வயோதிபர்களை மதித்து நடப்போம்

ஒக்டோபர் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினமாகும். சிரேஷ்ட பிரஜைகள் என்று அழைக்கப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டுதோறும் அக்டோபர் 01 ஆம் திகதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் கொண்டு வரப்பட்ட பிரிவு 45/106 தீர்மானத்திற்கமையவே இத்தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதன் முதலாக 1991 ஆம் ஆண்டு சர்வதேச முதியோர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வோரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் பிரதான நோக்கமாகும். ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இத்தினத்தை தேசிய விடுமுறை தினமாகவும், ஜப்பானில் மூத்தோருக்கு கௌரவம் செலுத்தும் தினமாகவும் இது அனுஷ்டிக்கப்படுகின்றது.

முதியவர்கள் ஒரு சமூகத்தின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். பழுத்த அனுபவங்களைக் கொண்டவர்கள். தங்களுடைய நீண்டகால அனுபவத்தின் ஊடாக ஒரு முதிர்ச்சியும் நிறைவும் கொண்ட ஆளுமையை அவர்கள் பெற்றிருப்பர். அந்தவகையில் அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது ஒரு சமூகத்தின் கட்டாயத் தேவை.

எமது நாடு உள்ளிட்ட கீழைத்தேய நாடுகள் பலவற்றிலும் இந்தப் போக்கு இருந்தாயினும் இப்போது மெல்ல மாறி வருகிறது.

அமெரிக்கா போன்ற விருத்தியடைந்த மேலைத்தேய நாடுகள் இன்று முற்று முழுவதாக இளைஞர் மையநாடுகளாக மாறிவிட்டன. ஆகவே அங்கு முதுமை என்பது அழகு, வேகம், வலிமை, வருமானம், மதிப்பு எல்லாமே மெல்ல மெல்ல அற்றுப் போகும் காலம் என்றே பார்க்கப்படுகிறது.

இவ்விடத்தில் முதுமை என்றால் என்ன என்பதைப் பற்றி சிந்தித்தல் வேண்டும். பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் என வரையறுக்கப்படுகின்றனர். சில உளவியலாளர்கள் முதுமையை இளமுதுமை என்றும் முதிர்முதுமை என்றும் இரண்டாகப் பிரித்து நோக்குகின்றனர். 75 வயதுக்கு உட்பட்டவர்களை இள முதுமையில் இருப்பவர்கள் எனக் கருதலாம். எமது நாட்டில் 60 வயதுடைய ஒருவர் தனது வேலையில் இருந்து ஓய்வுபெறும் வயது முதுமையின் ஆரம்பம் எனக் கருதப்படலாம்.

சமூகத்தளத்தில் முதியோர்களை மூன்று முக்கிய பிரிவினர்களாகப் நோக்கலாம். அவர்களது பிள்ளைகளுடன் வாழ்பவர்கள் அல்லது உறவினர்களோடு வசிப்பவர்கள் மற்றையது கணவன், மனைவி என்று இருவர் மட்டும் தனியாக இருப்பவர்கள்.

முதியோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இரு முக்கியப் பிரிவாகப் பிரிக்கலாம். முதல் பிரிவு அவர்களது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்படுதல், அது தொடர்பான பிரச்சினைகளைக் குறிப்படலாம். இதன் காரணமாக, இவர்கள் வெளியில் எங்கும் செல்ல இயலாமல் வீட்டில் முடங்கிக் கிடத்தல், வீட்டில் சிறு சிறு வேலை செய்ய இயலாமை, அத்தியாவசியப் பொருள்கள் வாங்க பிறரைச் சார்ந்திருத்தல், சமூகத் தொடர்பு அற்றுப் போகுதல், இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் உடல் சார்ந்தவை. இவர்களைச் சுற்றி இருப்பவர்கள், அக்கறையோடு சிறு சிறு உதவிகள் செய்தால்கூட, ஓரளவு இப்பிரச்சினைகளை முதியோரால் சமாளிக்க இயலும்.

அடுத்தது உளவியல் சார்ந்த பிரச்சினைகள் அவையாவன பிறரைச் சார்ந்திருப்பது, அவர்களால் உதாசீனப்படுவது, நிந்திக்கப்படுவது, பய உணர்வு, தனிமை உணர்வு போன்றவற்றால் அவதிப்படுவது, நேரத்தை உபயோகப்படுத்த இயலாமை, பொழுதுபோக்கின்மை மற்றும் வாழ்வில் சுவாரசியமின்மை போன்றவை ஏற்படுத்தும் மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகும்.

முதுமையின் போது ஏற்படும் நிகழ்வுகளை விஞ்ஞான ரீதியில் எடுத்து நோக்குமிடத்து மூளை மற்றும் நரம்புமண்டல அமைப்பு முதுமையடையும் போது, மூளையின் நரம்புமண்டல அணுக்களின் எண்ணிக்கையானது குறையவடையத் தொடங்குகின்றது. இழையச் சீர்கேடு, தோல் சுருக்கம், தசை எடை குறைவு, புலன் குறைபாடு, உடல் அசைவுத் தன்மைக் குறைவு, இனப்பெருக்கத் தடை என பல்வேறு முறைகளில் உடலியல் தொழிற்பாடு பாதிக்கப்படுவதனால் வயதானவர்களின் நடவடிக்கைகளில் வேகம் குறைந்து காணப்படுகின்றது. ஞாபகசக்தி குறைவதால் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் குறைவான வேகத்துடனேயே முதியோர் காணப்படுவர்.

ஐ.நாவின் கணிப்பீட்டின்படி தற்போது உலகில் ஒவ்வொரு பத்துப் பேருக்கு ஒருவர் என்றடிப்படையில் அறுபது அதற்கு மேற்பட்ட வயதை உடையவர்கள் காணப்படுகின்றனர். இது 2050 ஆம் ஆண்டில் 5க்கு ஒன்று என்றடிப்படையிலும் 2150ல் 3க்கு ஒன்று என்றடிப்படையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நோக்குமிடத்து தற்போது உலகலாவிய ரீதியாக 60 கோடி முதியவர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை உலகளாவியரீதியில் ஒப்புநோக்கும்போது கூடிய முதியோர்களைக் கொண்ட நாடு என்ற பெருமை உள்ளது. 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இலங்கையில் அண்ணளவாக 27 லட்சம் மூத்த பிரஜைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதேபோன்று 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 2031 ஆம் ஆண்டில் 50 லட்சமாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அப்போதைய மொத்த சனத்தொகையில் 13 சதவீதமாக இருக்கும்.

இலங்கையில் உள்ள முதியோர்களில் 60-70 வயதுக்கிடைப்பட்டோர் 54.4 வீதமாக உள்ளனர். 70-80 வயதுக்கிடைப்பட்டோர் 32.3 வீதமும் 80-90 வயதுக்கிடைப்பட்டோர் 10 வீதமும் 90 வயதுக்கு மேற்பட்டோர் 1.3 வீதமுமாக உள்ளனர். இதே வேளை இலங்கையில் அதிகரித்து வரும் முதியோர்கள் தொடர்பில் அவர்களுக்குரிய பல செயற்றிட்டங்கள் முன்வைக்கப்படல் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புள்ளி விபரங்களைப் பார்க்கும் போது இலங்கையில் 48.3 சதவீதமான முதியோர்கள் தமது பிள்ளைகளின் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றனர். ஓய்வூதியம் மூலம் 13.5 வீதத்தினரும் விவசாயம் மற்றும் ஏனைய தொழில்கள் மூலம் 10.3 வீதத்தினரும் தமது சொத்துகளின் வருமானம் மூலம் 7.7 வீதத்தினரும் வாழ்க்கையை நடத்துகின்றனர். இலங்கையில் உள்ள முதியோர்களில் 70 சதவீதமானோர் வறுமை கோட்டிற்கு கிழே வாழ்ந்து வருவதாகவும் சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்காலத்தில் மனிதனின் சராசரி வாழ்வுக் காலம் இன்னும் அதிகரிக்கும் சாத்தியமே அதிகம் உள்ளது. உடலின் ஒவ்வொரு கலத்தையும் நல்ல நிலையில் வைத்திருந்து அதனைச் சிறப்புற செயற்பட வைக்கும் வளர்ச்சி ஹோமோனை வயது முதிர்ந்தவர்களுக்கு வழங்கும் போது அவர்கள் இளமையூட்டப்படுகிறார்கள் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

இப்போது அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த ஹோமோன் வியாபார ஸ்தலங்களில் விற்பனைக்கு உள்ளது. ரெக்சாஸ் நகரில் உள்ள நல மையத்தின் பேராசிரியர் ஜான் விக் (Jan Vig) என்பவர் முதுமையைத் தடுப்பது என்பது வெறும் கற்பனை நிலையில் இருந்து இப்போது யதார்த்த நிலைக்கு வந்துவிட்டது என்று கூறுகிறார். ஆகவே, எதிர்காலத்தில் ஒரு நாட்டின் மொத்தச் சனத்தொகையில் முதியவர்கள் கணிசமான நூற்று வீதத்தைப் பிடிக்கப் போகிறார்கள். அவர்களின் நலன் பற்றி அக்கறை கொள்வது நாட்டின் மொத்த நலனுக்கு மிக அவசியம் என்ற நிலை வந்து கொண்டிருக்கிறது.

முதுமைக்கும், முதியவர்களுக்கும் கொடுத்து வந்த முக்கியத்துவம், கண்ணியம், மரியாதை ஆகியவை நாகரீக உலகம் என்று சொல்லப்படுகிற இன்றைய அவசர காலகட்டத்தில் பெயரளவுக்குக் கூட கொடுக்கப்படாமல் முதியவர்கள் தங்களுடைய பிள்ளைகளாலேயே ஓரங்கட்டப்பட்டு முதியோர் இல்லங்களிலும் ஏனைய உறவினர்களின் வீடுகளிலும் தமது வாழ்வின் கடைசி காலங்களை போக்குவதற்கு விடப்படுவதை காணமுடிகிறது. தவிர சில நேரங்களில் பிள்ளைகளும், உற்றார் உறவினர்களும் கவனிக்காத காரணத்தால் தமது அன்றாட வாழ்க்கை செலவீனங்களுக்காக ஏராளமான முதியவர்கள் யாசகம் எடுப்பவர்களாக மாறி வருவதும் கசப்பான உண்மையாகும்.

நவநாகரிகம் என்று வாய் கிழியக்கூச்சலிடும் மேற்கின் குடும்ப கட்டமைப்புக்கும், இஸ்லாமிய குடும்ப கட்டமைப்புக்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. Single Parent எனப்படும் ஒற்றை பெற்றோர் Day Care Centre எனப்படும் பகல் பராமரிப்பு நிலையம் பெற்றோரை தத்துக்கொடுக்கும் Elders Home எனப்படும் முதியோர் இல்லம் இவைதான் பெற்றோருக்கு மேற்கு நாகரிகம் வழங்கிய பரிசு!

மாற்று மத சமுதாயங்களில் மட்டுமல்ல இஸ்லாமிய சமுதாயத்திலும் நிலவி வருகின்ற இந்த அவல நிலை மனித சமுதாயத்தின் மீது விழும் வீழ்ச்சியினை தெள்ளென படம் பிடித்துக் காட்டுகிறது.

இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்தும் ஏகத்துவம் எனப்படும் ஓரிறைக்கொள்கை என்ற இறை கடமைக்கு அடுத்ததாக அமையும் விடயங்களில் பெற்றோர் விவகாரம் முதன்மையானதும் , முக்கியமானதாகும். அந்தவகையில் ஒரு உண்மை முஸ்லிமின் தலையாய கடமை தனது பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்வதாகும். இந்த துறையில் அவர்களுக்கு உபகாரம் செய்வது, இனிய வார்த்தைகளால் அவர்களோடு உரையாடுவது, பராமரிப்பது, சுகம் விசாரிப்பது, நோய் நொடிகளுக்கு சிகிச்சையளிப்பது, அவர்களது இதர தேவைகளை பூர்த்தி செய்வது போன்ற விடயங்கள் மிக முக்கியமானதாகும்.

“உமதிரைவன் உன்னைத்தவிர மற்றெவரையும் வணங்க வேண்டாமென்றும் தாய் தந்தைக்கு உபகாரம் செய்யும் படியும் கட்டளையிட்டிருக்கிறான்(17:23) என்ற திருமறை வசனம் பிரஸ்தாபிக்கும் அடிப்படை தத்துவமும் இதுவே!

பிரிதொரு இடத்தில், பெற்றோருக்கு உபகாரம் செய்யுமாறு உமது இறைவன் கட்டளையுட்டுள்ளான். ( 17:23) எனக்கூறப்படுகிறது.

இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹூத்தாலாவுக்கு மிகவும் விருப்பமான அமல் எதுவென்று கேட்டார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது என்று பதிலளித்தார்கள். அதற்கடுத்ததாக எதுவென்று கேட்டார்கள் அதற்கு பெற்றோருக்கு உபகாரம் செய்வது என்றார்கள் (புஹாரி)

அந்தவகையில் பெற்றோரில் உபகாரம் புரிவதற்கு தந்தையை விட தாயே அதிகம் முக்கியத்துவம் பெறுகிறாள் என்பதை பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் உலக வாழ்வில் நான் சேர்ந்து நடப்பதற்கு மிகவும் தகுதியானவர் யார் என்று கேட்ட பொழுது உமது தாய் என்றார்கள் இரண்டாவது முறை கேட்டதற்கு அதற்கும் உமது தாய் என்றார்கள் மூன்றாவது முறை கேட்டதற்கு அதற்கும் தாய் என்றார்கள் நான்காவது முறை கேட்டதற்கு உமது தந்தை என்றார்கள். (புஹாரி)

பிள்ளைகள் பெற்றோருடன் உரையாடும் போது கனிவு கலந்த வார்த்தைகளை பயன்படுத்தும்படி குர்ஆன் வேண்டுகிறது. அந்த வகையில் பெற்றோருடனான உறவின் போது மன உளைச்சல் காரணமாக சீ என்ற எளிய வார்த்தையை கூட பயன்படுத்துவதை தவிர்க்குமாறு போதிக்கிறது.

உங்கள் தாய் தந்தையர்களில் எவரேனும் முதுமை அடைந்து விட்டால் அவர்களிடம் கடிந்து பேசாதீர்கள். ‘சீ’ என்று கூட சொல்லாதீர்கள். மென்மையாக கடந்து கொள்ளுங்கள்’ (17:23-24) என திருக்குர்ஆன் பிரஸ்தாபிக்கின்றது.

இஸ்லாத்தின் பார்வையில் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமையில் குறைவு செய்வதும் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமையில் குறைவு செய்வதும் பெரும் பாவமாக கருதப்படுகிறது.

இறைவனுக்கு இணைவைத்தலும், பெற்றோர்களை நோவினை செய்வதும், பொய் சாட்சி கூறுவதும் பெரும் பாவம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

சிறுவனாக இருக்கும் போது என்மீது அவர்கள் இருவரும் இரக்கம் காட்டியதை போல் அவர்கள் மீது நீ இரக்கம் காட்டுவாயாக! (17:84) என்று பெற்றோருக்காக பிள்ளைகள் பிரார்த்திக்க வேண்டுமென்று குர்ஆன் கூறுகிறது.

உன் பெற்றோர் உன் மீது அதிருப்தி கொண்டால் இறைவன் உன் மீது அதிருப்தி கொள்கிறான். (இப்னு ஹிப்பான்) என நபி (ஸல்) அவர்கள் இறை திருப்தி பெற்றோரின் திருப்திகரமான மனோநிலையில் தங்கியிருப்பதாக கூறினார்கள்.

நபி (ஸல்) ஒருமுறை, ‘சிறியோர்களுக்கு இரக்கம் காட்டாதவரும் முதியோருக்கு மரியாதை செய்யாதவரும் நம்மை சார்ந்தவன் அல்ல(அஹ்மத்) என்றார்கள்.

பெரியவர்கள், சிறியவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும். சிறியவர்கள் பெரியவர் களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்தவகையில் முழுமையடைந்த வயோதிபர்பளை மதித்து நடப்பது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

-எம்.ஐ அன்வர் (ஸலபி)