ஞானசார இல்லாத இலங்கை; யாருக்கு நஷ்டம்?

கடந்த ஐந்து வருடங்களாக ஒவ்வொரு பொழுதும் ஞானசார என்ன செய்திருப்பான் எனும் கேள்வியோடு புலர்ந்து பழகி விட்ட நம் மக்கள் ஞானசார இல்லாத இலங்கையை ஜீரணிக்க கஷ்டப்படுவார்கள் என்பது அண்மைய சம்பவங்கள் மூலம் புலனாகிறது.

ஆரம்ப காலத்தில் ஞானசாரவுக்கு எதிராக பொலிசில் முறையிடக் கூட ஆளில்லாமல் இருந்தது. ஆனால் இனி ஞானசார அடங்கிப் போகப்போகிறார் என்று நம்பிக்கை (மாத்திரம்) வெளியிடப்பட்டதும் திடீரென முளைத்த பேஸ்புக் லைவ் வீடியோ ஹீரோக்கள் கண்டமேனிக்கு எல்லோரையும் கேள்வி கேட்டுப் பொங்கியடங்கினார்கள்.

எப்போது வாய்ப்பு கிடைக்கும் என காத்திருப்பவர்கள் இப்படி பொங்கி – அடங்கினாலும் பின்னால் உள்ளவர்கள் எப்படியாவது வெளிவருவார்கள் என்பது தான் உலக நியதி.

அதன் அடிப்படையில் அந்த ஹீரோக்கள் அடங்கியதும் ‘பயான்’ பண்ணும் கூட்டம் இப்போது களமிறங்கி விட்டது. இத்தோடு இன்னொன்றும் இங்கு கவனிக்கலாம். அதுதான் ஆர்.ஆர்.டி எனும் பெயரில் இயங்கி வந்த ஒரு அமைப்பின் மீதான குற்றச்சாட்டு.

அந்த அமைப்பின் தலைவர் சிராஜ் நூர்தீனால் நிர்வகிக்கப்படும் வட்ஸ்அப் குழுமம் ஒன்றில் பிரபல சமூக ஆர்வலரும் ஊடகவியலாளருமான ஹில்மி அஹமட், நேரடியாகவே இந்த பிரச்சினையை உருவாக்கியது ஆர்.ஆர்.டி என தெளிவாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். தற்போது குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை இழந்து ‘ஹீரோ’ இமேஜுகளுக்காகவே இயங்கும் சிலரால் இதை மறுக்கவும் முடியவில்லை, ஜீரணிக்கவும் முடியவில்லை.

ஞானசாரவுடனான பேச்சுவார்த்தை பற்றி பிழையான விடயங்களை கசிய விட்டது யார்? என்பது ஒன்றும் விண்வெளி இரகசியமில்லை. ஏனெனில், அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ‘ஒருவர்’ (தன்னுடைய ஜுனியர்) ஞானசாரவின் வழக்குகளை வாபஸ் பெற முஸ்லிம் தரப்பு இணங்கியுள்ளார்கள் என தன்னிடம் சொன்னதாக சிராஜ் நூர்தீன் தெரிவித்துள்ளார்.

அதனைத் தனது பதிவில் தெளிவாகத் தெரிவித்துள்ள ஹில்மி அஹமட், அந்த நபர் யார் என்பதை சிராஜ் தெளிவு படுத்த வேண்டும் எனத் தான் கோரியும் அதை அவர் செய்யவில்லையென குறிப்பிட்டுள்ளார். இதை வைத்துக் கணிக்கும் போது இந்த சர்ச்சைகளுக்குக் காரணமானவர் ஒன்றில் சொன்னவர் அல்லது கேட்டவர் என்பது தெளிவாகிறது.

அது போல சொன்னவரோ கேட்டவரோ சொன்னதைக் கேட்ட பினாமியொருவரே அதை தமிழில் எழுதி சர்ச்சையாக்கியிருந்தார். இப்போது இதனால் இவர்கள் அடைந்த நன்மையென்ன அல்லது இழப்புத்தான் என்ன என்ற ஒரு கேள்வி உருவாகிறது.

ஞானசாரவின் முதல் நான்கு சந்திப்புகளின் போதும் முஸ்லிம் சமூகம் தொடர்பில் ஞானசாரவுக்கு இருக்கும் பிரச்சினைகள் கேள்விகள் சந்தேகங்கள் என்ன என வினவப்பட்டு அதற்கு பதிலளிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. சிலவற்றில் ஞானசார உண்மையான தெளிவை அடைந்திருக்கலாம், சிலவற்றை அறிவதிலிருந்தும் கூட தவிர்த்திருக்கலாம்.

ஆனால், ஞானசார வைத்த குற்றச்சாட்டுக்களில் 90 வீதமானவை இலங்கையில் தஃவா எனும் பெயரில் குழப்பங்களை உருவாக்கி வரும் ஒரு குழுவைப் பற்றியதாக இருந்தது. மீதான அனுதாபம் கொண்ட சில சட்டத்தரணிகள் எவ்வாறு டான் பிரியசாத்துக்கு பிணை வழங்க இணங்கி அப்துல் ராசிக்கைக் காப்பாற்றினார்கள் என்பது நடந்து முடிந்த வரலாறு.

ஆகையால், இங்கு ஒன்றில் ஜமாத்து பாசம் அல்லது அதன் மூலம் கிடைக்கும் வருமானச் சிக்கல் முன் வந்து நிற்கிறது. இவர்கள் ஏன் அந்த குழுவுக்காக பாய்ந்து பாய்ந்து ஓடுகிறார்கள் என அப்போதும் கேள்வியெழுப்பப் பட்டது. அதற்கு, தொழில் ரீதியான தொடர்பு என்றும் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அந்தக் கொடுப்பனவுக்காக டான் பிரியசாத்துக்கு அப்போது பிணை வழங்கப்பட்டதும் இப்போது அவனை சிறையிலடைக்கப் போராடுவதாகவும் தெரிவிப்பது முற்றிலும் முரணான விடயங்கள்.

எனவே சமூகத்தின் பெயரில் நாடகங்கள் தொடர்கின்றன, தொடர்ந்து கொண்டிருக்கப் போகின்றன. என்னுடைய கேள்வியெல்லாம், இப்போது திட்டுவதெல்லாம் சரி. ஒருவேளை அல்லாஹ் நாடி, ஞானசார அடங்கியே போய் விட்டால் இந்த போலி ஹீரோக்கள் அப்போது அதன் முழு உரிமையையும் இப்போது அவர்களால் திட்டப்படும் தரப்புக்கு வழங்கி விட்டு ஒதுங்கி நிற்பார்களா?

அதுவும் நடக்காது ஏனெனில் இவர்கள் ஹீரோக்களாகத் தம்மைக் கனவு காண்பவர்கள். நமது சமூகம் கூட எதைச் செய்தாலும் பெயரைப் போட்டுக் கொள்ளும். ஆனால் முஸ்லிம்களுக்காகவென எதைச் செய்தாலும் பெயர் வாங்க வேண்டும் என நினைக்காது இயங்கும் மேமன் சமூகத்தையும் இங்கு ஞாபகமூட்ட வேண்டும்.

ஞானசாரவுக்கு எதிராக சொந்த செலவில் அணி திரண்டதாகச் சொல்லும் இவர்கள் இயங்குவதற்கு மேமன் சமூகம் வாரி இறைத்ததையெல்லாம் கூட இந்த ஹீரோ – ஜீரோ சட்டத்தரணிகள் மறுக்கப் போகிறார்களா?

அல்லது  அந்த ‘அமைச்சரின்’ ஜமாத்து பாசம் காலத்தால் தொடர்ந்தும் மறைக்கப்படக்கூடிய ஒரு விடயமா?

சாதாரண மக்கள், யார் முயற்சி செய்தாயினும் அமைதி திரும்பட்டும் என்று நினைத்திருக்க, யார் அதைச் செய்ய வேண்டும் என்ற போட்டி – பொறாமையால் இதற்கு முன் தாம் செய்த நற்செயல்களின் பயனையும் இழந்து நிற்கிறார்கள் இந்த ஹீரோ – ஜீரோ பிரியர்கள்.

-அ. நவாஸ்