ரோஹிங்யர்கள் மீதான ‘இனவாதம்’; தேசத்துக்கு நேர்ந்த ‘அவமானம்’!

வடபுலத்தில் கரையொதுங்கி, நீதிமன்ற பாதுகாப்பில் கல்கிஸ்ஸ பகுதியில் வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த ரோஹிங்யர்கள் இலங்கையில் நிலவி வரும் அரசியல் காரணங்களுக்காக இனவாத இலக்குகளாக்கப்பட்டமை முஸ்லிம்களுக்கு நேர்ந்த அவமானமன்றி தேசத்துக்கு நேர்ந்த அவமானமாகும்.

ஐ.நா அகதிகள் சாசனத்தில் இணைந்து கொள்ளாத இலங்கை ஐ.நா அகதிகள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் வழக்கத்திலேயே ஏப்ரலில் இலங்கை வந்து சேர்ந்த ரோஹிங்யர்கள் தகுந்த இடத்துக்கு அழைத்துச் செல்லப்படும் வரை இலங்கையிலேயே ஐ.நா அனுசரணையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது ஒரு தேசத்தின் மனிதாபிமான நடவடிக்கைக்குப் பலம் சேர்த்தது என்றால், அவர்கள் ரோஹிங்யாவின் முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் சிங்கள இனவாதிகளினால் விரட்டியடிக்கப்படவும், கொடுஞ்சொல்லுக்காளாகி அச்சப்படவும், பொலிசார் அவர்கள் பற்றிய எந்த அறிவும் இல்லாமலேயே பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதும் அங்கு இனவாதிகள் போட்ட கோசங்களும் இந்த தேசத்துக்கு நேர்ந்த அவமானங்களாகும்.

மியன்மாரில் பௌத்தர்களின் இனவாத இலக்காக அந்நாடு சுதந்திரம் பெற்ற காலந்தொட்டு ரோஹிங்ய முஸ்லிம்கள் இருந்து வருகிறார்கள், ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் 70 ஆண்டுகளாக தேசம் விட்டுச் சென்று அகதி வாழ்க்கை வாழ்கிறார்கள். இலங்கையில் கடந்த ஐந்து வருடங்களாக தலைவிரித்தாடி வரும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்துக்கும் மியன்மாருக்கும் இருக்கும் தொடர்பு பரகசியமானது.

மியன்மாரின் கொலைஞன் அசின் விராதுவும் இலங்கையில் அவனது சகா ஞானசாரவும், இவர்களுக்கு அங்கீகாரம் அளித்துப் பாரிய பௌத்தவாத எழுச்சியாகக் காண்பிக்க மாநாடு நடாத்த உதவிய மஹிந்த ராஜபக்சவும் இங்கு இனவாதிகளின் பாலமாக இருக்கிறார்கள்.

எனவே, இலங்கையிலும முஸ்லிம்கள் இன்னும் பல காலத்துக்கு இனவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் காணக்கிடைக்கிறது. அதை நிவர்த்தி செய்யப் போவதாக ஆட்சி பீடமேறிய கூட்டணி அரசில், அதுவும் 21ம் நூற்றாண்டின் டிஜிட்டல் உலகில் நீதிமன்ற அனுமதியிலேயே தஞ்சம் தேடி வந்த ரோஹிங்யர்கள் அங்கு குடியிருக்கிறார்கள் என்பது தெரியாமல் போனது அவமானம்.

அதேவேளையில், பிரச்சினையை வளர்க்காமல் அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றோம் எனும் ராஜதந்திரம் பற்றி அதே பொலிசார் பேசும் போது இனவாதத்தை அடக்கும் திராணியற்ற அரசின் பலவீனம் வெளிர்ந்து நிற்கிறது.

இதை எவ்வாறு கையாள வேண்டும் எனும் இனவாதமற்ற சிந்தனைக்கு முஸ்லிம் தலைவர்கள் தயாராக இருக்கிறார்களா? என்பதை மக்களே அலசிப் பார்க்கலாம்.

நாட்டின் எப்பாகத்தில் இருந்தாலும் இதற்காக சிறு கண்டனம் வெளியிட்டு வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டும் எனும் உணர்ச்சி மிகுதியில் அடுத்த வெள்ளிக்கிழமையும் அறிக்கைகள் வரும். ஆனால், பேச வேண்டிய இடங்களில் இவ்வாறான ஒரு தேசிய பிரிச்சினையை தேசியத்தின் விடயமாகப் பேச வைக்கும் சமயோகிதம் இல்லாதிருப்பது வெற்று வேட்டுக்களை நாடாளுமன்றம் அனுப்பிய மக்களின் சாபக் கேடு.

ஆனாலும் அவர்களால் உணர்ச்சிவசப்படாமல் இது போன்ற தேசிய பிரச்சினைகளை, நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சினையை அது பேசப்பட வேண்டிய சபையில் (நாடாளுமன்றம்) பேச வைத்து, அதற்கான நடவடிக்கையை எடுக்கும் அழுத்தத்தைக் கொடுக்கும் கடமை மக்கள் சார்ந்தது. அதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமன்று ஏனையோரையும் அணுகிச் செயற்படுவதிலேயே சிவில் சமூகத்தின் சாணக்கியம் அவசியப்படுகிறது.

இலங்கையில் முஸ்லிம்களை அடக்க நினைத்து ஒதுக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச, தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லையென்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவர் தான் இன்னும் செய்கிறார் எனும் மாயை கொண்டு விளையாடும் போக்கில் அரசாங்கம் இருக்கிறது.

இவை இரண்டுக்குமிடையில் மனிதாபிமானமே செத்துப் பிழைக்கிறது.

நீர்கொழும்பில் காலாகாலமாக அகதிகள் வந்து அவதிப்படுகிறார்கள், அப்போதெல்லாம் அவர்கள் உரிமைகளுக்காக நாம் மனிதாபிமான போராட்டங்களை முன்னெடுத்ததில்லை.

ரோஹிங்யர்களுக்காக மட்டும் பேசும் போது அது மனிதாபிமானம் என ஏற்றுக்கொள்ளப்படப் போவதுமில்லை. போட்டி போட்டுக்கொண்டு ‘உணர்ச்சி’ வசப்படுத்தி ‘பெயரை’ ப் பதிக்கத் தடுமாறும் அரசியல்வாதிகள் இச்சமூகத்துக்கு மிகப்பெரும் சாபக்கேடு!

-Irfan Iqbal (https://www.facebook.com/irfaninweb)