மற்ற இனவாதிகளை நான் ‘அடக்குகிறேன்’ : ஞானசார!

முஸ்லிம் சமூகத்துடனான பிணக்குகளைத் தீர்த்துக்கொள்ள அரச அனுசரணையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் ஞானசார, தற்போது துளிர் விட்டிருக்கும் ஏனைய இனவாதிகளை தன்னால் அடக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

நோய்வாய்ப்பட்டு, ஏறத்தாழ காலாவதியான நிலையில் இருக்கும் ஞானசாரவுக்கு முஸ்லிம் சமூகம் மீதிருக்கும் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதற்கான முயற்சி கடந்த ஒரு மாத காலமாக ஆளுந்தரப்பின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடாக இடம்பெற்று வருகிறது.

ஒரு சில நபர்களைத் தாம் தனியாக சந்திக்க விரும்புவதாக ஞானசார தெரிவித்திருந்த போதிலும், கூட்டாகவே பங்களிக்க முடியும் என பதிலளித்த முஸ்லிம் அரசியல் மற்றும் சமூக, மார்க்க அமைப்புகள் பிரதிநிதிகள் குழுவொன்றையே அனுப்பி வைத்திருந்தது. கடந்த செப்டம்பர் இறுதியில் ஒக்டோபர் 11ம் திகதி பிறிதொரு சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது.

இந்நிலையில் குறித்த சந்திப்பில் பங்கேற்க ‘அழைக்கப்படாத’ ஒரு நபர் சாதகமாக முன்னேறி வந்த பேச்சுவார்த்தைகள் குறித்த மிகத் தவறான முறையில் அவதூறு பரப்பியுள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

இஸ்லாம் தொடர்பில் ஞானசாரவுக்கு இருந்த சந்தேகங்கள் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் இருந்த முரண்பாடுகள் குறித்தே அங்கு பேசப்பட்டு வந்த நிலையில் இன்றளவில் ஞானசார சமாதானமானாலும் புதிதாகத் துளிர் விட்டிருக்கும் டான் பிரியசாத், சிங்ஹலே ஜாதிக பலமுலுவ, சாலிய, அமீத், ரத்னசார போன்றோரால் இது வளர்ந்து வருவது எவ்வாறு தடுக்கப்படப் போகிறது என வினவியதற்கு, ஒரு சிறு குழு தவிர 70-80 வீதமானோர் தமது பேச்சைக் கேட்பவர்கள் எனவும் தம்மால் கட்டுப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் ஞானசார.

ஞானசாரவைக் காப்பாற்றும் வேறு எண்ணத்தோடு இம்முயற்சியை அரசு மேற்கொண்டாலும், தாம் அவதானமாகவே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகவும் ஒரு போதும் வழக்குகளை வாபஸ் பெறுவதற்கு இணங்கவில்லையெனவும் அசாத் சாலி, ரிஸ்வி முப்தி, என். எம். அமீன் உட்பட்ட பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், வேறு ஒரு தனி நபர் தனது சுயநலத்திற்காக இவ்விடயத்தை திரிபு படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.