‘தலாக்’ என சொல்வதால் மாத்திரம் விவாகரத்தாகாது: இந்திய நீதிமன்றம் தீர்ப்பு!

தலாக் என மூன்று முறை வாய் மொழிவதாலோ, வட்ஸ் அப், ஸ்கைப், தொலைபேசி, குறுஞ்செய்தி ஊடாக மனைவிக்குத் தெரிவிப்பதாலோ கணவன் விவாகரத்துப் பெற முடியாது என தீர்ப்பளித்துள்ளது இந்திய உச்ச நீதிமன்றம்.

பல முஸ்லிம் நாடுகளில் இந்த சம்பிரதாயத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் பல பகுதிகளில் இவ்வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் ஆண்கள் தாம் விரும்பியபடி தலாக் கூறி விவாக பந்தத்தை முறித்துக் கொள்வதாகவும் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் நீண்ட கால குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.

இந்நிலையில், ஐந்து முஸ்லிம் பெண்கள் இணைந்து தொடுத்த வழக்கினை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவினர் 3:2 என்ற அடிப்படையில் இவ்வழக்கத்தை இன்று தடை செய்துள்ளனர்.

அத்துடன், இஸ்லாத்திலோ அல்-குர்ஆனிலோ இவ்வாறான ஒரு செயலுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லையெனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், இலங்கை போன்றே இந்தியாவிலும் முஸ்லிம் தனியார் சட்டம் பின்பற்றப்படுகின்ற நிலையில் அதில் தலையிடும் உரிமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதியொருவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.