பாளர்களை ஆத்திரப்பட வைக்கிறது, ஆவேசப்பட வைக்கிறது, எம்மை அசிங்கப்படுத்த முயலவும் வைக்கிறது. தமிழ் மொழியைப் பேசும் இரு இனமாக நாம் இருக்கிறோம் எனும் உண்மையை இன்று நேற்று நாங்கள் ஆரம்பித்தால் நாம் தவறானவர்கள், பிரிவினைவாதிகள் அவ்வளவு ஏன் பயங்கரவாதிகள் என்று கூட சொல்லலாம், ஆனால் இத்தீவின் வரலாற்றில் எப்போதுமே சோனகர்கள் அவ்வாறு தம்மை அறியப்பட்டதில்லை. மாறாக தொழில்சார் நிபுணர்களாகவும், தம் திறமைக்குப் பரிசாகத் தம் கொள்கைகளுக்கான சிறப்பு சலுகைகளைப் பெற்றவர்களாகவும், அரச ர்களின் நன்மதிப்பைப் பெற்ற திறமைசாலிகளாகவுமே திகழ்ந்து வந்திருக்கிறார்கள்.

இந்த சம காலத்தில், ஆய்வுகளின் படி தென்னிந்தியாவின் திராவிட இனத்தாரை விட இலங்கைத் தீவின் சிங்கள இனத்தவருடன் மிக நெருங்கிய உயிரியல் தொடர்புகளை வைத்திருக்கும் இலங்கை வாழ் சைவத் தமிழர்களோ அவ்வப்போது தம் பலத்தைத் திரட்டிப் போர் புரிந்திருக்கிறார்கள், ஆட்சி வெறி, அதிகார வெறியில் இத்தீவை காலத்திற்குக் காலம் போர்ச்சூழலுக்குள் தள்ளியிருக்கிறார்கள், படையெடுப்புகள், இன அழிப்புகள் மூலம் தம்மோடு ஒரே மொழியைப் பகிர்ந்து கொண்ட சோனகர்களையும், உயிரியல் உறவினர்களான சிங்களவர்களையும் அழித்திருக்கிறார்களே ஒழிய எமது தனித்துவத்தின் சிறப்புகளுக்கு அருகில் எந்த வகையிலும் அவர்கள் இது வரை கால வரலாற்றில் நெருங்கி வந்ததே கிடையாது என்பது எமக்கு முந்தைய வரலாறும் இந்தப் பதிவு எழுதப்படும் வரையிலான வரலாறும் சாட்சியளிக்கும் மிகப் பிரதானமான விடயங்களாகும்.

அந்த வகையில், என்னதான் தமிழைப் பேசிக்கொண்டாலும் சோனகர்கள், தமிழர்கள் என்று அறியப்படுவோரின் பண்பிலிருந்து இத்தீவின் ஆரம்பகால வரலாறு முதல் அன்னியப்பட்டும், வேறுபட்டுமே இருந்து வந்திருக்கிறார்கள். இதிலிருந்து சோனகர் தம் சூழ்நிலைகளினால் உந்தப்பட்டுத் தமிழ் மொழியையும் தம் தாய் மொழியாக ஆக்கிக் கொண்ட ஒரு இனத்தினர் என்பது மிகத் தெளிவாக நிரூபணமாகிறது.

சோனகருக்கும் தமிழ்மொழிக்கும் இடையிலான ஆழ்ந்த தொடர்பை இவ்வுரைத் தொடரின் பிற்பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.  ஒரே மொழியைப் பேசும் இரு கலாச்சாரங்கள், இரு வகையான பண்பாடுகள், இரு வகையான இனங்கள் இருக்கக்கூடாது என்றோ அல்லது இருக்க முடியாது என்றோ எந்த எழுதி வைக்கப்பட்ட சட்டங்களும் இல்லாத அதே நேரத்தில் ஒரே மொழியைப் பேசும் வெவ்வேறு இனங்கள் பல நாடுகளில் வாழ்கின்றன என்கின்ற உண்மை நவீன காலத்தில் சிறு பிள்ளையும் அறிந்த ஒரு உண்மையாகக் காணப்படுகிறது.

எனவே, தமிழைப் பேசுவதனால் நாம் தமிழர் என்ற அடையாளத்தை நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக ஏன் மறுத்து வந்தார்கள்? என்கின்ற உண்மையையும், ஒரு சில நவீன வரலாற்றாசிரியர்கள் சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கை அரசியல் நிலையிலிருந்தும் அதன் பின் ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையில் தோன்றிய அரசியல் நிலைப்பாடுகளை எவ்வாறு தவறான முறையில் வரலாறாக்க முனைகிறார்கள் என்பதையும் ஆரம்பத்திலேயே அறிந்து கொள்வது நமக்கு அவசியமாகிறது.

இதனடிப்படையில் சோனகர் மனதில் வரக்கூடிய அடிப்படைக் கேள்வியானது, நாம் தமிழரா? என்பதாகும். இந்தக் கேள்வியை தமிழகத்தின் வாழும் முஸ்லிம்களிடம் கேட்டால், எந்தத் தயக்கமுமின்றி ஆம் நாம் தமிழர்கள், அதிலும் இஸ்லாமியத் தமிழர்கள் என்று பதிலளிப்பார்கள். அதில் நியாயம் இருக்கிறது, காரணம் இந்திய அரசியல் நிலைப்பாடு அவ்வாறே இருக்கிறது.

இதே கேள்வியை ஒரு இலங்கை முஸ்லிமிடம் கேட்டால், பெரும்பாலானோர் தம்மைத் தமிழராக அடையாளப்படுத்திக்கொள்ள மறுக்கிறார்கள், மிகச் சிலர் நான் முன் சொன்ன காரணங்களுக்காகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டாலும், பாதுகாப்பாகத் தம்மை முஸ்லிம் தமிழர்கள் அல்லது இஸ்லாமியத் தமிழர்கள் என்று கூறுவதையே விரும்புகிறார்கள்.

எனினும், இந்த வாதத்தினை சைவ அரசியல் கொள்கை வகுப்பாளர்கள் மறுக்கிறார்கள். அவர்கள் தம்மை சைவத் தமிழர்கள், சோனகர்களை இஸ்லாமியத் தமிழர்கள் என்றும் இரு சமூகத்திற்கும் இடையிலான பொது மொழி “தமிழ்” என்பதையும் ஏற்றுக்கொண்டு பொது அடையாளப்படுத்துவதைத் தவிர்த்து, தமிழர் என்றால் அது இந்து மதத்தின் பிரிவுகளில் இலங்கையில் பெரும்பாலானோரால் கடைப்பிடிக்கப்படும் சைவ மதத்தைப் பின்பற்றும் சைவர்கள் மாத்திரமே என்றும், முஸ்லிம்கள் என்பார் தமிழருக்குள் ஒரு சிறுபாண்மையினர் என்றும் முழங்கிக்கொள்கிறார்கள்.

இப்படி அவர்கள் முழக்கத்தைக் கேட்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சோனகன் விழித்துக்கொள்கிறான், தம் தனித்துவத்தை மீண்டும் அரசியல் அரங்கில் நினைவூட்டிக்கொள்கிறான்.

எனினும், தம் விடாப்பிடியைப் பலதடவை நிரூபிக்க முனைந்து, சிங்களவர் முதல் ஆங்கிலேயேர் வரை தம் கைங்கரியங்களை நிறைவேற்ற முடியாமல் போன மேற்குறிப்பிட்ட மேட்டுக்குடி வர்க்கத்தினர் இறுதியில் மீண்டும் நம் அரசியல் பிரதிநிதிகளிடம் சரணடைந்து, அவர்களைத் தம்மோடு இணைத்துக்கொண்டு அல்லது அவர்களோடு இணைந்து கொண்டு, மொழியால் ஒன்றிணைந்தவர்களாகக் காட்டிக்கொண்டு, நாங்கள் எல்லோரும் சகோதரர்கள் என்றும் பறைசாற்றிக்கொண்டு, தமது அரசியல் காய் நகர்த்தலை அவ்வப்போது மேற்கொண்டிருக்கிறார்கள்.

சில வேளைகளில் இந்த வலையில் சிக்கிக்கொண்டு பின் சுதாரித்தெழுந்த நம் அரசியல் தலைமைகளையும், இவ்வாறான குள்ள நரித்தனத்தை முளையிலேயே கிள்ளியெறிந்த எம் முன்னோரையும் பற்றியும் நமக்கு நாமே நினைவூட்டிக்கொள்ளும் தேவையும் தற்காலத்தில் மீண்டும் உயர்ந்திருக்கிறது.

மொழியில்லாத சமூகமாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள், அவர்கள் அம்மாவை உம்மா என்கிறார்கள், அப்பாவை வாப்பா என்கிறார்கள் என்று வியாக்கியானம் பேச விளையும் இவ்வர்க்கத்தினர், ஒரு கணம் அமைதி காத்து, தமிழ் மொழியையே தான் பேசிக்கொண்டாலும் அதைத் தமக்குள் பேசிக்கொள்வதற்கும் கையாள்வதற்கும் சோனக இனம் வரலாறு அறிந்த காலந்தொட்டே ஒரு தனித்துவத்தைப் பேணி வந்திருக்கிறது, அதனாலேயே தமிழ் மொழியின் பாவனையில், உச்சரிப்பிலும் கூட பெரும்பாண்மை சைவர்களிடமிருந்து சோனகர்கள் வேறுபட்டுக் காணப்படுகிறார்கள் என்கிற உண்மையையும் அறிய முற்படுவார்களேயானால், இதனடிப்படையில் ஏதோ ஒரு காலத்தில் தமிழ் மொழியைத் தம் தாய் மொழியாகக் கொள்ளாத வரை இலங்கைச் சோனக மக்கள் வேறு ஒரு மொழியைப் பேசியோ, எழுதியோ வந்திருக்கிறார்கள் எனும் வரலாற்றையும் அறிந்து கொள்வார்கள்.

அந்த வகையில் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் தொடர்பான மிக ஆழமான வரலாற்று ஆய்வுகள் நம் முன் கொண்டு வரப்பட வேண்டியதும், அதன் தொடர்ச்சிகள் ஆவணப்படுத்தப்பட வேண்டியதும் நமது இன்றியமையாத கடமையாக இருக்கிறது. இந்த முயற்சியின் சிறு பகுதியாகவே இவ்வுரைத் தொடர் அமையப்போகிறது.

இதன் அடிப்படையில் நமது ஆய்வுகளும், ஆராய்ச்சிகளும், எதிர்கால சந்ததியினரிடம் தெளிவான வரலாற்றை விட்டுச் செல்ல வேண்டும் எனும் ஆவலில் இதில் நம்பிக்கையோடு நுழைந்து கொள்கிறேன்.

தொடரும் …

-மானா.

அட்டைப் படத்தில் காணப்படுபவர்: நவீன சோனக இனத்தின் முன்னோடி ஐ.எல்.எம் அப்துல் அஸீஸ் அவர்கள்.