30 பேருக்கு ‘பிரதமராகும்’ கனவு: ஞானசாரவுக்கு கவலை!

தற்போதிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 30 பேர் பிரதமராகும் கனவோடு இயங்கிக் கொண்டிருப்பதாகவும் அரசியலின் போக்கு திருப்திகரமாக இல்லையெனவும் கவலை வெளியிட்டுள்ளார் பயங்கரவாதி ஞானசார.

அரசாங்கமும் கூட்டு எதிர்க்கட்சியும் எனும் பெயரில் இரு தரப்பும் இணைந்து மக்களை குழப்பிக் கொண்டிருப்பதாகவும் நாட்டில் வெளிநாட்டு சக்திகள் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக இவ்வாறான குழப்பங்கள் ஏற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மங்கள, ராஜித உட்பட 30 பேருக்கு இவ்வாறு பிரதமராகும் கனவு இருப்பதாகவும் அமைச்சுப் பொறுப்புகளில் இருப்பவர்களின் துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்தத் தவறுவதை மறைக்க அரசியலமைப்பை மாற்றுவது என்பது எந்த வகையில் தேவையெனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதன் போது ரிசாத் பதியுதீனின் பொறுப்பில் எண்ணற்ற நிறுவனங்கள் இருப்பது அரசியலமைப்பின் தவறா? அல்லது யாருடைய தவறு எனவும் ஞானசார கேள்வியெழுப்பியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

சில வாரங்கள் நோய்வாய்ப்பட்டு மௌனித்திருந்த ஞானசார தற்போது தொடர்ச்சியாக செய்தியாளர் சந்திப்புகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.