ஞானசாரவின் பெளத்தமும் பின் நூரி பேசும் இஸ்லாமும்

கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளாக வில்லன் பாத்திரம் ஏற்றிருந்த ஞான ஸார இப்போது ஜிந்தோட்ட விடயத்தில் காதாநாயகன் பத்திரம் ஏற்று செயல் படுவதின் உள்ளர்தம் என்ன என்பது காலத்தால் நிரூபிக்கப்பட இருப்பதால் தற்போதைக்கு சந்தேகத்தின் பயனை அவருக்கே வழங்க வேண்டியுள்ள நேரத்தில் ஜிந்தோட்ட விடயத்துக்கு முன்பாக சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட விடயங்களில் ஒன்று நுஸ்ரி பின் நூரி என்ற மார்க்க அறிஞ்சர்(?) தொடர்பான அம்சம் என்பது அனேகருக்கு தெரிந்திருக்கும். இவர் பத்தோடு பதினொன்று என்று விட்டுவேண்டிய ஒரு விடயத்தை கதைத்திருக்க அது அதிகம் அலட்டிக் கொள்ள தேவையில்லாத ஒன்றாகவே இருந்திருக்கும். ஆனால் நாம் காலா காலமாக கவனம் செலுத்தாமல் விட்ட விடயம் புதுப்புது ரூபங்களில் வந்து நம் சமூகத்தை முன்னோக்கி செல்லவிடாது தடுக்கும் போது அது பற்றி பேசுவது முக்கியமானதே.

பயங்கரவாதத்தையும், இஸ்லாமிய வாழ்க்கை நெறி முறைகளையும் பிரித்துபார்க்க தெரியாது அனைத்து முஸ்லீம்களும் பயங்கரவாதத்தில் காதல் கொண்டவர்களாக சித்தரிக்கப்படும் போது முந்திக் கொண்டு நம் சமயம் சாந்தியும் சமாதனமுமானது என்பதை நிரூபிக்க நாம் எடுக்கும் அக்கறையில் ஒரு சிறு பகுதியையும் மற்றவர் விவகாரத்தில் எடுக்க நாம் சற்றும் முயற்சிப்பதில்லை. அதிலும் குறிப்பாக அந்த விவகாரங்களில் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணங்களால் ஒரு யூதர் வெறும் பார்வையாளராக இருந்தாலும் கூட நாம் ஒரு படி மேலே சென்றுவிடுவோம். காரணம் யூதர்களுக்கும் சியோனிசவாதத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை நம்மால் பிரித்து பார்க்க முடியாதவாறு நம் சிந்தனை தொழில்பாட்டை பழக்கப்படுத்தியுள்ளதும், சியோனிசவாத அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட அரசியல் பிரச்சினை 1917க்கு பிறகானது என்ற அம்சமும் மறந்து முஸ்லீம்களும், யூதர்களும் எதிரிகளாகவே பிறந்து எதிரிகளாகவே மரணிக்க இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்ற ரீதியிலான ஒரு மனப்பதிவை நாம் வைத்துள்ளதாலாகும்.

யூத ரப்பி(Rabbi-சமய போதகர்) தொவியா சிங்கர்(Tovia Singer) தனது வழமையான வானொலி சமய பிரச்சார நிகழ்ச்சியில் அடிக்கடி சொல்லும் விடயம் ” எனது யுத சகோதர்களே! ஒன்றுவிட்ட இஸ்லாமிய சகோதர்களே(cousins)! ஆபிரஹாமின் வழித்தோன்றல்களான நாம் அரசியல் ரீதியில் நமக்கிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள பிரச்சினையை ஒரு பக்கம் வைத்துவிட்டு இணையில்லாத ஒரே இறைவனை வழிபடும் நம் இரு சமூகங்களும் நம் இறை நம்பிக்கைக்கூடாக நமக்கிடையே ஏற்பட்டுள்ள தப்பபிப்பிராயங்களை நீக்க முயற்சிக்காவிட்டால் நம் சமய விழுமியங்களை பொறுப்பற்ற முறையில் கொன்றழித்தவர்கள் நாமாகவே இருக்க முடியும்” என்பதாகும். இவரின் கூற்றில் பொதிந்துள்ள எளிமையான கருத்தை விளங்கிக் கொள்வதில் யாருக்கும் பிரச்சினை இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

ஆனாலும் இப்படியான அல்லது ஏதோ ஒரு வகையில் நம்பிக்கை தரும் விடயங்கள் எதுவும் சாந்தியையும் சமாதானத்தையும் இதயத்தில் ஏந்தி நடப்பவர்களாக நம்பிக்கொண்டிக்கும் நம் பக்கத்தில் இருந்து வெளிப்படுவதை என் வாழ் நாளில் எங்கும் கண்டதில்லை. இனியும் காண்பேனோ என்பதும் சந்தேகமே. காரணம் கையளவு பயங்கரவாதிகளுக்காக 1.6 பில்லியன் முஸ்லீம்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகமுடியாது என்ற எமது தர்க்க ரீதியான நியாப்படுத்தலை சியோனிஸவாதிகளின் அத்துமீறல்களுக்காக ஏன் வேதம் கொடுக்கப்பட்ட யூதர்கள்( அஹ்லுல் கிதாப்) முகம் கொடுக்க வேண்டும் என்ற நமது நியாப்படுத்தலை பொருத்திப் பார்ப்பதில்லை.

இதகைய ஒரு நிலைப்பாட்டை இலங்கையிலும் வளர்தெடுக்க நம்மை அறியாமல் நாம் பங்களிப்புச் செய்துள்ளோம் என்பதை சரியான நேரத்தில் காணத்தவரியதாலும், இலங்கை என்பது ஸ்ரீ லங்கா இஸ்லாமிய ஜனநாயக சோஸலிச குடியரசு போன்ற ஒரு எண்ணப்பாட்டை நாமாகவே காரணமில்லாமல் உருவாக்கிக் கொண்டதாலும் கடந்த சுமார் ஐந்தாண்டுகளாக சிங்கள பெளத்த துறவிகளால் நம் மீது தொடுக்கப்பட்ட உளவியல் போராட்டத்திற்கு முகம் கொடுக்க ஏற்பட்டதை நாம் மறந்துவிட முடியாது. இந்த அடிப்படையில்தான் ஞான ஸார உட்பட பெளத்த துறவிகள் பலர் புத்தரின் அஹிம்சை போதனையையோ அல்லது அதில் கட்டியெழுப்பபட்ட நான்கு அம்சங்களையோ தாங்கள் கடைபிடித்து அதையே தம் பக்த கோடிகளுக்கு போதிக்க வேண்டிய நேரத்தில் எதிர்மறையான விடயங்களை அவர்களுக்கான முன்மாதிரியாக காண்பித்தனர். அதன் பிரதிபலிப்பே “பெளத்த பயங்கரவாதத்தின் முகம்” என்ற வர்ணனைக்குட்பட்ட அஸின் விராத்துவை வரவழைத்து, ஆசி பெற்று கடந்த சுமார் ஐந்தாண்டுக்குள் பெளத்த போதனைக்கு எதிர்மறையான செயல் பாடுகளை குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டனர். இப்போது அதே ஞான ஸார ஏதோ போதி மரத்தடியில் நிர்வாணமடைந்துவிட்ட மாதிரியான ஒரு மனப் பதிவை உண்டாக்க முற்படுகின்றாரா என்ற நியாமான சந்தேகத்துடன் பலராலும் நோக்கப்படுகின்றது.

ஆனாலும் அதே மாதிரியான சந்தேகம் முஸ்லீம் சமூகத்தின் மீதும் ஏற்பட்டுள்ளது என்பதை மாத்திரம் நாம் கண்டு கொள்வதில்லை. திடீரென 2014ல் எல்லா முஸ்லீம்களும் நாட்டுபற்றாளர்களாகி சுதந்திர தினம் கொண்டாடியதில் இருந்து தொடர்ச்சியாக இரத்ததானம் செய்யும் நிகழ்ச்சிகள் வரை ஏதோ ஒரு திட்டமிட்ட செயலாகப் பார்க்கப்படுவதையும் நாம் மறுக்க முடியாதுள்ளது.

ஞான ஸார ஒரு படி மேலே சென்று கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம் இஸ்லாமிய சமய கோட்பாடுகளை கேள்விக்குற்படுத்தியதும் முஸ்லிம்களின் எல்லை மீறிய செயல்களை எல்லாம் “இஸ்லாம்” என்ற வரையறைக்குள் வைத்து, அதாவது உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் தீவிரவாத செயல்பாடுகளை அல்லது இலங்கையில் முஸ்லீம்களின் அத்துமீறும் செயல்பாடுகளை அல்லது ஆர்வ மிகுதியால் உணர்ச்சிவசப்பட்ட செயல்பாடுகளை வைத்து இஸ்லாத்தை அளவிட முயற்சி செய்தாரே தவிர இஸ்லாத்தின் அடிப்படையூடாக அத்தகைய செயல்பாடுகளை அவர் விமர்சிக்க வில்லை. அப்படி செய்திருந்தால் அவரின் செயல்பாட்டில் உள்ள நாகரீகத்தை நியாய சிந்தையுள்ள முஸ்லீம்கள் அவதானத்துக்கு உட்படுத்தியிருப்பர். ஆனால் அவரின் செயற்பாடோ உலக சமயங்கள் தொடர்பான அல்லது ஆகக் குறைந்தது அவர் பின்பற்றுவதாக சொல்லும் பெளத்தம் தொடர்பான அடிப்படை அறிவைகூட அவர் பெற்றறிருக்கவில்லை என்பதை உலகம் கண்டு கொள்ளும் அளவுக்கு தான் பின்பற்றும் கொள்கைக்கும் அவரின் செயல்பாட்டுக்கும் உள்ள இடைவெளியை பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரமாக ஆக்கிக் கொண்டார். ஒரு வேளை ஞான ஸார புத்தி பெறலாம், தன் பாதையை மாற்றியும் கொள்ளலா ம். அது நம் சமூகத்தை விட அவருக்கே நன்மை பயக்கும்.

ஆனாலும், இஸ்லாம் தொடர்பான ஞான ஸாராவின் நிலைபாட்டைவிட கெடுதியான அம்சம் ஒன்று இந்த பின் நூரியால் நடத்தி முடிக்கபட்டள்ளது என்பதை சமூக ஊடகங்கள் ஊடாக நாம் கண்டுகளித்தோம். ஞான ஸார மீது அவர் சர்ந்த ” நிகாய” ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை அவரை கட்டுப்படுத்த ஏன் அவர் சார்ந்த மஹா சங்கம் முயற்சிக்கவில்லை என்ற கேள்வியை தொடுக்க முடியாதவாறு இஸ்லாத்தை அவமதிக்கும் ஜும்மா பேருரை நடத்திய அந்த மார்க்க அறிஞ்சர்(?) மீது அவர் சார்ந்த அமைப்பு அல்லது இலங்கையின் ஒட்டு மொத்த முஸ்லீம்களுக்குமான தலைமை என்ற அதிகாரதுடன் இயங்கும் ஐம்மியதுல் உலமா இதுவரை நடவடிக்கை ஏதாவது எடுத்ததா என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிவிட்டது என்பதோடு இவருக்கும் இவர் போன்றோருக்கும் ஒரு வகை “ஹலால் சான்றிதழ்” வழங்குவதற்கான ஒரு தேவையையும் உணர்த்தி நிற்கின்றது.

சிறுவர் பாடப் புத்தகத்தில் போன்று மிக எளிதாக வானத்தைப் பார், நட்சத்திரங்களைப் பார் மலைகளைப் பார், அதில் அறிவுள்ளவர்களுக்கு அத்தாட்சிகள் உள்ளன; என்று அறிவுள்ள, ஆராய்ச்சி ஆற்றலுள்ள சமூகமாக கட்டமைத்துக் கொள்ள புனித குர்-ஆன் எம்மைத் தூண்டும் போது இந்த மார்க அறிஞ்சரோ “பாடசாலைக்கு செல்லாதே, அப்படி செல்வது தரித்திரமான( முஸீபத்) செயல், பாடசாலைக்கு செல்வதென்பது யூதருக்கும் செய்யும் நம்மையே அல்லாமல் வேறில்லை” என்றவாறு ஜும்மா பேருரை(?) செய்தது என்னுடைய பார்வையில் ஞான ஸாரவின் இஸ்லாத்திற்கு எதிரான தூற்றலைவிட கேவலமானது மாத்திரமல்ல ஆபத்தானதும் கூட.

பாகிஸ்தானில் சமயம் படிக்கச் சென்ற இந்த பின் நூரியை சுமந்து சென்ற விமானம் பறப்பதற்கு பெளதீகவியளார்களின் அயராத உழைப்பு தேவைப்பட்டிருக்கும் என்பது சாதாரண அறிவு. பறப்பதற்கு தேவைப்பட அடிப்படை பெளதீக தத்துவமான “புவி ஈர்ப்பு சக்தி” யை கண்டு பிடித்தவர் ஐசக் நீயூட்டன் என்ற ஒரு நஸரானி என்பதும், இந்த மார்க்க அறிஞ்சர் காதல் கொண்டுள்ள பல்தொழில் கையடக்க தொலைபேசி (smart phone) யை இயக்கும் தகவல் பதிவுத்தட்டு (Sim) ஒரு யூதரின் அயராத உழைப்பின் பயன் என்பதை எல்லாம் தெரியாமல் இருக்கும் அதே நேரத்தில் இவர் போன்ற மார்க்க அறிஞ்சர்களினால் தான் உலகளாவிய முஸ்லீம் சமூகம் ஒரு “ஆணி” யை கூட செய்ய முடியாதவர்களாக காணப்படுகின்றனர் என்ற இன்னுமொரு மார்க அறிஞ்சரின் விமர்சனம் நம் மீது உள்ளது என்பதையாவது இவர் தெரிந்திருக்க வேண்டும். அதுவும் இல்லாமல் தன் அறிவீனத்தை சமூகத்தின் முதுகெலும்பாகிய மாணவர்களுக்கு இவர் எப்படி சொல்வார் என்பதும் இவர் இப்படி ஒப்பாரி வைக்க அவரை அனுமதித்தது யார், ஏன் என்பதும் இன்னும் புரிந்து கொள்ள முடியாத விடயங்களே.

கற்றறியாத ஒரு சமூதாயத்தில் கற்றலின் முக்கியத்துவத்தை உணர்த்தி அது ஆணுக்கும் பெண்ணுக்கும் கட்டாயம் என்று கூறிச்சென்ற இறைதூதரின் சமூகமாற்றச் சிந்தனை என்பது இந்த மார்க்க அறிஞ்சருக்கு ஏன் “தரித்திரம்” (முஸீபத்) மா/தாக தெரிந்தது? இந்த பிரபஞ்சமே பெளதீக விஞ்ஞான தத்துவங்களில் நிலை பெற்றிருக்க, அவைகளை ஆராய்ந்து அறிந்து கொள்ள இஸ்லாம் எமக்கு கட்டளையிட இந்த மார்க்க அறிஞ்சரோ எம்மை எல்லாம் 7ம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல எத்தனிக்கின்றார்.

ஐசெக் நியூட்டனின் மூன்றாம் விதியின் அடியில் இருந்து பிறந்த விண்களத்தில் உலகை கடந்து அண்டவெளியில் மிதந்து சந்திரனையும், பிற கோள்களையும் ஆராயும் நாஸா(Nasa)வின் விஞ்ஞானிகள் இந்த மார்க்க அறிஞ்சரை விட எவ்வளவு உயர்ந்த நிலையில் வைத்து போற்றப்பட வேண்டியவர்கள்? இறைவன் கொடுத்த அறிவைக் கொண்டு எவ்வளவு தூரம் மனித குலத்துக்கு முடிந்தவகையில் எல்லாம் நன்மை செய்கின்றார்கள்? இவர்களுக்குத்தானே இறைவனின் அருள் மேலும் மேலும் சொரிந்து கொண்டிருக்கும். மானிட உயர்வுக்காக உயிரை பணயம் வைத்து சந்திரனில் இறங்கி இறைவனின் அற்புதங்களை நமக்கு இவர் சொல்லும் நஸரானிகளும், யகூதிகளும் தெளிவாக காட்ட இவர் போன்ற மார்க்க அறிஞ்சர் சிலர் சாத்தியமே இல்லாத ஒன்றை, அதாவது தொழுகைக்கான அழைப்பை அங்கே இந்த வானவியலாளர்கள் கேட்டதாக ஒப்பேற்றி சந்தோசப்பட்டதையும், வான்வெளியில் இருந்து பார்க்கும் போது மக்காவிலும், மதினாவிலும் இருந்து இரண்டு ஒளிக்கதிர்கள் பிரகாசிப்பதாகவும் கதை அளந்ததை நினைக்கையில் நம் சமூகத்தின் சிந்தனை பரப்பில் எங்கும் ஒரு வகை இருள் சூழ்ந்திருப்பதை கண்டுகொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

கிராம மயப்பட்ட உலகம் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் பத்து, பதினைந்து வருடங்களில் இதே நாஸா விஞ்ஞானிகள் ஏழு வானம் என்றால் என்ன? அவை ஒவ்வொன்றும் எங்கிருந்து ஆரம்பிக்கின்றது? இந்த ஏழு வானங்களுக்கும் அப்பால் என்ன இருக்கிறது என்பதை எமக்கு சொல்லிதரும் நிலை வரும் போதும் கூட “மாஸா அல்லாஹு”, இதெல்லாம் குர்-ஆனில் அச்சொட்டாக இருக்கின்றது என்று சொல்ல மாத்திரம் உலகெங்கும் நம் உம்மத்துக்களை உருவாக்கி வைத்திருப்போமே அல்லாமல் அந்த விஞ்ஞானிகளில் ஓரிவராகவாவது இந்த உம்மத்தின் பிரதி நிதிகள் இருப்பார்கள் என்பது சந்தேகமே. நிலைமை இப்படி பார தூரமாக இருக்க இந்த 21ம் நூற்றாண்டில் அடிப்படை விஞ்ஞானமே வேண்டாம் எனக் கூறி கழுதையில் பயணிக்க துடிக்கும் இந்த மார்க அறிஞ்சரின் வழி காட்டல்களில் வளரவிருக்கும் நம் உம்மத்து எப்படி குர்-ஆன் சொல்லும் ஏழு வானம் சம்பந்தமான விஞ்ஞான உண்மைகளை தான் அறிந்து கொள்ளும், உலகத்துக்கு நிரூபிக்கும்?

இறைவனால் நம்மை சுற்றி ஏற்படுத்தப்பட்டுள்ள இயற்கையின் மொழி அறபோ, ஆங்கிலமோ, கிரேக்கமோ அல்ல, மாறாக “விஞ்ஞானம்” இந்த விஞ்ஞான மொழியை அறிந்து கொள்ள, அதை சாதாரணனுக்கு எடுத்துச் சொல்ல பயன் படுவதே மனிதன் பயன் படுத்தும் மொழிகள். ஆகவே இறைவனால் மனிதனுக்கும் கொடுக்கப்பட்ட அந்த விஞ்ஞான மொழியை அறிந்து கொள்ள நாம் பேசும் மொழி தேவைப்படுகின்றதே அல்லாமல் யூதமொழி பேசுபவன் அல்லது ஆங்கில மொழி பேசுபவன் அல்லது அறபு மொழி பேசுபவன் அந்த விஞ்ஞான மொழியை பேசும் போது அதை யூத கண்டுபிடிப்பாக, ஆங்கில பண்டுபிடிப்பாக சித்தரித்து அவை “ஹராம்” என்றும், அல்லது அறபு கண்டுபிடிப்பாக சித்தரித்து அது ” ஹலால்” என்றும் முத்திரை குத்தும் மடமை இந்த பின் நூரி போன்றவர்க்கு மாத்திரமே உரியது.

ஆகவே விஞ்ஞான மொழியை ஆங்கிலத்தில் அறிந்து கொண்டவன் அதை ஆங்கிலத்திலும், பிரஞ்சு மொழியில் அறிந்து கொண்டவன் பிரஞ்சிலும், சீன மொழியில் அறிந்து கொண்டவன் அதை சீன மொழியில் பொருள் கொள்ளும் போது பின் நூரி போன்றவர்களின் அறபு மொழி தேர்ச்சியின்மையும், அந்த மொழியூடாக விஞ்ஞான மொழியை அறிந்து கொள்ள போதுமான மூளைப்பலமும் இல்லை என்பதற்காக, ஐசெக் நியூட்டன் என்ற ஒருவர் பிறந்திருக்காவிட்டால் புவி யீர்ப்பு சக்தி இல்லை, அப்பிள் மரத்தில் இருந்து அப்பிள் கீழே விளாமல் மேலே பறந்து சென்றிருக்கும் என்ற மாதிரியான ஒரு கற்பனையில்தான் பின் நூரி போன்றவர்கள் இது யூதனின் கண்டு பிடிப்பு, இது நஸரானியின் கண்டு பிடிப்பு ஆகவே இந்த விஞ்ஞான விடயங்கள் இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானது, இறைவனுக்கு தெரியாமல் நடந்தேறும் விடயங்கள் போன்ற பழுதடைந்த சரக்குகளையே இன்னும் சந்தையில் விற்க முனைகின்றனர்.

விஞ்ஞானம் என்பதுதான் நம் மூளைக்கு பாரமான விடயமென்றாலும் சில இலகுவான அடிப்படை விடயங்களை விளங்கி, அவைகளை கடைபிடித்து ஒழுக்கமான சமூகத்தையாவது இந்த பின் நூரி போன்றவர்களால் உருவாக்க முடியமா என்றால் அதுவும் கேள்விக் குறியே. காரணம் “மேற்கின் கல்வி வேண்டாம்” என்ற பொருள்பட “போக்கோ ஹராம்” என்ற பெயரை சூட்டிக் கொண்ட நைஜீரியாவில் இயங்கும் ஒரு முஸ்லீம் பயங்கரவாத அமைப்பின் கொள்கையையே பின் நூரி போன்றவர்கள் பின்பற்றுகிறாகள் போல் தெரிகிறது. ஆகவேதான் இவரும் இவர் போன்றோறும் நம் சமூகத்துக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த மனித இனத்துக்கே ஆபத்தானவர்கள் என்று நான் சொல்லத் துணிகின்றேன்.

இஸ்லாம் சுகாதார வாழ்வை முக்கியப்படுத்தி அது நம் நம்பிக்கையில் பாதி என்கிறது. ஆனால் இலங்கையில் மாதிரமல்ல ஒப்பீட்டளவில் உலகளாவிய “உம்மா” சுகாதாரம் என்றால் நமக்கு சம்பந்தமில்லாத விடயம், இந்த மருந்துகளும், நோய் தடுப்பு முறைகளும் யூத/நஸரானி கண்டுபிடிப்புகள் என்ற ஒரு மலிவான போதனையை தம் கையில் எடுத்திருப்பது நிச்சயம் ஆபத்தான விடயமே.

இதன் இன்னுமொரு அம்சம்தான், ஒரு நாட்டின் சட்டம் மனிதனால் இயற்றப்பட்ட சடங்கள் என்றும் அவை ஷரியாவுடன் என்றுமே ஒத்து போகாதவை என்ற வெகுளித்தனமான போக்கு இஸ்லாத்தின் அடிப்படைகளையே ஆடங்கானச் செய்கின்றது. இத்தைகைய சிந்தனைகளின் பிரதிபலிப்புதான், சுகாதாரம் பற்றியோ, தன் சூழல் சுற்றாடல் பற்றியோ, பொதுவான இயற்கை வளங்கள் பற்றியோ, சட்டம் ஒழுங்கு பற்றியோ, சக மனிதனின் உரிமை பற்றியோ , சக மனிதன் தொடர்பாக, நாம் வாழும் நாட்டு மக்கள் தொடர்பாக தமக்கு இருக்கும் தார்மீக பொறுப்புகள் பற்றியோ எந்தவித பிரக்ஞனையும் இல்லாமல் புத்தாக்க முயற்சிகளில் எந்தவித பங்குபற்றலோ, உற்சாக மூட்டலோ இல்லாமல் எங்கும் எதிலும் இந்த பின் நூரி போன்றவர்கள் முன்னுரிமை பெற்றவர்களாக மனித இனத்தால் கெளரவிக்கப்பட வேண்டும் என்ற நிலை எடுப்பது பரிதாபத்துக்குறிய விடயம் மட்டுமல்ல அது ஒட்டு மொத்த முஸ்லீம்களுக்கான ஒரு ஆபத்தான சமிக்ஞையாகும் என்பது என் நிலைப்பாடு.

-முஹம்மத் எஸ்.ஆர், நிஸ்த்தார்.