ரோஹிங்யா முஸ்லீம்கள், இலங்கை முஸ்லீம்கள், சர்வதேச சமூகம், ஐ.நா.சபை!

1990ல் தமிழ் புலிகளால்  சோனகர்கள் (முஸ்லிம்கள்) வடக்கில் இருந்து பலாத்காரமாக துரத்தியடிக்கப்பட்ட போது, 2004ல் கிளம்பிய சுனாமி பல்லாயிரக் கணக்கான உயிர்களை விழுங்கிக் கொண்டபோது, 2009ல் தமிழ் பொது மக்கள் ஸ்ரீ லங்கா ராணுவத்தால் துவம்சம் செய்யப்பட்ட போது, 2016ல் சிரிய நாட்டு அகதிக் குழந்தை ஐலன் குர்டியின் சிற்றுடல் கரை ஒதுங்கியபோது  என்ன உணர்வு எம்மை வாட்டியதோ அதே அளவான உணர்வுதான் ரோஹிஞ்சா முஸ்லீம்களின்  நிலையை காணும் சராசரி மனிதனுக்கு ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த மனித அவலங்களை “சமய கண்ணாடி” ஊடாக பார்க்கவேண்டியதில்லை, அப்படி பார்ப்பதும் மனிதாபிமானத்தை பறைசாற்றாத விடயமுமாகும். ஆனால் துரதிஸ்டவசமாக இந்த அவலங்கள் அரசிலாக்கப்பட்டதால், அந்த கவலைகளை  மனத்தில் சுமந்து கொண்டுதான் நாம் சதாகாலமும்  வாழவேண்டும் என்று நிர்பந்திக்கப்படும் போது நாம் மனரீதியாக ஊனமுறுவதும் ,செய்வதறியாது நாமே குழம்பிக் கொள்வதும் தவிர்க்க முடியாதவை.

அத்தகைய  குழப்பத்தின் அறிகுறி இந்த ரோஹிஞ்சா முஸ்லீம்கள் தொடர்பாக சோனக முஸ்லீம்களின் முகநூல் தகவல் பரிமாற்றங்கள், சூழுரைப்புக்கள், சபிப்புக்கள், குற்றச்சாட்டுக்கள், எதிர்பார்ப்புக்கள் என்று எல்லை இல்லாமல் விரிந்து செல்ல, எரிகின்ற வீட்டில் பிடிங்கியது இலாபம் என்ற ரீதியில் சந்தர்ப்பம் பார்த்து நிற்போர் ” அன்று எமக்கு ஏற்பட்ட போது,… என்று தொடங்கி ஆகவே நீலிக் கண்ணிர் வடிக்காதீர்; என்று முடிக்கும் போது மானசீகமான கவலைக்கும் தடை விதிக்கும் இறுகிய மனங்கொண்டோரும் நமக்கிடையே இருப்பதை, இருக்கப்போவதை  நாம் மறுப்பதுக்கில்லை.

ரோகிஞ்சா முஸ்லீம்களின் வரலாற்றை மீள் வாசிப்பதால், அவர்களுக்கு மியாமரில் இருக்க வேண்டிய உரிமைகள் என்று பலதை நாம் விரும்புவதால் மாத்திரம் நடந்தேறும் அவலங்களை சரி செய்ய முடியாது என்பது போலவே அரச தலைவர் துருக்கர் முஸ்லீம் எதுர்கான் போர்விமானம் அனுப்புவார், அறபு முஸ்லீம் இளவரசர் ஸல்மான் கடல் படை அனுப்புவார், பிரதமர் வங்காளி முஸ்லீம் ஹஸீனா தன்நாட்டு எல்லையை முற்றாகத் திறந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்புகளும் பலனளிக்காத விடயங்களே. ஆக உயிர்வாழும் உரிமை மறுக்கப்படும் ரோஹிஞ்சா முஸ்லீம்களுக்கு இருக்கும் கடைசி வழி அடக்கு முறைக்கும், உரிமை மறுப்புக்கும், இன அழிப்புக்கும் எதிராக திரண்டெழுவதாகும்.  ஆனாலும் எம்முன்னே எழுந்து வரும் மிகப்பெரிய கேள்வி என்ன விலைகொடுத்து இதை இவர்கள் சாதிக்கப் போகின்றார்கள் என்பதே.

நம்மவர்களின் கற்பனைக்கும், மிகைப்படுத்தலுக்கும் அப்பால் நம்பத்தகுந்த வெளிநாட்டு சுதந்திர செய்தியாளர்களின் படி ரோஹிஞ்சா முஸ்லீகளின் விடுதலை இயக்கமான ARSA (Arakan Rohingya Salvation Army) கூரிய கத்திகளையும், பொல்லு, தடிகளையுமே பொதுவாக போராட்ட ஆயுதங்களாகக் கொண்டுள்ளனர். ஆனால் நம்மவர்களின் முகநூல் தகவல்களில் நேர்த்தியான சீருடையும், தானியங்கி துப்பாக்கிகளும், போர்க்கள தகவல் சாதங்களும் கொண்டுள்ள ஆயிரகணக்கான இளைஞர்களை காணக்கூடியதாக இருகின்றது. அதையும் விஞ்சும் முகமாக இப்படியான சோடிப்புகளுடன் காணப்படும் பல்லாயிரக் கணக்கான போராளிகள் தங்கள் விடுதலை போராட்ட நியாயங்களையும், தாம் மியாமர் ராணுவத்திடம் இருந்து தம் மக்களையும், தாய்பூமியையும் காப்போம் என்ற பகிரங்க அறிக்கை ஒன்றை “அறபு” மொழியில் வாசிப்பதை காட்சி படுத்திய போது இது ஏதோ வானத்தில் இருந்து வந்திறங்கிய அறிவிப்பு போல் நம்பி “இறைவனின் நாட்டம் நிறைவேறிவிட்டது” என்று அறபு மொழியிலேயே பின்னூட்டம் விட்டு சந்தோசப்படுவதை பார்த்து கவலைக்குள்ளும் சிரிப்பு வருவதை நிறுத்த முடியவில்லை.

ஒரு பேச்சுக்காக கட்டமைப்புடன் கூடிய ஒரு விடுதலை அணி உருவாகிவிட்டது, ஏதோ காரணதுக்கான அறபு மொழியில் அறிக்கை விடுகின்றனர் என்றாலும், தமிழ் புலிகளின் முப்படை அனுபவமும்,  இனத்துக்கான புலி போராளிகளின் அர்பணிப்பும், தமிழ் மக்களின் நிபந்தனையற்ற ஆதரவும் கூட ஒரு புள்ளிக்கப்பால் நகர முடியாதபடி முடக்கி, முக்கல் முனங்கல் இல்லாமலே அவர்களை அழிக்க ஸ்ரீ லங்கா அரசுக்கு சர்வதேச சமூகம் உதவியது என்பதை நாம் ஏன் இவ்வளவு சீக்கிரம் மறந்து போனோம்? ஆகவே ஆயுதம் வழங்கி பயிற்சியும் கொடுக்கும் அமைப்பு அல்லது நாடு அதே துப்பாக்கி கொண்டே இந்த சின்னஞ் சிறிய படையணியை அழித்து தம் அரசியல் இலாபங்களை அடைந்து கொள்வர், அதுவரை இந்த இயக்கத்தின் ஊதி பெருக்கப்பட்ட வீர தீர செயல்கள் சும்மா இருக்கும் சாதரண மக்களுக்கு வெறும் தற்காலிக குளுகுளு செய்தி என்பதை மறக்காமல் இருப்போம். பலஸ்தீன விடுதலை போராட்டம் இதற்கு மிகப் பொருத்தமான சாட்சி. இந்த இயக்கத்தின் உண்மை நிலை என்னவாக இருப்பினும் எந்த சந்தர்ப்பத்தில் இவர்களின் ஆயுதம் மெளனிக்கப்படவேண்டும் என்பதில் இந்த இயக்கம் கவனமாக இருத்தல் மிக அவசியமாகும்.

சர்வதேச சமூகத்தில் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு ஒப்பிட்டளவில் மிகக் குறைவு. ஆனால் நாமோ அமெரிக்கா முதல் ஐரோப்ப்பா ஊடாக சீனாவரையும் நாமாக பிரச்சினைகளை தேடிவைத்துள்ளோம் அல்லது பிரச்சினைகளை நம் மீது திணித்து நம்மை பகடைகாய்களாக்கும் திட்டம் சரிவர நடந்து கொண்டிருக்கும் போது ரோஹிஞ்சா முஸ்லீம்களுக்காக முழு உலகமும் குரல் கொடுக்கும் என்று எப்படி எதிர்பார்ப்பது?

பிராந்திய வல்லரசான இந்தியா ஒரு நாட்டின் ஆகாய ஆதிக்க எல்லையையும் மீறி தமிழர் பகுதிகளில் உணவு பொட்டலங்களை இறக்கியபோது தமிழர் தங்களுக்கான பாதுகாப்புக்கான அறிகுறியே அது என்ற பிழையான அர்த்தப்படுத்தலில் மிக இலகுவாக இந்திய அரசியல் வலையில் விழுந்தனர். அவர்களின் விருப்பத்துகெல்லாம் ஓடி, ஆடி, பாடி முடியாது என்ற கட்டத்தில் அவர்களுக்கெதிராக எழ, ஸ்ரீ லங்கா அரசை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தம் திட்டம் உடைந்து சிதறுவதை சகிக்க முடியாமலும், ஸ்ரீ லங்காவில் ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளை கையாள்வது கடினம் என்ற நிலையிலும் இந்தியா ஸ்ரீ லங்கா அரச ஆதரவு நிலை எடுத்து தமிழ் புலிகளை அழிக்க முனைப்புடன் செயற்பட்டு வெற்றிகண்டது நமக்கான படிப்பினை. அதே இந்தியா மியாமருடன் கைகுலுக்கி இன அழிப்பு சம்பவங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கும் போதே பொருளாதார, அபிவிருத்தி ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவது எல்லாம் நமக்கான மேலதிக படிப்பினைகள். ஆக மீதமிருப்பது உலக பொது சபையின் நிலைப்பாட்டை அறிவதே.

 ஐ.நா. சபை பிரயோசனமற்ற(useless) ஒரு அமைப்பு, இப்படி கூறியவர் ஒஸாமா பின் லாடன். ஐ.நா சபை வெறுமனே விவாதத்தில் ஈடுபடும் ஒரு குழு(arguing society) இப்படி கூறியவர் முனை நாள் அமெரிக்க அதிபர் புஸ் இளையவர். இருவரின் கூற்றுக்களுக்கான காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் ஒரு தேவைக்காக அமைக்கப்பட இவ்வமைப்பு 21ம் நூற்றாண்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அமைப்பாக இல்லை என்ற  வேகமாக பரவி வரும் கருத்துக்கு வலு சேர்ப்பதாக இருப்பது சுட்டிக் காட்டப்பட வேண்டிய விடயம்.

முதலாம் உலக முடிவுக்குப்பின்னால் ஆரம்பிக்கப்பட்ட உலக அமைப்பான ” நாடுகளின் கூட்டு” ( League of Nations) இரண்டாம் உலக மகா யுத்தத்துடன் தன் முடிவை எட்ட, அதன் இடத்தில்  அமர்த்தப்பட்டதுதான் இன்றைய ஐ.நா.சபை.   இந்த சபையின் ஆரம்பபமே நல்ல சகுனமாக அமையவில்லை. காரணம் அதன் உள்கட்டமைப்பின் பிரகாரம் பாதுகாபு சபையில் ஐந்து (அணு ஆயுத) வல்லரசுகள் நிரந்தர கதிரைகளைக் கொண்டிருக்க ஏனைய பத்து கதிரைகள் சுழற்சி முறையால் வருடம் ஒரு முறை நிரப்பப்படுகின்றன. அதாவது இந்த ஐந்து ஜம்பவான்களும் தமது நாட்டின் அல்லது தமது நம்பிக்கைக்குறிய நாட்டின் நலனுக்கேற்ப கூட்டு சேர்வதும், பிரிந்து நின்று எதிர்ப்பதுமாக நிலை எடுக்கும் அதே நேரத்தில் மிஞ்சியோருக்கு ஆசைகாட்டி தம் நிலைப்பாட்டுக்கு ஆதரவை சேர்த்துவிடுவர்.

ஐ. நா பொதுச் சபையில் உள்ள சுமார் 200 நாடுகளும் தம் கொள்கை சார் நிலைப்பாடு என்று காட்டிக் கொண்டாலும் தேர்தல் காலங்களில் கையூட்டல் பெற்று வாக்களிக்கும் ஆசிய நாடுகளின் வாக்காளர்கள் போல்  நாட்டுக்கான ஆயுத உதவி, அபிவிருத்தி உதவி, நீண்டகால கடனுதவி என்ற உற்சாகப்படுத்தலுக்காக அல்லது மறைமுக பயங்காட்டலுக்காக வாக்களிப்பதும் அல்லது

வாக்களிக்கும் சந்தர்ப்பத்தில் சபையில் இருந்து காணமல் போவதுமாக இன்றை ஐ. நா சபை 1945ல் இருந்து தம் காலததை கழித்துக் கொண்டிருக்கின்றது.

இதற்கு நல்ல உதாரணமாக அமைவது பாலஸ்தீன பிரச்சினை. ஐ.நா சபையின் உறுப்பு நாடக இஸ்ரவேல் 1949ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது இரண்டாம் சகுனப் பிழையோ என்று கேட்கும் அளவிற்கு “பாலஸ்தீன” பிரச்சினை இன்னும் முடிவு ஒன்று இல்லமால் இழுபறி நிலையில் இருப்பது இந்த சபை உலக பிரச்சினைகள் தொடரக எடுக்கும் அல்லது எடுக்காத தீர்வுகள் ஐக்கியப் பட்ட நாடுகளின் நிலைப்பாடக இல்லாமல், ஆயுத பலம் உள்ள சில நாடுகள் ஏனைய நாடுகளின் மீது திணிக்கும் தீர்வுகளாகவே இருக்கின்றன.

ஆகவேதான் பாரக் ஒபாமா தன் முதல் பதவி காலத்தின் முதன் முதல் உத்தியோக ரீதியான தொலைபேசி அழைப்பை பாலஸ்தீன அதிகார சபையின் முதல்வர் மஹ்மூத் அப்பாஸுடன் ஏற்படுத்தினார்.  வெள்ளை மாளிகையில் குடிபுக முன்னரே உலக சமாதானத்துக்கான “நோபல் பரிசு” பெற்ற ஒமாபா ஏதோ செய்யப் போகின்றார் என்று காத்திருக்க, அவரின் இரண்டாம் நாலாண்டில் ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட “பலஸ்தீன தனி நாட்டுக்கான” அங்கீகார பிரேரணைக்கு வாகளிக்கும் சந்தர்பத்தில் ” அவசரப்பட்டு எடுக்கும் முடிவு நிலைத்து நிற்காது, எதிர்பார்க்கும் தீர்வை கொடுக்காது ” என்ற காரணத்துடன் வாக்களிப்பில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொண்டது அமெரிக்கா. இந்த ஒரு உதாரணத்தின் மூலம் ஐ.நா சபை உறுப்பு நாடுகளின் சராசரி நடத்தைகளை ஊகித்துக் கொள்ளலாம்.

ஆகவே உலக நாடுகளில் நாளாந்தம் நடந்தேறும் விடயங்களை அந்த நாட்டின், நாடு அமைந்துள்ள பிரதேசத்தின், அந் நாட்டு மக்களின் இன, மொழி, சமயம், பொருளாதர நலன் சார் நிலைப்பாடு, அந் நாடு எந்தெந்த நாட்டின் செல்வாக்கில் இருக்கின்றது என்ற  பல விடயங்களால் நிர்ணயிக்கப்படுவது கண்கூடு.  இந்த வகையிலேயே கடந்த சுமார் ஐந்து வருடங்களா மியான்மரில் நடந்தேறும் திட்டமிட்ட சிறுபான்மை இனனழிப்பு சம்பவங்களும் நோக்கப்படவேண்டும்.

ஐ. நா வின் பட்டயத்தின்(UN Charter) பிரிவு ஒன்று “ஒரு நாட்டின் உள் விடயங்களில் தலையிட இந்த சபைக்கு அதிகாரம் இல்லை” என்ற ஒரு தடையை விதித்துள்ளது, அதே நேரத்தில் சர்வதேச நாடுகளுக்கிடையிலான தொடர்பாடல்களும், நடத்தைகளும் மிகவேகமாக மாறி வருவதாலும், நாடுகள் எற்றுமில்லாத வகையில் ஒன்றொன்று பின்னிப்பிணைந்துள்ளதாலும், ஒரு நாட்டில் நடக்கும் விடயம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஏனைய நாடுகளில் தாக்கம் செலுத்துவதை தவிர்ப்பதற்குமாக ஐ.நா சபையின் ஏற்பாட்டில் 2005ல் நடந்த சர்வதேச மாநாட்டில் அனைத்து நாடுகளினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய ஒரு  விடயம் தான்  R2P (Responsibility  to Protect) ” “பாதுகாப்பதற்கான பொறுப்பு” என்று சுருக்கமாக அழைக்கப்படும் சர்வதேச சட்ட(International Law) ஏற்பாடாகும். அதாவது ஒவ்வொரு நாட்டுக்கும், ஒரு நாடு தொடர்பாக ஏனைய நாடுகளுக்கும் இருக்க வேண்டிய ஒரு தார்மீக பொறுப்புதான் அது.

இதன் மூலம் சர்வதேச சமூகத்தால் எதிர்பாக்கப்படுவது ஒரு நாடு தன் நாட்டு பிரஜைகளை இனவழிப்பு(genoside), போர் குற்றங்கள்       (war crimes), இன சுத்திகரிப்பு(ethnic cleansing), மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள்(crimes against humanity) என்ற அழிவுகளில் இருந்து பாதுகாக்கும், காப்பாற்றும் பொறுப்பில் உள்ளது என்ற விடயம் .  ஆனால் இந்த விடயம் கூட இத்தகைய உலக அமைப்புக்களின் வியாக்கியானங்களுக்கும், விபரிப்புக்களுக்கும், அவை தொடர்பான வாத பிரதிவாதங்களுக்கும் மனித இனத்தின் அழிவுக்கு வழங்கப்படும் மறைமுகமான கால அவகாசமாகவே கருத வேண்டியுள்ளது.

இந்த வகையிலேயே “மனிதாபிமான தலையீடு” (Humanitarian Intervention) என்ற அம்சம் சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டவிடயமாக கருதப்படுவதோடு மனித வீரோதம் வீரியமாக தலையெடுக்கும் சந்தர்ப்பங்களில் மனிதம் எங்கோ ஒரு மூலையில் கவனத்தை ஈக்கின்றது என்ற நம்பிக்கையை தருகின்றது. இந்த அடிப்படையில்தான்  ஸ்ரீ லங்கா வான் பரப்பு அதிகாரத்தை மீறி இந்திய வான்படை வடக்கில் உணவு பொட்டலங்கள் வீசிய விடயம், பல் நாட்டு எல்லை விதிகளை மீறி சிரிய நாட்டு அகதிகளை தன் நாட்டுக்குள் வர அனுமதித்த ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கலின் முடிவு என்பவைகளாகும்.

இதே அடிப்படை நியாயத்தில்தான் மியான்மருக்கு பக்கத்தில் உள்ள பிராந்திய வல்லரசு இந்தியா, எல்லை நாடு தாய்லந்து என்ற நாடுகள் ஏதாவது உதவியை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் ஏதோ காரணங்களுக்காக அன்நாடுகள்  முகத்தை அடுத்தப்பக்கம் திருப்பிக் கொள்ள, இஸ்லாமிய துருக்கி, இஸ்லாமிய செளதி, இஸ்லாமிய பக்கிஸ்தான், இஸ்லாமிய வங்காளதேசம், இஸ்லாமிய இந்தோனேசியா என்ற நாடுகள் இந்த மனிதாபிமான தலையீடுகளுக்காக எதிர்பார்க்கப்படுகின்றார்கள். ஆனால் அவர்களாலும் முடியாது. காரணம் பல.

இதை இரண்டாம் வளைகுடா யுத்த முஸ்தீபு காலத்தில் அன்றைய அமெரிக்க உதவி ஜனாதிபதி டிட் சென்னியின்(Dick Cheney) கூற்றை வரிகளுக்கிடையே (between lines) வாசிப்பதின் மூலம் ஓரளவு விளங்கிக் கொள்ளலாம், அதாவது ” உலக சமாதானத்துக்கான பாதை வரைபடம்(road map)பாலஸ்தீனில் இருந்து ஆரம்பிக்கபட வேண்டும்” என்பதே அந்த கூற்று.  இதில் நான் விளங்கிக் கொள்வது, “பாலஸ்தீனில் சமாதானத்தை ஏற்படுத்த அவர் சிபாரிசு செய்கின்றார் என்பதல்ல. மாறாக, ஈராக் யுத்த முடிவில் முதல் பன்நாட்டு எண்ணெய் கம்பனி, டிக் சென்னிக்கு சொந்தமான, “ஹலிபேர்டன்”(Halliburton) தனது எண்ணெய் வியாபாரத்தை ஆரம்பித்து தனது குடும்ப பொருளாதார நலனை அடைந்து கொண்டார் என்பது போக, பாலஸ்தீனில் இருந்து இந்தோனேசியா வரையிலான “பெரும்பான்மை முஸ்லீம்” என்று அழைக்கப்படும் நாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டால் அவர்கள் (ஆதிக்கவாதிகள்) விரும்பும் சமாதானம் கிடைத்துவிடும் என்பதே.  ஆகவே இதை யார் செய்கின்றார்கள் என்பதல்ல அவர்களின் பிரச்சினை. யாரேனும் சரியாக அதை செய்கின்றார்களா என்பதே.

நாம் நடை முறை உலகத்தை ஓரளவேனும் புரிந்துகொள்ளாத வரை, உரிமை என்பது ஒரு இனத்துடன், மொழியுடன், சமயத்துடன், அரசியல் நிலைப்பாட்டுடன் சுருங்கி கொள்ளாத விடயம் என்பதை நாம் புரிய முயற்சிக்காத வரை, சர்வதேச சமூகம் தன்நாட்டு நலன் என்று வரையறுத்து செயல்படும் முறையை மாற்றாதவரை, ஐக்கிய நாடுகள் சபையில் போதியளவு மாற்றங்கள் கொண்டுவராதவரை இத்தகைய துன்பியல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

-முஹம்மத் எஸ்.ஆர் நிஸ்த்தார்.

Co-Editor, Sonakar.com