‘சமாதானப் புறா’ ஞானசார; எல்லாம் முடிந்து விட்டதா?

மஹிந்த ராஜபக்ச கையிலெடுத்த இனவாத ஆயுதம் அபிவிருத்தி இலக்கை அடையாத இலங்கையின் அரசியலில் எப்போதும் தேவைப்படும் விடயமாகவே இருந்து கொண்டு வருகிறது.

பல சந்தர்ப்பங்களில் தெருவோடும், ஊரோடும், கிராமப்புறங்களில் குறிப்பாக தேர்தல் காலங்களில் முடிந்து விடுகின்ற போதிலும் பொது பல சேனா எனும் பயங்கரவாத அமைப்பு அரசின் அனுசரணையைப் பெற்றதும் இனவாதத்துக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்த்துக் கிடைத்தது.

விளைவு, பொதுபல சேனா, இராவணா பலய, சிஹல ராவய, சிங்ஹலே என அமைப்புகளின் தொகை கடந்த ஐந்து வருடங்களில் அதிகரித்துக் கொண்டே சென்றது.

இவ்வமைப்புகளின் பொதுத் தளம் இனவாதமாக இருந்தாலும் அதன் இயங்கு தளம் அவ்வப்போது அரசியல் தேவைகளுக்காகவே தீர்மானிக்கப்பட்டு வந்தது.

2015ல் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், இதனை முழுமையாக இல்லாதொழிக்க வலுவற்றது என்பது அடுத்த சில மாதங்களுக்குள்ளேயே உணரப்பட்ட விடயமானது. அடித்தட்டு மக்களிடம் இயல்பாகவே இருக்கும் ஒரு வகை அச்சம் கலந்த வெறுப்புணர்வு இவ்வாறான சக்திகளால் மிக இலகுவாக தூண்டப்படக்கூடியது என்பதால் சிறிய சிங்கள கிராமங்கள் முதல் நகரங்கள் வரை வர்த்தக – பொருளாதார இலக்காக முஸ்லிம் சமூகம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.

இதன் பின்னணியிலேயே, மைத்ரி – ரணில் கூட்டரசு இனவாதத்தை முற்றாக அடக்க முடியாத தமது பலவீனத்தை புத்தி சாதுர்யமாகத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்து இயங்கி வருகிறது.

ஆதலால், இன்று நவீன இனவாத பயங்கரவாதத்தின் தந்தை ஞானசார இன்று சமாதானப் புறாவாக சமூகப் பிணக்குகளைத் தீர்த்து வைக்கப் பயன்படுகிறார்.

ஒருவன் தன்னை அடித்தால் திருப்பியடிக்க வேண்டும் என நினைப்பது சாதாரண மனித இயல்பு. அதனை மன்னித்து, மறந்து முன்னேறுவது பெருந்தன்மை. எனினும், தன்னை அடித்தவனைத் திருப்பியடிப்பது ‘முஸ்லிமாக’ இருப்பதனால் மாத்திரம் குற்றமாகினால் அங்கு தான் பேரினவாதம் தலையெடுக்கிறது.

1800 களிலிருந்து 2017 வரை இவ்வாறு பல தடவைகள் இடம்பெற்று விட்டது. 2017 நவம்பரும் அதையே சொல்கிறது.

வாகன விபத்தொன்றின் பின்னணியில் விதானகொடயில் ஒரு குழு மோதல். அந்த மோதலை ஆரம்பித்தவர் யார்? என்ற கேள்விக்கு அரசாங்கம் விடை சொல்லும் வரை தற்சமயம் அது முஸ்லிம் இளைஞர்கள் என்றும் இல்லை சிங்கள இளைஞர்களே என்றும் விளக்கங்கள், வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன.

அவ்வாறேயானாலும், அது அந்த இடத்தோடு முடிய வேண்டியது. இரு தனி நபர்கள் சண்டையிட்டுத் தீர்த்துக்கொள்ள வேண்டிய விடயத்தை அதைக் காரணமாகக் கொண்டு ஒரு இனத்தின் மீதான வன்முறையாகக் கட்டவிழ்த்து விடுவது இன வன்முறையாகும். அதுவே இங்கு நடந்தேறியது.

காரணம், பேரினவாத சிந்தனையெனில் அந்த சிந்தனைக்கு 2012 முதல் வலுச் சேர்த்த ஞானசாரவே இதற்கு மருந்தாவதும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இரு தனி நபர்களின் பிரச்சினையை ஒரு சமூகப் பிரச்சினையாக்கி, சிறுபான்மை சமூகமாதலால் அவர்கள் உடமைகள், வர்த்தக நிலையங்கள், உயிர்களையும் சூறையாடலாம் எனும் பெரும்பான்மை வாத சுதந்திரத்தை இல்லாதொழித்தாலே அது நல்லாட்சியாகும்.

இன்று அவ்வாறான ஒரு பாதையில் தான் ஞானசார சமாதானப் புறாவாக மாற்றப்பட்டுள்ளாரா என்பதை உடனடியாகக் கண்டறியும் சாத்தியமில்லை, பட்டறிவு அதற்கு இடங்கொடுக்கப் போவதுமில்லை. எனவே, இதற்கு காலந்தான் பதில் சொல்லும்.

ஆதலால், அரசின் இந்த நடவடிக்கைகளை பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் அணுக வேண்டிய கட்டாயம் சிறுபான்மை மக்களுக்கு இருக்கிறது.

பொருளாதார அபிவிருத்தி, நாட்டையும் குடி மக்களையும் வேறு திசையில் அழைத்துச் செல்லும் எனும் நம்பிக்கையுடன் கடனுக்கு மேல் கடன்பட்டாவது தொழிற்சாலைகளை, வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் முயன்று கொண்டிருக்கிறது. தீர்வுகள் என்ற அடிப்படையில் இதையும் மறுதலிக்க முடியாது எனினும் வெளிப்படையான உத்தரவாதம் இல்லாததனால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவிக்கொண்டிருக்கிறது.

அதை உறுதியாக வழங்கவும் முடியாத அரசு, அவ்வப்போது இந்த சமாதானப் புறாவைக் கொண்டு காரியங்களை சாதித்துக் கொள்ளும். அது நன்மையாக அமைந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் நிம்மதி.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய ஞானசார, அதன் பின் அரசின் ஆயுதமாக மாறியது தொடர்பில் இதற்கு முன் பல கட்டுரைகளில் அலசியிருக்கிறோம். இந்த சமாதானப் புறா வேடம் அரசுக்குத் தேவையான நேரத்தில் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்து என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இர்பான் இக்பால்
பிரதம ஆசிரியர், சோனகர்.கொம்

https://www.facebook.com/irfaninweb